Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நூறு வருட ஆட்சி!

நூறு வருட ஆட்சி!

“சமாதானத்தின் கடவுள், தம்முடைய சித்தத்தை நீங்கள் செய்வதற்குத் தேவையான நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தருளுவாராக.”—எபி. 13:20, 21.

பாடல்கள்: 136, 14

1. பிரசங்க வேலை இயேசுவுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது? விளக்குங்கள்.

இயேசுவுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் ஊழியம் செய்த சமயத்தில், வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிதான் அதிகமாகப் பேசினார். சொல்லப்போனால், 100 தடவைக்கு மேல் அதைப் பற்றி பேசினார். கடவுளுடைய அரசாங்கம் இயேசுவுக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது.மத்தேயு 12:34-ஐ வாசியுங்கள்.

2. மத்தேயு 28:19, 20-லுள்ள கட்டளையை இயேசு கொடுத்தபோது எத்தனை பேர் இருந்திருக்கலாம், அதை எப்படிச் சொல்லலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

2 இயேசு உயிர்த்தெழுந்த சில நாட்களிலேயே 500-க்கும் அதிகமான ஆட்களைச் சந்தித்தார். அவர்கள் எல்லாரும் இயேசுவின் சீடர்களாக ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. (1 கொ. 15:6) ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ பிரசங்கிக்கும்படி இயேசு அந்தச் சமயத்தில்தான் கட்டளை கொடுத்திருக்க வேண்டும். அந்த வேலையைச் செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்த வேலை ரொம்ப நாட்களுக்கு நடக்கும், அதாவது, “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை” நடக்கும் என்று அவர்களிடம் சொன்னார். நீங்கள் இன்று ஊழியம் செய்யும்போது, இயேசு சொன்ன அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கு உதவி செய்கிறீர்கள்.—மத். 28:19, 20.

3. நற்செய்தியைப் பிரசங்கிக்க என்ன 3 “நல்ல காரியங்கள்” உதவியாக இருந்திருக்கின்றன?

3 இயேசு அவரைப் பின்பற்றியவர்களிடம் பிரசங்கியுங்கள் என்ற கட்டளையை கொடுத்த பிறகு, “நான் உங்களோடுகூட இருக்கிறேன்” என சொன்னார். (மத். 28:20) பிரசங்க வேலையை வழிநடத்துவதாக அவருடைய சீடர்களுக்கு வாக்குக் கொடுத்தார். அதோடு, உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்க உதவி செய்வதாகவும் வாக்குக் கொடுத்தார். பிரசங்கிப்பதற்கு உதவியாக இருக்கும் “நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்” யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். (எபி. 13:20, 21) அதில் 3 காரியங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்: (1) நாம் பயன்படுத்திய கருவிகள், (2) நாம் பயன்படுத்திய முறைகள், (3) நமக்குக் கிடைத்திருக்கும் பயிற்சிகள். முதலில், கடந்த 100 வருஷங்களில் நாம் பயன்படுத்திய கருவிகளைப் பற்றி பார்க்கலாம்.

கருவிகள்

4. நற்செய்தியைப் பிரசங்கிக்க வித்தியாசமான கருவிகள் எப்படி உதவியாக இருந்திருக்கின்றன?

4 நற்செய்தியை வித்தியாசமான நிலங்களில் விதைக்கப்படும் விதைக்கு இயேசு ஒப்பிட்டார். (மத். 13:18, 19) ஒரு தோட்டக்காரர் நிலத்தைத் தயார்படுத்த வித்தியாசமான கருவிகளைப் பயன்படுத்துவார். அதேபோல், மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நாம் திறமையாகப் பேச நம் ராஜா இயேசு நிறைய கருவிகளைக் கொடுத்திருக்கிறார். சில கருவிகளை நாம் கொஞ்சம் காலத்திற்கு மட்டும் பயன்படுத்தினோம்; சிலவற்றை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். நற்செய்தியை நல்ல விதத்தில் பிரசங்கிக்க இந்த எல்லா கருவிகளும் நமக்கு உதவி செய்திருக்கின்றன.

5. பிரசங்க அட்டை என்றால் என்ன, அதை எப்படிப் பயன்படுத்தினார்கள்?

5 சகோதர சகோதரிகள் 1933-லிருந்து பிரசங்க அட்டையை (Testimony Card) ஊழியத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்க நிறைய பேருக்கு இது உதவியாக இருந்திருக்கிறது. இந்த அட்டை சின்னதாக இருக்கும்; அதில் சுருக்கமான ஒரு பைபிள் செய்தி இருக்கும். அதை எல்லாராலும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். சில நேரங்களில், வேறொரு பைபிள் செய்தியோடு ஒரு புதிய பிரசங்க அட்டையை வெளியிடுவார்கள். எர்லன்மேயர் என்ற சகோதரருக்கு 10 வயது இருக்கும்போது முதல் முறையாக பிரசங்க அட்டையைப் பயன்படுத்தினார். அவர் சொன்னார், “‘இந்த அட்டையை வாசிச்சு பார்க்கிறீங்களா?’னு பொதுவா எல்லார்கிட்டயும் கேட்போம். அவங்க வாசிச்ச பிறகு நம்ம பிரசுரங்களை கொடுத்துட்டு வந்திடுவோம்.”

6. பிரசங்க அட்டை எப்படி உதவியாக இருந்தது?

6 பிரசங்க அட்டை பல விதங்களில் உதவியாக இருந்தது. உதாரணத்துக்கு, சில சகோதர சகோதரிகள் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தார்கள். சிலருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. இன்னும் சிலர் தைரியசாலிகளாக இருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களிடம் சில நிமிடங்களிலேயே சொல்லிவிடுவார்கள். அவர்கள் அப்படிப் பேசியது அவ்வளவு பிரயோஜனமாக இருக்கவில்லை. இருந்தாலும், எல்லாரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நற்செய்தியைச் சொல்ல பிரசங்க அட்டை உதவியாக இருந்தது.

7. பிரசங்க அட்டையைப் பயன்படுத்துவதில் என்ன பிரச்சினைகள் இருந்தன?

7 பிரசங்க அட்டையைப் பயன்படுத்துவதில் சில பிரச்சினைகளும் இருந்தன. கிரேஸ் எஸ்டெப் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “‘அந்த அட்டையில என்ன இருக்கு, அதை நீங்களே சொல்லுங்க’னு சிலர் சொல்வாங்க.” சிலரால் அந்த அட்டையில் இருந்ததை வாசிக்க முடியவில்லை. இன்னும் சிலர் அந்த அட்டையை வாங்கிக்கொண்டு கதவை மூடிவிடுவார்கள். சிலருக்கு நாம் சொல்லும் செய்தி பிடிக்காததால் அந்த அட்டையைக் கிழித்துவிடுவார்கள். இருந்தாலும், நற்செய்தியைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல பிரசங்க அட்டை ரொம்ப உதவியாக இருந்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் மட்டுமே சொல்கிறோம் என்பது எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

8. ஃபோனோகிராப் எப்படிப் பயன்படுத்தப்பட்டது? (ஆரம்பப் படம்)

8 நற்செய்தியைப் பிரசங்கிக்க 1930-க்குப் பிறகு ஃபோனோகிராப் (Phonograph) பயன்படுத்தப்பட்டது. இதைச் சுலபமாக எல்லா இடங்களுக்கும் கொண்டுபோக முடிந்தது. நம் சகோதரர்களுக்குப் பதிலாக அந்த ஃபோனோகிராப் பேசியதால் சில சகோதரர்கள் அதை ஆரோன் என்று சொன்னார்கள். (யாத்திராகமம் 4:14-16-ஐ வாசியுங்கள்.) ஊழியத்தில் யாராவது நற்செய்தியைக் கேட்க ஒத்துக்கொண்டால் நம் சகோதரர்கள் சுருக்கமான ஒரு பைபிள் பேச்சை ஃபோனோகிராப்பில் போட்டு காட்டுவார்கள். பிறகு, சில பிரசுரங்களைக் கொடுப்பார்கள். ஊழியத்தில் சிலர் குடும்பமாக அந்தச் பேச்சைக் கேட்பார்கள். 1934-ல் உவாட்ச் டவர் சொஸைட்டி நிறைய ஃபோனோகிராப்களை தயாரித்தது; அதை சுலபமாக ஊழியத்துக்குக் கொண்டுபோக முடிந்தது. ஊழியத்தில் போட்டு காட்டுவதற்காக நம் சகோதரர்கள் 92 பேச்சுகளைப் பதிவு செய்திருந்தார்கள்!

9. நற்செய்தியைப் பிரசங்கிக்க ஃபோனோகிராப் எப்படி உதவியாக இருந்தது?

9 ஹிலாரி காஸ்லின் என்பவர் ஃபோனோகிராப்பில் ஒரு பேச்சைக் கேட்டார். பிறகு, அவர் பைபிளில் இருக்கும் செய்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்வதற்காக ஃபோனோகிராப்பை ஒரு வாரத்துக்கு வாங்கிக்கொண்டு போனார். அதைக் கேட்ட நிறைய பேர் பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள், ஞானஸ்நானமும் எடுத்தார்கள். பிறகு, சகோதரர் காஸ்லினுடைய 2 மகள்கள் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு மிஷனரிகளாக ஆனார்கள். பிரசங்க அட்டையைப் போலவே ஃபோனோகிராப்பும் நற்செய்தியைப் பிரசங்கிக்க உதவியாக இருந்தது. அதற்குப் பிறகு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி மூலம் நன்றாகப் பிரசங்கிக்க நம் ராஜா சொல்லிக்கொடுத்தார்.

முறைகள்

10, 11. நற்செய்தியைப் பிரசங்கிக்க செய்தித்தாள்களும் ரேடியோவும் எப்படிப் பயன்படுத்தப்பட்டன, அவை பிரயோஜனமாக இருந்தன என்று எப்படிச் சொல்லலாம்?

10 கடவுளுடைய மக்கள் நற்செய்தியைச் சொல்ல வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்தினார்கள். இந்த வேலையை நம் ராஜா வழிநடத்தினார். நற்செய்தியைச் சொல்ல கொஞ்சம் பேர் மட்டுமே இருந்த சமயத்தில் இந்த முறைகள் ரொம்ப பிரயோஜனமாக இருந்தன. (மத்தேயு 9:37-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, பல வருஷங்களுக்கு முன்பு செய்தித்தாளைப் பயன்படுத்தி கடவுளுடைய மக்கள் நற்செய்தியைச் சொன்னார்கள். ஒவ்வொரு வாரமும் சகோதரர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் ஒரு பைபிள் பேச்சை ஒரு செய்தி நிறுவனத்துக்கு அனுப்புவார். அந்த நிறுவனம் அதை கனடா, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்த செய்தித்தாள்களுக்கு அனுப்பும். 1913-க்குள் சகோதரர் ரஸலுடைய பேச்சுகள் 2,000 செய்தித்தாள்களில் வந்தன. அவருடைய பேச்சை கிட்டத்தட்ட 1 கோடியே 50 லட்சம் மக்கள் வாசித்தார்கள்!

11 ரேடியோவைப் பயன்படுத்தியும் நற்செய்தியைச் சிறந்த விதத்தில் பிரசங்கித்தார்கள். 1922, ஏப்ரல் 16-ம் தேதி, சகோதரர் ரதர்ஃபோர்ட் ரேடியோவில் ஒரு பேச்சு கொடுத்தார். அதை கிட்டத்தட்ட 50,000 பேர் கேட்டார்கள். பிறகு 1924, பிப்ரவரி 24-ம் தேதி நம் அமைப்பின் முதல் ரேடியோ ஸ்டேஷன் WBBR ஆரம்பிக்கப்பட்டது. இதைப் பற்றி 1924, டிசம்பர் 1 காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நற்செய்தியைப் பிரசங்கிக்க இதுவரை பயன்படுத்தப்பட்ட வழிகளிலேயே ரேடியோதான் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. இதற்கான செலவும் ரொம்ப குறைவாகவே இருக்கிறது.” நற்செய்தியைப் பிரசங்கிக்க கொஞ்சம் பேர் மட்டுமே இருந்த இடங்களில் செய்தித்தாள்களைப் போலவே ரேடியோவும் ரொம்ப பிரயோஜனமாக இருந்தது.

இன்று நிறைய பேர் சந்தோஷமாக பொது ஊழியம் செய்கிறார்கள், jw.org வெப்சைட்டையும் காட்டுகிறார்கள் (பாராக்கள் 12, 13)

12. (அ) உங்களுக்கு ரொம்ப பிடித்த பொது ஊழியம் எது? (ஆ) பயப்படாமல் பொது ஊழியம் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?

12 இன்று நற்செய்தியைப் பிரசங்கிக்க பொது ஊழியம் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாகனம் நிறுத்துமிடங்கள், பொது இடங்கள், மார்க்கெட்டுகள் என்று நிறைய இடங்களில் இன்று நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம். பொது ஊழியம் செய்ய உங்களுக்குப் பயமாக இருந்தால் அதற்காக ஜெபம் செய்யுங்கள். மனேரா என்ற வட்டாரக் கண்காணி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “நற்செய்தியை பிரசங்கிக்கிறதுக்கு புதுசா வர்ற ஒவ்வொரு வழியும் யெகோவாவுக்கு சேவை செய்ய உதவியா இருக்கு. அது மூலமா நாம யெகோவாவுக்கு எவ்வளவு உண்மையா இருக்கோம்னு காட்ட முடியும். அதோட, அது நம்ம விசுவாசத்துக்கான ஒரு சோதனையாவும் இருக்கு. யெகோவா எந்த வழியில பிரசங்கிக்க சொன்னாலும் அதுக்கு தயாரா இருக்கோங்கிறத காட்ட நாங்க ஆவலா இருக்கோம்.” பயப்படாமல் புதிய வழிகளில் பிரசங்கித்தால் யெகோவாமீது இருக்கிற நம்பிக்கை இன்னும் அதிகமாகும். அதோடு, நாம் இன்னும் நன்றாகப் பிரசங்கிப்போம்.2 கொரிந்தியர் 12:9, 10-ஐ வாசியுங்கள்.

13. நற்செய்தியைப் பிரசங்கிக்க நம் வெப்சைட் எப்படி ஒரு சிறந்த வழியாக இருக்கிறது, அதைப் பயன்படுத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?

13 ஊழியத்துக்குப் போகிற நிறைய பேர் jw.org வெப்சைட்டை பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள். இந்த வெப்சைட்டில் 700-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களை வாசிக்கலாம், டவுன்லோட் செய்யலாம். ஒவ்வொரு நாளும் 16 லட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் நம் வெப்சைட்டை பார்க்கிறார்கள். மக்களைச் சுலபமாக போய் பார்க்க முடியாத இடங்களில் முன்பு ரேடியோவைப் பயன்படுத்தி பிரசங்கித்தோம்; இன்று நம் வெப்சைட்டை பயன்படுத்துகிறோம்.

பயிற்சிகள்

14. ஊழியத்துக்குப் போனவர்களுக்கு என்ன பயிற்சி தேவைப்பட்டது, நன்றாகச் சொல்லிக்கொடுக்க எந்தப் பள்ளி உதவியாக இருந்தது?

14 நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளும் முறைகளும் ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. இருந்தாலும், இன்னும் நன்றாக ஊழியம் செய்ய அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்குப் பயிற்சி தேவைப்பட்டது. சில நேரங்களில், ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் ஃபோனோகிராப்பில் உள்ள பேச்சைப் போட்டு காட்டும்போது அவர்கள் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சிலர் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள். எதிர்ப்புகளைச் சாதுரியமாகச் சமாளிக்கவும் பைபிளில் உள்ள விஷயங்களை நன்றாகச் சொல்லிக்கொடுக்கவும் ஊழியத்துக்குப் போனவர்களுக்கு பயிற்சி தேவைப்பட்டது. இந்தப் பயிற்சி ரொம்ப முக்கியம் என்பதை சகோதரர் நார் புரிந்துகொண்டார். அதற்குக் கடவுளுடைய சக்திதான் அவருக்கு உதவி செய்தது. அதனால், 1943-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பைபிளில் உள்ள விஷயங்களை நன்றாகச் சொல்லிக்கொடுக்க இந்தப் பள்ளி எல்லாருக்கும் உதவியாக இருந்தது.

15. (அ) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுத்த சிலருடைய அனுபவங்களைச் சொல்லுங்கள். (ஆ) சங்கீதம் 32:8-லுள்ள யெகோவாவின் வாக்குறுதி உங்கள் வாழ்க்கையில் எப்படி உண்மையாக இருந்திருக்கிறது?

15 மேடையில் இருந்து பேச்சு கொடுக்கிற பழக்கம் நிறைய சகோதரர்களுக்கு இருக்கவில்லை. பைபிளிலுள்ள தோவேக்கு என்பவரைப் பற்றி 1944-ல் ராமு என்ற சகோதரர் முதல் முதலில் பேச்சு கொடுத்தார். அது அவருக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதைப் பற்றி அவர் சொல்கிறார், “நான் அப்போதான் முதல் முதல்ல மேடையில பேசுறேன். என்னோட கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு, பயத்துல பல்லும் ஆட ஆரம்பிச்சிடுச்சு. இருந்தாலும் நான் பேச்சை பாதியிலயே நிறுத்திடல.” தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை; இருந்தாலும், பிள்ளைகளும் பேச்சு கொடுத்தார்கள். ஒரு சின்ன பையன் முதல் முதலில் பேச்சு கொடுத்ததைப் பற்றி சகோதரர் மனேரா இப்படிச் சொல்கிறார்: “அவனுக்கு ரொம்ப பயமா இருந்தது. பேச்சு கொடுக்க ஆரம்பிச்ச உடனே தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான். இருந்தாலும் பாதியிலயே விட்டுடல, முழு பேச்சையும் அழுதுக்கிட்டே கொடுத்து முடிச்சான்.” பயத்தினால் அல்லது கூச்ச சுபாவத்தினால் நீங்கள் கூட்டங்களில் பதில் சொல்லாமல், பேச்சு கொடுக்காமல் இருக்கிறீர்களா? உங்கள் பயத்தைப் போக்கும்படி யெகோவாவிடம் கேளுங்கள். முதல் முதலில் பேச்சுகளைக் கொடுத்த மாணவர்களுக்கு யெகோவா உதவி செய்தது போலவே உங்களுக்கும் உதவி செய்வார்.சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.

16. (அ) இதற்கு முன்பு கிலியட் பள்ளியின் நோக்கம் என்ன? (ஆ) 2011-லிருந்து அதன் நோக்கம் என்ன?

16 நம் அமைப்பு கிலியட் பள்ளியின் மூலமாகவும் பயிற்சி கொடுக்கிறார்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்க மாணவர்களுக்கு இருக்கும் ஆசையை அதிகரிப்பதுதான் இந்தப் பள்ளியின் ஒரு நோக்கம். இந்தப் பள்ளி 1943-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 8,500 மாணவர்கள் அதில் பயிற்சி பெற்று, 170 நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 2011-லிருந்து விசேஷ முழுநேர சேவையில் இருப்பவர்கள் மட்டும் இந்தப் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். அதாவது விசேஷ பயனியர்கள், பயணக் கண்காணிகள், பெத்தேல் ஊழியர்கள், இதுவரை கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளாத மிஷனரிகள் அழைக்கப்படுகிறார்கள்.

17. கிலியட் பள்ளி எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது?

17 கிலியட் பள்ளி எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது? அதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். ஆகஸ்ட் 1949-ல் ஜப்பானில் ஊழியம் செய்தவர்கள் 10 பேர்கூட இல்லை. ஆனால், அந்த வருஷத்தின் முடிவில் 13 மிஷனரிகள் அங்கு ஊழியம் செய்தார்கள். இன்று ஜப்பானில் கிட்டத்தட்ட 2,16,000 பேர் ஊழியம் செய்கிறார்கள். அதில் ஏறக்குறைய பாதி பேர் பயனியர்கள்!

18. வேறு என்ன பள்ளிகள் இருக்கின்றன?

18 கிலியட் பள்ளியைத் தவிர ராஜ்ய ஊழியப் பள்ளி, பயனியர் ஊழியப் பள்ளி, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி, வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான பள்ளி, கிளை அலுவலகக் குழுவினர் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான பள்ளிகளும் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் நிறைய சகோதர சகோதரிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கின்றன; அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கின்றன. இயேசு நிறைய பேருக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

19. பிரசங்க வேலையைப் பற்றி சகோதரர் ரஸல் என்ன சொன்னார், அது எப்படி இன்று நிறைவேறி வருகிறது?

19 கடவுளுடைய அரசாங்கம் 100 வருஷங்களுக்கு மேல் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த 100 வருஷங்களாக நம் ராஜா இயேசு கிறிஸ்து பிரசங்க வேலையை வழிநடத்தி வந்திருக்கிறார். 1916-ல் சகோதரர் ரஸல் இறந்துபோவதற்கு முன்பு, உலகம் முழுவதும் நற்செய்தி பிரசங்கிக்கப்படும் என்று உறுதியாக நம்பினார். அவர் சொன்னார், “இந்த வேலை ரொம்ப வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது, இது இனிமேலும் தொடர்ந்து அதிகரிக்கும். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்தச் நற்செய்தி’ உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” (ஏ. ஹெச். மேக்மில்லன் எழுதிய வளர்ந்து வரும் விசுவாசம் என்ற ஆங்கில புத்தகம், பக்கம் 69) சகோதரர் ரஸல் சொன்னதுபோல் நற்செய்தி இன்று உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுகிறது. யெகோவா சமாதானத்தின் கடவுள்; நாம் அவருடைய விருப்பத்தை செய்துமுடிக்க நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் கொடுக்கிறார். அதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

^ பாரா. 2 இயேசு அந்தக் கட்டளையைக் கொடுத்த சமயத்தில் அங்கிருந்த 500 பேரும் இயேசுவின் சீடர்களாக ஆகியிருக்கலாம். அதை எப்படிச் சொல்லலாம்? அவர்களை ‘ஐந்நூறு சகோதரர்கள்’ என்று கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலர் பவுல் சொன்னார். “அவர்களில் பெரும்பாலோர் இன்னமும் உயிரோடு இருக்கிறார்கள், சிலரோ இறந்துவிட்டார்கள்” என்றும் சொன்னார். இயேசு சொன்னதை நேரடியாகக் கேட்டவர்களில் நிறைய பேரை பவுலுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.