மே 11-17, 2026

பாட்டு 7 என் பலம் யெகோவா

இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசரை நம்புங்கள்

இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசரை நம்புங்கள்

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.”சங். 83:18.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாதான் இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்தவும், இன்றும் எதிர்காலத்திலும் வரும் சோதனைகளைத் தாண்டிவர அவர் உதவுவார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்தக் கட்டுரை உதவும்.

1. எப்படிப்பட்ட வேதனைகளை யோபு சந்தித்தார்?

 பைபிள் காலங்களில் வாழ்ந்த யோபு என்பவர், தன்னிடமிருந்த எல்லாவற்றையுமே இழந்துவிட்டார். பிள்ளைகள், சொத்துப்பத்துகள், ஆரோக்கியம் என எல்லாவற்றையுமே பறிகொடுத்துவிட்டார்! அதுபோதாதென்று, மற்றவர்களும் அவரை வெறுக்க ஆரம்பித்தார்கள். “நண்பர்கள்” என்ற பெயரில் வந்தவர்கள் தங்கள் வார்த்தைகளால் அவர் இதயத்தைக் குத்திக் கிழித்தார்கள். அவருடைய அன்பு மனைவிகூட விரக்தியில், “[கடவுளை] திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!” என்று சொன்னாள். (யோபு 2:9; 15:4, 5; 19:1-3) இந்தச் சோகமான சம்பவங்கள், கடவுள்மேல் யோபு வைத்திருந்த நம்பிக்கையை அரித்திருக்கலாம்; ‘யெகோவா தன்னை நேசிக்கிறவர்களையும் தனக்குச் சேவை செய்கிறவர்களையும் உண்மையிலேயே காப்பாற்றுவாரா?’ என்ற சந்தேகத்தை யோபுவுக்குக் கொடுத்திருக்கலாம்.

2-3. நாம் என்ன யோசிக்க ஆரம்பித்துவிடலாம், யோபு புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்வோம்?

2 யெகோவாமேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உரசிப் பார்க்கும் சூழ்நிலைகள் நமக்கும் வரலாம். “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக” இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) அடுத்தடுத்து சோதனைகள் வந்துகொண்டே இருந்தால் நம் தலையே சுற்றலாம். ‘வாழ்க்கையே இப்படித்தான் போகும்போல!’ என்று சலிப்புத்தட்டலாம். இப்படிப்பட்ட சோதனைகளால் சிலருக்கு, ‘யெகோவாவுக்கு உண்மையிலேயே என்மேல் அக்கறை இருக்கிறதா?’ என்ற சந்தேகம் வருகிறது.

3 உங்களுக்கும் அந்த மாதிரி சந்தேகம் வந்திருந்தால், மனமுடைந்து போய்விடாதீர்கள்! யெகோவா, தனக்கு உண்மையாக இருக்கிறவர்களைக் காப்பாற்றுவார் என்பதை யோபு கற்றுக்கொண்டார். நாமும், நம்முடைய பரலோக அப்பாமேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும். அதைச் செய்ய யோபு புத்தகம் நமக்கு உதவும். இந்த இரண்டு முக்கியமான விஷயங்களை நம்பவும் யோபு புத்தகம் உதவி செய்யும்: (1) யெகோவா மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர். (2) சர்வவல்லமையுள்ள கடவுளால் உலக சம்பவங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முடியும்; தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், தன்னுடைய மக்களுக்கு ஆன்மீக விதத்திலும் உடலளவிலும் நிரந்தர பாதிப்பு வராமல் இருப்பதற்காகவும் அப்படிச் செய்ய முடியும்.

சாத்தான் அவர்கள்முன் வந்து நின்றான்

4. பரலோகத்தில் நடந்த கூட்டத்தில் வேறு யாரும் இருந்தது?

