மத்தேயு எழுதியது 8:1-34

8  மலையிலிருந்து அவர் கீழே இறங்கி வந்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள்.  அப்போது, தொழுநோயாளி ஒருவன் வந்து அவர் முன்னால் தலைவணங்கி, “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொன்னான்.  அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். உடனே தொழுநோய் நீங்கி அவன் சுத்தமானான்.+  பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொன்னார்.  அவர் கப்பர்நகூமுக்குள் போனபோது, படை அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து,  “ஐயா, என் வேலைக்காரன் பக்கவாதத்தால் ரொம்ப அவதிப்படுகிறான், வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்று சொல்லிக் கெஞ்சினார்.+  அப்போது இயேசு, “நான் அங்கே வரும்போது அவனைக் குணப்படுத்துகிறேன்” என்று சொன்னார்.  அதற்கு அந்தப் படை அதிகாரி, “ஐயா, நீங்கள் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை; அதனால், நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகிவிடுவான்.  நான் அதிகாரம் உள்ளவர்களின் கீழ் வேலை செய்தாலும், என் அதிகாரத்துக்குக் கீழும் படைவீரர்கள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவனிடம் ‘போ!’ என்றால் போகிறான், இன்னொருவனிடம் ‘வா!’ என்றால் வருகிறான்; என் அடிமையிடம் ‘இதைச் செய்!’ என்றால் செய்கிறான்” என்றார். 10  அதைக் கேட்டு இயேசு ஆச்சரியப்பட்டு, தன் பின்னால் வந்தவர்களிடம், “உண்மையிலேயே உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலர்களில் ஒருவரிடம்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை.+ 11  நான் உங்களுக்குச் சொல்கிறேன், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நிறைய பேர் வந்து, பரலோக அரசாங்கத்தில் ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் விருந்து சாப்பிட உட்காருவார்கள்.+ 12  பரலோக அரசாங்கத்தின் பிள்ளைகளோ வெளியே இருட்டில் தள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்”+ என்று சொன்னார். 13  பின்பு, இயேசு அந்தப் படை அதிகாரியிடம், “நீ போகலாம். உன் விசுவாசத்தின்படியே நடக்கட்டும்”+ என்று சொன்னார். அந்த நொடியே அவருடைய வேலைக்காரன் குணமானான்.+ 14  பேதுருவின் வீட்டுக்கு இயேசு வந்தபோது, பேதுருவின் மாமியார்+ காய்ச்சலில் படுத்திருந்ததைப் பார்த்தார்.+ 15  அவர் அவளுடைய கையைத் தொட்டவுடன்+ காய்ச்சல் போய்விட்டது, அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 16  சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள்* அவர்களைவிட்டு ஓடிவிட்டன; எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். 17  “அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்”+ என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 18  மக்கள் கூட்டம் தன்னைச் சூழ்ந்துகொண்டதை இயேசு பார்த்தபோது, படகை அக்கரைக்கு+ ஓட்டச்சொல்லி சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். 19  அப்போது, வேத அறிஞன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்”+ என்று சொன்னான். 20  அதற்கு இயேசு அவனிடம், “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை”+ என்று சொன்னார். 21  பின்பு மற்றொரு சீஷன் அவரிடம், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான். 22  அதற்கு இயேசு அவனிடம், “இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்; நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”+ என்று சொன்னார். 23  பின்பு, அவர் ஒரு படகில் ஏறியபோது சீஷர்களும் அவரோடு ஏறினார்கள்.+ 24  அப்போது, கடலில் பயங்கர புயல்காற்று வீசியது; பெரிய அலைகள் அடித்ததால் படகு தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தது; அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.+ 25  சீஷர்கள் வந்து அவரை எழுப்பி, “எஜமானே, காப்பாற்றுங்கள், நாம் சாகப்போகிறோம்!” என்று சொன்னார்கள். 26  ஆனால் அவர், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”+ என்று கேட்டார். பின்பு எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்; அப்போது, மிகுந்த அமைதி உண்டானது.+ 27  அவர்கள் பிரமித்துப்போய், “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று சொன்னார்கள். 28  அக்கரையில் இருக்கிற கதரேனர்* பகுதிக்கு அவர் வந்தபோது, பேய் பிடித்த இரண்டு பேர் கல்லறைகளின் நடுவிலிருந்து* அவருக்கு எதிரே வந்தார்கள்;+ அவர்கள் பயங்கர வெறித்தனமாக நடந்துகொண்டதால், அந்த வழியில் போவதற்கு யாருக்குமே தைரியம் வரவில்லை. 29  அவர்கள் இரண்டு பேரும் அவரைப் பார்த்து, “கடவுளுடைய மகனே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ நேரம் வருவதற்கு முன்பே எங்களைப் பாடுபடுத்த வந்துவிட்டீர்களா?”+ என்று கத்தினார்கள். 30  அங்கிருந்து வெகு தூரத்தில் ஏராளமான பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.+ 31  அதனால் அந்தப் பேய்கள் அவரிடம், “நீங்கள் எங்களை விரட்ட நினைத்தால், அந்தப் பன்றிகளுக்குள் எங்களை அனுப்பிவிடுங்கள்”+ என்று கெஞ்ச ஆரம்பித்தன. 32  அப்போது அவர், “போங்கள்!” என்று சொன்னார். உடனே அவை வெளியேறி அந்தப் பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன; அப்போது, அந்தப் பன்றிகளெல்லாம் ஓட்டமாக ஓடி செங்குத்தான பாறையிலிருந்து* கடலுக்குள் குதித்துச் செத்துப்போயின. 33  பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்துக்குள் ஓடிப்போய், பேய் பிடித்த ஆட்களைப் பற்றியும் நடந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் சொன்னார்கள். 34  அப்போது, நகரத்திலிருந்த எல்லாரும் இயேசுவைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்; அவரைச் சந்தித்ததும், தங்கள் பகுதியைவிட்டுப் போகச்சொல்லி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

