Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்தும் வெவ்வேறு பாதைகளா?

எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்தும் வெவ்வேறு பாதைகளா?

பைபிளின் கருத்து

எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்தும் வெவ்வேறு பாதைகளா?

“இந்த அண்டத்திற்கே ஆண்டவராக இருப்பவர் தம்மை வெளிப்படுத்துவதற்கு ஒரேவொரு மதத்தை மாத்திரமே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என நூலாசிரியர் மார்கஸ் போர்க் குறிப்பிட்டார். சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் டுட்டு இவ்வாறு கூறினார்: விசுவாசம் எனும் “மறைபொருளைப் பற்றிய முழு சத்தியத்தையும் பெற்றிருப்பதாக எந்தவொரு மதமும் உரிமைபாராட்ட முடியாது.” இந்துக்களின் கருத்தைப் பற்றிய பிரபல வங்காள பழமொழி என்னவென்றால், “ஜோத்தோ மாத், டோத்தோ பாத்,” எல்லா மதங்களும் ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் பல்வேறு வழிகள் என்பதே இதன் அர்த்தம். புத்த மதத்தினருடைய கருத்தும் இதேதான். சொல்லப்போனால், எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்தும் பல்வேறு வழிகள் என கோடானுகோடி மக்கள் நம்புகிறார்கள்.

சரித்திராசிரியர் ஜெஃப்ரி பேரின்டர் இவ்வாறு குறிப்பிட்டார்: “எல்லா மதங்களுக்கும் ஒரே இலக்குதான், அல்லது சத்தியத்திற்கு வழிநடத்தும் ஒரே வழிகளே, அல்லது எல்லாமே ஒரே கோட்பாட்டைத்தான் போதிக்கின்றன என சில சமயங்களில் சொல்லப்படுகிறது.” மதங்களின் போதனைகள், ஆசாரங்கள், தெய்வங்கள் எல்லாமே உண்மையில் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. பெரும்பாலான மதங்கள் அன்பை பற்றியும், கொலை, திருட்டு, பொய் சொல்லுதல் ஆகியவை தவறு என்றும் கற்பிக்கின்றன. பெரும்பாலான மத தொகுதிகளில், சில மற்றவர்களுக்கு உதவ உண்மையிலேயே பாடுபடுகின்றன. அப்படியானால், ஒருவர் தன்னுடைய மதத்தை உண்மையுடன் கடைப்பிடிப்பவராகவும் நேர்மையான வாழ்க்கை வாழ்பவராகவும் இருந்தால், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமா? அல்லது எல்லா மதங்களுமே கடவுளிடம் வழிநடத்தும் வெவ்வேறு பாதைகள்தானா?

நேர்மை மட்டுமே போதுமா?

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சவுல் என்ற பெயரிடப்பட்ட​—⁠பிற்பாடு கிறிஸ்தவ அப்போஸ்தலனாக பவுல் என்று அறியப்பட்ட​—⁠ஒரு யூதனுடைய கதையை கேளுங்கள். அவர் யூத மதத்தில் மிக வைராக்கியமாக இருந்தார். இது, கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுடைய வணக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கு அவரை வழிநடத்தியது, இந்த வழிபாடு தவறானது என அவர் நினைத்தார். (அப்போஸ்தலர் 8:1-3; 9:1, 2) ஆனால், தன்னைப் போன்றே மிகவும் மதப் பற்றுள்ள ஆட்கள் கடவுளை வழிபடுவதில் வைராக்கியத்தோடு இருந்தாலும் எல்லா உண்மைகளையும் அறியாததால் அவர்களுடைய வணக்கம் தவறானதாக இருக்கலாம் என்பதை கடவுளுடைய இரக்கத்தால் சவுல் உணர்ந்துகொண்டார். (ரோமர் 10:2) கடவுளுடைய சித்தத்தையும் அவருடைய செயல்களையும் சவுல் அறிந்துகொண்டபோதோ மாறிவிட்டார். மேலும் யாரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தாரோ அவர்களோடே, அதாவது இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களோடே, கடவுளை வழிபட ஆரம்பித்தார்.​—1 தீமோத்தேயு 1:12-16.

