Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கர்த்தருடைய நாளில் பூமியதிர்ச்சிகள்

கர்த்தருடைய நாளில் பூமியதிர்ச்சிகள்

அதிகாரம் 18

கர்த்தருடைய நாளில் பூமியதிர்ச்சிகள்

1, 2. (அ) ஒரு கடுமையான பூமியதிர்ச்சியினூடே வாழ்வது எதைப் போன்றிருக்கும்? (ஆ) ஆறாவது முத்திரை உடைக்கப்படுகையில் யோவான் என்ன விவரிக்கிறார்?

 நீங்கள் எப்போதாவது ஒரு கடுமையான பூமியதிர்ச்சியினூடே வாழ்ந்திருக்கிறீர்களா? அது ஓர் இன்பமான அனுபவம் இல்லை. ஒரு பெரிய பூமியதிர்ச்சியானது வெறுப்படையச் செய்யும் ஆட்டத்துடனும், முழங்கும் இரைச்சலுடனும் ஆரம்பிக்கலாம். பாதுகாப்புக்காக விரைகையில்—ஒருவேளை ஒரு சாய்வு மேசையின் கீழ்—தள்ளாட்டம் மோசமடையக்கூடும். அல்லது, ஓர் எதிர்பாராத, நொறுக்கும் குலுங்குதலாக வரக்கூடும்—மண்பாண்டங்கள், தட்டுமுட்டு சாமான்கள், கட்டடங்கள்கூட உடைந்து சிதறுதல் பின்தொடரக்கூடும். சேதம் பேரழிவுக்குரியதாக இருக்கக்கூடும், அடிக்கடி வரும் பின் அதிர்ச்சிகள் மேலுமான சேதத்தை உண்டுபண்ணி துயரத்தைக் கூட்டக்கூடும்.

2 இதை மனதில்கொண்டு ஆறாவது முத்திரையை உடைக்கையில் யோவான் என்ன விவரிக்கிறார் என்பதை சிந்தியுங்கள்: “அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது.” (வெளிப்படுத்துதல் 6:12அ) மற்ற முத்திரைகளை உடைத்ததைப் போலவே இது அதே கால திட்டத்துக்குள் வரவேண்டும். கர்த்தருடைய நாளின்போது எந்தச் சமயத்தில் இந்தப் பூமியதிர்ச்சி ஏற்படுகிறது, மேலும் இது என்ன வகையான அதிர்ச்சி?—வெளிப்படுத்துதல் 1:10.

3. (அ) இயேசு தம்முடைய வந்திருத்தலின் அடையாளம் பற்றிய தீர்க்கதரிசனத்தில் என்ன நிகழ்ச்சிகளை முன்னறிவித்தார்? (ஆ) வெளிப்படுத்துதல் 6:12-ன் பெரிய அடையாள அர்த்தமுள்ள பூமியதிர்ச்சிக்கு சொல்லர்த்தமான பூமியதிர்ச்சிகள் எவ்வாறு தொடர்புடையவையாக இருக்கின்றன?

3 சொல்லர்த்தமான மேலும் அடையாள அர்த்தமான பூமியதிர்ச்சிகள் பைபிளில் அநேக முறைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ராஜ்ய வல்லமையில் அவருடைய வந்திருத்தலின் அடையாளம் பற்றிய அவருடைய பெரிய தீர்க்கதரிசனத்தில் இயேசு முன்னறிவித்தார்: “ஒரு இடத்திற்கு பிறகு மற்றொன்றில் பூமியதிர்ச்சிகள்.” இவை “வேதனையின் ஆரம்பமாக” இருக்கும். பூமியின் ஜனத்தொகை 1914-லிருந்து, பல ஆயிர லட்சங்களாக வெடித்துக் கொண்டிருக்கையில், சொல்லர்த்தமான பூமியதிர்ச்சிகள் நம்முடைய நாளின் வேதனைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. (மத்தேயு 24:3, 7, 8, NW) எனினும், அவை தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினாலும், அந்தப் பூமியதிர்ச்சிகள் இயல்பான, இயற்கைக்குரிய பேராபத்துக்களாக இருந்திருக்கின்றன. வெளிப்படுத்துதல் 6:12-ன் பெரிய அடையாள அர்த்தமுள்ள பூமியதிர்ச்சிக்கு அவை முன் ஆரம்பமாக இருக்கிறது. இது உண்மையாகவே, சாத்தானுடைய பூமிக்குரிய மனித காரிய ஒழுங்குமுறையை அதனுடைய அடித்தளத்திலிருந்து ஆட்டங்கொள்ளச் செய்யும், வரிசையாக நடக்கும் முன் அதிர்ச்சிகளுக்கு அழிக்கும் இறுதிமுடிவாக வருகிறது. a

மனித சமுதாயத்தில் அதிர்வுகள்

4. (அ) பேரழிவுக்குரிய சம்பவங்கள் 1914-ல் ஆரம்பமாகும் என்று யெகோவாவின் ஜனங்கள் எப்போதிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்? (ஆ) 1914 எந்தக் காலப்பகுதியின் முடிவைக் குறிக்கும்?

4 யெகோவாவின் ஜனங்கள், 1870-களின் மத்தியிலிருந்து, அந்தப் பேரழிவுக்குரிய சம்பவங்கள் 1914-ல் ஆரம்பமாகும் என்றும், புறஜாதிகள் காலங்களினுடைய முடிவின் அடையாளமாக இருக்கும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இது பொ.ச.மு. 607-ல், எருசலேமில் தாவீதிய ராஜ்யம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து பொ.ச. 1914-ல் பரலோக எருசலேமில் இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்படுதல் வரையாக “ஏழு காலங்கள்” (2,520 ஆண்டுகள்) அடங்கிய காலப்பகுதியாக இருக்கிறது.—தானியேல் 4:24, 25; லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் வர்ஷன். b

5. (அ) அக்டோபர் 2, 1914-ல் C. T. ரஸல் என்ன அறிவிப்பைச் செய்தார்? (ஆ) 1914-லிருந்து என்ன அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன?

5 இவ்வாறாக, C. T. ரஸல், புரூக்லின், நியூ யார்க், பெத்தேல் குடும்பத்தாருடன் அக்டோபர் 2, 1914 காலை வணக்கத்திற்காக வந்தபோது, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஓர் அறிவிப்பைச் செய்தார்: “புறஜாதியின் காலங்கள் முடிவுக்கு வந்துவிட்டது; அவர்களுடைய ராஜாக்கள் அவர்களுடைய நாளைக் கொண்டிருந்தனர்.” உண்மையாகவே, 1914-ல் ஆரம்பமான உலகளாவிய எழுச்சி அவ்வளவு அதிக பாதிப்பை உடையதாக இருந்து, நீண்டு நிலைத்திருந்த அநேக முடியாட்சிகளை மறைந்துபோகச் செய்தன. ரஷ்ய தீவிர பொதுவுடைமைக் கட்சியாரின் 1917 புரட்சியில் ரஷ்ய சக்கரவர்த்தியாட்சி கவிழ்க்கப்பட்டது, பொது உடைமைக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான நீண்ட கால நேருக்கு நேர் எதிர்ப்புக்கு வழிநடத்தியது. அரசியல் மாற்ற அதிர்வுகள் பூமி முழுவதுமாக சமுதாயத்தைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இன்று, அநேக அரசாங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கும் மேலாக நிலைத்துநிற்க தவறுகின்றன. அரசியல் உலகத்தில் நிலையான தன்மையின்மை இத்தாலியின் காரியத்தில் தெளிவாக்கப்பட்டு இருக்கிறது, அங்கே இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து 42 ஆண்டுகளில் 47 புதிய அரசாங்கங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட முன்னர் நிகழும் அதிர்வுகள் ஓர் உச்சக்கட்டமான அரசாங்க எழுச்சிக்கு முன் ஆரம்பமாக மட்டுமே இருக்கின்றன. விளைவு? கடவுளுடைய ராஜ்யம் பூமியின் மீதான முழு ஆட்சி அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளும்.—ஏசாயா 9:6, 7.

6. (அ) புதிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சகாப்தத்தை H. G. உவெல்ஸ் எவ்வாறு விவரித்தார்? (ஆ) 1914-லிருந்து உள்ள சகாப்தத்தைக் குறித்து ஒரு தத்துவஞானியும் ஓர் அரசியல் வல்லுநரும் என்ன எழுதினார்கள்?

6 வரலாற்றாசிரியர்கள், தத்துவஞானிகள், மேலும் அரசியல் தலைவர்கள் அனைவரும் 1914-ம் வருடமானது ஒரு புதிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சகாப்தத்தின் ஆரம்பம் என்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தச் சகாப்தத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றாசிரியர் H. G. உவெல்ஸ் குறிப்பிட்டார்: “தீர்க்கதரிசி இன்பமான காரியங்களைக் குறித்து மகிழ்ச்சியுடன் தீர்க்கதரிசனம் சொல்லுவான். ஆனால் அவனுடைய கடமையானது அவன் என்ன பார்க்கிறானோ அதைச் சொல்ல வேண்டும். அவன் படை வீரர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள், கடும் வட்டி வாங்குகிறவர்கள், மேலும் பொருளாதாரத்தில் துணிகரமாக செயல்படுகிறவர்கள், இவர்களால் இன்னும் உறுதியாக கட்டுப்படுத்தப்படுகிற ஓர் உலகத்தைக் காண்கிறான்; ஐய உணர்வுக்கும் வெறுப்புக்கும் அடிபணிந்துள்ள ஓர் உலகம், மீந்திருக்கிற தனி நபருக்குரிய சுதந்திரங்கள் அதிக வேகமாக இழக்கப்படுதல், கசப்பான வகுப்பு போராட்டங்கள் போன்ற மோசமான தவறுகளை செய்தல், மேலும் புதிய யுத்தங்களுக்கு தயாராகிக் கொண்டிருத்தல் ஆகியவற்றைக் காண்கிறான்.” 1953-ல் தத்துவஞானி பெர்ட்ரண்டு ரஸல் எழுதினார்: “1914-லிருந்து, உலகத்தின் போக்குகளை உணர்ந்த ஒவ்வொருவனும், எப்போதும் சம்பவிக்காத ஒரு பெரிய அழிவை நோக்கிச் செல்லும், விதிக்கப்பட்டுள்ள முன் தீர்மானிக்கப்பட்ட அணிவகுப்பைப் போன்று தோன்றின ஒன்றினால் வெகுவாக கலங்கிப்போயிருக்கிறான். . . . அவர்கள் மனித இனத்தை, கிரேக்க துயர் நாடகத்தின் வீரனைப் போல, கோபமான கடவுட்களால் நடத்தப்பட்டு இனிமேலும் தலைவிதியின் எஜமானாக இல்லாதவனைப் போல பார்க்கிறார்கள்.” 1980-ல் அரசியல் வல்லுநர் ஹெரால்டு மேக்மில்லன், 20-ம் நூற்றாண்டின் அமைதியான ஆரம்பத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “எல்லா காரியங்களும் மேலும் மேலும் மேன்மையடையும். நான் இவ்விதமான ஓர் உலகத்தில் பிறந்தேன். . . . திடீரென, எதிர்பாராதவிதமாக, ஒரு காலை 1914-ல் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது.”

7-9. (அ) 1914-லிருந்து என்ன எழுச்சிகள் மனித சமுதாயத்தை அசைத்திருக்கின்றன? (ஆ) இயேசுவினுடைய வந்திருத்தலின்போது மனித சமுதாயத்தில் ஏற்பட்ட எழுச்சிகள், மனிதவர்க்கத்திலிருக்கிற என்ன நிலைமையை கடைசியாக உட்படுத்தும்?

7 இரண்டாம் உலக யுத்தம் எழுச்சிகளின் மற்றொரு அலையைக் கொண்டு வந்தது. மேலும், பயங்கரவாதத்தோடுகூட சிறு சிறு யுத்தங்கள் சர்வதேச அளவில் நடந்துவருவது தொடர்ந்து உலகை உலுக்குகிறது. பயங்கரவாதிகளைப் பற்றிய, அல்லது சர்வநாசம் செய்வதற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளைப் பற்றிய பயம், அநேகரை யோசிக்க வைக்கிறது.

8 இருப்பினும், யுத்தங்களைத்தவிர மற்ற காரியங்கள் 1914-லிருந்து மனித சமுதாயத்தை அதனுடைய அடித்தளங்களிலிருந்து ஆட்டங்கொள்ளச் செய்திருக்கிறது. மிக அதிக அதிர்ச்சியைத் தரும் எழுச்சி ஒன்று அக்டோபர் 29, 1929 ஐ.மா. பங்கு சந்தை வீழ்ச்சியால் தூண்டிவிடப்பட்டது. இது மிகப் பெரிய பொருளாதார மந்தத்தைக் கொண்டு வந்தது, எல்லா முதலாளித்துவ நாடுகளையும் பாதித்தது. அந்த மந்தமானது 1932-க்கும் 1934-க்கும் இடையில் அடித்தளத்தையே எட்டியது, ஆனால் நாம் இன்னும் அதனுடைய பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருக்கிறோம். பொருளாதார வகையில் நோய்ப்பட்டுள்ள உலகமானது 1929-லிருந்து தற்காலிக திட்டங்களால் ஒட்டுப்போடப்பட்டிருக்கிறது. அரசாங்கங்கள் பற்றாக்குறை வருமான நிலைக்கு இடங்கொடுக்கின்றன. 1973-ன் எண்ணெய் நெருக்கடி மேலும் 1987-ன் பங்கு சந்தையின் வீழ்ச்சி பொருளாதார பேரரசின் ஆட்டங்களைக் கூட்டியது. இதற்கிடையில், பல லட்சக்கணக்கான மக்கள் அதிகமானவற்றை கடனுக்கு வாங்குகிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத ஆட்கள் பணம் சம்பந்தமான தந்திரமான ஏற்பாடுகள், பிரமிட் திட்டங்கள், லாட்டரிகள் மேலும் மற்ற சூதாட்ட சூழ்ச்சிகள் மூலம் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள், இவற்றில் பெரும்பாலானவை மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கங்களினால் செய்யப்படுகின்றன. கிறிஸ்தவமண்டலத்தின் தொலைக்காட்சி சுவிசேஷகர்கள்கூட அவர்களுடைய பல கோடி டாலர் பங்குக்காக தங்களுடைய கைகளை ஏந்தியிருக்கின்றனர்!—எரேமியா 5:26-31-ஐ ஒப்பிடுக.

9 முன்னதாக, பொருளாதார பிரச்சினைகள் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முசோலினிக்கும் ஹிட்லருக்கும் வழியை திறந்து வைத்திருந்தன. மகா பாபிலோனானது அவர்களுடைய ஆதரவுகளை வசப்படுத்தி பெறுவதில் காலம் தாமதிக்கவில்லை, மேலும் வாடிகன் 1929-ல் இத்தாலியுடனும் 1933-ல் ஜெர்மனியுடனும் உடன்படிக்கைகள் செய்தது. (வெளிப்படுத்துதல் 17:5) அதைத் தொடர்ந்து வந்த இருண்ட நாட்கள் உண்மையாகவே இயேசுவினுடைய வந்திருத்தலைப் பற்றிய தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அது, “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் . . . பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என்பதை உட்படுத்தும். (லூக்கா 21:7-9, 25-31) c ஆம், மனித சமுதாயத்தை அசைப்பதற்காக 1914-ல் ஆரம்பமான அதிர்வுகள் வலிமையான பின் அதிர்வுகளுடன் தொடர்ந்திருக்கின்றன.

யெகோவா ஒருவிதமான அசைவித்தலைச் செய்கிறார்

10. (அ) மனித விவகாரங்களில் ஏன் இவ்வளவு நடுக்கங்கள் இருக்கின்றன? (ஆ) எதற்கு தயார் செய்யும் வகையில், யெகோவா என்ன செய்து கொண்டிருக்கிறார்?

10 மனித விவகாரங்களில் இப்படிப்பட்ட நடுக்கங்கள், அவனுடைய சொந்த நடையை நடத்துவதற்கு மனித இயலாமையின் விளைவாக இருக்கின்றன. (எரேமியா 10:23) மேலுமாக, அந்தப் பழைய பாம்பு, சாத்தான், ‘உலகம் முழுவதையும் மோசம்போக்கிக் கொண்டிருப்பவன்,’ யெகோவாவின் வணக்கத்திலிருந்து முழு மனிதவர்க்கத்தையும் திருப்புவதற்கான அவனுடைய துணிச்சலான கடைசி முயற்சியில் கடுந்துயரங்களைச் சுமத்துகிறான். நவீன தொழில்நுட்பமானது பூமியை ஒரே சுற்று வட்டாரமாக சுருங்கச் செய்திருக்கிறது, அங்கே தேசப்பற்று மற்றும் இனத்தின் காரணமாக பகைமைகள் மனித சமுதாயத்தை அதனுடைய அடித்தளங்களோடு அசைத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் பெயரளவுக்கு உள்ள ஐக்கிய நாடுகள் பயன் விளையத்தக்க எந்தப் பரிகாரத்தையும் காண முடியாது. எப்போதும் இல்லாத வண்ணம், மனிதன் தனக்கே கேடுண்டாக மனிதனை ஆளுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12; பிரசங்கி 8:9) இருப்பினும், சர்வலோகப் பேரரசர் யெகோவா, வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர், பூமியின் பிரச்சினைகளை என்றென்றுமாக தீர்ப்பதற்கு தயார் செய்யும் வகையில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக அவருடைய சொந்த வகையான அசைவித்தலைச் செய்துகொண்டிருக்கிறார். எப்படி?

11. (அ) ஆகாய் 2:6, 7-ல் என்ன அசையப்பண்ணுதல் விவரிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) ஆகாயின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறிக்கொண்டிருக்கிறது?

11 ஆகாய் 2:6, 7-ல் (NW) நாம் வாசிக்கிறோம்: “சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்ச காலத்துக்குள்ளே இன்னும் ஒரு தரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப் பண்ணுவேன். சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவேன். சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவைகள் உள்ளே வரும்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” குறிப்பாக 1919-லிருந்து, பூமியிலுள்ள மனித சமுதாயத்தின் எல்லா பாகங்களின் மத்தியில் அவருடைய நியாயத்தீர்ப்புகளை அவருடைய சாட்சிகள் அறிவிக்கும்படிச் செய்திருக்கிறார். இந்தப் பூகோள எச்சரிக்கையின் மூலமாக சாத்தானின் இந்தப் பொல்லாத உலகத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டு வருகிறது. d எச்சரிக்கை தீவிரமாகையில், கடவுள் பயமுள்ள மனிதர்கள், ‘விரும்பப்பட்ட காரியங்கள்,’ தேசங்களிலிருந்து தங்களைப் பிரித்துக் கொள்வதற்கு தூண்டப்பட்டிருக்கிறார்கள். சாத்தானுடைய அமைப்பில் உள்ள அதிர்ச்சியினால் அவர்கள் அசைக்கப்படுவதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால் அவர்கள் நிலைமையை புரிந்துகொள்ளுகையில், யெகோவாவின் வணக்க வீட்டை மகிமையால் நிரப்புவதில் அபிஷேகம் பண்ணப்பட்ட யோவான் வகுப்பாரோடு பங்குகொள்ள அவர்களுடைய சொந்த தீர்மானத்தை எடுக்கின்றனர். இது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது? ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியத்துடன் பிரசங்கிப்பதன் மூலம். (மத்தேயு 24:14) இந்த ராஜ்யம் இயேசுவும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட பின்பற்றுகிறவர்களாலும், ஆனது. ‘ஓர் அசைக்க முடியாத ராஜ்யமாக’ யெகோவாவின் மகிமைக்கு எப்போதும் நிலைத்திருக்கும்.—எபிரெயர் 12:26-29.

12. மத்தேயு 24:14-ல் முன்னறிவிக்கப்பட்ட பிரசங்கிப்புக்கு பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டால், வெளிப்படுத்துதல் 6:12-ன் மகா பூமியதிர்ச்சி வருமுன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

12 அந்தப் பிரசங்கிப்புக்கு பிரதிபலிக்க ஆரம்பித்தவர்களில் நீங்கள் ஒருவரா? சமீப வருடங்களில் இயேசுவினுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராயிருந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவேளை நீங்கள் ஒருவரா? அப்படியானால், பைபிள் சத்தியத்தின் உங்களுடைய படிப்பில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருங்கள். (2 தீமோத்தேயு 2:15; 3:16, 17) சாத்தானுடைய அழிவுக்கென்று வைக்கப்பட்டுள்ள பூமிக்குரிய சமுதாயத்தின் சீர்கெட்ட வாழ்க்கை முறையை விட்டுவிடுங்கள்! கிறிஸ்தவ புதிய உலக சமுதாயத்துக்குள் வந்து மேலும் அதனுடைய நடவடிக்கைகளில் முழுமையாக பங்குகொள்ளுங்கள். முடிவான அழிவுக்குரிய “பூமியதிர்ச்சி” எல்லா சாத்தானுடைய உலகத்தையும் நொறுக்குவதற்கு முன்பு உடனடியாக வாருங்கள். ஆனால் அந்தப் பெரிய பூமியதிர்ச்சி என்ன? இப்போது நாம் பார்ப்போமாக.

மகா பூமியதிர்ச்சி!

13. அந்த மகா பூமியதிர்ச்சி எந்த வகையில் மனித அனுபவத்துக்கு முற்றிலும் புதியதாக இருக்கிறது?

13 ஆம், இந்த நெருக்கடியான கடைசி நாட்கள்—சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும்—பூமியதிர்ச்சிகளின் ஒரு காலமாக இருந்திருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1) ஆனால் இந்த அதிர்ச்சிகளில் ஒன்றுமே ஆறாவது முத்திரையை உடைக்கையில் யோவான் பார்க்கிற முடிவான மகா அதிர்ச்சியாக இல்லை. முன்கூட்டி ஏற்படும் நடுக்கங்களுக்குரிய காலம் முடிவுற்றது. மனித அனுபவத்துக்கு முற்றிலும் புதிதாக இருக்கும் ஒரு மகா பூமியதிர்ச்சி இப்போது வருகிறது. அது உண்டாக்கும் எழுச்சிகளும் நடுக்கங்களும் ரிக்டர் அளவுகோல் அல்லது மற்ற எந்த அளக்கும் கருவியினால் அளக்க முடியாத அளவுக்கு அவ்வளவு பெரிய பூமியதிர்ச்சியாக இருக்கிறது. இது வெறுமென ஓர் இடத்துக்கு உரிய அதிர்ச்சி இல்லை. ஆனால் முழு ‘பூமியை,’ அதாவது, எல்லா ஒழுக்கங்கெட்ட மனித சமுதாயத்தை, பாழாக்கும் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வரும் அசைவாக இருக்கும்.

14. (அ) ஒரு மகா பூமியதிர்ச்சியையும் அதனுடைய விளைவுகளையும் எந்தத் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது? (ஆ) யோவேலின் தீர்க்கதரிசனமும், வெளிப்படுத்துதல் 6:12, 13-ம் எதைக் குறிக்க வேண்டும்?

14 யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் மற்றவர்கள் இவ்விதமான ஒரு பூமியதிர்ச்சி மேலும் அதனுடைய பேரழிவுக்குரிய விளைவுகளை முன்னறிவித்தார்கள். உதாரணமாக, சுமார் பொ.ச.மு. 820-ல் யோவேல் “கர்த்தரின் பெரிதும் பயங்கரமுமான நாள் வரு”வதைக் குறித்து பேசினார், அப்பொழுது ‘சூரியன்தானே இருளடையும், சந்திரன் இரத்தமாக மாறும்’ என்று சொன்னார். பின்னர், அவர் இந்த வார்த்தைகளைக் கூட்டினார்: “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள் திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.” (யோவேல் 2:31; 3:14-16) இந்த அசைவிப்பு மிகுந்த உபத்திரவத்தின் காலத்திலே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு தண்டனை நிறைவேற்றத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடும். (மத்தேயு 24:21) எனவே வெளிப்படுத்துதல் 6:12, 13-ல் உள்ள விவரம் தர்க்கரீதியில் அதே பொருத்தத்தை உடையதாக இருக்கும்.—காண்க: எரேமியா 10:10; செப்பனியா 1:14, 15.

15. ஆபகூக் தீர்க்கதரிசி எந்த மிகப்பெரிய அசைவை முன்னறிவித்தார்?

15 யோவேலுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆபகூக் தீர்க்கதரிசி தன்னுடைய கடவுளிடத்தில் ஜெபத்தில் இவ்வாறு சொன்னார்: “கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே , வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப் பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.” அந்தக் “கோபித்தல்” என்னவாக இருக்கும்? ஆபகூக் மிகுந்த உபத்திரவத்தைக் குறித்து தெளிவான வருணனைக் கொடுத்துக் கொண்டு, யெகோவாவைப் பற்றி இவ்வாறு சொல்லுகிறார்: “அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப் பண்ணினார்; . . . நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.” (ஆபகூக் 3:1, 2, 6, 12, 18) தேசங்களைப் போரடிக்கையில் பூமி முழுவதும் யெகோவா என்னே ஒரு மிகப் பெரிய அசைவிப்பை செய்வார்!

16. (அ) கடவுளுடைய மக்கள் மீது சாத்தான் அவனுடைய இறுதியான தாக்குதலை செய்யும் காலத்துக்காக எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் என்ன முன்னறிவிக்கப்பட்டது? (ஆ) வெளிப்படுத்துதல் 6:12-ன் மகா பூமியதிர்ச்சியிலிருந்து என்ன விளைவடைகிறது?

16 மாகோகின் கோகு (தாழ்த்தப்பட்ட சாத்தான்) தேவனுடைய மக்களின் மீது அவனுடைய இறுதியான தாக்குதலை செய்யும்போது, யெகோவா “இஸ்ரவேல் தேசத்திலே” ஒரு “பெரிய அதிர்ச்சி” உண்டாகும்படி செய்வார் என்று எசேக்கியேல்கூட முன்னறிவித்தார். (எசேக்கியேல் 38:18, 19) சொல்லர்த்தமான பூமியதிர்ச்சிகள் உட்பட்டிருந்தாலும், வெளிப்படுத்துதல் அடையாளங்களில் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தீர்க்கதரிசனமும் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற தீர்க்கதரிசனங்களும் வெகுவாக அடையாள அர்த்தமுடையதாக இருக்கின்றன. எனவே, ஆறாவது முத்திரையை உடைப்பதானது இந்தப் பூமிக்குரிய ஒழுங்குமுறையின் எல்லா அசைவுகளும் உச்சக்கட்டத்தை அடைவதை வெளிப்படுத்துவதாக தெரிகிறது—அந்த மகா பூமியதிர்ச்சியில் யெகோவா தேவனுடைய அரசாட்சிக்கு எதிராக உள்ள எல்லா மனிதர்களும் அழிக்கப்படுகிறார்கள்.