தலைவணங்க: வே.வா., “மண்டிபோட.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில், “யூதர்களுடைய ராஜா எங்கே பிறந்திருக்கிறார்?” என்றுதான் அந்த ஜோதிடர்கள் கேட்டார்கள். அதனால், ஒரு தெய்வத்துக்கு முன்னால் அல்ல, ஒரு மனித ராஜாவுக்கு முன்னால் தலைவணங்குவதையே இது அர்த்தப்படுத்துகிறது. மாற் 15:18, 19-லும் இதே அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படைவீரர்கள் இயேசுவை “யூதர்களுடைய ராஜாவே” என்று கேலியாக அழைத்து, அவர் முன்னால் “தலைவணங்கினார்கள்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—மத் 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தொழுநோயாளி: அதாவது, “பயங்கரமான தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்.” பைபிளில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய், இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே குறிப்பதில்லை. இதற்கான எபிரெய வார்த்தை, தொற்றக்கூடிய பலவிதமான தோல் நோய்களைக் குறிக்கலாம். துணிமணிகளிலும் வீடுகளிலும் பரவுகிற பூஞ்சணத்தைக்கூட குறிக்கலாம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாகும்வரை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்.—லேவி 13:2, 45, 46; சொல் பட்டியலில் “தொழுநோய்; தொழுநோயாளி” என்ற தலைப்பைப் பாருங்கள்.

அவர் முன்னால் தலைவணங்கி: வே.வா., “அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்படும் நபர்கள்கூட தீர்க்கதரிசிகளையோ ராஜாக்களையோ கடவுளுடைய மற்ற பிரதிநிதிகளையோ சந்தித்தபோது அவர்கள் முன்னால் தலைவணங்கினார்கள். (1சா 25:23, 24; 2சா 14:4-7; 1ரா 1:16; 2ரா 4:36, 37) இங்கே சொல்லப்படும் தொழுநோயாளி, மக்களைக் குணப்படுத்தும் சக்திபெற்றிருந்தவரிடம், அதாவது கடவுளுடைய பிரதிநிதியிடம், பேசிக்கொண்டிருந்ததைப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. எதிர்கால ராஜாவாக கடவுளால் நியமிக்கப்பட்டவருக்கு மரியாதை காட்ட அவர் முன்னால் தலைவணங்குவது பொருத்தமானதாக இருந்தது.—மத் 9:18; இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மத் 2:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அவனைத் தொட்டு: தொழுநோய் மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்காகத் தொழுநோயாளிகளை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று திருச்சட்டம் சொன்னது. (லேவி 13:45, 46; எண் 5:1-4) ஆனால், யூத மதத் தலைவர்கள் இது சம்பந்தமாக இன்னும் நிறைய சட்டங்களைக் போட்டார்கள். உதாரணத்துக்கு, எல்லாரும் தொழுநோயாளியைவிட்டு நான்கு முழ தூரத்துக்கு, அதாவது கிட்டத்தட்ட 1.8 மீ. (6 அடி) தூரத்துக்கு, தள்ளியே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுவும் காற்று அதிகமாக வீசிய நாட்களில், 100 முழ தூரத்துக்கு, அதாவது கிட்டத்தட்ட 45 மீ. (150 அடி) தூரத்துக்கு, தள்ளியே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சட்டங்களால் தொழுநோயாளிகள் ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்டார்கள். தொழுநோயாளிகளிடமிருந்து ஒளிந்துகொண்ட ஒரு ரபீயையும், அவர்களைப் பக்கத்தில் வரவிடாமல் இருப்பதற்காக அவர்கள்மேல் கற்களை எறிந்த இன்னொரு ரபீயையும் பழங்கால யூதப் பதிவு பாராட்டிப் பேசுகிறது. இயேசு அவர்களுக்கு நேர்மாறாக இருந்தார். அந்தத் தொழுநோயாளியின் நிலைமையைப் பார்த்து மனம் உருகினார். மற்ற யூதர்களால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றைச் செய்தார்—அந்தத் தொழுநோயாளியைத் தொட்டார்! இயேசு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்கூட அந்தத் தொழுநோயாளி குணமாகியிருப்பார்; ஆனாலும், இயேசு அவரைத் தொட்டுக் குணப்படுத்தினார்.—மத் 8:5-12.

எனக்கு விருப்பம் இருக்கிறது: இயேசு அந்தத் தொழுநோயாளியின் விருப்பத்தைக் கேட்டது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்ற மிகவும் விரும்புவதாகவும் சொன்னார். இப்படி, அவர் வெறும் கடமைக்காக உதவி செய்யவில்லை என்பதைக் காட்டினார்.

யாரிடமும் சொல்லாதே: மாற் 1:44-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

குருமாரிடம் போய் உன்னைக் காட்டி: திருச்சட்டத்தின்படி, தொழுநோயாளி குணமாகிவிட்டதை குருவானவர் உறுதிசெய்ய வேண்டியிருந்தது. அதனால், குணமாக்கப்பட்ட அந்தத் தொழுநோயாளி ஆலயத்துக்குப் போய் அவரைப் பார்க்க வேண்டியிருந்தது; உயிரோடு இருக்கும் சுத்தமான இரண்டு பறவைகளையும், தேவதாரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு துணியையும், மருவுக்கொத்தையும் காணிக்கையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.—லேவி 14:2-32.

கப்பர்நகூமுக்கு: “நாகூமின் கிராமம்” அல்லது “ஆறுதலின் கிராமம்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு எபிரெயப் பெயரிலிருந்து வந்திருக்கிறது. (நாகூ 1:1, அடிக்குறிப்பு) கப்பர்நகூம், இயேசுவுடைய பூமிக்குரிய ஊழியத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒரு நகரமாக இருந்தது. அது கலிலேயா கடலின் வடமேற்குக் கரையில் அமைந்திருந்தது. மத் 9:1-ல் ‘அவருடைய சொந்த ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

கப்பர்நகூமுக்குள்: மத் 4:13-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

படை அதிகாரி: வே.வா., “நூறு வீரர்களுக்கு அதிகாரி.” அதாவது, ரோமப் படையில் கிட்டத்தட்ட 100 வீரர்களுக்கு அதிகாரியாக இருந்தவர்.

என் வேலைக்காரன்: “வேலைக்காரன்” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “பிள்ளை; வாலிபன்.” ஓரளவு பாசத்தோடு நடத்தப்பட்ட அடிமையை, ஒருவேளை அந்தரங்கப் பணியாளரை, இந்த வார்த்தை குறிக்கலாம்.

கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நிறைய பேர்: யூதர்கள் அல்லாத மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பார்கள் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

விருந்து சாப்பிட உட்காருவார்கள்: வே.வா., “மேஜைமேல் சாய்ந்து உட்காருவார்கள்.” பைபிள் காலங்களில், பெரிய விருந்துகளின்போது ஒரு மேஜையைச் சுற்றி உட்காருவதற்கு வசதியாகப் பெரும்பாலும் மெத்தைகள் போடப்பட்டன. விருந்துக்கு வந்திருந்தவர்கள் மேஜை பக்கமாகத் தலையை வைத்தபடி, அந்த மெத்தையில் சாய்ந்து உட்கார்ந்து, இடது முழங்கையை ஒரு திண்டுமேல் அல்லது தலையணைமேல் வைத்துக்கொண்டார்கள். வழக்கமாக, வலது கையால் சாப்பிட்டார்கள். ஒருவரோடு மேஜைமேல் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது நெருக்கமான நட்புக்கு அடையாளமாக இருந்தது. பொதுவாக, அந்தக் காலத்தில் இருந்த யூதர்கள் மற்ற மக்களோடு அப்படி உட்கார்ந்து சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை.

அழுது அங்கலாய்ப்பார்கள்: நே.மொ., “பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.” இந்த வார்த்தைகள், மன வேதனை, பரிதவிப்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதைக் குறிக்கின்றன. ஒருவேளை, கண்டபடி பேசுவதையும், வன்முறையில் இறங்குவதையும்கூட குறிக்கலாம்.

சாயங்கால நேரமானபோது: அதாவது, “ஓய்வுநாள் முடிவடைந்த பிறகு.”—மாற் 1:21-32; லூ 4:31-40.

யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே: இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற வார்த்தைகளையும் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை யூதர்களுக்கு வலியுறுத்துவதற்காக அவர் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியிருக்கலாம்.—மத் 2:15, 23; 4:16; 8:17; 12:17; 13:35; 21:5; 26:56; 27:10.

சுமந்தார்: வே.வா., “தூக்கிக்கொண்டு போனார்; நீக்கினார்.” மத்தேயு கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு, ஏசா 53:4-ல் உள்ள வார்த்தைகளை இங்கே இயேசுவுக்குப் பொருத்திக் காட்டினார்; அதாவது, நோய்களை இயேசு அற்புதமாகக் குணப்படுத்தியதற்குப் பொருத்திக் காட்டினார். பாவப் பரிகார நாளில் இஸ்ரவேலர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு வனாந்தரத்துக்குள் போன ‘போக்கு ஆடு’ போலவே இயேசு நம் பாவத்தை அடியோடு நீக்கும்போது, ஏசா 53:4 இன்னும் பெரிய அளவில் நிறைவேறும். (லேவி 16:10, 20-22) பாவத்தை நீக்குவதன் மூலம் நோய்களின் ஆணிவேரையே இயேசு நீக்கிவிடுவார்; தன் பலியின் மேல் விசுவாசம் வைக்கிற எல்லாருக்காகவும் இதைச் செய்வார்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

அக்கரைக்கு: அதாவது, “கலிலேயா கடலின் கிழக்குக் கரைக்கு.”

மனிதகுமாரனுக்கு: வே.வா., “ஒரு மனிதனின் மகனுக்கு.” இந்த வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் கிட்டத்தட்ட 80 தடவை வருகிறது. இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்; அநேகமாக, தான் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த உண்மையான மனிதர் என்பதை வலியுறுத்தினார். அதோடு, ஆதாமுக்குச் சரிசமமான ஒரு மனிதராக இருந்ததையும், மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இருந்ததையும் வலியுறுத்தினார். (ரோ 5:12, 14, 15) இதே வார்த்தை இயேசுவை மேசியாவாகவும், அதாவது கிறிஸ்துவாகவும்கூட, அடையாளம் காட்டியது.—தானி 7:13, 14; சொல் பட்டியலைப் பாருங்கள்.

தலைசாய்க்க இடமில்லை: அதாவது, “அவருக்கென்று சொந்தமாக எந்த வீடும் இருக்கவில்லை.”

பயங்கர புயல்காற்று: கலிலேயா கடலில் இப்படிப்பட்ட புயல்காற்று வீசுவது சகஜம். இந்த ஏரியின் (மத் 4:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) மேற்பரப்பு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 210 மீ. (690 அடி) கீழே இருக்கிறது. சுற்றியுள்ள பீடபூமிகளிலும் மலைகளிலும் வீசுகிற காற்றைவிட இந்த ஏரிமீது வீசுகிற காற்று சூடாக இருக்கும். இந்தக் காரணங்களால், வளிமண்டலத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; காற்று பலமாக வீசும்; அலைகள் பொங்கியெழும்.

கலிலேயா கடலோரமாக: கலிலேயா கடல் என்பது வட இஸ்ரவேலின் உட்பகுதியில் இருந்த ஒரு நன்னீர் ஏரி. (‘கடல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘ஏரியையும்’ குறிக்கலாம்.) இது கின்னரேத் கடல் (எண் 34:11), கெனேசரேத்து ஏரி (லூ 5:1), திபேரியா கடல் (யோவா 6:1) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 210 மீட்டருக்கு (700 அடிக்கு) கீழே அமைந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்குவரை இதன் நீளம் 21 கி.மீ. (13 மைல்), இதன் அகலம் 12 கி.மீ. (8 மைல்), இதன் அதிகபட்ச ஆழம் சுமார் 48 மீ. (157 அடி).—இணைப்பு A7-ஐயும், வரைபடம் 3B-ஐயும், “கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் நடப்பவை” என்ற பகுதியையும் பாருங்கள்.

விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே: இயேசு தன் சீஷர்களைத்தான் இப்படிச் சொன்னார். அவர்களுடைய நம்பிக்கை அவ்வளவு பலமாக இல்லாததை அவர் சுட்டிக்காட்டினார். (மத் 8:26; 14:31; 16:8; லூ 12:28) அவர்களுக்கு விசுவாசமே இல்லாததை அல்ல, விசுவாசம் குறைவாக இருந்ததையே அவருடைய வார்த்தைகள் காட்டின.

விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே: விசுவாசமே இல்லாததை அல்ல, விசுவாசம் குறைவாக இருப்பதைத்தான் இயேசு சுட்டிக்காட்டினார்.—மத் 14:31; 16:8; லூ 12:28; மத் 6:30-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கதரேனர் பகுதிக்கு: கலிலேயா கடலின் அக்கரையில் (கிழக்குக் கரையில்) இருந்த பகுதி. கடலிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தூரத்திலிருந்த கதராவரை இந்தப் பகுதி இருந்திருக்கலாம். கதராவைச் சேர்ந்த நாணயங்கள் இந்தக் கருத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது; ஏனென்றால், அவற்றில் பெரும்பாலும் ஒரு கப்பல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மாற்குவும் லூக்காவும் இந்தப் பகுதியை ‘கெரசேனர் பகுதி’ என்று குறிப்பிடுகிறார்கள். (மாற் 5:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஒருவேளை சில பொதுவான பிரதேசங்கள் இருந்திருக்கலாம்.—இணைப்பு A7, வரைபடம் 3B, “கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் நடப்பவை,” இணைப்பு B10 ஆகியவற்றைப் பாருங்கள்.

இரண்டு பேர்: மாற்குவின் பதிவும் (5:2) லூக்காவின் பதிவும் (8:27), ஒருவனுக்குத்தான் பேய் பிடித்திருந்ததாகச் சொல்கின்றன.—மாற் 5:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

கல்லறைகளின்: வே.வா., “நினைவுக் கல்லறைகளின்.” (சொல் பட்டியலில், “நினைவுக் கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.) அநேகமாக, அந்தக் கல்லறைகள் குகைகளாக அல்லது இயற்கையான பாறைகளில் குடையப்பட்ட அறைகளாக இருந்தன. அவை பொதுவாக நகரங்களுக்கு வெளியில் இருந்தன. யூதர்களுடைய சடங்காச்சாரங்களின்படி அந்தக் கல்லறைகள் தீட்டுப்பட்டவையாக இருந்ததால் அவர்கள் அங்கே போவதைத் தவிர்த்தார்கள். அதனால், பித்துப் பிடித்தவர்களும் பேய் பிடித்தவர்களும் பதுங்குவதற்கு ஏற்ற இடங்களாக அவை இருந்தன.

உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?: சிந்தனையைத் தூண்டும் இந்தக் கேள்வியின் நேரடி மொழிபெயர்ப்பு, “எனக்கும் உங்களுக்கும் என்ன?” இந்த செமிட்டிக் மரபுத்தொடர் எபிரெய வேதாகமத்தில் வருகிறது (யோசு 22:24; 2ரா 3:13; ஓசி 14:8), இதற்கு இணையான கிரேக்க சொற்றொடர் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (மத் 8:29; மாற் 1:24; 5:7; லூ 4:34; 8:28; யோவா 2:4). அதன் அர்த்தம், சூழமைவைப் பொறுத்து வேறுபடலாம். இந்த வசனத்தில் அது பகையையும் வெறுப்பையும் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டது. அதனால், “எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” அல்லது “எங்களை விட்டுவிடுங்கள்!” என்று அதை மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். மற்ற வசனங்களில், வித்தியாசமான கண்ணோட்டமோ அபிப்பிராயமோ இருப்பதைக் குறிக்கிறது. அல்லது, ஏதோவொன்றைச் செய்யும்படி கேட்கப்படும்போது தலைக்கனமோ பகையோ இல்லாமல் மரியாதையோடு மறுப்புத் தெரிவிப்பதைக் குறிக்கிறது.—யோவா 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

எங்களைப் பாடுபடுத்த: இதனோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தை மத் 18:34-ல் ‘சிறைக்காவலர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனால், இந்த வசனத்தில் “பாடுபடுத்த” என்பது, இதன் இணைவசனமான லூ 8:31-ல் சொல்லப்பட்டிருக்கும் ‘அதலபாதாளத்தில்’ அடைக்கப்படுவதைக் குறிப்பதாகத் தெரிகிறது.

பன்றிகள்: திருச்சட்டத்தின்படி பன்றிகள் அசுத்தமான மிருகங்களாக இருந்தன. ஆனால், இந்தப் பகுதியில் அவை வளர்க்கப்பட்டன. “பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள்” (மத் 8:33) திருச்சட்டத்தை மீறிய யூதர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், தெக்கப்போலி பகுதியில், மற்ற தேசங்களைச் சேர்ந்த நிறைய பேர் வாழ்ந்துவந்தார்கள். அங்கே பன்றி இறைச்சிக்காக ஒரு சந்தையே இருந்தது. ஏனென்றால், கிரேக்கர்களும் சரி, ரோமர்களும் சரி, பன்றி இறைச்சியை விரும்பிச் சாப்பிட்டார்கள்.

