கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 8:1-24

8  சகோதரர்களே, மக்கெதோனியாவில்+ இருக்கிற சபைகள்மேல் கடவுள் காட்டியிருக்கிற அளவற்ற கருணையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.  பயங்கரமான சோதனையில் அவர்கள் கஷ்டப்பட்டபோதிலும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். கொடிய வறுமையில் வாடியபோதிலும் தாராள குணத்தைக் காட்டுவதில் செல்வந்தர்களாக இருந்தார்கள்.  தங்களால் முடிந்த அளவுக்குக் கொடுத்தார்கள்,+ ஏன், அதைவிட அதிகமாகவே கொடுத்தார்கள்.+ அதற்கு நான் சாட்சி.  பரிசுத்தவான்களுக்காக நன்கொடை கொடுத்து, நிவாரண ஊழியத்தில் பங்கு பெறும்+ பாக்கியத்தைத் தர வேண்டும் என்று அவர்களாகவே வந்து திரும்பத் திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்.  நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே அவர்கள் செய்தார்கள். முதலாவதாக, கடவுளுடைய விருப்பத்தின்படி* நம் எஜமானுக்கும் எங்களுக்கும் தங்களையே அர்ப்பணித்தார்கள்.  அதனால், இந்த நிவாரணப் பணியை உங்களிடம் ஆரம்பித்த தீத்துவே+ அதை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம்.  அதனால், விசுவாசத்தில், பேச்சுத்திறமையில், அறிவில், ஆர்வத்தில், எங்களிடமிருந்து பெற்றிருக்கிற அன்பில் என எல்லாவற்றிலும் நீங்கள் செல்வந்தர்களாக இருப்பது போலவே தாராள குணத்திலும் செல்வந்தர்களாக இருங்கள்.+  இதைக் கட்டளையாக நான் உங்களுக்குச் சொல்லவில்லை. மற்றவர்கள் எந்தளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும், உங்களுடைய அன்பு உண்மையானதா என்பதைச் சோதிப்பதற்காகவும் இதைச் சொல்கிறேன்.  நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணையைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் செல்வந்தராக இருந்தும் உங்களுக்காக ஏழையானார்;+ தன்னுடைய வறுமையால் உங்களைச் செல்வந்தர்களாக்குவதற்காக அப்படி ஏழையானார். 10  நிவாரணப் பணியைப் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்:+ இது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். இந்தப் பணியை ஒரு வருஷத்துக்கு முன்பே நீங்கள் ஆரம்பித்தீர்கள், அதுவும் ஆர்வமாகச் செய்ய ஆரம்பித்தீர்கள். 11  அப்படி ஆரம்பித்ததை இப்போது செய்து முடித்துவிடுங்கள். ஆர்வத்தோடு அதைச் செய்ய ஆரம்பித்தது போலவே, உங்களிடம் இருப்பதைக் கொடுத்து அதே ஆர்வத்தோடு செய்து முடித்துவிடுங்கள். 12  கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. 13  மற்றவர்களுடைய கஷ்டத்தைப் போக்க நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 14  உங்கள் மத்தியில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். அப்படிச் சமநிலை ஏற்படும்போது, உங்களிடம் மிகுதியாக இருப்பது அவர்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்; அவர்களிடம் மிகுதியாக இருப்பது உங்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும். 15  “அதிகமாக இருப்பவனுக்கு மிக அதிகமாகவும் இல்லை, குறைவாக இருப்பவனுக்கு மிகக் குறைவாகவும் இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 16  உங்கள்மேல் எங்களுக்கு இருக்கும் அதே ஆழ்ந்த அக்கறையை தீத்துவின்+ இதயத்திலும் தூண்டிய கடவுளுக்கு நன்றி. 17  ஏனென்றால், நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக மட்டுமல்ல, அவராகவே மிகுந்த ஆர்வத்தோடு உங்களைப் பார்க்க வருகிறார். 18  நல்ல செய்தியை அறிவிப்பதில் எல்லா சபைகளிலும் புகழ் பெற்றிருக்கிற சகோதரரையும் தீத்துவோடு அனுப்புகிறோம். 19  இந்த நிவாரணத் தொகையைப் பகிர்ந்து கொடுப்பதற்காக நாங்கள் அதைக் கொண்டுபோகும்போது எங்களுக்கு வழித்துணையாய் இருப்பதற்காகச் சபைகளால் இந்தச் சகோதரர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிவாரணத் தொகையை நம் எஜமானுடைய மகிமைக்காகவும் எங்களுடைய உதவும் மனப்பான்மைக்குச் சாட்சியாகவும் எடுத்துக்கொண்டு போகிறோம். 20  இப்படி, தாராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த நன்கொடையைப் பகிர்ந்து கொடுக்கிற விஷயத்தில் யாரும் எங்கள்மேல் குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.+ 21  ‘எல்லாவற்றையும் யெகோவாவுடைய* பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களுடைய பார்வையிலும் நேர்மையாகச் செய்ய முயற்சி எடுக்கிறோம்.’+ 22  இவர்களோடு இன்னொரு சகோதரரையும் அனுப்பி வைக்கிறோம். அவருடைய ஆர்வத்தைப் பல விஷயங்களில் பல தடவை நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்கள்மேல் முழு நம்பிக்கை வைத்திருப்பதால் இன்னும் அதிக ஆர்வமாக இருக்கிறார். 23  ஒருவேளை தீத்துவைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால், அவர் என் நண்பர் என்றும், உங்கள் நலனுக்காக உழைக்கிற என் சக வேலையாள் என்றும் தெரிந்துகொள்ளட்டும். நாங்கள் அனுப்புகிற மற்ற சகோதரர்களைப் பற்றிக் கேள்வி கேட்டால், அந்தச் சகோதரர்கள் சபைகளுக்கு அப்போஸ்தலர்கள் என்றும், கிறிஸ்துவுக்கு மகிமை சேர்ப்பவர்கள் என்றும் தெரிந்துகொள்ளட்டும். 24  அதனால், உங்களுடைய அன்பு உண்மையானது என்பதையும், நாங்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசியது பொய்யல்ல என்பதையும் சபைகளுக்கு நிரூபியுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தின்படி.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா