Skip to content

பணப் பிரச்சினை, கடன் தொல்லை—சமாளிக்க பைபிள் உதவுமா?

பணப் பிரச்சினை, கடன் தொல்லை—சமாளிக்க பைபிள் உதவுமா?

பைபிள் தரும் பதில்

 ஆம், உதவும். பணப் பிரச்சினையையும் கடன் தொல்லையையும் சமாளிக்க உதவுகிற நான்கு பைபிள் நியமங்களைக் கீழே கவனியுங்கள்:

  1.   செலவுகளைத் திட்டமிடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.” (நீதிமொழிகள் 21:5) தள்ளுபடி விற்பனை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக எதையுமே அவசரப்பட்டு வாங்காதீர்கள். ஒரு பட்ஜெட் போட்டு, அதற்கேற்ப செலவு செய்யுங்கள்.

  2.   அநாவசியமாகக் கடன் வாங்காதீர்கள்.

    “கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.” (நீதிமொழிகள் 22:7) உங்களுக்கு ஏற்கெனவே கடன் இருந்தால்... அதோடு செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தால்... கடன் கொடுத்தவர்களிடம் கடனைத் திருப்பித் தருவது பற்றிப் பேரம் பேசிப் பாருங்கள். விடாப்பிடியாகக் கேட்டுப் பாருங்கள். புத்தியில்லாமல் ஒருவருடைய கடனுக்கு உத்தரவாதம் கொடுத்து பொறுப்பு ஏற்றுக்கொண்டவனுக்கு பைபிள் தருகிற இந்த அறிவுரையின்படி நடந்துகொள்ளுங்கள்: “அவசரமாகப் போய், உன்னையே தாழ்த்தி, அவனிடம் கெஞ்சு. அதுவரைக்கும் கண் அசந்துவிடாதே. உன் கண் இமைகளை மூடவிடாதே.” (நீதிமொழிகள் 6:1-5) முதல் தடவை அவர் ஒத்துக்கொள்ளாவிட்டால்கூட, ஏதாவது ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டே இருங்கள்.

  3.   பணத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தராதீர்கள். “சுயநலமாக நடந்துகொள்ளாதே, பணக்காரனாக வேண்டுமென்று துடிக்காதே—நீ நினைத்தே பார்க்காதளவு மோசமான நிலைக்கு வந்துவிடுவாய்.” (நீதிமொழிகள் 28:22, Contemporary English version) பொறாமையும் பேராசையும் பெரிய நஷ்டத்தைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், ஆன்மீகக் காரியங்களில் நீங்கள் ஈடுபட முடியாதபடி செய்துவிடலாம்.

  4.   மனத்திருப்தியுடன் இருங்கள். “நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.” (1 தீமோத்தேயு 6:8) பணத்தை வைத்து சந்தோஷத்தையோ மனத்திருப்தியையோ விலைக்கு வாங்க முடியாது. இந்த உலகத்தில் மிகமிக சந்தோஷமாக இருக்கிற சிலரிடம் அவ்வளவாகக் காசுபணம் இல்லை. ஆனால், அவர்களுக்கு இருப்பது பாசமான குடும்பமும், அன்பான நண்பர்களும், கடவுளோடுள்ள நட்பும்தான்.—நீதிமொழிகள் 15:17; 1 பேதுரு 5:6, 7.