Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல!

மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல!

பைபிளிலுள்ள இந்த நிஜ சம்பவத்தைக் கவனியுங்கள். எருசலேமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பெத்தானியா என்ற சிறிய கிராமம் இருந்தது. (யோவான் 11:18) இயேசு மரிப்பதற்குச் சில வாரங்களுக்குமுன் அங்கு ஒரு துயர சம்பவம் நடந்தது. இயேசுவின் நெருங்கிய நண்பனான லாசரு திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவத்தைக் கேட்டதும் இயேசு தம் சீடர்களிடம் லாசரு தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் அவரை எழுப்பப் போவதாகவும் சொன்னார். (யோவான் 11:11) ஆனால், அதன் அர்த்தத்தைச் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் இயேசு, “‘லாசரு இறந்துவிட்டான்’ என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார்.”—யோவான் 11:14.

லாசருவை அடக்கம் செய்து நான்கு நாட்களுக்குப் பிறகுதான் இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்தார். துக்கத்தில் மூழ்கியிருந்த லாசருவின் சகோதரி மார்த்தாளிடம் அவர் ஆறுதலாகப் பேசினார். அப்போது மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “எஜமானே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள். (யோவான் 11:17, 21) அதற்கு அவர், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மீது விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்” என்றார்.—யோவான் 11:25.

“லாசருவே, வெளியே வா!”

அவர் சொன்னதை நிரூபித்துக்காட்ட லாசருவை அடக்கம் செய்த கல்லறைக்குச் சென்று, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிட்டார். (யோவான் 11:43) மரித்த லாசரு உயிரோடு வெளிய வந்தார். அங்கு இருந்தவர்கள் ஆச்சரியத்தில் மலைத்துப்போனார்கள்!

லாசருவை உயிரோடு எழுப்புவதற்குமுன் இரண்டு பேரை இயேசு உயிர்த்தெழுப்பியிருந்தார். அவர்களில் ஒருவர் யவீருவின் மகள். அந்தச் சிறுமியை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பும், அவள் தூங்கிக்கொண்டிருப்பதாக இயேசு சொன்னார்.—லூக்கா 8:52.

லாசருவின் மரணத்தையும் யவீருவுடைய மகளின் மரணத்தையும் இயேசு தூக்கத்திற்கு ஒப்பிட்டது பொருத்தமாக இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்லலாம்? ஏனென்றால், தூங்கிக்கொண்டு இருப்பவர்களும் இறந்தவர்களும் எதுவும் அறியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாது; வலியோ வேதனையோ இருக்காது. (பிரசங்கி 9:5;  “மரணம் ஓர் ஆழ்ந்த தூக்கம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதில் இயேசுவின் முதல் நூற்றாண்டு சீடர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. இதைப் பற்றி என்ஸைக்ளோபீடியா ஆஃப் ரிலிஜன் அன்ட் எத்திக்ஸ்  சொல்கிறது: “இயேசுவின் சீடர்களைப் பொறுத்தவரை மரணம் தூக்கத்திற்கு சமம், கல்லறை என்பது கடவுளுக்கு உண்மையாயிருந்து இறந்தவர்கள் ஓய்வெடுக்கும் இடம்.” *

இறந்தவர்கள் எந்த வேதனையும் அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நம் மனதிற்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! ஆகவே, இறந்தபின் என்ன நடக்கிறது என்பது இனியும் ஒரு மர்மம் அல்ல. மரணத்தை நினைத்து நாம் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இறந்தபின் மீண்டும் உயிர் வாழ முடியுமா?

நன்றாக தூங்கி ஓய்வெடுக்க நாம் எல்லோருமே ஆசைப்படுவோம். ஆனால், நம்மில் யாராவது மரணத்தில் ஒரேயடியாகத் தூங்க விரும்புவோமா? லாசரு மற்றும் யவீருவின் மகளைப் போல் இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்று நாம் எப்படி நம்பலாம்?