4 ஒருநாள், “உண்மைக் கடவுளின் மகன்கள்” பரலோகத்தில் யெகோவாவுக்கு முன் ஒன்றுகூடி வந்தார்கள். அந்தச் சமயத்தில் “சாத்தானும் அவர்களோடு வந்து நின்றான்” என்று பதிவு காட்டுகிறது. (யோபு 1:6, அடிக்குறிப்பு) யெகோவாவின் முக்கிய எதிரியான அவனுக்குக் கொடுக்கப்பட்ட காரண பெயரான “சாத்தான்” (அதாவது “எதிர்க்கிறவன்”) பைபிளில் இங்கேதான் முதல்முறையாக வருகிறது. அப்படியென்றால், இந்தச் சம்பவம் நடந்தபோது அவன் ஏற்கெனவே கடவுளுக்கு உண்மையில்லாதவனாக ஆகியிருந்தான். யெகோவாவுக்கு மட்டுமல்ல, பரலோகத்திலும் பூமியிலும் இருந்த அவருடைய குடும்பத்துக்கும் அவன் எதிரியாக ஆகியிருந்தான். ஆதியாகமம் 3:15-ல் இருக்கும் வார்த்தைகளை யெகோவா சொன்னபோதே தன்னுடைய பரலோகக் குடும்பத்தின் பாகமாக சாத்தான் இல்லை என்பதைக் காட்டினார். அப்படியென்றால், ‘சந்ததியை’ உருவாக்கவிருந்த ‘பெண்ணின்’ பாகமாக—தேவதூதர்கள் அடங்கிய யெகோவாவுடைய பரலோகக் குடும்பத்தின் பாகமாக—சாத்தான் இல்லை.

5. பரலோகத்தில் நடந்த அந்தக் கூட்டத்திலிருந்து நாம் என்னவெல்லாம் தெரிந்துகொள்கிறோம்?

5 பரலோகத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை பைபிளில் யெகோவா பதிவுசெய்து வைத்திருக்கிறார். சாத்தானின் வார்த்தைகளிலிருந்து, அவன் யெகோவாவின் மக்களை வெறுக்கும் ஒரு கல்நெஞ்சக்காரன் என்பது தெளிவாகத் தெரிகிறது. (யோபு 1:9; வெளிப்படுத்துதல் 12:10-ஐ ஒப்பிடுங்கள்.) இந்தப் பரலோகக் காட்சியை யெகோவா பதிவு செய்ததிலிருந்து, ஆறுதல் தருகிற சில விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது: யெகோவா தன் உன்னத அதிகாரத்தை எப்போதுமே சரியான, நியாயமான விதத்தில் பயன்படுத்துகிறார். அதோடு, மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதற்கான வரம்புகளை அவரால் வைக்க முடியும்.

யெகோவா வரம்புகளை வைக்கிறார்

6. பரலோகத்தில் நடந்த கூட்டம் தன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்? (யோபு 1:7, 8)

6 யோபு 1:7, 8-ஐ வாசியுங்கள். அந்தக் கூட்டம் முழுவதுமே யெகோவாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சாத்தானிடம், “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா?” என்று யெகோவா கேட்டார். உண்மையுள்ள யோபுவை சாத்தான் குறிவைத்துவிட்டான் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது; அதனால்தான் அவர் அப்படிக் கேட்டார். இப்போது, யோபுவுக்கு உதவ யெகோவா தன்னுடைய அபாரமான சக்தியை எப்படிப் பயன்படுத்துவார்? பார்க்கலாம்.

7. யோபு 1:10, 11 காட்டுகிற மாதிரி, மனிதர்கள் யெகோவாவுக்கு ஏன் சேவை செய்வதாக சாத்தான் சொன்னான்?

7 யோபு 1:10, 11-ஐ வாசியுங்கள். யெகோவாதான் இந்தப் பிரபஞ்சத்தின் சர்வவல்லமையுள்ள உன்னதப் பேரரசர். அவர் தன்னுடைய அதிகாரத்தையும் சக்தியையும் சரியான விதத்தில், தான் விரும்பும் விதத்தில் பயன்படுத்துவார். (எரே. 32:17; தானி. 4:35) ஆனால், யெகோவா தன்னுடைய வல்லமையைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்று சாத்தான் குற்றம்சாட்டினான். யோபு மாதிரி மனிதர்களுக்கு யெகோவா லஞ்சம் கொடுத்து, அதாவது அவர்களை ஆசீர்வதித்து, தனக்கு உண்மையாகச் சேவை செய்ய வைக்கிறார் என்று சாத்தான் சொன்னான். அதோடு, யெகோவாவுக்குச் சேவை செய்பவர்கள் சுயநலத்துக்காகத்தான், அதாவது அவரிடமிருந்து கிடைக்கிற ஆசீர்வாதங்களுக்காகத்தான், அவருக்குச் சேவை செய்கிறார்கள் என்றும் சொல்லாமல் சொன்னான். இதற்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்?

