எரேமியா 4:1-31

4  யெகோவா சொல்வது இதுதான்:“இஸ்ரவேலே, நீ அருவருப்பான சிலைகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு,மனம் திருந்தி என்னிடம் வந்தால்,வேறொரு தேசத்தில் அலைந்து திரிய வேண்டியிருக்காது.+   ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லி,உண்மையோடும் நியாயத்தோடும் நீதியோடும் நீ ஆணையிட்டுக் கொடுத்தால்,தேசங்களில் உள்ள ஜனங்களுக்கு அவர்* மூலமாக ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்கள் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள்.”+  யூதா ஜனங்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் யெகோவா சொல்வது இதுதான்: “பண்படுத்தப்படாத நிலத்தைப் பண்படுத்துங்கள்.முட்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு விதை விதையுங்கள்.+   யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஜனங்களே,யெகோவாவுக்கு முன்னால் உங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.*கெட்ட எண்ணங்களை உள்ளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள்.+அக்கிரமம் செய்வதை நீங்கள் நிறுத்தாவிட்டால்என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+அதை யாராலும் அணைக்க முடியாது.”   யூதாவிலும் எருசலேமிலும் இதை அறிவியுங்கள். தேசமெங்கும் முழக்கம் செய்து ஊதுகொம்பை ஊதுங்கள்.+ எல்லாரிடமும், “மதில் சூழ்ந்த நகரங்களுக்குத் தப்பியோடலாம்,+எல்லாரும் வாருங்கள்.   சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள். பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+   புதருக்குள்ளிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல எதிரி பாய்ந்து வருவான்.+தேசங்களை அழிக்கிறவன் புறப்பட்டுவிட்டான்.+ உங்கள் தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவர அவன் கிளம்பிவிட்டான். உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்; ஒருவன்கூட தப்பிக்க முடியாது.+   அதனால், துக்கத் துணி* போட்டுக்கொள்ளுங்கள்.+அழுது* புலம்புங்கள்.யெகோவாவுக்கு நம்மேல் இருக்கிற கோபம் இன்னும் தணியவில்லை.   “அந்த நாளில், ராஜா பீதியடைவான்.+இளவரசர்கள் குலைநடுங்குவார்கள்.குருமார்கள் அரண்டுபோவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்”+ என்று யெகோவா சொன்னார். 10  ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!+ நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று சொன்னீர்களே,+ ஆனால் நாங்கள் வாளுக்குப் பலியாகப்போகிறோமே” என்றேன். 11  யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் அப்போது இப்படிச் சொல்லப்படும்: “பாலைவனத்திலுள்ள குன்றுகளிலிருந்து காற்று வீசும்.அது தானியங்களைப் புடைப்பதற்கோ சுத்தப்படுத்துவதற்கோ உதவுகிற காற்று அல்ல.என் ஜனங்களைச் சுட்டெரிக்கப்போகிற அனல்காற்று. 12  என்னுடைய ஆணைப்படியே அது அங்கிருந்து பலமாக வீசும். இப்போது நான் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்லப்போகிறேன். 13  எதிரி மழைமேகங்களைப் போல வருவான்.அவனுடைய ரதங்கள் புயல்காற்றைப் போல வரும்.+ அவனுடைய குதிரைகள் கழுகுகளைவிட வேகமாகப் பாய்ந்து வரும்.+ ஐயோ! நம் கதி அவ்வளவுதான்! 14  எருசலேமே, நீ தப்பிக்க வேண்டுமென்றால் உன் உள்ளத்திலுள்ள அழுக்கைக் கழுவு.+ எவ்வளவு காலத்துக்குத்தான் கெட்டதையே யோசித்துக்கொண்டிருப்பாய்? 15  தாண் நகரத்திலிருந்து ஒரு குரல் செய்தியைச் சொல்கிறது.+எப்பிராயீம் மலைகளிலிருந்து அது அழிவை அறிவிக்கிறது. 16  இதை எல்லா தேசங்களுக்கும் சொல்லுங்கள்.எருசலேமுக்கு எதிராக அறிவிப்பு செய்யுங்கள்.” “தொலைதூரத்திலிருந்து வீரர்கள்* வருகிறார்கள். அவர்கள் யூதா நகரங்களுக்கு எதிராகப் போர் முழக்கம் செய்வார்கள். 17  அவர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வந்து, வயல்வெளியைக் காவல்காக்கிறவர்கள் போல எருசலேமைச் சூழ்ந்துகொள்வார்கள்.