அட்டைப்பட கட்டுரை | மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா?
மரணத்தின் வலி!
நாம் யாருமே மரணத்தை விரும்புவதில்லை. அதைப்பற்றி பேசக்கூட அநேகருக்கு விருப்பமில்லை. ஆனால், என்றைக்காவது ஒருநாள் நாம் மரணத்தை எதிர்ப்படத்தான் வேண்டும். மரணத்தால் ஏற்படும் வலியையும் வேதனையையும் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை.
முக்கியமாக பெற்றோரையோ, மணத்துணையையோ, பிள்ளையையோ மரணத்தில் பறிகொடுக்கும்போது அந்தப் பிரிவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மரணம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். நாம் வியாதிப்பட்டோ வயதாகியோ சாகலாம். எப்படி இருந்தாலும் சரி, மரணத்தின் பிடியிலிருந்து யாராலும் தப்ப முடியாது, அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும் முடியாது.
சாலை விபத்தில் தன் அப்பாவை இழந்த ஆன்டோனியோ சொல்கிறார்: ‘மரணத்தில் பறிகொடுக்கும் ஒருவரை நம்மால் மறுபடியும் பார்க்கவே முடியாது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. நம்மிடம் மிஞ்சி இருப்பதெல்லாம் அந்த நபரைப்பற்றிய நினைவுகள் மட்டும்தான். ஏற்றுக்கொள்ள இது கடினமாக இருந்தாலும் இதுதான் உண்மை.’
47 வயதில் தன் கணவரை இழந்த டாரதி, மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார். சர்ச்சில் ஸன்டே-ஸ்கூல் டீச்சரான இவர், மரணத்திற்கு பிறகு வாழ்க்கை தொடர்கிறது என்று பிள்ளைகளுக்குக் கற்றுத்தந்தார். இருந்தாலும், மரணத்திற்குப்பின் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பியிருந்தார். “மரிக்கும்போது நமக்கு என்ன நடக்கிறது?” என்று தன் சர்ச் ஃபாதரிடம் கேட்டார். அதற்கு அவர், “அது யாருக்குமே தெரியாது, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
‘காலம் பதில் சொல்லும்வரை’ நாம் காத்திருக்க வேண்டுமா? மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா? (w14-E 01/01)