8-9. யெகோவா என்ன தெளிவான வரம்புகளை சாத்தானுக்கு வைத்தார், ஏன்? (யோபு 1:12) (படத்தையும் பாருங்கள்.)

8 யோபு 1:12-ஐ வாசியுங்கள். சாத்தான் சொன்னதை நிரூபிக்க யெகோவா அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அவனுக்குச் சில வரம்புகளை வைத்தார். அவனிடம் ரொம்பத் தெளிவாக, “[யோபுமேல்] மட்டும் கை வைக்காதே!” என்று சொன்னார். அங்கிருந்த தேவதூதர்கள் எல்லார் முன்பும் சாத்தானுக்கு யெகோவா வரம்புகளை வைத்தார். இந்த வரம்புகளை மீறி அவனால் செயல்பட முடியாது. யெகோவா போட்ட வட்டத்துக்குள் மட்டும்தான் அவனால் செயல்பட முடியும். இந்த விதத்தில் யோபுவைப் பாதுகாக்க யெகோவா தன் அதிகாரத்தையும் சக்தியையும் அன்று பயன்படுத்தினார். அவர் எவ்வளவு நியாயமுள்ளவர், அன்புள்ளவர் என்பதையும் காட்டினார். இன்றும் யெகோவா வைத்திருக்கிற வரம்புகளுக்குள்தான் சாத்தானால் செயல்பட முடியும்.

9 சாத்தானின் முதல் கட்ட முயற்சி படுதோல்வி அடைந்தது. யோபு தன் பரலோக அப்பா யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருந்தார். (யோபு 1:22) ஆனால், சாத்தான் யோபுவை இன்னும் சோதிக்க நினைத்தான்.

மற்றவர்கள் முன்பு தன்னுடைய வாதத்தை முன்வைக்க யெகோவா சாத்தானுக்கு வாய்ப்பு கொடுத்தார் (பாராக்கள் 8-9)


10. மறுபடியும் யோபுவைச் சோதிக்க சாத்தானுக்கு யெகோவா ஏன் அனுமதி கொடுத்தார்? (யோபு 2:2-6)

10 யோபு 2:2-6-ஐ வாசியுங்கள். இப்போது, யோபுவின் உண்மைத்தன்மையை உடைக்கும் முயற்சியில் சாத்தான் இன்னும் தீவிரமாக இறங்கினான். யோபுவுக்கு உடலில் ஏதாவது பிரச்சினை வந்தால், கண்டிப்பாக யெகோவாவைச் சபித்துவிட்டு அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடுவார் என்று சாத்தான் சொன்னான். அவன் சொல்வது தவறு என்பதைக் காட்ட யெகோவா என்ன செய்தார்? யோபுவை வியாதியால் தாக்க சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். ஆனால் இப்போதும் யெகோவா அவனுக்கு வரம்புகளை வைத்தார். சாத்தானிடம், “[யோபுவின்] உயிரை மட்டும் எடுத்துவிடாதே” என்று சொன்னார். சாத்தானுக்கு வேறு வழியே இல்லை, யெகோவா வைத்த வரம்புகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இப்போதும், எல்லாமே உன்னதப் பேரரசருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது; யெகோவா வைத்த வரம்புகளை மீறி சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

யோபுவின் சோதனைகளுக்கு யெகோவா முடிவுகட்டினார்

11. யோபுவின் சோதனைகளுக்கு யெகோவா ஒரு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அவரை எப்படி ஆசீர்வதித்தார்? (யோபு 42:10-13)

11 யோபு 42:10-13-ஐ வாசியுங்கள். என்ன ஆனாலும் சரி, யோபு விட்டுக்கொடுக்க போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்போது சாத்தானின் தாக்குதல்களுக்கு யெகோவா ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். யோபு அனுபவித்த பாடுகளைச் சரிசெய்ய, யெகோவா இப்போது களத்தில் இறங்கினார். இந்தச் சமயத்திலும், யெகோவாவின் முடிவை எதிர்த்து சாத்தானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. யெகோவாவின் அருமையான ஊழியரான யோபுவை நேரடியாகத் தாக்க சாத்தானுக்கு அதற்குமேலும் அனுமதியில்லை.

12. யெகோவா தன்னுடைய ஊழியர்களைப் பாதுகாக்கிறார் என்பதைக் காட்டும் ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்.

12 இந்தக் கடைசி நாட்களிலும் யெகோவா அவருடைய வல்லமையைப் பயன்படுத்தி தன் ஊழியர்களைக் காப்பாற்றியிருக்கிறார். உதாரணத்துக்கு, 1945-ல் நடந்த நாசி மரண அணிவகுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சித்திரவதை முகாமிலிருந்து ஆரம்பித்த இந்த அணிவகுப்பில், 230 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள். இந்த அணிவகுப்பு ரொம்பக் கொடூரமான ஒரு பயணமாக இருந்தது. ஆனால் எல்லா யெகோவாவின் சாட்சிகளும் உயிர்பிழைத்தார்கள். அவர்கள் சந்தித்த மோசமான அனுபவத்தைப் பற்றி இப்படி எழுதினார்கள்: “நீண்ட கடும் சோதனைமிக்க காலம் இப்போது முடிவடைந்து விட்டது; தப்பிப்பிழைத்தவர்கள், அடையாள அர்த்தத்தில், நெருப்பு சூளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய், சோதனை நெருப்பின் வாடை கொஞ்சங்கூட தங்கள்மீது இல்லாதவர்களாய் வெளியே வந்திருக்கிறார்கள். . . . சோதனையின் நெருப்பில் தகிக்கப்பட்டிருப்பதற்குப் பதிலாக, அவர்கள் யெகோவாவின் சக்தியாலும் பலத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.” அவர்கள் இப்படியும் சொன்னார்கள்: “எங்களுக்கு ஒரேவொரு ஆசைதான் . . . சிங்கக் குகையிலிருந்து வெளியே வந்த பிறகு, என்றென்றுமே யெகோவாவுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்க வேண்டும். நாங்கள் ஏங்கும் மிகப் பெரிய ஆசீர்வாதம் அதுதான்.”—தானியேல் 3:27-ஐயும், 6:22-ஐயும் ஒப்பிடுங்கள்.

13. சோதனைகள் வரும்போது நீங்கள் எந்த விஷயத்தில் நம்பிக்கையோடு இருக்கலாம்? (படங்களையும் பாருங்கள்.)

13 சிங்கக் குகையில் தூக்கி வீசப்பட்ட மாதிரி, நாம்கூட சில சமயங்களில் உணரலாம். (1 பே. 5:8-10) ரொம்பவே உடைந்துபோய்விடலாம்; அந்தச் சோதனைக்கு முடிவே வராததால் நொந்துகூட போகலாம். அந்த மாதிரி சமயங்களில் யோபுவின் அனுபவத்தை யோசித்துப் பார்ப்பது நமக்கு உதவி செய்யும். நம் கஷ்டங்களுக்கு முடிவுகட்ட யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறது என்பதில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். யெகோவா ஒருவேளை இப்போதே அதைச் சரிசெய்யலாம், அல்லது புதிய உலகத்தில் சரிசெய்யலாம். இந்த மோசமான உலகத்தை அழிக்க யெகோவா ஏற்கெனவே ஒரு நாளைக் குறித்துவிட்டார்; அதைத் தாண்டி ஒரு நிமிஷம்கூட போகாது!

தன்னுடைய மக்களுக்கு வரும் கஷ்டங்களுக்கு யெகோவா முடிவுகட்டுவார் (பாரா 13)


தன் உண்மை ஊழியர்களை யெகோவா நெஞ்சார நேசிக்கிறார்

14-15. தனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களுக்கு யெகோவா என்ன செய்ய ஆசைப்படுகிறார், ஏன்? (யோபு 14:15) (படத்தையும் பாருங்கள்.)

14 யோபு 14:15-ஐ வாசியுங்கள். தனக்கு உண்மையாக இருக்கிறவர்கள்மேல் நம் பரலோக அப்பாவுக்கு ஒரு தனிப் பாசம் இருக்கிறது. அவர்கள் இறந்துபோனாலும் அவர்களுக்கு மறுபடியும் உயிர் கொடுக்க அவர் ஏங்குகிறார். அந்தளவுக்கு அவர்களை நெஞ்சார நேசிக்கிறார். அவர்களை உயிரோடு கொண்டுவருவதன் மூலம், மரணத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட வலியை அவர் சரிசெய்வார்.—ஏசா. 65:17.

15 சாத்தானின் ஆதிக்கம் இருந்த உலகத்தில்தான் யோபு தொடர்ந்து வாழ்ந்தார். இருந்தாலும், யெகோவா யோபுவைக் குணப்படுத்தினார். முன்பு இருந்ததைவிட ஏகப்பட்ட ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தார். எதிர்காலத்தில் அவருக்கு யெகோவா என்னவெல்லாம் கொடுக்கப்போகிறார் என்பதற்கு அவையெல்லாம் ஒரு ட்ரெய்லர் மாதிரிதான் இருந்தது. தனக்கு உண்மையாக இருக்கிறவர்கள் எந்தக் குறையும் இல்லாமல், வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதை யெகோவா காட்டினார். சொல்லப்போனால், தனக்கு உண்மையாக இருக்கிற எல்லாரையுமே யெகோவா ஆசீர்வதிப்பார். அழகான புதிய உலகத்தில், மரணமில்லாத வாழ்க்கையையும் அவர்களுக்குக் கொடுப்பார். (வெளி. 21:3, 4) இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசராக, இதையெல்லாம் செய்வதற்கான ஆசை யெகோவாவுக்கு இருக்கிறது. இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் சோதனைகள் வரும்போது அதைத் தாங்கி நிற்பதற்கான பலம் நமக்குக் கிடைக்கும்.

சோதனைகளுக்குப் பிறகு, யோபுவும் அவருடைய மனைவியும் யெகோவா கொடுத்த ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள் (பாராக்கள் 14-15)


16. உன்னதப் பேரரசராக இருக்கிற யெகோவாவை நாம் நம்புவதற்கு வேறென்ன காரணம் இருக்கிறது?

16 யோபு ரொம்பக் காலம் வாழ்ந்த பிறகு இறந்துபோனார். ஆனால் உன்னதப் பேரரசராகவும் சர்வவல்லமையுள்ள கடவுளாகவும் இருக்கிற யெகோவாவால், மரணத்துக்கே சமாதி கட்ட முடியும். (உபா. 32:39) யோபுவைத் திரும்ப உயிரோடு கொண்டுவர முடியும். அவர் முடிவு பண்ணியிருக்கிற நேரத்தில், அவர் நெஞ்சார நேசிக்கிறவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். யார் நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாது!—ரோ. 8:38, 39.

யெகோவாவை முழுமையாக நம்புங்கள்

17. யெகோவாவின் மக்களைத் தீர்த்துக்கட்ட சாத்தான் எடுத்த முயற்சிகள் எல்லாமே படுதோல்வியடைந்திருப்பது எதைக் காட்டுகிறது?

17 யெகோவாவை முழுமையாக நம்பலாம் என்பதற்கு யோபு புத்தகம் நமக்கு நிறைய ஆதாரங்களைக் கொடுக்கின்றன. யெகோவாவின் மக்களை சாத்தானால் வேரோடு பிடுங்கி எறிய முடியவில்லை. இன்று கிட்டத்தட்ட 90 லட்சம் ஆட்கள் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்; உன்னதப் பேரரசராக யெகோவாவுக்கு இருக்கிற வல்லமைக்கு இவர்களே ஒரு பெரிய அத்தாட்சி! யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிராக உருவாகிற எந்தவொரு ஆயுதமும் வெற்றியடையாது என்பதைச் சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கிறது. (ஏசா. 54:17) இரும்பு மாதிரி இருக்கிற தேசங்களும் மத அமைப்புகளும் யெகோவாவின் மக்களை—அதுவும் மற்றவர்களுடைய பார்வையில் பாதுகாப்பே இல்லாத மாதிரி இருக்கிற மக்களை—நசுக்கிப்போட முயற்சி செய்திருக்கின்றன. ஆனால், அது நடக்கவே இல்லை. யெகோவாவைப் பற்றிய உண்மைகளை நாம் மக்களுக்குச் சொல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை; சாத்தான் ஒரு கொலைகாரன், பொய் பித்தலாட்டம் செய்கிறவன் என்பதை நாம் வெட்டவெளிச்சம் ஆக்குவதையும் யாராலுமே தடுத்து நிறுத்த முடியவில்லை. நமக்குச் சாவே வந்தாலும் யெகோவாவால் நம்மை மறுபடியும் உயிரோடு கொண்டுவர முடியும்!—ஓசி. 13:14.

18. எதிர்காலத்தை நாம் ஏன் நம்பிக்கையோடு சந்திக்கலாம்?

18 யோபுவின் வாழ்க்கையைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்கும்போது எதிர்காலத்தை விசுவாசத்தோடு சந்திக்க நமக்குப் பலம் கிடைக்கும். மிகுந்த உபத்திரவம் சமயத்தில், சாத்தானும் அவனைச் சேர்ந்த ஆட்களும் ரொம்பப் பலம் வாய்ந்தவர்கள் மாதிரியும் யெகோவாவின் மக்கள் நிர்க்கதியாக இருக்கிற மாதிரியும் தோன்றலாம். ஆனால், யோபுவின் நாட்களில் நடந்த மாதிரியே, யெகோவாவின் கட்டுப்பாட்டில்தான் எல்லாமே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது. தன் மக்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்த, சாத்தானை யெகோவா அனுமதிக்கவே மாட்டார். இந்த உலகத்துக்கு சாத்தான் ஏற்படுத்தியிருக்கிற எல்லா கஷ்டங்களுக்கும் யெகோவா முடிவுகட்டப்போகும் அந்த நாள் ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு, சாத்தானும் அவனுடைய பேய்களும் 1,000 வருஷங்களுக்கு அதலபாதாளத்தில் கட்டி வைக்கப்படுவார்கள். (லூக். 8:31; வெளி. 20:1-3) கொஞ்சக் காலத்தில், அவனும் அவனைச் சேர்ந்த எல்லாருமே நிரந்தரமான அழிவைச் சந்திப்பார்கள். (வெளி. 20:10) யெகோவா சொன்ன மாதிரியே சாத்தானின் தலை நசுக்கப்படும். கடைசியில், அவன் இருந்த தடயமே இல்லாமல் ஒரேயடியாக அழிந்துவிடுவான்.—ஆதி. 3:15; ரோ. 16:20.

19. யெகோவாவை முழுமையாக நம்புகிறவர்களுக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)

19 சீக்கிரத்தில் உதயமாகப்போகும் புதிய உலகத்தில், யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கு அற்புதமான வாழ்க்கை காத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார்கள். அந்த வாழ்க்கை நம் கற்பனையை எல்லாம் மிஞ்சிவிடும். “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்” என்ற வாக்குறுதியை யெகோவா கொடுத்திருக்கிறார். (வெளி. 21:5) இதற்கு என்ன அர்த்தம்? பல ஆயிர வருஷங்களில், முதல்முறையாக, மனிதர்கள் வித்தியாசமான ஒரு சூழ்நிலையை அனுபவிப்பார்கள். சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் சீர்கெட்ட, வெறுப்பு நிறைந்த செல்வாக்கிலிருந்து மனிதர்கள் விடுதலையாகி இருப்பார்கள். அப்போதுதான் மனிதர்கள் உண்மையிலேயே நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். கவலைகளால் நாம் செலவு செய்த தூங்கா இரவுகள், அந்தச் சமயத்தில் சரித்திரமாகத்தான் இருக்கும்! அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிறவர்கள், மக்கள் அற்புதமாகக் குணமாவதைப் பார்ப்பார்கள். இதுமட்டுமா?! மெய்சிலிர்க்க வைக்கும் இன்னொரு விஷயத்தையும் அவர்கள் கடைசியில் பார்ப்பார்கள்—இறந்துபோன அன்பானவர்கள் மறுபடியும் உயிரோடு வருவதை! ஆரம்பத்தில் நம்முடைய பரலோக அப்பா நாம் எப்படி வாழ வேண்டும் என்று விரும்பினாரோ அந்த வாழ்க்கையை அப்போது ருசிப்போம்.

சோதனைகளைச் சகித்திருந்த உண்மையுள்ளவர்கள் யெகோவா கொடுக்கப்போகும் ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் (பாரா 19)


20. நீங்கள் என்ன செய்ய உறுதியாக இருக்கிறீர்கள்?

20 இந்தக் கடைசி நாட்களில் இன்னும் அதிகமான சோதனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கலாம். விசுவாசத்தை விடாமல் இருக்க நமக்குத் தைரியம் தேவை. அதனால், யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும் என்பதிலும் அவருடைய உன்னதப் பேரரசாட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருக்கலாம். யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதை நாம் செயலில் காட்டலாம்; சாத்தான் ஒரு பொய்க்காரன் என்பதையும் நிரூபிக்கலாம். தனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு பெரிய பெரிய ஆசீர்வாதங்களைக் கொடுக்க உன்னதப் பேரரசரான யெகோவா ஆசையாகக் காத்திருக்கிறார். அவருடைய ஆட்சியில் நமக்குப் பிரகாசமான எதிர்காலம் உறுதி!

பாட்டு 153 தைரியம் தாரும்!