யாத்திராகமம் 4:1-31

4  அப்போது மோசே, “அவர்கள் நான் சொல்வதைக் கேட்காமலும் என்னை நம்பாமலும் போனால், என்ன செய்வது?+ ‘யெகோவா உன் முன்னால் தோன்றியிருக்க மாட்டார்’ என்று அவர்கள் சொல்வார்களே” என்றார்.  அப்போது யெகோவா, “கையில் என்ன வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு கோலை வைத்திருக்கிறேன்” என்றார்.  கடவுள் அவரிடம், “அதைத் தரையில் போடு” என்றார். மோசே அதைத் தரையில் போட்டதும் அது ஒரு பாம்பாக மாறியது.+ உடனே அவர் அங்கிருந்து பயந்து ஓடினார்.  யெகோவா மோசேயிடம், “உன் கையை நீட்டி, அதன் வாலைப் பிடி” என்றார். அவரும் கையை நீட்டி அதைப் பிடித்தார், அந்தப் பாம்பு கோலாக மாறியது.  அப்போது கடவுள் அவரிடம், “அவர்களுடைய முன்னோர்களான ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளும் யாக்கோபின் கடவுளுமான யெகோவா+ உன் முன்னால் தோன்றினார் என்பதை அவர்கள் நம்புவதற்கு இது ஒரு அடையாளம்”+ என்றார்.  யெகோவா மறுபடியும் அவரிடம், “தயவுசெய்து உன் கையை உன்னுடைய அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கியின் மடிப்புக்குள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது தொழுநோய் பிடித்து, பனி போல வெள்ளையாக மாறியிருந்தது!+  அதன் பின்பு கடவுள் அவரிடம், “உன் கையை மறுபடியும் அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கிக்குள் கையை வைத்தார். பின்பு கையை வெளியே எடுத்தபோது, அது பழையபடி மாறியிருந்தது!  அப்போது கடவுள் அவரிடம், “நீ செய்த முதல் அற்புதத்தைப் பார்த்தும் அவர்கள் உன்னை நம்பாமல் போனால், அடுத்த அற்புதத்தைப் பார்த்து நிச்சயம் நம்புவார்கள்.+  ஒருவேளை, இந்த இரண்டு அற்புதங்களைப் பார்த்த பின்பும் அவர்கள் உன் பேச்சைக் கேட்காமல் போனால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து காய்ந்த தரையில் ஊற்று. அது இரத்தமாக மாறும்”+ என்றார். 10  அப்போது மோசே யெகோவாவிடம், “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, எனக்குச் சரளமாகப் பேச வராது. எனக்கு வாய் திக்கும், நாக்கு குழறும். நீங்கள் என்னிடம் பேச ஆரம்பித்த பிறகுகூட எனக்குச் சரியாகப் பேச்சு வரவில்லை”+ என்றார். 11  அதற்கு யெகோவா, “மனுஷர்களுக்கு வாயைக் கொடுத்தது யார்? அவனை ஊமையனாக, செவிடனாக, குருடனாக, அல்லது நல்ல கண்பார்வை உள்ளவனாக ஆக்க யாரால் முடியும்? யெகோவாவாகிய என்னால்தானே முடியும்? 12  அதனால் நீ புறப்பட்டுப் போ. நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ என்ன பேச வேண்டும் என்பதை நான் சொல்லிக்கொடுப்பேன்”+ என்றார். 13  ஆனால் மோசே, “என்னை மன்னித்துவிடுங்கள் யெகோவாவே, தயவுசெய்து வேறு யாரையாவது அனுப்புங்கள்” என்றார். 14  அதனால், யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் மோசேயிடம், “உனக்குத்தான் லேவியனாகிய உன் அண்ணன் ஆரோன்+ இருக்கிறானே. அவன் நன்றாகப் பேசுவான் என்று எனக்குத் தெரியும். உன்னைப் பார்க்க அவன் வந்துகொண்டிருக்கிறான். உன்னைப் பார்க்கும்போது அவன் சந்தோஷப்படுவான்.+ 15  நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் நீ அவனிடம் சொல்ல வேண்டும்.+ நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன், அவனோடும் இருப்பேன்.+ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லிக்கொடுப்பேன். 16  அவன் உன்னுடைய சார்பில் ஜனங்களிடம் பேசுவான், நீ கடவுளுடைய சார்பில் அவனிடம் பேசுவாய்.*+ 17  நீ இந்தக் கோலை எடுத்துக்கொண்டு போய், இதை வைத்து அற்புதங்களைச் செய்வாய்”+ என்று சொன்னார். 18  பின்பு, மோசே தன் மாமனார் எத்திரோவிடம்+ போய், “நான் போய் எகிப்திலுள்ள என் சகோதரர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். அப்போது எத்திரோ, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா” என்றார். 19  அதன் பின்பு யெகோவா மீதியானில் இருந்த மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போ. உன்னைக் கொலை செய்ய நினைத்த எல்லாரும் செத்துவிட்டார்கள்”+ என்றார். 20  அதனால், மோசே தன் மனைவியையும் மகன்களையும் கழுதையின் மேல் உட்கார வைத்து, எகிப்துக்குப் புறப்பட்டார். உண்மைக் கடவுள் கொண்டுபோகச் சொன்ன கோலையும் எடுத்துக்கொண்டார். 21  அப்போது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போனதும், நான் உனக்குத் தந்திருக்கிற சக்தியால் பார்வோனுக்குமுன் எல்லா அற்புதங்களையும் செய்.+ ஆனாலும், அவனுடைய இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்,+ அவன் என்னுடைய ஜனங்களை அனுப்ப மாட்டான்.+ 22  அப்போது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் என்னுடைய மூத்த மகன்.+ 23  என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார். 24  பின்பு, வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் யெகோவா+ அவர்முன் தோன்றி, அவனை* கொலை செய்யப் பார்த்தார்.+ 25  அப்போது, சிப்போராள்+ ஒரு கூர்மையான கல்லை* எடுத்து தன்னுடைய மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அந்த நுனித்தோலை அவர் பாதங்களில் வைத்து, “எனக்கு நீங்கள் இரத்தத்தின் மணமகன்” என்றாள். 26  அதனால், கடவுள் அவனை விட்டுவிட்டார். அப்போது அவள், விருத்தசேதனத்தின் காரணமாக, “இரத்தத்தின் மணமகன்” என்றாள். 27  பின்பு யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காக வனாந்தரத்துக்குப் போ”+ என்றார். அதனால் அவர் புறப்பட்டுப் போய், உண்மைக் கடவுளுடைய மலையில்+ மோசேயைச் சந்தித்து, அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். 28  அப்போது மோசே, யெகோவா சொன்ன எல்லா விஷயங்களைப் பற்றியும், தன்னைச் செய்யச் சொன்ன எல்லா அற்புதங்களைப் பற்றியும் ஆரோனிடம் சொன்னார்.+ 29  அதன் பின்பு மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரையும் ஒன்றுகூட்டினார்கள்.+ 30  யெகோவா மோசேயிடம் பேசிய எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் சொன்னார். ஜனங்களுடைய கண் முன்னால் அவர் அற்புதங்களைச் செய்தார்.+ 31  அப்போது, ஜனங்கள் மோசேயை நம்பினார்கள்.+ இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கருணை காட்டியிருக்கிறார்+ என்பதையும், அவர்கள் அனுபவிக்கிற துன்பத்தைப் பார்த்திருக்கிறார்+ என்பதையும் கேட்டபோது அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நீ அவனுக்குக் கடவுளாக இருப்பாய்.”
ஒருவேளை, “மோசேயின் மகனை.”
நே.மொ., “சிக்கிமுக்கிக் கல்லை.”
வே.வா., “மூப்பர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா