Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?

மரணத்தை முறியடிக்க மனிதனின் முயற்சி

மரணத்தை முறியடிக்க மனிதனின் முயற்சி

சீன அரசர், ச்சின் ஷீ ஹ்வாங்

ஆராய்ச்சியாளர், பான்ஸே டே லேயான்

மரணம் ஒரு பயங்கரமான எதிரி. அதை விரட்டியடிக்க நம்மால் முடிந்தவரை போராடுகிறோம். அதனால்தான் நாம் நேசிக்கும் ஒருவரை மரணத்தில் இழக்கும்போது அதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. மறுபட்சத்தில், இளமை துடிப்பில் சிலசமயம் நமக்கு மரணமே வராது என்றுகூட நினைக்கிறோம்.

மரணத்தைத் தடுக்க அநேகர் முயற்சித்திருக்கிறார்கள். அதில் எகிப்து நாட்டு அரசர்களை (பார்வோன்) இதுவரை யாரும் மிஞ்சியது இல்லை. அவர்கள் கட்டிய பிரமிடுகளே அதற்கு அத்தாட்சி. அரச குடும்பத்தில் மரிப்பவர்களுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கல்லறைகள்தான் இந்த பிரமிடுகள். இறந்தவர்களின் சடலங்கள் அதில் பாதுகாக்கப்பட்டன. இறந்த நபரின் ஆத்துமா, தேவைப்படும்போது தன் உடலைப் பயன்படுத்துவதற்காக அப்படிப் பாதுகாக்கப்பட்டது. ஆனால், அந்த உடல்கள் காலப்போக்கில் அழுகிப்போனது. மரணத்தைத் தடுக்க எகிப்தியர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை இது காட்டுகிறது.

மரணத்தைத் தடுக்க சீன அரசர்கள் வேறொரு முறையைக் கையாண்டார்கள். மந்திர சக்தியுள்ள ஜீவாமிர்தத்தைத் தயாரிக்க முயற்சி செய்தார்கள். சீன அரசரான ச்சின் ஷீ ஹ்வாங், தொடர்ந்து உயிர் வாழ்வதற்காக மந்திர சக்தியுள்ள மருந்தை கண்டுபிடிக்கும்படி தனது வேலையாட்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால், அவர்கள் செய்த மருந்துகளில் நச்சுப்பொருள் கலந்திருந்தது. அதில் ஒரு மருந்து அவருடைய உயிருக்கே உலை வைத்துவிட்டது.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான க்வான் பான்ஸே டே லேயான் இளமை ஊற்றைத் தேடிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தேடுதல் வேட்டையில்தான் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா நகரத்தைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்த மக்களோடு நடந்த தகராறில் தன் உயிரையே இழந்தார். ஆனால், கடைசிவரை அவர் அந்த இளமை ஊற்றைக் கண்டுபிடிக்கவே இல்லை. ஏனென்றால், அப்படி ஓர் ஊற்றே இல்லை.

எகிப்திய அரசர்கள், சீன அரசர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் மரணத்தை முறியடிக்க முயற்சி செய்தார்கள். அதைச் சாதிக்க அவர்கள் கையாண்ட முறைகளை நாம் ஆதரிக்காவிட்டாலும், அவர்களுடைய எண்ணம் தவறென்று சொல்லமாட்டோம். ஏனென்றால், நாம் யாருமே சாக விரும்புவதில்லை, என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கத்தான் விரும்புகிறோம்.

மரணத்தை முறியடிக்க முடியுமா?

மரணத்தை நாம் ஏன் விரும்புவதில்லை? அதற்கான காரணத்தை பைபிளே விளக்குகிறது. நம் படைப்பாளராகிய யெகோவா தேவனை * பற்றி அது இப்படிச் சொல்கிறது:  ‘அவர் யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகச் செய்திருக்கிறார்; நித்தியகால நினைவை [அதாவது, என்றென்றும் வாழும் ஆசையை] மனிதர்களின் உள்ளத்திலே வைத்திருக்கிறார்.’ (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு.) நாம் வெறும் 70, 80 வருடங்களுக்கு அல்ல, காலமெல்லாம் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். (சங்கீதம் 90:10) இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கிற இயல்பான ஆசை.

‘என்றென்றும் வாழும் ஆசையைக்’ கடவுள் ஏன் நம் உள்ளத்தில் வைத்தார்? காரணமில்லாமலா அப்படிச் செய்திருப்பார்? நிச்சயம் இருக்காது. சீக்கிரத்தில், மரணமே இல்லாத வாழ்க்கையைத் தரப்போவதாக அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார். மரணத்தைக் கடவுள் ஒழித்துக்கட்டப்போவதைப் பற்றியும், அவர் தரப்போகிற முடிவில்லா வாழ்க்கையைப் பற்றியும் பைபிளில் பலமுறை வாசிக்கிறோம்.  “மரணமில்லா வாழ்வு சாத்தியம்!” என்ற பெட்டியைக் காண்க.

இதைப்பற்றி இயேசு கிறிஸ்து தெளிவாகச் சொன்னார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் [யெகோவாவையும்] நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.” (யோவான் 17:3) எனவே, மரணம் என்ற எதிரியை முறியடிக்க முடியும். என்றாலும், இயேசு சொன்னபடி யெகோவாவால் மட்டும்தான் மரணத்தை முறியடிக்க முடியும். (w14-E 01/01)

^ பாரா. 9 பைபிள் சொல்கிறபடி கடவுளுடைய பெயர் யெகோவா.