ஓர் இருண்ட காலம்

17. மகா பூமியதிர்ச்சியானது எவ்வாறு சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை பாதிக்கிறது?

17 யோவான் தொடர்ந்து காண்பிக்கிற விதமாக, மகா பூமியதிர்ச்சியானது, வானங்களும்கூட உட்படுகிற பயங்கரமான நிகழ்ச்சிகளோடு வருகிறது. அவர் சொல்லுகிறார்: “சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்தி மரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.” (வெளிப்படுத்துதல் 6:12ஆ, 13) என்னே வியப்படையச் செய்யும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி! அந்தத் தீர்க்கதரிசனம் சொல்லர்த்தமாக நிறைவேற்றம் அடைந்தால் விளைவடையும் திகிலடையச் செய்யும் இருளை நீங்கள் கற்பனை செய்யக்கூடுமா? பகலிலே மிதமான அனலைத் தரும், ஆறுதல் அளிக்கும் சூரிய வெளிச்சம் இனிமேலும் இல்லை! இரவிலே விரும்பத்தக்க வெள்ளியைப் போன்ற நிலவு ஒளி இனிமேலும் இல்லை! மேலும் எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் வானத்தின் மென்பட்டைப் போன்ற பின் திரைக்கு எதிராக இனிமேலும் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடாது. பதிலாக, அனலற்ற கடுமையான இருளே இருக்கும்.

18. எருசலேமுக்கு பொ.ச.மு. 607-ல் என்ன விதத்தில் வானங்கள் கறுத்துப்போனது?

18 ஆவிக்குரிய கருத்தில், இவ்விதமான இருள் பூர்வ இஸ்ரவேலுக்காக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது: “தேசமெல்லாம் பாழாய்ப்போம், சர்வ சங்காரம் செய்யாமல் இருப்பேனா? இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்.” (எரேமியா 4:27, 28, NW) பொ.ச.மு. 607-ல் அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறினபோது, யெகோவாவின் மக்களுக்கு காரியங்கள் இருண்டதாக இருந்தன. அவர்களுடைய தலைநகரமாகிய எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டது. அவர்களுடைய ஆலயம் அழிக்கப்பட்டது, மேலும் அவர்களுடைய தேசம் கைவிடப்பட்டது. அவர்களுக்காக, பரலோகத்திலிருந்து, ஆறுதல் அளிக்கும் ஒளி இல்லாதிருந்தது. மாறாக, எரேமியா துயரத்துடன் யெகோவாவிடம் சொன்ன விதமாகவே இருந்தது: “தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.” (புலம்பல் 3:43, 44) எருசலேமுக்கு, அந்த விண்ணுலக இருள் மரணத்தையும் அழிவையும் குறித்தது.

19. (அ) பூர்வ பாபிலோனைக் குறித்ததில் வானங்களில் உள்ள இருளை கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) எப்போது, எப்படி ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறினது?

19 பின்னர், வானத்தில் அதேவிதமான இருள், பூர்வ பாபிலோனுக்கு பேரழிவைக் குறித்தது. இதைக் குறித்து, கடவுளுடைய தீர்க்கதரிசி இவ்விதமாக எழுதும்படி தேவஆவியால் ஏவப்பட்டார்: “இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டி[ப்பேன்].” (ஏசாயா 13:9-11) இந்தத் தீர்க்கதரிசனம், பாபிலோன் மேதியர்கள் பெர்சியர்களால் கைப்பற்றப்பட்டபோது பொ.ச.மு. 539-ல் நிறைவேறினது. முதன்மையான உலக வல்லரசான அவளுடைய இடத்திலிருந்து அவள் என்றுமாக விழுந்தபோது பாபிலோனுக்கு இருந்த கருமை, நம்பிக்கையின்மை, ஆறுதலளிக்கும் வெளிச்சமின்மையை அது நன்றாக விவரிக்கிறது.

20. மகா பூமியதிர்ச்சி தாக்குகையில் என்ன பயங்கரமான விளைவு இந்த ஒழுங்குமுறைக்கு உண்டாக இருக்கிறது?

20 அதே விதமாக, மகா பூமியதிர்ச்சி தாக்குகையில், இந்த முழு உலக ஒழுங்குமுறை முழு இருளாகிய நம்பிக்கையின்மை மூடிக்கொண்டுவிடும். சாத்தானுடைய பூமிக்குரிய ஒழுங்குமுறையின் பிரகாசமான, பளபளப்பான ஒளி கொடுக்கும் பொருள்கள் நம்பிக்கையின் கதிரை வீசாமற்போகும். ஏற்கெனவே இன்று, பூமியின் அரசியல் தலைவர்கள், முக்கியமாக கிறிஸ்தவமண்டலத்தில், அவர்களுடைய சீர்கேடு, பொய் சொல்லுதல், மற்றும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை முறைக்கு பேர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். (ஏசாயா 28:14-19) அவர்களை இனிமேலும் நம்பமுடியாது, யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் அவர்களுடைய அதிர்ந்து எரியும் வெளிச்சம் முழுமையாக மறைந்துவிடும். பூமியின் விவகாரங்களின் பேரில் அவர்களுடைய சந்திரனைப் போன்ற செல்வாக்கு இரத்தக்கறைப்பட்டதாகவும், மரணத்தைக் கொண்டு வரக்கூடியதாகவும் வெளிப்படுத்தப்படும். அவர்களுடைய உலகப்பிரகாரமான புகழ்பெற்றவர்கள் பாய்ந்து வரும் விண் கற்களைப் போல மறைக்கப்படுவார்கள், மேலும் இரைச்சல் உண்டாக்கும் புயல் காற்றினால் பழுக்காத அத்திப் பழங்களைப் போல் சிதறடிக்கப்படுவார்கள். நம்முடைய முழு கோளமும் “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தின்”கீழ் அதிரும். (மத்தேயு 24:21) என்னே ஓர் அச்சம் தரும் எதிர்பார்ப்பு!

“வானம்” விலகுகிறது

21. அவருடைய தரிசனத்தில், ‘வானத்தை’ குறித்து மற்றும் ‘ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தீவும்’ குறித்து யோவான் என்ன பார்க்கிறார்?

21 யோவானின் தரிசனம் தொடருகிறது: “வானமும் சுருட்டப்பட்ட புத்தகச் சுருள் போல விலகிப்போயிற்று; ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தீவும் அதனுடைய இடத்தைவிட்டு அகன்றுபோனது.” (வெளிப்படுத்துதல் 6:14, NW) தெளிவாகவே, இவைகள் சொல்லர்த்தமான வானங்கள் அல்லது சொல்லர்த்தமான மலைகள், தீவுகள் அல்ல. ஆனால் அவை எதை அடையாளப்படுத்துகின்றன?

22. ஏதோமில், ‘ஒரு புஸ்தகச் சுருளைப் போல,’ என்ன விதமான ‘வானங்கள் சுருட்டப்பட்டன’?

22 ‘வானத்தைக்’ குறித்து, எல்லா தேசங்களுக்கும் விரோதமான யெகோவாவின் சீற்றத்தைப் பற்றி சொல்லும் இதே விதமான தீர்க்கதரிசனத்தின் மூலம், புரிந்துகொள்ளுவதற்கு நாம் உதவப்படுகிறோம்: “வானத்தின் சர்வ சேனையும் கரைந்து போக வேண்டும். வானங்கள் புத்தகச் சுருளைப் போல் சுருட்டப்பட வேண்டும்.” (ஏசாயா 34:4, NW) குறிப்பாக ஏதோம் துன்பப்பட வேண்டும். எவ்வாறு? பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் சீக்கிரத்தில் அவள் பாபிலோனியர்களால் படையெடுத்து அழிக்கப்பட்டாள். அந்தச் சமயத்தில், சொல்லர்த்தமான வானங்களில் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஏதோமின் ‘வானங்களில்’ e பேரழிவுக்குரிய சம்பவங்கள் இருந்தன. அவளுடைய மனித அரசாங்க அதிகாரங்கள் அவளுடைய உயர்த்தப்பட்ட, வானத்தைப் போன்ற இடத்திலிருந்து தாழ்த்தப்பட்டன. (ஏசாயா 34:5) அவை ‘சுருட்டப்பட்டு,’ இனிமேலும் எவருக்கும் பயனற்ற ஒரு பழைய சுருளைப் போல, தனியாக வைக்கப்பட்டன.

23. ‘புத்தகச் சுருளைப் போல விலக வேண்டிய’ ‘அந்த வானம்’ எது, மேலும், இந்தப் புரிந்துகொள்ளுதலை பேதுருவின் வார்த்தைகள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றன?

23 இவ்வாறாக, ‘ஒரு புத்தகச் சுருளைப் போல விலக வேண்டிய’ ‘அந்த வானம்’ இந்தப் பூமியின் மீது ஆட்சி செய்யும் கடவுளுக்கு எதிரான அரசாங்கங்களைக் குறிக்கிறது. அவை அனைத்தும்—ஜெயிக்கிறவராகிய வெள்ளைக் குதிரையின் சவாரியாளரால் முடிவாக நீக்கப்படும். (வெளிப்படுத்துதல் 19:11-16, 19-21) ஆறாவது முத்திரை உடைக்கப்படுவதின் மூலம் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை எதிர்பார்த்தபோது அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னவற்றைக் கொண்டு இது உறுதிப்படுத்தப்படுகிறது: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 3:7) ஆனால், ‘ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தீவும் அதனுடைய இடத்தை விட்டு அகன்று போயின’ என்ற சொற்றொடரைப் பற்றியதென்ன?

24. (அ) பைபிள் தீர்க்கதரிசனத்தில், எப்போது, மலைகளும் தீவுகளும் ஆடுவதாக அல்லது உறுதியற்றுப் போவதாக சொல்லப்படுகிறது? (ஆ) நினிவே விழுந்தபோது எவ்வாறு ‘பர்வதங்கள் அதிர்ந்தன’?

24 பைபிள் தீர்க்கதரிசனத்தில், மலைகள், தீவுகள் பெரிய அரசியல் எழுச்சிகளின் காலங்களில் ஆடுவதாக அல்லது மற்ற விதத்தில் உறுதியற்றுப் போவதாக சொல்லப்படுகின்றன. உதாரணமாக, நினிவேக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை முன்னறிவிக்கையில், தீர்க்கதரிசியாகிய நாகூம் எழுதினார்: “அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் . . . எடுபட்டுப்போம்.” (நாகூம் 1:5) பொ.ச.மு. 632-ல் நினிவே உண்மையிலே விழுந்தபோது சொல்லர்த்தமான மலைகள் எதுவும் முறிந்ததாகப் பதிவு இல்லை. ஆனால் முன்னதாக தன்னுடைய பலத்தில் மலையைப் போல் தோன்றின ஓர் உலக வல்லரசு திடீரென்று இடிந்து விழுந்தது.—எரேமியா 4:24-ஐ ஒப்பிடவும்.

25. வரவிருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில், ‘ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தீவும்’ அவற்றின் இடங்களிலிருந்து எவ்வாறு நீக்கப்படும்?

25 ஆகையால், ஆறாவது முத்திரை உடைக்கப்படுகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தீவும்’ நியாயமாகவே, மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையருக்கு அவ்வளவு உறுதியாக நிலைத்திருப்பதாய் தோன்றும் அரசியல் அரசாங்கங்களும் அதைச் சார்ந்த அமைப்புகளுமாக இருக்கும். அவற்றில் முன்னர் நம்பிக்கை வைத்தவர்கள் திகைக்கவும் பயமூட்டும் விதத்தில், அவற்றில் இடத்திலிருந்து அசைக்கப்படும். தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்லுகிற பிரகாரம், யெகோவா மற்றும் அவர் குமாரனுடைய கோபாக்கினையின் மகா நாள்—சாத்தானுடைய அமைப்பின் எல்லாவற்றையும் நீக்கும் முடிவான அசைவித்தல்—பழிவாங்குதலோடு வந்திருக்கிறது என்பதைக் குறித்து எந்தக் கேள்வியும் இருக்காது!

‘எங்கள் மேல் விழுந்து எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்’

26. கடவுளுடைய அரசாட்சியை எதிர்க்கும் மனிதர்கள் அவர்களுடைய திகிலில் எவ்வாறு செயல்படுவார்கள், மேலும் திகிலை வெளிப்படுத்தும் என்ன வார்த்தைகளை உரைப்பார்கள்?

26 யோவானின் வார்த்தைகள் தொடருகின்றன: “பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக் கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தில் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 6:15-17.

27. சமாரியாவின் உண்மையற்ற இஸ்ரவேலர்கள் என்ன கூக்குரலிட்டார்கள், அந்த வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின?

27 இஸ்ரவேலின் வடதிசை ராஜ்யத்தின் தலைநகரமாகிய சமாரியாவின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை ஓசியா அறிவிக்கையில் அவர் சொன்னார்: “இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின் மேல் முளைக்கும்; பர்வதங்களைப் பார்த்து, எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப் பார்த்து எங்கள் மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.” (ஓசியா 10:8) இந்த வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின? கொடிய அசீரியர்களுக்கு பொ.ச.மு. 740-ல் சமாரியா விழுந்தபோது இஸ்ரவேலர் தப்பியோடுவதற்கு எந்த இடமுமில்லை. ஓசியாவின் வார்த்தைகள் தோற்கடிக்கப்பட்ட ஜனங்கள் உணர்ந்த உதவியற்ற நிலைமை, இழிவான திகில், மற்றும் கைவிடப்பட்ட நிலையை வெளிப்படுத்துகின்றன. கடந்த காலத்தில் அவ்வளவு நிரந்தரமானதாக அவர்களுக்கு தோன்றினபோதிலும், சொல்லர்த்தமான மலைகளோ மலைகளைப் போன்ற சமாரியாவின் நிறுவனங்களோ அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை.

28. (அ) எருசலேமின் ஸ்திரீகளுக்கு இயேசு என்ன எச்சரிக்கை கொடுத்தார்? (ஆ) இயேசுவின் எச்சரிக்கை எவ்வாறு நிறைவேறினது?

28 இதே விதமாக, ரோமப் போர் சேவகர்கள் இயேசுவை அவருடைய மரணத்துக்கு வழிநடத்திக் கொண்டு போகையில், எருசலேமின் ஸ்திரீகளை நோக்கி இயேசு இவ்வாறு சொன்னார்: “இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைப்பெறாத கர்ப்பங்களும் பால் கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். அப்பொழுது மலைகளை நோக்கி, எங்கள் மேல் விழுங்கள் என்றும் குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக் கொள்ளுங்களென்றும் சொல்லத் தொடங்குவார்கள்.” (லூக்கா 23:29, 30) பொ.ச. 70-ல் ரோமர்களால் எருசலேம் அழிக்கப்பட்டது, பதிவுகளால் தெளிவாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது, மேலும் இயேசுவின் வார்த்தைகள் ஓசியாவின் வார்த்தைகளைப் போன்ற அதே பொருளைக் கொண்டிருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. யூதேயாவில் பின் தங்கியிருந்து யூதர்களுக்கு அப்போது மறைவான இடம் எதுவும் இருக்கவில்லை, எருசலேமில் எங்கேயாவது மறைந்து கொள்ள அவர்கள் முயற்சிசெய்தபோது, அல்லது மலை உச்சியில் உள்ள மசாடா கோட்டைக்கு ஓடினபோதிலும் கூட, யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் கொடுமையான வெளிக்காட்டுதலிலிருந்து தப்பமுடியவில்லை.

29. (அ) யெகோவாவின் கோபாக்கினையின் நாள் வருகையில், இந்தக் காரிய ஒழுங்குமுறையை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும்? (ஆ) யெகோவா அவருடைய கோபத்தை வெளிப்படுத்துகையில் இயேசுவின் என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறும்?

29 இப்பொழுது, ஆறாவது முத்திரையை உடைப்பதானது வரவிருக்கும் யெகோவாவின் கோபாக்கினையின் நாளிலே அதே மாதிரியான ஒன்று நேரிடும் என்பதாக காண்பித்திருக்கிறது. பூமிக்குரிய ஒழுங்குமுறை முடிவாக அசைக்கப்படுகையில், அதை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு மறைவிடத்தை தேடுவார்கள், ஆனால் அவர்கள் ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க மாட்டார்கள். மகா பாபிலோனாகிய பொய் மதம் ஏற்கெனவே அவர்களை பரிதாபகரமாக கைவிட்டுவிட்டது. சொல்லர்த்தமான மலைகளில் உள்ள குகைகளோ அடையாள அர்த்தமுள்ள அரசியல் மற்றும் வர்த்தக அமைப்புகளோ பொருளாதார பாதுகாப்பு அல்லது வேறு எந்தவிதமான உதவியையும் அளிக்காது. யெகோவாவின் கோபாக்கினையிலிருந்து ஒன்றும் பாதுகாப்பு அளிக்காது. அவர்களுடைய திகிலை நன்றாக இயேசு விவரித்திருக்கிறார்: “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.”—மத்தேயு 24:30.

30. (அ) “யார் நிலைநிற்கக்கூடும்” என்ற கேள்வியின் கருத்து என்ன? (ஆ) யெகோவாவின் நியாயத்தீர்ப்பு காலத்தில் எவராவது நிலைநிற்க முடியுமா?

30 ஆம், வெற்றி பெற்ற வெள்ளைக் குதிரையின் சவாரியாளரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அவர்களுடைய தவறை ஒப்புக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவார்கள். சாத்தானின் உலகம் ஒழிந்து போகையில் சர்ப்பத்தினுடைய வித்தின் பாகமாக இருக்க விரும்பினவர்கள் அழிவை எதிர்ப்படுவார்கள். (ஆதியாகமம் 3:15: 1 யோவான் 2:17) அந்தச் சமயத்தில் உலகத்தின் நிலைமை, அநேகர், உண்மையிலேயே, “யார் நிலைநிற்கக்கூடும்” என்று கேட்கக்கூடியதாக இருக்கும். அவருடைய அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே எவருமே யெகோவாவுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நிற்க முடியாது என்பதாக அவர்கள் ஒருவேளை நினைப்பார்கள். ஆனால், வெளிப்படுத்துதல் புத்தகம் காண்பிக்கப்போகிற விதமாக, அவர்கள் தவறாக இருப்பார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a மனிதர்கள் பூமியதிர்ச்சி தாக்கும் வரை அறியாமலிருந்தபோதிலும், சொல்லர்த்தமான பூமியதிர்ச்சிகள் வருமுன் நில நடுக்கம் சார்ந்த குழப்பங்கள் நிகழ்கின்றன. இவை நாய்கள் குரைக்க அல்லது மிரளும்படி செய்கின்றன, மேலும் மற்ற மிருகங்கள், மீன் போன்றவற்றைக் கிளர்ச்சியடையச் செய்கின்றன.—விழித்தெழு! (ஆங்கிலம்), ஜுலை 8, 1982, பக்கம் 14-ஐ பார்க்கவும்.

b விவரமான விளக்கத்திற்கு பக்கங்கள் 22, 24 பார்க்கவும்.

c 35 வருடங்களுக்கும் அதிகமாக, 1895 முதல் 1931 வரை, சீற்றமான கடலின் மேலே கொந்தளிப்பான வானங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு கலங்கரை விளக்கின் பின்னணியில், லூக்கா 21:25, 28, 31-ன் வார்த்தைகள், காவற்கோபுர பத்திரிகையின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

d உதாரணமாக, 1931-ல் ஒரு விசேஷ அளிப்பு ஏற்பாட்டில் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யம், உலகத்தின் நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற தலைப்புள்ள சிறு புத்தகத்தின் அநேக ஆயிரக்கணக்கான பிரதிகளைப் பூமி முழுவதும் குருமார்கள், அரசியல்வாதிகள் மேலும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட வகையில் அளித்தார்கள்.

e ‘வானங்கள்’ என்ற வார்த்தையை இதே விதமாக பயன்படுத்துகையில், ஏசாயா 65:17, 18-ன் ‘புதிய வானங்களைப்’ பற்றிய தீர்க்கதரிசனம் புதிய அரசாங்க ஒழுங்குமுறையில் முதல் நிறைவேற்றத்தை உடையதாயிருந்தது. அந்த அரசாங்கம், அதிபதி செருபாபேல் பிரதான ஆசாரியன் யோசுவாவையும் உட்படுத்தியது, பாபிலோனிய நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து யூதர்கள் திரும்பிய பின் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தில் இது ஸ்தாபிக்கப்பட்டது.—2 நாளாகமம் 36:23; எஸ்றா 5:1, 2; ஏசாயா 44:28.

[கேள்விகள்]

[பக்கம் 105-ன் படம்/பெட்டி]

1914 முன்னறியப்பட்டிருந்தது

“கி.மு. 606-ல் தேவனுடைய ராஜ்யம் முடிவுக்கு வந்தது, கிரீடம் நீக்கப்பட்டது, மேலும் எல்லா பூமியும் புறஜாதிகளுக்கு கொடுக்கப்பட்டது. 2,520 ஆண்டுகள் கி.மு. 606-லிருந்து, கி.பி. 1914-ல் முடிவுபெறும்.” fமூன்று உலகங்கள், (ஆங்கிலம்) 1877-ல் பிரசுரிக்கப்பட்டது, பக்கம் 83.

“‘புறஜாதியாரின் காலங்கள்’ 2,520 ஆண்டுகள், கி.மு. 606-லிருந்து கி.பி. 1914-ம் உள்ளடங்கி அதுவரையாக என்பதற்கு பைபிள் அத்தாட்சி, தெளிவாகவும் பலமாகவும் உள்ளது.”—வேதவாக்கியங்களில் படிப்புகள், (ஆங்கிலம்) புத்தகம் 2, C.T. ரஸல் எழுதி 1889-ல் பிரசுரிக்கப்பட்டது, பக்கம் 79.

சார்லஸ் டேஸ் ரஸலும் அவருடைய உடன் பைபிள் மாணாக்கர்களும் 1914 புறஜாதியாரின் காலங்கள் அல்லது தேசங்களுக்கு குறிக்கப்பட்ட காலங்கள் முடிவுக்கு வரும் என்பதை பல பத்தாண்டுகளுக்கு முன்னமே உணர்ந்திருந்தனர். (லூக்கா 21:24) இது எதை அர்த்தப்படுத்தும் என்பது அந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் முழுமையாக புரியாதிருந்தபோதிலும் 1914 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று முழுமையாக நம்பினார்கள், மேலும் அது சரியாகவும் இருந்தது. செய்தித்தாளின் பின்வரும் மேற்கோளைக் கவனிக்கவும்:

“ஐரோப்பாவில் பயங்கரமான யுத்த திடீர் எழுச்சி அசாதாரணமான தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, பிரசங்கிப்பாளர்கள் மூலமும் செய்தித்தாள்கள் மூலமும், ‘சர்வதேச பைபிள் மாணாக்கர்கள்’, ‘மில்லெனியல் டானர்ஸ்’ என்று நன்றாக அறியப்பட்டவர்கள், பைபிளில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட கோபாக்கினையின் நாள் 1914-ல் விடியும் என்று உலகிற்கு அறிவித்துக்கொண்டிருந்திருக்கின்றனர். ‘1914-க்காக பார்த்துக் கொண்டிருங்கள்’ என்பது நூற்றுக்கணக்கான பயண சுவிசேஷகர்களின் குரலாக இருந்திருக்கிறது.”—உலகம், (ஆங்கிலம்) ஒரு நியூ யார்க் செய்தித்தாள், ஆகஸ்ட் 30, 1914.

[அடிக்குறிப்பு]

f தெய்வாதீனமாக, அந்தப் பைபிள் மாணாக்கர்கள், “கி.மு.”-க்கும் “கி.பி”-க்கும் இடையில் ஒரு பூஜ்ய ஆண்டு இல்லை என்பதை உணராதிருந்தனர். பிறகு, கி.மு. 606-லிருந்து பொ.ச.மு. 607-க்கு சரிசெய்வது அவசியம் என்பதை ஆராய்ச்சி காண்பித்தபோது, பூஜ்ய ஆண்டும்கூட நீக்கப்பட்டது, அதனால் “கி.பி. 1914” என்று முன் அறிவித்தது சரியாகவே இருந்தது.—“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (ஆங்கிலம்) 1943-ல் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, பக்கம் 239-ஐ பார்க்கவும்.

[பக்கம் 106-ன் பெட்டி]

1914—ஒரு திரும்புகட்டம்

1987-ல் பொலிட்டிக்கனின் உலக சரித்திரம்—சரித்திரத்தின் வல்லமையும் அர்த்தமும், கோப்பன்ஹேகனில் பிரசுரிக்கப்பட்டது, பக்கம் 40-ல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“முன்னேற்றத்தில் 19-ம் நூற்றாண்டின் விசுவாசம் 1914-ல் அதனுடைய மரண அடியை பெற்றது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முந்தின ஆண்டில், டேனிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி பீட்டர் மஞ்ச் நன்னம்பிக்கையுடன் எழுதினார்கள்: ‘பெரிய ஐரோப்பிய வல்லரசு நாடுகளுக்கு இடையே நிகழக்கூடிய யுத்தத்திற்கு எதிராக எல்லா அத்தாட்சிகளும் உள்ளது. 1871-லிருந்து மறுபடியும் மறுபடியும் செய்திருப்பதைப் போன்று, “யுத்தத்தின் அபாயம்” எதிர்காலத்தில் மறைந்துபோம்.’

“இதற்கு மாறாக, அவருடைய பிற்காலத்தின் வாழ்க்கைக் குறிப்புகளில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘1914-ல் யுத்தம் ஆரம்பித்ததானது மனிதவர்க்கத்தின் சரித்திரத்தின் பெரிய திரும்புகட்டமாக இருக்கிறது. தொழில்களை நியாயமான பாதுகாப்புடன் தொடரக்கூடிய முன்னேற்றத்திற்குரிய ஒரு பிரகாசமான சகாப்தத்திலிருந்து, எங்கும் பாதுகாப்பின்மையுள்ள பெரும் கேடு, திகில், பகைமை நிறைந்த ஒரு காலத்திற்குள் பிரவேசித்தோம். அந்தச் சமயத்தில் நம்மீது விழுந்த இருள், அநேக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தனக்காக மனிதன் உண்டாக்கிய முழு பண்பாட்டின் அமைப்பின் நிரந்தர அழிவை அர்த்தப்படுத்துமா என்று ஒருவரும் சொல்ல முடியவில்லை, மேலும் இன்றும்கூட ஒருவரும் சொல்ல முடியாது.’”

[பக்கம் 110-ன் படம்]

‘ஒவ்வொரு மலையும் அதனுடைய இடத்தைவிட்டு அகன்றுபோனது’

[பக்கம் 111-ன் படம்]

அவர்கள் தங்களை மலைகளில் ஒளித்துக்கொண்டார்கள்