தானியேல் 6:1-28
6 தரியு தன்னுடைய சாம்ராஜ்யமெங்கும்+ 120 அதிபதிகளை நியமித்தான்.
2 ராஜாவுக்கு எந்த நஷ்டமும் வராதபடி அந்த அதிபதிகளுடைய+ வேலைகளை மேற்பார்வை செய்ய மூன்று உயர் அதிகாரிகளை நியமித்தான். அந்த மூன்று பேரில் தானியேலும்+ ஒருவர்.
3 மற்ற உயர் அதிகாரிகளையும் அதிபதிகளையும்விட தானியேல் சிறந்தவராக இருந்தார். அவர் மகா புத்திசாலியாக+ இருந்ததால் சாம்ராஜ்யத்திலேயே மிக உயர்ந்த பதவியை அவருக்குக் கொடுக்க ராஜா நினைத்தான்.
4 ஆனால் அந்த உயர் அதிகாரிகளும் அதிபதிகளும், அரசு விவகாரங்களில் தானியேலிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். தானியேல் நம்பகமானவராகவும் பொறுப்பானவராகவும் ஊழல் செய்யாதவராகவும் இருந்ததால் அவரிடம் எந்தக் குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 அப்போது அந்த ஆட்கள், “இந்த தானியேலிடம் எந்தக் குற்றத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது, அவனுடைய கடவுளை வணங்கும் விஷயத்தில்*+ ஏதாவது குற்றம் கண்டுபிடித்தால்தான் உண்டு” என்று பேசிக்கொண்டார்கள்.
6 பின்பு, அந்த உயர் அதிகாரிகளும் அதிபதிகளும் ராஜாவிடம் கும்பலாகப் போய், “தரியு ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க!
7 ஒரு அரச கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்று அரசு அதிகாரிகள், மந்திரிகள், அதிபதிகள், அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகிய நாங்கள் எல்லாரும் கலந்துபேசியிருக்கிறோம். 30 நாட்களுக்கு ராஜாவைத் தவிர எந்தவொரு தெய்வத்திடமோ மனிதனிடமோ யாரும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்றும், மீறுகிற எவனையும் சிங்கக் குகையில்* வீச வேண்டும் என்றும் ஒரு தடையுத்தரவு போடப்பட வேண்டும்.+
8 ராஜாவே, நீங்கள் அந்தக் கட்டளையைப் பிறப்பித்து, அதில் கையெழுத்துப் போடுங்கள்.+ அப்போதுதான் அதை யாராலும் மாற்ற முடியாது. மேதிய பெர்சியர்களின் சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாதே”+ என்றார்கள்.
9 அவர்கள் சொன்னபடியே ராஜா அந்தத் தடையுத்தரவில் கையெழுத்துப் போட்டான்.
10 அந்த விஷயத்தை தானியேல் கேள்விப்பட்டதுமே, தன் வீட்டுக்குப் போனார். அந்த வீட்டின் மாடியறை ஜன்னல்கள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன.+ அங்கே போய், எப்போதும் போல மண்டிபோட்டு, ஜெபம் செய்து, தன் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். தினமும் மூன்று தடவை இப்படி ஜெபம் செய்வது அவருடைய வழக்கமாக இருந்தது.
11 அவர் ஜெபம் செய்துகொண்டிருந்த சமயத்தில் அந்த ஆட்கள் அங்கே திடுதிப்பென்று நுழைந்தார்கள். தானியேல் தன் கடவுளிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்கள்.
12 அவர்கள் ராஜாவிடம் போய் அந்தத் தடையுத்தரவை ஞாபகப்படுத்தி, “ராஜாவே, 30 நாட்களுக்கு உங்களைத் தவிர வேறெந்த தெய்வத்திடமோ மனிதனிடமோ வேண்டிக்கொள்கிற எவனையும் சிங்கக் குகையில் வீச வேண்டும் என்ற தடையுத்தரவில் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள்தானே?” என்று கேட்டார்கள். அதற்கு ராஜா, “ஆமாம், அதில் எந்த மாற்றமும் இல்லை. மேதிய பெர்சியர்களின் சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது”+ என்றான்.
13 உடனே அவர்கள், “ராஜாவே, யூதாவிலிருந்து பிடித்துவரப்பட்ட அந்த தானியேல்+ உங்களையும் நீங்கள் கையெழுத்துப் போட்ட தடையுத்தரவையும் மதிக்கவே இல்லை. அவர் தினமும் மூன்று தடவை தன்னுடைய கடவுளிடம் வேண்டுகிறார்”+ என்றார்கள்.
14 அதைக் கேட்டதும் ராஜா மிகவும் வேதனைப்பட்டு, தானியேலை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தான். அதற்காக, சாயங்காலம்வரை முயற்சி செய்துகொண்டிருந்தான்.
15 பின்பு அந்த ஆட்கள் கும்பலாக ராஜாவிடம் போய், “மேதிய பெர்சியர்களின் சட்டப்படி, ராஜா கையெழுத்துப் போடுகிற எந்தவொரு கட்டளையையும் தடையுத்தரவையும் மாற்ற முடியாது+ என்பதை ராஜா மறந்துவிட வேண்டாம்” என்றார்கள்.
16 அப்போது ராஜா, தானியேலைக் கொண்டுவந்து சிங்கக் குகையில் போடும்படி+ தன் ஆட்களுக்கு ஆணையிட்டான். அவர்களும் அப்படியே செய்தார்கள். தானியேலிடம் ராஜா, “நீ இடைவிடாமல் வணங்குகிற உன் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
17 பின்பு, அந்தக் குகையின் வாசல்மேல் ஒரு கல் கொண்டுவந்து வைக்கப்பட்டது. தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு அடையாளமாக, ராஜா தன்னுடைய முத்திரை மோதிரத்தாலும் தன்னுடைய முக்கியப் பிரமுகர்களின் முத்திரை மோதிரத்தாலும் அந்தக் கல்லின் மேல் முத்திரை போட்டான்.
18 பின்பு, ராஜா அரண்மனைக்குத் திரும்பினான். அந்த ராத்திரி அவன் எதுவும் சாப்பிடவில்லை. எந்தப் பொழுதுபோக்கும் வேண்டாமென்று சொல்லிவிட்டான்.* ராத்திரி முழுக்க அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
19 பொழுது விடிந்ததுமே அவன் எழுந்து, வேகவேகமாகச் சிங்கக் குகைக்குப் போனான்.
20 அதன் பக்கத்தில் போய் சோகமான குரலில், “தானியேலே, உயிருள்ள கடவுளின் ஊழியனே, நீ இடைவிடாமல் வணங்குகிற உன் கடவுள் சிங்கங்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றினாரா?” என்று கேட்டான்.
21 உடனே தானியேல், “ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க!
22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார்.
23 தானியேலின் குரலைக் கேட்டதும் ராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தானியேலை அந்தக் குகையிலிருந்து வெளியே தூக்கிவிடும்படி கட்டளை கொடுத்தான். அதன்படியே, தானியேல் தூக்கிவிடப்பட்டார். தன்னுடைய கடவுள்மேல் நம்பிக்கை வைத்ததால் எந்தக் காயமும் இல்லாமல் தப்பினார்.+
24 பின்பு, தானியேலைக் குற்றம்சாட்டியவர்களை* இழுத்துக்கொண்டு வரும்படி ராஜா உத்தரவு போட்டான். அவர்களும் அவர்களுடைய மனைவிமக்களும் அந்தச் சிங்கக் குகையில் வீசப்பட்டார்கள். அவர்கள் அந்தக் குகையின் தரையில் போய் விழுவதற்கு முன்பாகவே சிங்கங்கள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டன.+
25 தரியு ராஜா பூமியெங்கும் இருந்த எல்லா இனத்தினருக்கும் தேசத்தினருக்கும் மொழியினருக்கும்+ ஒரு கடிதத்தை அனுப்பினான். அதில், “உங்களுக்கு வாழ்த்துக்கள்!
26 என்னுடைய சாம்ராஜ்யமெங்கும் உள்ள ஜனங்கள் தானியேலின் கடவுளுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்று நான் உத்தரவு கொடுக்கிறேன்.+ அவர்தான் உயிருள்ள கடவுள், அவர்தான் என்றென்றும் வாழ்கிறவர். அவருடைய ராஜ்யம் ஒருபோதும் அழியாது, அவருடைய அரசாட்சி* என்றென்றும் நிலைத்திருக்கும்.+
27 அவர் காப்பாற்றுகிறவர்,+ மீட்கிறவர், பரலோகத்திலும் பூமியிலும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறவர்.+ அவர்தான் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்!” என்று எழுதினான்.
28 தரியுவின்+ ஆட்சிக்காலத்திலும் பெர்சியராகிய கோரேசின்+ ஆட்சிக்காலத்திலும் தானியேல் சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “அவனுடைய கடவுளின் சட்டங்களைப் பின்பற்றும் விஷயத்தில்.”
^ அதாவது, “பாதாள குகையில்.”
^ அல்லது, “எந்த இசைக் கலைஞரும் ராஜாவுக்குமுன் கொண்டுவரப்படவில்லை.”
^ வே.வா., “தானியேலைப் பற்றி அபாண்டமாகப் பேசியவர்களை.”
^ வே.வா., “உன்னத அரசாட்சி.”