நூற்றுக்கணக்கான மதங்களில் எதை தெரிந்தெடுத்தாலும் கடவுளுக்கு சரியே என்று பைபிள் சொல்கிறதா? உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவிடமிருந்து அப்போஸ்தலன் பவுல் பெற்ற கட்டளைகள் இதற்கு நேர்மாறாக இருந்தன. ‘இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் [புறஜாதியார்] திரும்புவதற்கு’ அவரை இயேசு அனுப்பினார். (அப்போஸ்தலர் 26:17, 18) ஆகவே, நாம் தெரிந்தெடுக்கும் மதம் உண்மையிலேயே முக்கியம் என்பது தெளிவாகிறது. பவுல் பிரசங்கிப்பதற்கு அனுப்பப்பட்ட மக்களில் அநேகருக்கு ஏற்கெனவே ஒரு மதம் இருந்தது. ஆனால் அவர்கள் ‘இருளில்’ இருந்தார்கள். சொல்லப்போனால், வெவ்வேறு பாதைகள் நித்திய ஜீவனுக்கும் கடவுளுடைய தயவை பெறுவதற்கும் வழிநடத்துகிறதென்றால், சீஷராக்கும் வேலைக்காக இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களைப் பயிற்றுவித்து அனுப்பவேண்டிய அவசியம் இருந்திருக்காதே.​—மத்தேயு 28:19, 20.

பிரசித்தி பெற்ற தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறினார்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) ‘ஒரே விசுவாசமே’ இருக்கிறது என பைபிள் தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறது. (எபேசியர் 4:5) அப்படியென்றால், ‘விசாலமான’ பாதையில் செல்பவர் பலருக்கும் ஒரு மதம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ‘ஒரே விசுவாசம்’ இல்லை. ஒரேவொரு மெய் மதமே இருப்பதால், அந்த மெய் விசுவாசத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறவர்கள் அதை நாடித்தேட வேண்டும்.

மெய் கடவுளை தேடுங்கள்

மனிதர் செய்ய வேண்டியதை மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே கடவுள் அவர்களிடம் தெரிவித்திருந்தார். (ஆதியாகமம் 1:28; 2:15-17; 4:3-5) இன்று நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் காரியங்கள் பைபிளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதைக்கொண்டு ஏற்கத்தகுந்த வணக்கத்தையும் ஏற்கத்தகாத வணக்கத்தையும் தெளிவாக கண்டுகொள்ள முடியும். (மத்தேயு 15:3-9) சிலர் தங்களுடைய மதத்தை பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கிறார்கள், மற்றவர்களோ சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையோருடைய போக்கிலேயே போகிறார்கள். பெரும்பாலானோருக்கு மதம் என்பது எப்பொழுது, எங்கே பிறந்தார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. ஆனால், உங்களுடைய மதத்தை குருட்டாம் போக்கிற்கு அல்லது மற்றவர்கள் தீர்மானிப்பதற்கு விட்டுவிட வேண்டுமா?

நீங்கள் தெரிந்தெடுக்கும் மதம் பைபிளை கவனமாக ஆராய்ந்து தெரிந்தெடுத்த ஒன்றாக இருக்க வேண்டும். முதல் நூற்றாண்டில், கல்விகற்ற சிலர் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக்கொள்வதற்கு மாறாக வேறொன்றையும் செய்தார்கள். “காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்”தார்கள். (அப்போஸ்தலர் 17:11; 1 யோவான் 4:1) ஏன் நீங்களும் ஆராய்ந்து பார்க்கக்கூடாது?

சத்தியத்தின்படி வழிபடுவோரையே இந்த அண்டத்தின் கடவுள் விரும்புகிறார் என பைபிள் விவரிக்கிறது. யோவான் 4:23, 24-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இயேசு இவ்வாறு விளக்கினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” “பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தி”யே அவருக்கு ஏற்கத்தகுந்தது. (யாக்கோபு 1:27) ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையைக் கண்டுபிடிக்க முயன்ற லட்சோப லட்சம் மக்களை கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார். அலட்சியம் செய்வோருக்கு கடவுள் நித்திய ஜீவனை தரப்போவதில்லை, ஆனால் தாம் காண்பிக்கும் இடுக்கமான பாதையை கண்டுபிடித்து அதில் தொடர உண்மையிலேயே முயலுவோருக்கு தருவார்.​—மல்கியா 3:⁠18.(g01 6/8)