Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

தொழுநோயாளிகளை இயேசு நடத்திய விதத்தில் என்ன விசேஷம்?

பழங்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஒருவகையான தொழுநோய்க்கு பயந்து நடுங்கினார்கள்; பைபிள் காலங்களில், இந்தத் தொழுநோய் சாதாரணமாக காணப்பட்டது. பயங்கரமான அந்த நோய் ஒருவருடைய நரம்பு முனைகளை (nerve endings) தாக்கும், பின்பு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, உடலுறுப்புகளை உருக்குலைத்துவிடும். இந்தத் தொழுநோய்க்கு எந்தவித நிவாரணமும் இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். மற்றவர்கள் யாராவது பக்கத்தில் வந்தால் அவர்களை எச்சரிக்க வேண்டும்.—லேவியராகமம் 13:45, 46.

தொழுநோய் சம்பந்தமாக யூத மதத் தலைவர்கள் அநேக சட்டங்களைப் போட்டார்கள். பைபிளில் சொல்லப்பட்ட சட்டங்களுக்கும் மேலாக நிறைய சட்டங்களைப் போட்டு தொழுநோயாளிகளின் வாழ்க்கையை தேவையில்லாமல் பாரமாக்கினார்கள். உதாரணத்துக்கு, ரபீக்களின் சட்டதிட்டங்களின்படி, தொழுநோயாளிகள் மற்றவர்களிடமிருந்து 4 அங்குலம் அல்லது சுமார் 6 அடி (2 மீ) தள்ளிதான் நிற்க வேண்டும். காற்று அடித்தால், 100 அங்குலம் அல்லது சுமார் 150 அடி (45 மீ) தூரத்துக்குள் தொழுநோயாளிகள் யாரும் வரக்கூடாது. தொழுநோயாளிகள் ‘பாளயத்துக்குப் புறம்பே இருக்க வேண்டும்’ என்று பைபிள் சொன்னது. டால்மூட்டை எழுதியவர்கள் சிலர் இதற்கு என்ன விளக்கம் கொடுத்தார்கள் தெரியுமா? மதில்சூழ்ந்த நகரங்களுக்குள் அவர்களை வரவிடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால், ரபீ ஒருவர் தொழுநோயாளியை நகரத்துக்குள் பார்த்தால் அவர்மீது கற்களை எறிந்து, “உன்னுடைய இடத்துக்கு போ, யாரையும் தீட்டுப்படுத்தாதே” என்று சொல்லி துரத்திவிடுவார்.

ஆனால், இயேசு எவ்வளவு வித்தியாசமாக நடந்துகொண்டார்! அவர்களைத் துரத்தி விடுவதற்குப் பதிலாக அவர்களைத் தொடுவதற்குக்கூட மனமுள்ளவராய் இருந்தார். அவர்களுடைய நோயையும் குணமாக்கினார்!—மத்தேயு 8:3. ▪ (w16-E No. 4)

யூத மதத் தலைவர்கள் எதன் அடிப்படையில் விவாகரத்துக் கொடுத்தார்கள்?

கி.பி. 71/72-ஆம் ஆண்டைச் சேர்ந்த விவாகரத்து பத்திரம்

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மதத் தலைவர்கள் மத்தியில் விவாகரத்து ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. ஒருசமயம், பரிசேயர்கள் சிலர் இயேசுவிடம் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது முறையா?” என்ற கேள்வியை கேட்டார்கள்.—மத்தேயு 19:3.

கணவன் தன் மனைவியிடம் “ஏதோவொரு கேவலமான காரியத்தைப் பார்த்தால்” விவாகரத்து செய்வதற்கு மோசேயின் திருச்சட்டம் அனுமதி அளித்தது. (உபாகமம் 24:1, NW) இயேசுவின் காலத்திலிருந்த இரண்டு விதமான ரபீக்களின் பள்ளி இந்தச் சட்டத்திற்கு வித்தியாசமான விளக்கங்களைத் தந்தது. விவாகரத்து செய்வதற்குச் சரியான காரணம், “கற்புநெறி தவறுதல்,” அதாவது திருமணமான ஒருவர் வேறொருவரோடு உறவுகொள்ளுதல் என்று கெடுபிடியான சட்டங்கள் போடும் ஷம்மி என்ற பள்ளி விளக்கம் தந்தது. மறுபட்சத்தில், மணவாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால், அது எவ்வளவு சின்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி, விவாகரத்து செய்யலாம் என்று ஹில்லெல் பள்ளி சொன்னது. இந்தப் பள்ளியின்படி, மனைவி நன்றாக சமைக்கவில்லை என்றால்... மனைவியைவிட வேறொரு பெண் அழகாக இருந்தால்... அவளைக் கணவன் விவாகரத்து செய்யலாம்.

அந்தப் பரிசேயர்களின் கேள்விக்கு இயேசு என்ன பதில் சொன்னார்? “பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்” என்று எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெளிவாகச் சொன்னார். —மத்தேயு 19:6, 9. ▪ (w16-TL No. 4)