Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆர்வமிக்க அறுவடைக்காரர்களாக புறப்படும் கிலியட் பட்டதாரிகள்

ஆர்வமிக்க அறுவடைக்காரர்களாக புறப்படும் கிலியட் பட்டதாரிகள்

ஆர்வமிக்க அறுவடைக்காரர்களாக புறப்படும் கிலியட் பட்டதாரிகள்

‘அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.’ (மத்தேயு 9:37, 38) உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 116-வது வகுப்பில் பட்டம் பெறப்போகும் மாணவர்களுக்கு இந்த வார்த்தைகள் விசேஷ அர்த்தமுடையவையாக இருந்தன, ஏனெனில் அவர்கள் மிஷனரி வேலைக்கு புறப்பட்டு செல்ல தயாராயிருந்தனர்.

மார்ச் 13, 2004 சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள நியு யார்க், பாட்டர்சனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்திலும் தொலைக்காட்சி வழியே இந்நிகழ்ச்சியை அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்ற இடங்களிலும் மொத்தம் 6,684 பேர் கூடிவந்தனர். அந்த விழாவில் வகுப்பு மாணவர்கள் அறிவுரையையும் ஊக்குவிப்பையும் பெற்றனர். ஆன்மீக அறுவடையில் சுறுசுறுப்பாக ஈடுபடும் நாம் அனைவருமே இந்த அறிவுரையிலிருந்து பயனடையலாம்.

ஆளும் குழுவின் அங்கத்தினரும் கிலியட் பள்ளியின் ஏழாவது வகுப்பு பட்டதாரியுமான தியடோர் ஜரஸ் ஆரம்ப உரை நிகழ்த்தினார்; ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளை இவர் சிறப்பித்துக் காட்டினார். (மத்தேயு 28:19, 20) 20 நாடுகளில் சேவை செய்யப்போகும் பட்டதாரிகளுக்கு எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள்! மிகவும் இன்றியமையாத ஆன்மீக அறுவடையில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரை அவர்களை முற்றிலும் ஆயத்தமாக்கியுள்ளது என்பதை மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார்.​—மத்தேயு 5:16.

பலன்தரும் அறுவடைக்காரர்களாக ஆதல்

அந்நிகழ்ச்சியின் முதல் பேச்சாளர் ராபர்ட் வாலன் ஆவார். பெரும்பாலான கிலியட் பள்ளிகளில் அவர் பல ஆண்டுகள் பங்கு வகித்திருக்கிறார். “பரிவு எனும் இனிய பண்பு” என்ற பொருளில் பேசுகையில், மாணவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “பரிவு என்பது செவிடரும் கேட்கும் மொழி, குருடரும் காணும் மொழி.” பிறருடைய துயரத்தை இயேசு நன்கு அறிந்து அதைத் தணிக்க வழி தேடினார். (மத்தேயு 9:36) இயேசுவைப் போல் பரிவுகாட்ட மாணவர்களுக்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைக்கும்; பிரசங்க வேலையிலும், சபையிலும், மிஷனரி இல்லத்திலும், தங்களுடைய மண வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு அந்தப் பேச்சாளர் இவ்வாறு அறிவுறுத்தினார்: “மற்றவர்களுக்கு சேவை செய்கையில் பரிவு எனும் இனிய பண்பு உங்கள் வாழ்க்கையில் காணப்படுவதாக. மிஷனரி இல்லத்தில் உங்களுடைய சிறந்த நடத்தையே தினசரி வாழ்க்கைக்கு முக்கியம். ஆகையால், பரிவு எனும் பண்பை தரித்துக்கொள்ள தீர்மானமுள்ளவர்களாய் இருப்பீர்களாக.”​—கொலோசெயர் 3:12.

அடுத்து, ஆளும் குழுவின் அங்கத்தினரும் 41-வது கிலியட் வகுப்பு பட்டதாரியுமான கெர்ரட் லாஷ் சொற்பொழிவாற்றினார்; “இரட்சிப்பை பிரசித்தப்படுத்துவோர்” என்பதே அவருடைய பேச்சின் பொருள். (ஏசாயா 52:7) தற்போதைய ஒழுங்குமுறைக்கு நேரிடும் அழிவிலிருந்து மக்கள் தப்பித்துக்கொள்வதற்கு, கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவை பெற வேண்டும், பிறகு தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படையாய் அறிவித்து முழுக்காட்டுதல் பெற வேண்டும். (ரோமர் 10:10; 2 தீமோத்தேயு 3:15; 1 பேதுரு 3:21) என்றாலும், இரட்சிப்பை பிரசித்தப்படுத்துவதற்கு முக்கிய காரணம் மனிதரை பாதுகாப்பது அல்ல, ஆனால் கடவுளுக்கு புகழ் சேர்ப்பதே. ஆகவே, “யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பூமியின் கடைமுனை மட்டும் ராஜ்ய செய்தியை எடுத்துச் செல்லுங்கள், இரட்சிப்பை வைராக்கியமாக பிரசித்தப்படுத்துங்கள்” என சகோதரர் லாஷ் அறிவுரை கூறினார்.​—ரோமர் 10:18.

“நீங்கள் எந்தளவுக்கு பிரகாசிக்கிறீர்கள்?” இந்தக் கேள்வியை கிலியட் பள்ளியின் போதனையாளர் லாரன்ஸ் பொவென் எழுப்பினார். மத்தேயு 6:22-⁠ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை குறிப்பிட்டு, “யெகோவாவை மகிமைப்படுத்துகிற, சக மனிதருக்கு நன்மையளிக்கிற ஆன்மீக அறிவொளியை பிரகாசிப்பதற்கு” கண்களை ‘தெளிவாக’ வைத்திருக்கும்படி பட்டம் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். கடவுளுடைய சித்தத்தை செய்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இயேசு தமது ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்தே இதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். பரலோகத்தில் தம் தகப்பன் கற்பித்த வியத்தகு காரியங்களை தியானித்தது, வனாந்தரத்தில் சாத்தானுடைய சோதனைகளை சகிக்க இயேசுவுக்கு உதவியது. (மத்தேயு 3:16; 4:1-11) தமக்கு நியமிக்கப்பட்ட வேலையை நிறைவேற்ற அவர் முற்றிலும் யெகோவாவை சார்ந்திருந்தார். அதே விதமாகவே, மிஷனரிகளும் தாங்கள் எதிர்ப்படப்போகும் சவால்களை சந்திப்பதற்கு பைபிளைப் படிக்கும் நல்ல பழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும், யெகோவாவை முழுமையாக சார்ந்திருக்க வேண்டும்.

கிலியட் பள்ளியின் போதனையாளரும் 77-வது கிலியட் வகுப்பின் பட்டதாரியுமான மார்க் நியூமார் இந்தத் தொடர்ச்சியான பேச்சுக்களை நிறைவுசெய்ய வந்தார். “இதோ, உமது கையிலிருக்கிறோம்” என்ற பொருளில் அவர் உரையாற்றினார். (யோசுவா 9:25) பூர்வகால கிபியோனியரின் மனப்பான்மையைப் பின்பற்றும்படி மாணவர்களை அவர் உற்சாகப்படுத்தினார். கிபியோன் ஒரு ‘பெரிய பட்டணமாகவும் . . . அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாகவும்’ இருந்தபோதிலும், அவர்கள் உயர்ந்த ஸ்தானத்தையோ தனிப்பட்ட தேவைகளுக்கு முக்கியத்துவத்தையோ எதிர்பார்க்கவில்லை. (யோசுவா 10:2) மாறாக, யெகோவாவின் வணக்கத்தில் லேவியருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள்; ‘விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும்’ மனமுவந்து சேவை செய்தார்கள். (யோசுவா 9:27) சொல்லப்போனால், பட்டம் பெறப்போகும் வகுப்பார் பெரிய யோசுவாவாகிய இயேசு கிறிஸ்துவிடம், “இதோ, உமது கையிலிருக்கிறோம்” என சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுதும், அயல்நாடுகளில் ஊழியத்தை ஆரம்பிக்கப் போகும் இந்தப் பட்டதாரிகள், பெரிய யோசுவா கொடுக்கும் எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனுபவங்களும் பேட்டிகளும்

“வேதவாக்கியங்களை முழுமையாக விளக்கிக் காட்டுங்கள்” என்ற பொருளில் மாணவர்கள் சிலரிடம் வாலஸ் லிவரன்ஸ் கலந்துரையாடினார்; இவர் 61-வது கிலியட் வகுப்பு பட்டதாரியும் இப்பள்ளியின் போதனையாளரில் ஒருவருமாவார். இப்பள்ளி நடைபெற்றபோது வெளி ஊழியத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை அவர்கள் விவரித்தார்கள், அதை நடித்தும் காட்டினார்கள். இந்த ஐந்து மாத பயிற்சி காலத்தில் வேத வசனங்களை தீவிரமாக படித்தது அவர்களுடைய இருதயத்திலும் பதிந்தது, கற்றுக்கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் அவர்களை தூண்டியது என்பது தெளிவாக தெரிந்தது. (லூக்கா 24:32) பயிற்சித் திட்டத்தின்போது தான் கற்றுக்கொண்ட விஷயங்களை ஒரு மாணவர் தன் தம்பியிடம் பகிர்ந்து கொண்டார். இதனால், அவர் அருகிலுள்ள சபையைத் தேடிச் சென்று தனக்கு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார். இப்பொழுது அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெற்றிருக்கிறார்.

இந்த அனுபவங்களுக்குப் பிறகு வந்த நிகழ்ச்சி பேட்டி காணுதல். வெகுகாலமாக யெகோவாவுக்கு சேவை செய்யும் ஊழியர்கள் பலரை ரிச்சர்ட் ஆஷ், ஜான் கிப்பர்டு என்பவர்கள் பேட்டி கண்டார்கள். பேட்டி காணப்பட்டவர்களில் பயணக் கண்காணிகளும் அடங்குவர். இவர்கள் உவாட்ச்டவர் கல்வி மையத்தில் விசேஷ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள். இவர்களில் ஒருவர் வகுப்பில் சகோதரர் நார் சொன்ன விஷயத்தை நினைவுபடுத்தி இவ்வாறு சொன்னார்: “கிலியட் பள்ளியில் நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். ஆனால் படிப்பு முடிந்தபின் உங்களுக்கு தலைக்கனம் ஏற்பட்டால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம். பரந்த இருதயத்துடன் நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்.” மக்களுடைய தேவைகளுக்கு கவனம் செலுத்துகிறவர்களாயும், கிறிஸ்துவைப் போல பிறரிடம் நடந்துகொள்பவர்களாயும், கொடுக்கப்படும் எந்த நியமிப்பையும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்பவர்களாயும் இருக்கும்படி வகுப்பாருக்கு இந்தப் பயணக் கண்காணிகள் ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனையைப் பின்பற்றுவது புதிய மிஷனரிகள் தங்களுடைய புதிய நியமிப்புகளை பலன்தரும் விதத்தில் நிறைவேற்ற நிச்சயம் உதவும்.

ஆர்வமிக்க அறுவடைக்காரர்களாக புறப்படுங்கள்!

ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினரான ஸ்டீவன் லெட் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பமும் கூடிவந்திருந்தோருக்கு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் முக்கிய பேச்சை இவர் கொடுத்தார்; “ஆர்வமிக்க அறுவடைக்காரர்களைப் போல் புறப்பட்டு செல்லுங்கள்!” என்பதே அதன் தலைப்பு. (மத்தேயு 9:38) சொல்லர்த்தமான அறுவடையை சிறிது காலத்திற்குள் முடிக்க வேண்டும். ஆகவே அறுவடை செய்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படியானால், இந்த ஒழுங்குமுறையின் முடிவில் அவ்வாறு உழைப்பது எவ்வளவு முக்கியம்! மிகப் பெரிய இந்த அறுவடையின் காலத்தில் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. (மத்தேயு 13:39) மீண்டும் செய்ய வேண்டியிராத இந்த அறுவடை வேலையில் “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்,” அதே சமயத்தில் “ஆவியிலே அனலாயிருங்கள்,” “கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்” என பட்டதாரிகளை சகோதரர் லெட் உற்சாகப்படுத்தினார். (ரோமர் 12:11) “வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை பேச்சாளர் குறிப்பிட்டார். (யோவான் 4:35) அதற்குப் பின், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஜனங்களிடம் பேச உள்ளப்பூர்வமாக முயற்சி செய்வதன் மூலமும், கிடைக்கும் எல்லா சமயங்களிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலமும் அறுப்பு வேலையில் வைராக்கியத்தை காட்டும்படி பட்டதாரிகளை அவர் உற்சாகப்படுத்தினார். சந்தர்ப்பங்களுக்காக விழிப்புடனிருப்பது திறம்பட்ட சாட்சி கொடுப்பதை எளிதாக்கும். யெகோவா வைராக்கியமிக்க கடவுள், நாம் அனைவரும் ஆன்மீக அறுவடையில் அவரைப் போலவே கடினமாய் உழைக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்.​—2 இராஜாக்கள் 19:31; யோவான் 5:17.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சகோதரர் ஜரஸ், பல கிளை அலுவலகங்களிலிருந்து வந்த வாழ்த்து மடல்களை இறுதியில் வாசித்தார், பிறகு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டதாரிகளில் ஒருவர் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஆழ்ந்த போற்றுதலை தெரிவித்து வகுப்பின் சார்பாக ஒரு கடிதத்தை வாசித்தார். உண்மையிலேயே 116-வது வகுப்பின் பட்டமளிப்பு விழா, ஆர்வமிக்க அறுவடைக்காரர்களைப் போல் தீர்மானத்தோடு புறப்பட்டு செல்ல கூடிவந்திருந்தோர் அனைவரையுமே ஊக்குவித்தது.

[பக்கம் 25-ன் பெட்டி]

வகுப்பின் புள்ளிவிவரங்கள்

பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 6

அனுப்பப்பட்ட நாடுகள்: 20

மாணவர்களின் எண்ணிக்கை: 46

சராசரி வயது: 34.2

சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.2

முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.9

[பக்கம் 26-ன் படம்]

உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 116-வது வகுப்பு

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.

(1) சியான்சு, ஆர்.; ஸ்பார்க்ஸ், டீ.; பின்யா, சி.; டர்னர், பி.; சேனி, எல். (2) ஸ்வார்டி, எம்.; ஸோக்விஸ்ட், ஏ.; ஆமாடோரி, எல்.; ஸ்மித், என்.; ஜோர்டன், ஏ.; ப்வாஸானோ, எல். (3) மட்லாக், ஜெ.; ரூயித், சி.; ட்யூலார், எல்.; வின்யரோன், எம்.; ஹென்றி, கே. (4) ஸோக்விஸ்ட், எச்.; லாக்ஸ், ஜெ.; ரூஸோ, ஜெ.; கஸ்டாஃப்ஸன், கே.; ப்வாஸானோ ஆர்.; ஜோர்டன், எம். (5) ஹென்றி, டி.; டர்னர், டி.; கர்வின், எஸ்.; ஃப்ளாரிட், கே.; சியான்சு, எஸ். (6) ஆமாடோரி, எஸ்.; சேனி, ஜெ.; ராஸ், ஆர்.; நெல்சன், ஜெ.; ரூயித், ஜெ.; வின்யரோன், எம். (7) ஃப்ளாரிட், ஜெ.; மட்லாக், டி.; ராஸ், பி.; லாக்ஸ், சி.; ரூஸோ, டி., ட்யூலார், டி.; கர்வின், என். (8) கஸ்டாஃப்ஸன், ஏ.; நெல்சன், டி.; ஸ்வார்டி, டபிள்யூ.; பின்யா, எம்.; ஸ்மித், சி.; ஸ்பார்க்ஸ், டி.