+ஏனென்றால், அங்கிருக்கிறவர்கள் எனக்கு அடங்கி நடப்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார். 18  “உன்னுடைய கெட்ட வழிகளுக்கும் செயல்களுக்கும் சரியான கூலி கிடைக்கும்.+உனக்குப் பயங்கரமான தண்டனை கொடுப்பேன். ஏனென்றால், எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணமே உன் உள்ளத்தில் இல்லை!” என்று அவர் சொல்கிறார். 19  ஐயோ, வேதனை தாங்க முடியவில்லையே, வேதனை தாங்க முடியவில்லையே! என் உள்ளம் வலியில் துடிதுடிக்கிறதே! என் இதயம் படபடக்கிறதே.என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கிறதே.+ 20  அழிவுக்குமேல் அழிவு என்ற செய்திதான் வருகிறது.தேசம் முழுவதும் நாசமாகிவிட்டது. திடீரென்று என்னுடைய கூடாரங்கள் பாழாக்கப்படுகின்றன.ஒரு நொடியில் என் கூடாரத் துணிகள் கிழிக்கப்படுகின்றன.+ 21  எவ்வளவு காலத்துக்குத்தான் நான் கம்பத்தை* பார்த்துக்கொண்டே இருப்பேன்?எவ்வளவு நேரம்தான் ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன்?+ 22  “என் ஜனங்கள் சரியான முட்டாள்கள்!+அவர்கள் என்னை மதிப்பதே இல்லை. அவர்கள் அறிவு இல்லாத பிள்ளைகள், புத்தி* இல்லாதவர்கள். கெட்டது செய்வதில் கெட்டிக்காரர்கள்.ஆனால், நல்லது செய்யத் தெரியாதவர்கள்.” 23  தேசத்தைப் பார்த்தேன்; அது வெறுமையாகவும் பாழாகவும் கிடந்தது.+ வானத்தைப் பார்த்தேன்; அது இருண்டு கிடந்தது.+ 24  மலைகளையும் குன்றுகளையும் பார்த்தேன்.அவை அதிர்ந்துகொண்டிருந்தன.+ 25  மனுஷர்கள் யாருமே கண்ணில் படவில்லை.பறவைகளெல்லாம் பறந்து போய்விட்டன.+ 26  செழிப்பான தேசம் வனாந்தரமாகிவிட்டது.அதன் நகரங்கள் இடிந்து கிடக்கின்றன.+ இது யெகோவா கொடுத்த தண்டனை.அவருடைய பயங்கரமான கோபத்தின் விளைவு. 27  யெகோவா சொல்வது இதுதான்: “தேசம் முழுவதும் பாழாக்கப்பட்டாலும்,+நான் அதை அடியோடு அழிக்க மாட்டேன். 28  தேசம் சோகத்தில் வாடும்.+வானம் இருண்டுவிடும்.+ நானே இதைச் சொன்னேன், சொன்னதைச் செய்யாமல் இருக்க மாட்டேன்.நானே இதை முடிவுசெய்தேன், என் முடிவை மாற்றிக்கொள்ள* மாட்டேன்.+ 29  குதிரைவீரர்களும் வில்வீரர்களும் வருகிற சத்தம் கேட்கிறது.நகரத்திலுள்ள எல்லாருமே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.+ புதர்க் காடுகளுக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள்.பாறை இடுக்குகளில் ஒளிந்துகொள்கிறார்கள்.+ நகரங்கள் எல்லாமே வெறிச்சோடிப் போய்விட்டது.யாருமே அங்கு குடியிருப்பது இல்லை.” 30  நீ அழிந்துவிட்டாயே; இப்போது என்ன செய்வாய்? ஆடம்பரமான உடைகளை உடுத்திக்கொண்டும்,தங்க நகைகளைப் போட்டுக்கொண்டும்,கண்களுக்கு மை தீட்டிக்கொண்டும் இருந்தாயே! நீ அலங்காரம் செய்ததெல்லாம் வீணாகிப்போனதே!+உன்மேல் மோகம் கொண்டவர்கள் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்களே!இப்போது உன் உயிரையே எடுக்கத் துடிக்கிறார்களே!+ 31  ஒரு பெண் வலியில் கதறுகிற சத்தம் கேட்கிறது.முதல் குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண் அலறுவதுபோல் சத்தம் கேட்கிறது.சீயோன் மகள் மூச்சுத் திணறுகிறாள். தன் கைகளை விரித்துக்கொண்டு,+ “ஐயோ, நான் தீர்ந்தேன்! கொலைவெறியர்களோடு போராடிப் போராடி ஓய்ந்துபோய்விட்டேன்” என்று சொல்கிறாள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயம்.”
அதாவது, “யெகோவா.”
நே.மொ., “யெகோவாவுக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்.”
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
வே.வா., “நெஞ்சில் அடித்துக்கொண்டு.”
நே.மொ., “கண்காணிப்பவர்கள்.” இவர்கள் நகரத்தை எப்போது தாக்கலாம் என்று கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
வே.வா., “கொடிக் கம்பத்தை.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “நான் மனம் வருந்த.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா