“நடப்பட்ட இடத்தில் பூத்திடுங்கள்” என்ற ஆலோசனை சிலருக்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், சுவீடன் நாட்டைச் சேர்ந்த மாட்ஸ் மற்றும் ஆன்-காத்ரின் தம்பதி வெவ்வேறு இடத்தில் நிறைய தடவை ‘நடப்பட்டிருக்கிறார்கள்.’ எப்படி என்றும், அந்த ஆலோசனை அவர்களுக்கு எப்படி உதவியது என்றும் பார்க்கலாம், வாருங்கள்!
1979-ல், சகோதரர் மாட்ஸ் மற்றும் சகோதரி ஆன்-காத்ரின் கிலியட் பள்ளிக்குப் போனார்கள். பல வருஷங்களாக, அவர்கள் நிறைய இடங்களில் சேவை செய்திருக்கிறார்கள். ஈரான், மொரிஷியஸ், மியான்மர், டான்சானியா, உகாண்டா, மற்றும் ஜயரில் சேவை செய்திருக்கிறார்கள்! அவர்களுக்குப் புதுப்புது நியமிப்புகள் கிடைத்தபோதெல்லாம், கிலியட் பள்ளியில் போதகராக இருந்த சகோதரர் ஜாக் ரெட்ஃபர்ட் சொன்ன ஆலோசனை ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி அவர்கள் சொல்வதை இப்போது கேட்கலாம்.
சகோதரர் மாட்ஸ், உங்களுக்குச் சத்தியம் எப்படிக் கிடைத்தது என்று சொல்கிறீர்களா?
மாட்ஸ்: இரண்டாவது உலகப் போர் சமயத்தில் என்னுடைய அப்பா போலந்தில் வாழ்ந்தார். கத்தோலிக்க மதத்தில் நடக்கிற அட்டூழியங்களை அப்போது அவர் பார்த்தார். இருந்தாலும், “உண்மை மதம் என்று ஒன்று கண்டிப்பாக எங்கேயாவது இருக்கும்!” என்று எப்போதுமே சொல்வார். அவர் சொன்னது உண்மை என்பதை என்னாலும் போகப்போக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக, எனக்கு பழைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிற பழக்கம் இருந்தது. அப்படி ஒருதடவை நீல கலர் அட்டை இருந்த நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற ஒரு புத்தகத்தை வாங்கினேன். அந்தத் தலைப்பே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ராத்திரியே உட்கார்ந்து முழு புத்தகத்தையும் படித்து முடித்துவிட்டேன். அடுத்த நாள் காலையில், சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று தோன்றியது!
ஏப்ரல் 1972-லிருந்து, நான் யெகோவாவின் சாட்சிகளுடைய நிறைய பிரசுரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். பைபிள் சம்பந்தப்பட்ட நிறைய கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. பிறகு, இயேசுவின் உதாரணத்தில் வரும் வியாபாரி மாதிரியே நடந்துகொண்டேன். அவர் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டுபிடித்தபோது, அதை வாங்குவதற்காக தன்னிடமிருந்த எல்லாவற்றையுமே விற்றுவிட்டார். பல்கலைக்கழகத்தில் படித்து, ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற என்னுடைய குறிக்கோளை “விற்று,” நான் கண்டுபிடித்த பைபிள் சத்தியம் என்ற “முத்தை” வாங்கினேன். (மத். 13:45, 46) டிசம்பர் 10, 1972-ல் ஞானஸ்நானம் எடுத்தேன்.
ஒரு வருஷத்துக்குள் என்னுடைய அப்பா-அம்மாவும் என்னுடைய தம்பியும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஜூலை 1973-ல், நான் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன். எங்களுடைய சபையில் ஆன்-காத்ரின் என்ற ஒழுங்கான பயனியர் சகோதரி இருந்தாள். அவள் யெகோவாமேல் நிறைய அன்பு வைத்திருந்தாள், ரொம்ப அழகாகவும் இருந்தாள். நாங்கள் இரண்டு பேரும் காதலித்தோம். பிறகு, 1975-ல் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். அடுத்த நான்கு வருஷங்கள், சுவீடனில் இருந்த ஸ்டராம்சாண்ட் என்ற ஒரு ஊரில் இருந்தோம். அந்த இடம் ரொம்ப அழகாக இருக்கும். அங்கே இருந்த நிறைய பேர் பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார்கள்.
ஆன்-காத்ரின்: என்னுடைய அப்பா ஸ்டாக்ஹோமில் பல்கலைக்கழக படிப்பை முடித்த சமயத்தில் அவருக்குச் சத்தியம் கிடைத்தது. அப்போது நான் வெறும் மூன்று-மாத கைக்குழந்தை. அவர் என்னை கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் தூக்கிக்கொண்டு போவார். ஆனால், என் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகள் செய்வதெல்லாம் தவறு என்று எப்படியாவது நிரூபிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவரால் அப்படி எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், கொஞ்ச நாளில் ஞானஸ்நானம் எடுத்தார். 13 வயதில் நானும் ஞானஸ்நானம் எடுத்தேன். பிறகு, 16 வயதில் பயனியர் சேவையை ஆரம்பித்தேன். தேவை அதிகம் இருந்த உமேயா என்ற நகரத்துக்குப் போய் சேவை செய்தேன். அதற்குப் பிறகு, விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன்.
நானும் மாட்ஸும் கல்யாணம் செய்த பிறகு, நிறைய பேர் சத்தியத்துக்குள் வருவதற்கு உதவி செய்தோம். அதில் ஒருவர்தான் டீனேஜ் வயதில் இருந்த மீவார் என்ற பெண். விளையாட்டு துறையில் பெரிய ஆளாக வருவதற்கான வாய்ப்பு அவளுக்கு இருந்தது. ஆனால், சத்தியத்துக்கு வருவதற்காக அவள் அதை விட்டுக்கொடுத்தாள். என்னுடைய தங்கையோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்தாள். அவளும் என்னுடைய தங்கையும் 1984-ல் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார்கள். அவர்கள் ஈக்வடாரில் மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள்.
“நடப்பட்ட இடத்தில் பூத்திடுங்கள்” என்ற ஆலோசனையை, உங்களுக்குக் கிடைத்த நியமிப்புகளில் எப்படிக் கடைப்பிடித்தீர்கள்?
மாட்ஸ்: ஒவ்வொரு புது நியமிப்பு கிடைத்தபோதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தில் “நடப்பட்டது” போல் இருந்தது. இப்படி பல தடவை நடப்பட்டோம். அதுபோன்ற சமயங்களில் இயேசுவைப் பின்பற்றுவதற்கு, அதாவது அவரை மாதிரியே மனத்தாழ்மையாக இருப்பதற்கு, முயற்சி செய்ததன்மூலம் நாங்கள் “வேரூன்றியவர்களாக” ஆனோம். (கொலோ. 2:6, 7) உள்ளூரில் இருந்த சகோதரர்கள் எங்களுக்கேற்ற மாதிரி மாற வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு விஷயத்தை ஏன் அவர்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி எடுத்தோம். அவர்களுடைய யோசனைகளையும் கலாச்சாரத்தையும்கூட புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். இயேசுவை மாதிரி நடந்துகொள்ள நடந்துகொள்ள “வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போல” எங்களால் செழிப்பாக இருக்க முடிந்தது; அது எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி!—சங். 1:2, 3.
ஆன்-காத்ரின்: புதிதாக நடப்பட்ட இடத்தில் ஒரு செடி நன்றாக வளர வேண்டுமென்றால் அதற்கு கதகதப்பான சூரிய ஒளி தேவை. யெகோவா எங்களுக்கு எப்போதுமே ‘ஒரு சூரியனாக’ இருந்திருக்கிறார். (சங். 84:11) புது இடத்தில் எங்களுக்குக் கதகதப்பான, அன்பான ஒரு சூழல் கிடைப்பதற்காக சகோதர சகோதரிகளை அவர் கொடுத்தார். ஒருசமயம், ஈரானில் இருந்த தெஹரான் என்ற இடத்தில் ஒரு சின்ன சபையில் நாங்கள் இருந்தோம். அங்கே இருந்த சகோதர சகோதரிகள் காட்டிய உபசரிப்பு, பைபிள் காலங்களில் காட்டப்பட்ட உபசரிப்பை எனக்கு ஞாபகப்படுத்தியது. ஈரானிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் ஜூலை 1980-ல், யெகோவாவின் சாட்சிகள் அங்கே தடை செய்யப்பட்டார்கள். வெறும் 48 மணிநேரத்தில் நாங்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்தது. எங்களை ஆப்பிரிக்காவில் இருக்கிற ஜயர் (இப்போது காங்கோ) என்ற நாட்டுக்கு நியமித்தார்கள்.
‘ஆப்பிரிக்கா’ என்று கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. அங்கே நிறைய பாம்புகள் இருக்கும் என்றும் நிறைய வியாதிகள் பரவும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரொம்ப பயமாக இருந்தது. ஆனால், ரொம்ப காலம் ஆப்பிரிக்காவில் சேவை செய்த என்னுடைய இரண்டு நண்பர்கள் என்னிடம், “நீ இன்னும் ஆப்பிரிக்காவுக்கு வராததால்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாய். நீ வந்துதான் பாரேன்! திரும்பிப் போக உனக்கு மனசே வராது” என்றார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான்! அங்கே இருந்த சகோதர சகோதரிகள் எங்கள்மேல் அன்பைப் பொழிந்தார்கள். ஆறு வருஷங்களுக்குப் பிறகு, நம்முடைய வேலைக்குத் தடை வந்ததால் நாங்கள் ஜயரைவிட்டு கிளம்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது நான் யெகோவாவிடம், “நாங்கள் ஆப்பிரிக்காவிலேயே இருந்து சேவை செய்கிறோம். அதற்கு ஏதாவது வழி செய்யுங்கள்” என்று ஜெபம் பண்ணினேன். இப்படி ஜெபம் செய்தபோது எனக்கே சிரிப்பாக இருந்தது!
இத்தனை வருஷங்களில் யெகோவா உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார்?
மாட்ஸ்: வெவ்வேறு நாட்டையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த மிஷனரி சகோதர சகோதரிகளோடு நண்பராக ஆக முடிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சில இடங்களில் எங்களுக்கு ஏகப்பட்ட பைபிள் படிப்புகள் கிடைத்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் 20-க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் இருந்தன. இதுவும் எங்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம். ஆப்பிரிக்காவில் இருக்கிற சகோதர சகோதரிகள் காட்டிய அன்பும் உபசரிப்பும் என் மனதைவிட்டு நீங்கவே இல்லை. டான்சானியாவில் இருந்த சபைகளை நாங்கள் சந்தித்தபோது, அங்கே இருந்த சகோதர சகோதரிகள் ஏழைகளாக இருந்தாலும் எங்களுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கிற மாதிரி பார்த்துக்கொண்டார்கள். ‘அவர்களால் முடிந்ததற்கும் . . . அதிகமாகவே கொடுத்து’ எங்களை உபசரித்தார்கள். (2 கொ. 8:3) அவர்களுடைய வீடுகளுக்குப் பக்கத்தில்தான் எங்களுடைய “பெட்ரூமை,” அதாவது எங்களுடைய வேனை, நிறுத்தி வைத்திருப்போம். ஒவ்வொரு நாள் முடிவிலும், நானும் ஆன்-காத்ரினும் உட்கார்ந்து அந்த நாள் முழுவதும் என்னென்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுவோம், யெகோவாவுக்கு நன்றி சொல்வோம். அந்த நேரத்தை “ஸ்டோரி டைம்” என்று சொல்வோம். அது ரொம்ப சந்தோஷமான ஒரு சமயமாக இருக்கும்.
ஆன்-காத்ரின்: உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளோடு பழக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பெரிய ஆசீர்வாதம். நாங்கள் நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டோம். ஃபார்ஸி, பிரெஞ்சு, லுகாண்டா, ஸ்வாஹிலி மொழிகளைக்கூட கற்றுக்கொண்டோம். நிறைய கலாச்சாரங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டோம். புதிதாக சத்தியத்துக்கு வந்தவர்களுக்கு எங்களால் உதவ முடிந்திருக்கிறது, உண்மையான நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறோம். அவர்களோடு “தோளோடு தோள் சேர்ந்து” யெகோவாவுக்குச் சேவை செய்வது உண்மையிலேயே சந்தோஷம்!—செப். 3:9.
புது இடங்களுக்குப் போகும்போது, யெகோவாவுடைய அழகான படைப்புகளையும் பார்த்து ரசித்தோம். அவருடைய படைப்புகள் எத்தனை எத்தனை! ஒவ்வொரு தடவை புது நியமிப்பு கிடைத்தபோதும், யெகோவா ஒரு ‘டூர் கைடு’ மாதிரி எங்களைக் கூட்டிக்கொண்டு போவதுபோல் இருக்கும். நாங்கள் யோசித்தே பார்க்காத நல்ல அனுபவங்களை யெகோவா எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
உங்களுக்கு என்ன கஷ்டங்கள் வந்திருக்கின்றன, அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?
மாட்ஸ்: எங்களுக்கு நிறைய தடவை உடம்பு முடியாமல் போனது. மலேரியாகூட வந்தது. ஆன்-காத்ரினுக்கு திடீரென்று சில அறுவை சிகிச்சைகளும் செய்ய வேண்டியிருந்தது. எங்கள் வயதான அப்பா அம்மாவை நினைத்தும் நாங்கள் கவலைப்பட்டோம். எங்கள் கூடப்பிறந்தவர்கள் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பொறுமையாக, அன்பாக, சந்தோஷமாக அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். (1 தீ. 5:4) அவர்களுக்கு நாங்கள் நன்றியோடு இருக்கிறோம். இருந்தாலும், பக்கத்தில் இருந்து அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவ்வப்போது வந்தது.
ஆன்-காத்ரின்: 1983-ல், நாங்கள் ஜயரில் சேவை செய்தபோது எனக்கு காலரா நோய் வந்தது. உடம்பு ரொம்பவே முடியாமல் போனது. டாக்டர் என் கணவரிடம், “இவரை இன்றே இந்த ஊரைவிட்டுக் கூட்டிக்கொண்டு போய்விடுங்கள்!” என்று சொன்னார். அடுத்த நாளே சுவீடனுக்குக் கிளம்பினோம்.
ஆனால், விமானம் எதுவும் கிடைக்காததால், சரக்கு விமானத்தில் போனோம்.மாட்ஸ்: இனிமேலும் எங்களால் மிஷனரி சேவை செய்ய முடியாது என்று நினைத்து நாங்கள் ரொம்ப அழுதோம். ஆன்-காத்ரினுக்கு உடம்பு சரியாவது கஷ்டம் என்று டாக்டர் சொல்லியிருந்தாலும், அவளுக்கு உடம்பு சரியானது. ஒரு வருஷத்துக்குப் பிறகு, நாங்கள் மறுபடியும் ஜயருக்கே வந்தோம். லுபும்பாஷியில் இருந்த ஒரு சின்ன ஸ்வாஹிலி சபைக்கு வந்தோம்.
ஆன்-காத்ரின்: லுபும்பாஷியில் இருந்த சமயத்தில் நான் கர்ப்பமானேன். ஆனால், அந்தக் கரு கலைந்துவிட்டது. ஒரு குழந்தை வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லைதான்; இருந்தாலும், அந்தக் குழந்தையை இழந்தது ரொம்ப வேதனையாக இருந்தது. அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பரிசுகளைக் கொடுத்து யெகோவா எங்களை ஆறுதல்படுத்தினார். என்றைக்கும் இல்லாத அளவுக்கு எங்களுக்கு ஏகப்பட்ட பைபிள் படிப்புகள் கிடைத்தன. ஒரு வருஷத்துக்குள் சபையில் இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை வெறும் 35-லிருந்து 70 ஆக ஆனது. கூட்டங்களுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் வெறும் 40-லிருந்து 220 ஆக ஆனது. நாங்கள் ஊழியத்தைப் பயங்கர சுறுசுறுப்பாகச் செய்தோம். யெகோவா கொடுத்த இந்த ஆசீர்வாதம் உண்மையிலேயே ஆறுதலாக இருந்தது. இருந்தாலும், எங்கள் குழந்தையைப் பற்றி நாங்கள் அடிக்கடி யோசிப்போம். அதைப் பற்றிப் பேசுவோம். புதிய உலகத்தில் யெகோவா எங்களுடைய வலியை எப்படி எடுத்துப்போட போகிறார் என்பதைப் பார்க்க ஆசையாகக் காத்திருக்கிறோம்.
மாட்ஸ்: ஒரு கட்டத்தில் ஆன்-காத்ரின் ரொம்பவே பலவீனமாகிவிட்டாள். அவள் ரொம்ப சோர்ந்துபோய்விட்டாள். எனக்கும் குடல் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது நான்காவது கட்டத்தில் இருந்தது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வந்தது. ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். ஆன்-காத்ரினும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறாள்.
இந்த மாதிரி சோதனைகளை நாங்கள் மட்டும் சகித்துக்கொண்டு இல்லை, நிறைய பேர் சகித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் யோசித்துப் பார்த்தோம். 1994-ல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு, அகதிகள் முகாமில் தங்கியிருந்த நிறைய சகோதர சகோதரிகளைச் சந்தித்தோம். கஷ்டமான சூழ்நிலையிலும் அவர்கள் காட்டிய உபசரிப்பு, விசுவாசம், சகிப்புத்தன்மை போன்றவற்றைப் பார்த்தோம். எப்படிப்பட்ட சோதனையையும் தாங்கிக்கொள்ள யெகோவாவால் சக்தி கொடுக்க முடியும் என்பதை அப்போது புரிந்துகொண்டோம்.—சங். 55:22.
ஆன்-காத்ரின்: 2007-ல் எங்கள் மனதைப் பாதித்த ஒரு சம்பவம் நடந்தது. உகாண்டா கிளை அலுவலகத்தின் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நாங்கள் கென்யாவில் இருக்கிற நைரோபிக்கு ஒரு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தோம். அதில் கிட்டத்தட்ட 25 பேர் இருந்தோம். எங்களை மாதிரியே மிஷனரிகளாகச் சேவை செய்தவர்களும் பெத்தேலில் சேவை செய்தவர்களும் அதில் இருந்தார்கள். கென்யாவின் எல்லைக்கு வருவதற்குள் எதிரில் வந்த ஒரு லாரி எங்கள் பஸ்ஸை நேருக்கு நேர் மோதியது. வண்டியை ஓட்டியவரும் எங்களுடைய நண்பர்கள் ஐந்து பேரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள். இன்னொரு சகோதரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு இறந்துவிட்டார். அந்த நண்பர்களை மறுபடியும் பார்க்க நாங்கள் ஆசையாகக் காத்திருக்கிறோம்!—யோபு 14:13-15.
என் உடலில் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறியது. ஆனால் எனக்கும், என் கணவருக்கும், அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் மனதில் ஏற்பட்ட காயம்
ஆறவில்லை. எங்களில் நிறைய பேருக்கு, ஒருவிதமான மனஅழுத்தம் வந்தது. ராத்திரியில் எனக்கு மாரடைப்பு வந்த மாதிரி இருக்கும். தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்துவிடுவேன். ரொம்பப் பதட்டமாக, பயமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தோம். பிடித்த வசனங்களை வாசித்தோம். அவை மனதுக்கு அமைதி கொடுத்தது. டாக்டரையும் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டோம். இப்போது அந்த மனஅழுத்தம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. மனஅழுத்தத்தால் கஷ்டப்படும் மற்றவர்களுக்கும் யெகோவா ஆறுதல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபம் செய்துகொண்டே இருக்கிறோம்.கஷ்டங்களைச் சமாளிப்பதைப் பற்றி நீங்கள் சொன்னபோது, “முட்டைகளைத் தூக்கிக்கொண்டு போகிற மாதிரி” யெகோவா உங்களைத் தூக்கிக்கொண்டு போனார் என்று சொன்னீர்கள். அதற்கு என்ன அர்த்தம்?
மாட்ஸ்: இது ஸ்வாஹிலி மொழியில் இருக்கும் ஒரு பழமொழி. அதை இப்படிச் சொல்வார்கள்: “துமேபிப்வா கமா மாயாய் மாபிச்சி.” “முட்டைகளை எடுத்துக்கொண்டு போகிற மாதிரி எங்களைத் தூக்கிக்கொண்டு போனார்” என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒருவர் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு போகும்போது, அது உடைந்துவிட கூடாது என்பதற்காக அதை ரொம்ப பத்திரமாக எடுத்துக்கொண்டு போவார். அதேமாதிரி, நாங்கள் ஒவ்வொரு புது இடத்துக்குப் போனபோதும் யெகோவா எங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். எங்களுக்கு என்ன தேவைப்பட்டதோ அதையெல்லாம் கொடுத்தார். சொல்லப்போனால், தேவைக்கும் அதிகமாகவே கொடுத்தார். ஆளும் குழு எங்களுக்குக் காட்டிய அன்பு, அக்கறை மூலமாக யெகோவாவின் அன்பையும் ஆதரவையும் நாங்கள் உணர்ந்தோம்.
ஆன்-காத்ரின்: யெகோவா எங்களுக்கு உதவி செய்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருநாள் சுவீடனிலிருந்து எங்களுக்கு ஃபோன் வந்தது. என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதாகவும் அவரை மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள். அப்போதுதான் என்னுடைய கணவர் மலேரியாவிலிருந்து குணமாகி இருந்தார். அதனால், சுவீடனுக்குப் போக விமான டிக்கெட் வாங்க எங்களிடம் காசு இல்லை. காரை விற்றுவிடலாம் என்று யோசித்தோம். ஆனால் அந்தச் சமயத்தில், எங்களுக்கு இரண்டு ஃபோன் கால் வந்தது. முதலில் ஒரு தம்பதி ஃபோன் செய்தார்கள். அவர்கள் எங்கள் சூழ்நிலையைக் கேள்விப்பட்டு, ஒரு டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். பிறகு, வயதான ஒரு சகோதரி ஃபோன் செய்தார். “கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக” என்று ஒரு உண்டியல் வைத்திருப்பதாகவும் அதில் காசு சேமித்து வைத்திருந்ததாகவும் சொன்னார். அதில் இருக்கிற பணத்தை எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார். என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்த அடுத்த நிமிஷமே யெகோவா உதவி செய்தார்!—எபி. 13:6.
உங்களுடைய 50 வருஷ முழுநேர சேவையிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
ஆன்-காத்ரின்: “நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால்” உங்களுக்குப் பலம் கிடைக்கும் என்று யெகோவா சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை என்பதை அனுபவித்திருக்கிறோம். நாம் யெகோவாவை நம்பியிருக்கும்போது, அவர் நமக்காக நின்று போர் செய்வார். (ஏசா. 30:15; 2 நா. 20:15, 17) ஒவ்வொரு நியமிப்பிலும் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். அதனால், நாங்கள் நினைத்துப் பார்த்ததைவிட ஏகப்பட்ட ஆசீர்வாதங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. யெகோவாவுக்குச் சேவை செய்யாமல் வேறு எதைச் செய்திருந்தாலும் எங்களுக்கு இந்த ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்காது.
மாட்ஸ்: ஒவ்வொரு சூழ்நிலையிலும் யெகோவாவை நம்பியிருந்து அவர் நமக்காகச் செயல்படுவதை நாம் பார்க்க வேண்டும். இதுதான் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். (சங். 37:5) யெகோவா நமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகவே மாட்டார். இப்போதும் அவர் எங்களுக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார். மியான்மர் பெத்தேலில் நாங்கள் இப்போது சேவை செய்துகொண்டு இருக்கிறோம்.
நாங்கள் யெகோவாவின் மாறாத அன்பை ருசித்தோம். யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய நினைக்கிற இளைஞர்களும் அதை ருசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி ருசித்தால், அவர்கள் எங்கே நடப்பட்டாலும் கண்டிப்பாகப் பூத்துக் குலுங்குவார்கள்!