இதேபோன்ற ஒரு கேள்வி, பைபிள் காலங்களில் வாழ்ந்த நல்ல மனிதரான யோபுவின் மனதிலும் எழும்பியது. இறக்கும் தருவாயில் இருந்த அவர், “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று கடவுளிடம் கேட்டார்.—யோபு 14:14.

அந்தக் கேள்விக்கு யோபுவே இப்படிப் பதில் சொன்னார்: ‘என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைக்கிறீர் [அதாவது, மிகுந்த ஆவலாய் இருக்கிறீர்].’ (யோபு 14:15) தம்முடைய உண்மை ஊழியர்களை யெகோவா நிச்சயம் உயிர்த்தெழுப்புவார் என்பதில் யோபுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இது வீணான நம்பிக்கையா? நிச்சயம் இல்லை.

இயேசு செய்த உயிர்த்தெழுதலில் இருந்து ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம். இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதற்கான சக்தியை இயேசுவுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், இப்போது இயேசுவிடம் ‘மரணத்தின் சாவி’ இருப்பதாக, அதாவது இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதற்கான அதிகாரம் இருப்பதாக, பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 1:18) எனவே, லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பியது போலவே இறந்தவர்களையும் எதிர்காலத்தில் அவர் உயிர்த்தெழுப்புவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

உயிர்த்தெழுதலைப்பற்றி பைபிள் பலமுறை சொல்கிறது. பைபிள் காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசியான தானியேலிடம் ஒரு தேவதூதர் இப்படிச் சொன்னார்: “நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்.” (தானியேல் 12:13, பொது மொழிபெயர்ப்பு.) உயிர்த்தெழுதலை நம்பாத யூத தலைவர்களான சதுசேயர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது; ஏனென்றால், உங்களுக்கு வேதவசனமும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை.” (மத்தேயு 22:23, 29) “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் . . . நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று பைபிள் எழுத்தாளர் பவுல் சொன்னார்.—அப்போஸ்தலர் 24:15.

இறந்தவர்கள் எப்போது உயிரோடு வருவார்கள்?

நீதிமான்களும் அநீதிமான்களும் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? ‘முடிவு காலம் வந்தவுடன் நீ எழுந்து வருவாய்’ என்று நீதிமானான தானியேலிடம் தேவ தூதர் சொன்னார். அதேபோன்ற நம்பிக்கை மார்த்தாளுக்கும் இருந்தது. ‘கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது என்னுடைய சகோதரன் லாசரு எழுந்திருப்பான்’ என்று சொன்னாள்.—யோவான் 11:24.

அந்த ‘கடைசி நாளை,’ பைபிள் இயேசு கிறிஸ்துவின் ஆட்சியோடு சம்பந்தப்படுத்துகிறது. பவுல் இப்படி எழுதினார்: “எல்லா எதிரிகளையும் அவரது [இயேசு கிறிஸ்து] காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாய் ஆட்சி செய்தாக வேண்டும். ஒழிக்கப்படும் கடைசி எதிரி மரணம்.” (1 கொரிந்தியர் 15:25, 26) கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காகவும் அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்காகவும் நாம் ஜெபம் செய்வதற்கு இது ஒரு சிறந்த காரணம்! *

மரித்தவர்களை உயிர்த்தெழுப்ப கடவுள் ஆசையாக இருக்கிறார், அது அவருடைய சித்தம் என்று யோபுவுக்குத் தெரிந்திருந்தது. அவருடைய சித்தம் பூமியில் நிறைவேறும்போது மரணம் சுவடு தெரியாமல் அழிந்துவிடும். அப்போது மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள். ▪ (w14-E 01/01)

^ பாரா. 8 “கல்லறை” என்பதற்கான ஆங்கில வார்த்தை “தூங்கும் இடம்” என்ற அர்த்தம் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

^ பாரா. 18 கடவுளுடைய அரசாங்கத்தைப்பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 8-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள். www.jw.org-லும் பார்க்கலாம்.