Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | கவலைகளை சமாளிக்க...

பணம் இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

பணம் இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பால் சொல்கிறார்: “எங்க நாட்டு பணத்துக்கு மதிப்பு குறைஞ்சதுனால, சாப்பாட்டுக்கே திண்டாட்டமா இருந்துச்சு. கிடைக்கிற கொஞ்சநஞ்ச சாப்பாட்டுக்கும் பணத்தை வாரியிறைக்க வேண்டியிருந்தது. சாப்பாடு வாங்க மணிக்கணக்கா வரிசையில நிற்போம். கடைசில நாங்க வாங்க வரும்போது சாப்பாடு தீர்ந்திடும். நிறையப் பேர் எலும்பும் தோலுமா ஆயிட்டாங்க. பசியில அங்கங்க சுருண்டு விழுந்தாங்க. அத்தியாவசிய பொருள்கள வாங்குறதுக்குக்கூட சில சமயம் கோடிக்கணக்குல செலவு செய்ய வேண்டியிருந்தது. கடைசியா எங்க ஊர் பணத்துக்கு சுத்தமா மதிப்பே இல்லாம போயிடுச்சு. நான் ‘பேங்க்’ல, ‘இன்ஷூரன்ஸ்’ல, ‘பென்ஷன்’ திட்டத்துல போட்ட பணம் எதுக்குமே மதிப்பு இல்லாம போயிடுச்சு.”

பால்

குடும்பத்தை காப்பாற்ற பால் எப்படி ‘ஞானமாக’ நடந்துகொண்டார். (நீதிமொழிகள் 3:21) அதைப் பற்றி பால் சொல்கிறார்: “முன்னாடி நான் எலக்ட்ரிக்கல் வேலையை கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சிட்டு இருந்தேன். ஆனா பணக் கஷ்டம் வந்தப்போ, கிடைச்ச எல்லா வேலையையும் செஞ்சேன், குறைஞ்ச சம்பளத்துக்குக்கூட செஞ்சேன். சிலர் சம்பளத்தை பணமா கொடுக்காம சாப்பாடாவோ பொருளாவோ கொடுத்தாங்க. எனக்கு 4 சோப்பு கொடுத்தாங்கன்னா, அதுல 2 வைச்சுக்கிட்டு 2 வித்துடுவேன். இந்த மாதிரி, 40 கோழிக் குஞ்சுகளை வாங்குனேன். அது வளர்ந்த பிறகு அதை வித்து 300 கோழிக் குஞ்சுகளை வாங்கினேன். அதுக்கு அப்புறம் 50 கோழிகளை கொடுத்து 100 கிலோ உடைத்த மக்காச்சோள மாவை வாங்கினேன். அதை வைச்சு, நாங்களும் இன்னும் சில குடும்பங்களும் ரொம்ப நாளுக்கு வாழ்க்கையை ஓட்டுனோம்.”

இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதுதான் ஞானமானது என்று பால் உணர்ந்திருந்தார். கடவுளுக்கு கீழ்ப்படியும்போது நிச்சயம் அவர் நமக்கு உதவி செய்வார். அதனால்தான் அன்றாடத் தேவைகளை நினைத்து ‘அநாவசியமாகக் கவலைப்படுவதை விட்டுவிடுங்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்’ என்று இயேசு சொன்னார்.—லூக்கா 12:29-31.

ஆனால் கடவுளுடைய முக்கிய எதிரியான சாத்தான் இந்த உலகத்தை ஏமாற்றுகிறான். தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓடி ஓடி உழைப்பதே முக்கியம் என்று மக்களை நினைக்க வைக்கிறான். அதனால் மக்கள் தங்களுடைய தினசரி தேவைகளுக்காக அதிக கவலைப்படுகிறார்கள், தேவைக்கும் அதிகமாக ஆசைப்படுகிறார்கள், அதற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள். சிலர் கடனும் வாங்குகிறார்கள். கடைசியில், “கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை” என்ற கசப்பான உண்மையை உணர்கிறார்கள்.—நீதிமொழிகள் 22:7.

இது போன்ற சூழ்நிலைமையில் சிலர் தவறான தீர்மானத்தை எடுத்துவிடுகிறார்கள். அதைப் பற்றி பால் சொல்கிறார்: “கடவுளை நம்புனா நிச்சயம் அவர் காப்பாத்துவார்னு எங்க ஊர்ல இருந்த நிறையப் பேர் நம்பல. ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’னு நினைச்சு அவங்களோட குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு போனாங்க. அவங்கள்ல சிலர், சட்டப்படி போகாததுனால அவங்களுக்கு வேலை கிடைக்கல, போலீஸ்-க்கு பயந்து வாழ்ந்தாங்க, தெருவுல தூங்குனாங்க. ஆனா நானும் என் குடும்பமும் கடவுள்மேல நம்பிக்கை வைக்கவும், ஒன்னா சேர்ந்து இந்த பிரச்சினைய சமாளிக்கவும் முடிவு செஞ்சோம்.”

இயேசுவின் அறிவுரை கைகொடுக்கும்

பால் தொடர்ந்து சொல்கிறார்: “‘நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’னு இயேசு சொன்னார். அதனாலதான் நான் தினமும் ‘இன்னைக்கு தேவையான ஆகாரத்தை எங்களுக்குக் கொடுங்கள்’னு மட்டும் கடவுள்கிட்ட கேட்பேன். கேட்ட மாதிரியே கடவுள் கொடுத்தார். இயேசு சொன்னது எவ்வளவு உண்மை! சிலசமயம் நாங்க ஆசைப்பட்டது எங்களுக்கு கிடைக்கல. ஒருநாள் என்ன விக்கிறாங்கனு தெரியாமலேயே போய் வரிசையில நின்னேன். தயிறு விக்கிறாங்கனு அப்புறம்தான் தெரிஞ்சது. எனக்கு தயிறுனா சுத்தமா பிடிக்காது. ஆனா அதுதான் அன்னைக்கு எங்களுக்கு சாப்பாடு. இந்த கஷ்டமான சமயத்துலகூட, ஒருநாளும் நாங்க பசியோட படுத்ததில்லை. அதுக்காக நான் கடவுளுக்கு காலமெல்லாம் நன்றி சொல்லுவேன்.” *

“நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்—எபிரெயர் 13:5

“இப்போ எங்களுக்கு அந்தளவு பணக் கஷ்டம் இல்ல. ஆனா நம்மளோட கவலைகளை எல்லாம் சமாளிக்கிறதுக்கு ஒரே வழி, கடவுள்மேல உறுதியான நம்பிக்கை வைக்கிறதுதான் என்பதை அந்த கஷ்டமான சூழ்நிலையில நாங்க புரிஞ்சிக்கிட்டோம். எப்பவுமே யெகோவாவுக்கு * பிடிச்ச மாதிரி வாழும்போது அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார். ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ என்ற வார்த்தைகளை எங்க வாழ்க்கையில ருசிச்சு பார்த்தோம். (சங்கீதம் 34:8) அதனால, இந்த மாதிரி ஒரு பண நெருக்கடி திரும்பவும் வந்தா, அதை நிச்சயம் எங்களால சமாளிக்க முடியும்.

“இன்றைக்குத் தேவையான ஆகாரத்தை” பெற கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு உதவி செய்கிறார்

“உயிரோடு இருக்க வேலையோ பணமோ முக்கியமில்ல, சாப்பாடுதான் முக்கியம். எதிர்காலத்தில் ‘வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கும்’னு யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த நாளுக்காக நாங்க ஆசையாசையா காத்திட்டு இருக்கோம். அதுவரைக்கும் ‘உண்ண உணவும் உடுத்த உடையும் இருந்தா, அதுவே போதும் என்ற திருப்தியோட வாழ’ தீர்மானமா இருக்கோம். எங்களுக்கு தைரியத்தையும் தெம்பையும் கொடுத்த பைபிள் வசனம் இதுதான்: ‘பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்; ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார். அதனால், “யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?” என்று நாம் மிகுந்த தைரியத்துடன் சொல்லலாம்.’” *

பாலுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் கடவுள்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதேபோன்ற நம்பிக்கை நமக்கும் இருந்தால் நாமும் கடவுளுக்கு பிரியமாக வாழ்வோம். (ஆதியாகமம் 6:9) இன்று நாம் பண நெருக்கடியில் கஷ்டப்பட்டாலும் சரி எதிர்காலத்தில் அப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, நாமும் பாலைப் போலவே கடவுள் மேல் நம்பிக்கையாக இருக்கலாம், ஞானமாக நடந்துகொள்ளலாம்!

சரி, குடும்ப பிரச்சினைகளால் வரும் கவலைகளை எப்படி சமாளிப்பது? (w15-E 07/01)

^ பாரா. 10 பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா.

^ பாரா. 11 சங்கீதம் 72:16, ஈஸி டு ரீட் வர்ஷன்; 1 தீமோத்தேயு 6:8; எபிரெயர் 13:5, 6-ஐ பைபிளில் பாருங்கள்.