Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு எங்கிருந்து வந்தார்?

இயேசு எங்கிருந்து வந்தார்?

“[பிலாத்து] மறுபடியும் மாளிகைக்குள் போய், ‘நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?’ என்று இயேசுவிடம் கேட்டார். இயேசுவோ எந்தப் பதிலும் சொல்லவில்லை.”—யோவான் 19:9.

ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து இந்தக் கேள்வியைக் கேட்டபோது இயேசு விசாரணைக் கைதியாக நின்றிருந்தார்; இந்த விசாரணைதான் அவருக்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கவிருந்தது. இயேசு இஸ்ரவேல் தேசத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது பிலாத்துவுக்குத் தெரியும். (லூக்கா 23:6, 7) அதுமட்டுமல்ல, அவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியென்றால், அவர் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்? இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று பிலாத்து ஒருவேளை யோசித்திருப்பாரா? பொய் மதத்தைச் சேர்ந்த இந்த ஆளுநர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு இசைவாக வாழ மனமுள்ளவராக இருந்திருப்பாரா? அவர் எப்படி யோசித்திருந்தாலும், இயேசு அவருக்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்; பிலாத்து சத்தியத்தையோ நீதியையோ நிலைநாட்டுவதைவிட, தன் பதவியைக் காத்துக்கொள்வதில்தான் குறியாய் இருந்தார் என்பது சீக்கிரத்தில் அம்பலமானது.—மத்தேயு 27:11-26.

இயேசு எங்கிருந்து வந்தார் என்பதை உண்மையிலேயே அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய ஆரம்பத்தைப் பற்றி பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. பின்வருபவற்றைக் கவனியுங்கள்:

அவர் எங்கே பிறந்தார்

இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டுமென ரோம அரசனாகிய அகஸ்து கட்டளையிட்டிருந்ததால், ‘நிறைமாதக் கர்ப்பிணியான’ மரியாள் தன் கணவர் யோசேப்போடுகூட பெத்லகேமுக்குப் பயணம் செய்தார்; பெத்லகேம் யோசேப்புடைய முன்னோர்கள் வாழ்ந்த இடமாக இருந்தது. அந்த ஊரில் நிறையப் பேர் வந்து குவிந்ததால் அவர்களுக்குத் தங்க இடம் கிடைக்கவில்லை; எனவே, இந்தத் தம்பதி ஒரு தொழுவத்தில் தங்க வேண்டியிருந்தது. அங்கேதான் இயேசு பிறந்தார், பின்பு ஒரு தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டார்.—லூக்கா 2:1-7.

இயேசு பிறக்கப்போகிற இடத்தை ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னுரைத்தது: “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஊர்களில் மிகவும் சிறியவள்; என்றாலும், என் சார்பாக இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து வருவார்; அவருடைய ஆரம்பம் பூர்வ காலங்களிலிருந்து, கணக்கிலடங்கா காலங்களிலிருந்து இருக்கிறது.” a (மீகா 5:2, NW) யூதா தேசத்து நகரங்களின் பட்டியலில் சேர்க்க முடியாதளவுக்கு பெத்லகேம் சிறியதாக இருந்திருக்க வேண்டும். என்றாலும், இந்தச் சிறிய கிராமத்திற்கு ஒரு தனி கௌரவம் கிடைக்கப்போகிறது. ஆம், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா (அதாவது கிறிஸ்து) பெத்லகேமில்தான் பிறக்கப்போகிறார்.—மத்தேயு 2:3-6; யோவான் 7:40-42.

அவர் எங்கே வளர்ந்தார்

எகிப்தில் சில வருடங்கள் தங்கிய பின்பு, இயேசுவின் குடும்பம் நாசரேத் நகரத்திற்கு குடிமாறியது. அந்த நகரம் எருசலேமுக்கு வடக்கே சுமார் 96 கி.மி. தூரத்தில் கலிலேயா மாகாணத்தில் இருந்தது. அப்போது, இயேசுவுக்கு மூன்று வயதுகூட ஆகியிருக்கவில்லை. அழகு கொழிக்கும் இந்தப் பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளும் மேய்ப்பர்களும் மீனவர்களுமே இருந்தார்கள். அங்கே, ஒரு பெரிய குடும்பத்தில் இயேசு வளர்ந்தார்; என்றாலும் அந்தக் குடும்பம் ஒரு ஏழைக் குடும்பமாக இருந்திருக்கலாம்.—மத்தேயு 13:55, 56.

மேசியா, “நாசரேத்தூரார்” என அழைக்கப்படுவார் என்று பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னுரைத்தது. சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு இவ்வாறு எழுதினார்: [இயேசுவின் குடும்பத்தார்] “நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்கள். ‘அவர் நாசரேத்தூரார் என்று அழைக்கப்படுவார்’ எனத் தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.” (மத்தேயு 2:19-23) நாசேரத்தூரார் என்ற பெயர் “கிளை” என்ற எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேசியாவை ஈசாயின் “கிளை” என்று ஏசாயா தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது; அதன் அர்த்தம், தாவீது ராஜாவின் அப்பாவான ஈசாயின் வம்சத்தில் மேசியா வருவார் என்பதாகும். இந்தத் தீர்க்கதரிசனத்தை மனதில் வைத்துத்தான் மத்தேயுவும் அப்படி எழுதியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. (ஏசாயா 11:1) ஆம், ஈசாயின் மகனான தாவீதின் வம்சத்தில்தான் இயேசு பிறந்தார்.—மத்தேயு 1:6, 16; லூக்கா 3:23, 31, 32.

அவர் உண்மையில் எங்கிருந்து வந்தார்

மனிதனாகப் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே இயேசு இருந்தார் என பைபிள் கற்பிக்கிறது. அவருடைய “ஆரம்பம் பூர்வ காலங்களிலிருந்து, கணக்கிலடங்கா காலங்களிலிருந்து இருக்கிறது” என்று மேலே குறிப்பிடப்பட்ட மீகாவின் தீர்க்கதரிசனம் சொல்கிறது. (மீகா 5:2, NW) கடவுளுடைய முதல் மகனான இயேசு பூமியில் பிறப்பதற்கு முன்பே பரலோகத்தில் இருந்தார். சொல்லப்போனால், “பரலோகத்திலிருந்து நான் இறங்கி வந்திருக்கிறேன்” என்று அவரே சொன்னார். (யோவான் 6:38; 8:23) ஆனால், இது எப்படிச் சாத்தியமானது?

யெகோவா தேவன், பரலோகத்தில் வாழ்ந்த தம்முடைய மகனின் உயிரை யூத குலத்தில் பிறந்த கன்னிப்பெண்ணான மரியாளின் வயிற்றில் அற்புதமாக வைத்தார்; இதனால், இயேசு ஒரு பரிபூரண மனிதனாகப் பிறந்தார். b இதை யெகோவா தம்முடைய சக்தியின் மூலமாகச் செய்தார். சர்வ சக்திபடைத்த கடவுளுக்கு இப்படிப்பட்ட அற்புதத்தைச் செய்வது பெரிய விஷயமே இல்லை. மரியாளிடம் கடவுளுடைய தூதர் சொன்னபடி, “கடவுளால் நிறைவேற்ற முடியாத வாக்கு எதுவுமே இல்லை.”—லூக்கா 1:30-35, 37.

இயேசு எங்கிருந்து வந்தார் என்று மட்டுமே பைபிள் சொல்வதில்லை. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பைபிள் புத்தகங்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றியும் நிறைய விஷயங்களைச் சொல்கின்றன. (w11-E 04/01)

a பெத்லகேம் முன்பு எப்பிராத்தா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.—ஆதியாகமம் 35:19.

b பைபிள் சொல்கிறபடி கடவுளுடைய பெயர் யெகோவா.