மீடியா

போருக்குத் தயாராக இருக்கும் ரோமப் படை அதிகாரி
போருக்குத் தயாராக இருக்கும் ரோமப் படை அதிகாரி

ரோமப் படை அதிகாரி நூறு வீரர்களுக்கு அதிகாரியாக இருந்தார். ஒரு சாதாரண வீரருக்குக் கிடைத்த பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அதுதான். படை அதிகாரி, போர் வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்; அவர்களுக்கு ஆயுதங்களும் உணவுப்பொருள்களும் மற்ற பொருள்களும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்; அதேசமயத்தில், அவர்கள் சரியாக நடந்துகொள்ளும்படியும் பார்த்துக்கொண்டார். ரோமப் படை வீரர்கள் எந்தளவுக்குத் திறமையாகவும் வேகமாகவும் செயல்பட்டார்கள் என்பது மற்ற எவரையும்விட படை அதிகாரியையே சார்ந்திருந்தது. பொதுவாக, ரோமப் படையில் இருந்த மற்ற யாரையும்விட இவர் அதிக அனுபவசாலியாகவும் முக்கியமானவராகவும் இருந்தார். அதனால்தான், தன்னிடம் வந்து உதவி கேட்ட படை அதிகாரியின் மனத்தாழ்மையையும் விசுவாசத்தையும் இயேசு மிகவும் பாராட்டினார்.

குள்ளநரிகளின் குழிகளும் பறவைகளின் கூடுகளும்
குள்ளநரிகளின் குழிகளும் பறவைகளின் கூடுகளும்

குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தாலும் தனக்கு நிரந்தரமான ஒரு வீடு இல்லை என்று இயேசு சொன்னார். இங்கே படத்தில் காட்டப்பட்டிருக்கும் குள்ளநரிகள் (வல்பெஸ் வல்பெஸ்) மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. அவை ஆஸ்திரேலியாவுக்கும் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. குள்ளநரிகள் பொதுவாக நிலத்தில் குழி பறித்து வாழ்கின்றன. சிலசமயங்களில் இயற்கையான பாறை இடுக்குகளிலோ, வேறொரு விலங்கு விட்டுச்சென்ற அல்லது வேறொரு விலங்கிடமிருந்து பறித்துக்கொண்ட பொந்துகளிலோ வாழ்கின்றன. இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள குருவி [Cetti’s Warbler (Cettia cetti)], இஸ்ரவேலில் ஏதோவொரு பருவத்தில் காணப்படும் கிட்டத்தட்ட 470 வகையான குருவிகளில் ஒன்று. பொதுவாக, பறவைகளின் கூடுகள் வித்தியாசப்படுகின்றன. அவை மரங்களின் மேலும், மரப் பொந்துகளிலும், செங்குத்தான பாறைகளிலும் கூடு கட்டுகின்றன. குச்சிகள், இலைகள், கடற்பாசிகள், கம்பளி, வைக்கோல், பாசி, இறகுகள் ஆகியவற்றால் அவற்றைக் கட்டுகின்றன. இஸ்ரவேலில் உள்ள வித்தியாசப்பட்ட இயற்கை அமைப்புகள், அதாவது குளிரான மலை உச்சிகளோ சூடான பெரிய பள்ளத்தாக்குகளோ, வறண்ட பாலைவனங்களோ கடற்கரையோர சமவெளிகளோ, எல்லா பகுதிகளுமே பறவைகளைக் கவரும் இடங்களாக இருக்கின்றன. மத்தியதரைக் கடலின் தென்கிழக்கு மூலைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த எல்லா இடங்களிலும் அவை நிரந்தரமாக வாழ்கின்றன அல்லது அந்தப் பகுதி முழுவதும் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

கலிலேயா கடலின் கிழக்கில் உள்ள செங்குத்தான பாறைகள்
கலிலேயா கடலின் கிழக்கில் உள்ள செங்குத்தான பாறைகள்

கலிலேயா கடலின் கிழக்குக் கரையோரமாகத்தான், பேய் பிடித்திருந்த இரண்டு பேரை இயேசு குணப்படுத்தினார். அவர்களைப் பிடித்திருந்த பேய்களைப் பன்றிக் கூட்டத்துக்குள் அவர் அனுப்பிவிட்டார்.