Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘வயலை’ அறுவடைக்கு தயார்படுத்துதல்

‘வயலை’ அறுவடைக்கு தயார்படுத்துதல்

‘வயலை’ அறுவடைக்கு தயார்படுத்துதல்

அன்று பெரிய போதகராகிய இயேசு தம் பேச்சில் அநேக உவமைகளைப் பயன்படுத்தினார். உவமைகளை எல்லாம் அவர் சொல்லி முடித்தவுடன் கூட்டத்தாரில் பெரும்பான்மையோர் கலைந்துசென்றனர். சீஷர்களோ இயேசு கடைசியாக சொன்ன கோதுமையையும் களைகளையும் பற்றிய சுருக்கமான கதையைக் கேட்டு புரிந்துகொள்ள முடியாமல் குழம்பினாலும் அங்கிருந்து செல்லவில்லை. ஏனெனில் அவருடைய உவமைகளில், முக்கியமாய் கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையில் அர்த்தம் புதைந்துகிடக்கும் என்பதை அறிந்திருந்தனர்; அத்தோடு இயேசு ஏதோ கதை சொல்பவர் மட்டுமல்ல என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சீஷர்கள் இவ்வாறு கேட்டதாக மத்தேயு எழுதுகிறார்: “நிலத்தின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” அப்போது இயேசு அந்த உவமையின் அர்த்தத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்; தம்முடைய சீஷர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் பெரும் விசுவாச துரோகிகள் தோன்றுவார்கள் என முன்னறிவித்தார். (மத்தேயு 13:24-​30, 36-38, 43) அவர் சொன்னபடியே நடந்தது; அப்போஸ்தலனாகிய யோவானின் மரணத்திற்குப் பின், விசுவாச துரோகம் விரைவில் பரவியது. (அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:​6-​12) அதன் பாதிப்புகள் எங்கும் காணப்பட்டதால் லூக்கா 18:8-⁠லுள்ள இயேசுவின் இந்தக் கேள்வி, வெகு பொருத்தமாக தோன்றினது: “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?”

இயேசுவின் வருகை, கோதுமை போன்ற கிறிஸ்தவர்களுடைய ‘அறுவடையின்’ ஆரம்பத்தைக் குறிக்கும். அந்த அறுவடை 1914-⁠ல் தொடங்கியது; அதுவே ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவை’ அடையாளம் காட்டியது. எனவே அந்த அறுவடைக்கு தயாராகும்படி அதற்கு முந்திய காலப்பகுதியில் சிலர் பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.​—மத்தேயு 13:⁠39.

முக்கியமாய் 15-வது நூற்றாண்டு முதற்கொண்டு சிலரது மனங்களில் புதிய உத்வேகம் பிறந்தது; இந்த ஆர்வம் “களைகளைப்” போன்ற அல்லது போலி கிறிஸ்தவர்களாக இருந்த கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பான்மையோரையும் தொற்றிக்கொண்டது. சரித்திர பதிவுகளை ஆராய்கையில் இந்த உண்மை ஊர்ஜிதமாகிறது. பைபிள் எல்லாருடைய கைகளிலும் கிடைக்க ஆரம்பித்தது; பைபிள் சொல்தொகுதி விளக்கப் பட்டியல்களும் (Bible concordances) உருவாயின; நேர்மை மனம் படைத்தவர்கள் வேதவசனங்களைக் கண்ணும் கருத்துமாய் ஆராய தொடங்கினர்.

ஒளி இன்னும் பிரகாசமடைதல்

இப்படி ஆராய்ந்தவர்களில் ஒருவர் பத்தொன்பதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஹென்ரி க்ரூ (1781-​1862). இவர் இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமைச் சேர்ந்தவர். ஜூலை 8, 1795-⁠ல், தன் 13-⁠ம் வயதில் குடும்பத்தாருடன், அட்லான்டிக் பெருங்கடல் வழியே ஐக்கிய மாகாணங்களுக்கு வந்தார். அக்குடும்பத்தார் ரோட் தீவிலுள்ள ப்ராவிடென்ஸ் என்ற இடத்தில் குடியேறினர். அவருடைய பெற்றோர் பைபிளின்மீது ஆர்வத்தையும் அவருக்கு ஊட்டி வளர்த்தனர். 1807-⁠ல், தன் 25-⁠ம் வயதில் கனெடிகட், ஹார்ட்ஃபோர்ட்டில் இருந்த பாப்டிஸ்ட் சர்ச்சில் பாஸ்டராக சேவை செய்ய க்ரூ அழைக்கப்பட்டார்.

அவர் போதகராக தன் பொறுப்புகளை ஏற்று கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்; பைபிளுக்கு இசைய வாழ்வதற்கு முயலும் தன் சர்ச் அங்கத்தினர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். எனினும், தெரிந்தே பாவ செயல்களில் ஈடுபடுவோரை சபையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தை அவர் பலமாக ஆதரித்தார். இதற்காக அவர் சில சமயங்களில் சர்ச்சில் பொறுப்பான ஸ்தானத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து நடவடிக்கையும் எடுத்திருந்தார்; வேசித்தனத்தில் அல்லது வேறு ஏதேனும் அசுத்தமான பழக்கங்களில் ஈடுபட்டவர்களை சர்ச்சிலிருந்து வெளியேற்றினார்.

சர்ச்சில் இருந்த இன்னும் சில பிரச்சினைகள் அவருக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தின. சர்ச்சின் அங்கத்தினராக இராத ஆண்கள், சர்ச்சு விவகாரங்களில் தலையிட்டனர்; ஆராதனை நேர பாடல்களை முன்நின்று நடத்தினர். சர்ச்சில் முக்கியமான விஷயங்களின் பேரில் தீர்மானம் எடுப்பதற்காக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் இவர்கள் கலந்துகொண்டனர்; இவ்வாறு அதன் விவகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தவும் செய்தனர். இது க்ரூக்கு பிடிக்கவில்லை; உலகிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நியமத்திற்கு இசைய வாழும் உண்மையுள்ளவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களில் தலையிட வேண்டும் என்ற கருத்தை அவர் முழுக்க முழுக்க ஆதரித்தார். (2 கொரிந்தியர் 6:​14-​18; யாக்கோபு 1:​27) அவரைப் பொறுத்த வரை, விசுவாசிகளாய் இல்லாதவர்களை கடவுளுக்குத் துதிபாடல்களைப் பாட அனுமதிப்பது தேவதூஷணத்திற்கு சமம். எனவே, 1811-⁠ல் ஹென்ரி க்ரூக்கை அந்தச் சர்ச்சு ஒதுக்கித் தள்ளியது. அவருடைய கருத்தை ஆதரித்த அதன் அங்கத்தினர்களும் அதே சமயத்தில் சர்ச்சிலிருந்து வெளியேறினர்.

கிறிஸ்தவமண்டலத்திலிருந்து விலகுதல்

ஹென்ரி க்ரூ உட்பட இப்படி வெளியேறியவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். பைபிளின் அறிவுரைக்கு ஏற்ப வாழவும் செயல்படவும் விரும்பி அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் இறங்கினர். இப்படிப்பட்ட ஆராய்ச்சி, வெகு சீக்கிரத்திலேயே பைபிள் சத்தியத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும், கிறிஸ்தவமண்டலத்தின் தவறுகளை அம்பலப்படுத்தவும் அவர்களுக்கு உதவியது. உதாரணமாக, 1824-⁠ல் க்ரூ, திரித்துவம் தவறென நிரூபிக்கும் விவாதங்களை எழுதினார். பின்வரும் பகுதியில் காணப்படும் அவருடைய நியாயமான விவாதத்தைக் கவனியுங்கள்: “‘அந்த நாளை அல்லது அந்த மணிநேரத்தை எந்த மனிதனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும், குமாரனுங்கூட அறியார்கள், பிதா ஒருவரே அறிந்திருக்கிறார்.’ [மாற்கு 13:32] இங்கே மனிதன், தூதர்கள், குமாரன், பிதா என்றே வரிசைப்படுத்தி குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். . . . பிதா மட்டுமே அந்த நாளை அறிந்திருக்கிறார் என நம்முடைய கர்த்தர் நமக்குக் கற்பிக்கிறார். சிலர் நினைப்பதுபோல பிதாவும், வார்த்தையும், பரிசுத்த ஆவியும், ஒரே கடவுளிலுள்ள மூன்று ஆட்களாக இருந்தால், இந்த வசனம் உண்மை இல்லையே; [திருத்துவக் கோட்பாடு எனும்] இந்தப் போதகத்தின்படியோ, . . . பிதாவைப் போலவே குமாரனும் அதை அறிந்திருக்க வேண்டும்.”

பாதிரியார்களின் பாசாங்குத்தனத்தையும், கிறிஸ்துவுக்குச் சேவை செய்வதாக சொல்லிக்கொண்ட இராணுவத் தலைவர்களின் மாய்மாலத்தையும் க்ரூ அம்பலப்படுத்தினார். 1828-⁠ல் அவர் இவ்வாறு கூறினார்: “ஒரு கிறிஸ்தவன் தனி அறைக்குச் சென்று, தன் சத்துருக்களுக்காக ஜெபிக்கிறான்; பின்னர், கொடிய ஆயுதங்களை மூர்க்கத்துடன் அதே சத்துருக்களின் நெஞ்சத்தில் பாய்ச்ச கட்டளையிடுகிறான்; இதை விடவும் முரணான ஏதாவதொன்றை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா? ஒரு பக்கம் அந்தக் கிறிஸ்தவன் மரித்த தன் எஜமானரைப் பின்பற்றுவது மகிழ்ச்சியை அளிக்கிறது; ஆனால் மறுபக்கம், அவன் யாரைப் பின்பற்றுகிறான்? இயேசு, யார் தம்மை கொலை செய்ய இருந்தார்களோ அவர்களுக்காக ஜெபித்தார். ஆனால் கிறிஸ்தவர்கள், யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவர்களைக் கொலை செய்கின்றனர்.”

இதைவிட கருத்தாழத்தோடும் க்ரூ எழுதினார்: “தம்மைப் ‘பரியாசம்பண்ண விடார்’ என்று நமக்கு உறுதியளித்த சர்வவல்லவரை நாம் எப்போதுதான் நம்பப்போகிறோம்? ‘தீமை என தோன்றுகிறவற்றையும்கூட’ விட்டு விலகும்படி நமக்குக் கட்டளையிடுகிற அந்தப் பரிசுத்த மதத்தின் இயல்பை, சிறப்பை நாம் எப்போதுதான் புரிந்துகொள்ள போகிறோம்? . . . கடவுளுடைய குமாரனின் பரிசுத்த மதம், ஒரு சந்தர்ப்பத்தில் தேவதூதனைப்போலவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் பிசாசைப்போலவும் நடந்துகொள்ளும்படி சொல்கிறது என்று நினைப்பது அவருக்கு அவதூறை ஏற்படுத்துகிறதல்லவா?”

நித்திய ஜீவ வரத்துடன் பிறக்கவில்லை

ரேடியோ, டெலிவிஷன் இல்லாத அந்தக் காலத்தில், துண்டுப்பிரதிகளை வினியோகிப்பதன் மூலம் ஒருவர் தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பது வழக்கம். சுமார் 1835-⁠ல், க்ரூ முக்கியமான துண்டுப்பிரதியை வெளியிட்டார்; அதில் ஆத்துமா அழியாதது, நரக அக்கினி ஆகிய போதனைகள் பைபிளில் இல்லாதவை என வெட்டவெளிச்சமாக்கினார். இந்தக் கோட்பாடுகள் தேவ தூஷணமானவை என அவர் கருதினார்.

இந்தத் துண்டுப்பிரதி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிருந்தது. 1837-⁠ல், 40 வயதானவரான ஜார்ஜ் ஸ்டார்ஸ், ரயிலில் இந்தத் துண்டுப்பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். இவர் நியூஹாம்ப்ஷயரிலுள்ள லெபனானை சேர்ந்தவர். அப்போது அவர் நியூ யார்க்கிலுள்ள யூட்டிக்காவில் வசித்து வந்தார்.

இவர் மெத்தடிஸ்ட்-எப்பிஸ்கபல் சர்ச்சில் மதிப்பும் மரியாதையும் மிக்க பாதிரியாக இருந்தார். இந்தத் துண்டுப்பிரதியை அவர் வாசித்தபோது, கிறிஸ்தவமண்டலத்தின் அடிப்படை போதகங்களின் அஸ்திவாரமே ஆட்டங்காணும் அளவுக்கு விவாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்; அதற்குமுன் அவர் அப்போதகங்களை துளியும் சந்தேகித்ததில்லை. அதை எழுதினவர் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்பு சுமார் 1844-⁠ல், இவருக்கு ஹென்ரி க்ரூக்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; அந்தச் சமயத்தில் இருவருமே பென்ஸில்வேனியாவிலுள்ள ஃபிலடெல்ஃபியாவில் வசித்து வந்தனர். எனினும், ஸ்டார்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு தனியாகவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்; அவற்றைக் குறித்து மற்ற பாதிரிகளிடம் மட்டுமே பேசிவந்தார்.

இறுதியில் யாராலும் அவர் கற்றுக்கொள்பவை தவறென நியாயமாக நிரூபிக்க முடியாததால், மெத்தடிஸ்ட் சர்ச்சில் தொடர்ந்திருப்பது கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருப்பதற்கு தடையாய் இருக்கும் என்ற முடிவுக்கு ஜார்ஜ் ஸ்டார்ஸ் வந்தார். 1840-⁠ல் சர்ச்சுக்கு ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு நியூ யார்க்கிலுள்ள அல்பேனியாவுக்கு குடிமாறினார்.

1842-⁠ன் வசந்த காலத்தின் ஆரம்பத்தில், “ஓர் ஆய்வு​—⁠அக்கிரமக்காரரின் ஆத்துமா அழியாதா?” என்ற தலைப்பில் ஸ்டார்ஸ், ஆறு வாரங்களில் வரிசையாக ஆறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அதற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததால் அதையே பிரசுரிப்பதற்காக சில திருத்தங்கள் செய்தார். அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய மாகாணங்களிலும் பிரிட்டனிலும் அதன் விற்பனை 2,00,000-⁠த்தை எட்டியது. ஸ்டார்ஸும் க்ரூவும் ஒன்றிணைந்து, ஆத்துமா அழியாதது என்ற கோட்பாட்டுக்கு எதிராக விவாதங்களை நடத்தினர். ஃபிலடெல்ஃபியாவில், 1862, ஆகஸ்ட் 8-⁠ல் க்ரூ மரணமடைந்தார்; இறுதி வரை ஆர்வத்துடன் பிரசங்கித்து வந்தார்.

முன்னர் குறிப்பிடப்பட்ட அந்த ஆறு சொற்பொழிவுகளையும் ஸ்டார்ஸ் நிகழ்த்திய பின் சீக்கிரத்திலேயே அவருக்கு வில்லியம் மில்லரின் போதனையில் ஈடுபாடு ஏற்பட்டது. இந்த மில்லர் 1843-⁠ல் கிறிஸ்து திரும்பி வருவார் என்றும், அதை கண்களால் பார்க்க முடியும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஸ்டார்ஸ், இந்தச் செய்தியை ஐக்கிய மாகாணங்களின் வடகிழக்குப் பகுதி முழுவதிலும் ஆர்வத்தோடு பிரசங்கித்து வந்தார். 1844-⁠க்குப் பின், இன்ன நாளில் கிறிஸ்துவின் வருகை இருக்கும் என திட்டவட்டமாக தேதி சொல்வதை நிறுத்திக் கொண்டார்; அதே சமயத்தில் காலக்கணிப்பை ஆராய விரும்பிய எவரையும் அவர் தடைசெய்யவும் இல்லை. கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருப்பதால், நியாயத்தீர்ப்பு நாளை சந்திக்க கிறிஸ்தவர்கள் தொடர்ந்து விழிப்புடனும், ஆவிக்குரிய விதத்தில் எச்சரிக்கையுடனும் இருப்பது முக்கியமென்று ஸ்டார்ஸ் நம்பினார். ஆனால், ஆத்துமா அழியாமை, உலகம் எரிந்து சாம்பலாவது, அறியாமையில் இறப்போருக்கு நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பில்லை போன்ற பைபிளுக்கு எதிரான கோட்பாடுகளைப் பின்பற்றி வந்த மில்லர் தொகுதியினரை விட்டு விலகினார்.

கடவுளிடம் அன்பு எதற்கு வழிநடத்தும்?

மீண்டும் மரணத்தில் தள்ளும் நோக்கத்துடனேயே இறந்துபோன பொல்லாதவர்களைக் கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்ற அட்வன்டிஸ்ட்டுகளின் கருத்தை ஸ்டார்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி கடவுள் அர்த்தமற்ற விதத்திலும் பழிவாங்கும் நோக்குடனும் செயல்படுவார் என்பதற்கு எந்த அத்தாட்சியையும் பைபிளில் அவர் காணவில்லை. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறான முடிவுக்கு ஸ்டார்ஸும் அவருடைய தோழர்களும் வந்தனர்; பொல்லாதவர்களை கடவுள் உயிர்த்தெழுப்பவே மாட்டார் என ஒரேயடியாக முடிவு செய்தனர். இதனால், அநீதிமான்களின் உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பிடும் சில பைபிள் வசனங்களுக்கு அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை; ஆனாலும் தாங்கள் எடுத்த முடிவு கடவுளின் அன்புடன் பெருமளவு ஒத்திசைந்திருப்பதாக அவர்கள் நினைத்தனர். கடவுளுடைய நோக்கத்தை இன்னும் நன்றாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் காத்திருந்தது.

1870-⁠ல், ஸ்டார்ஸ் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களுக்கு ஊழியம் செய்ய முடியாதிருந்தார். இந்தச் சமயத்தில் தன் 74-⁠ம் வயதுவரை கற்றிருந்த எல்லாவற்றையும் மீண்டும் மனதில் அசைபோட்டார். அப்படி செய்கையில், மனிதகுலத்திற்கான கடவுளுடைய நோக்கத்தின் ஒரு முக்கிய பாகத்தை தான் காணத் தவறிவிட்டது தெரிந்தது; அது, ‘ஆபிரகாம் கடவுளுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால்,’ “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்ற ஆபிரகாமிய உடன்படிக்கையிலிருந்து புலனாயிற்று.​—ஆதியாகமம் 22:⁠18; அப்போஸ்தலர் 3:​25.

இதனால் ஒரு புதிய கருத்து அவருடைய மனதில் உதித்தது. ‘வம்சத்தார் எல்லாரும்’ ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமென்றால் அவர்களெல்லாரும் நற்செய்தியைக் கேட்க வேண்டுமல்லவா? அதை அவர்கள் எப்படி கேட்பார்கள்? ஏற்கெனவே கோடிக்கணக்கானோர் இறந்துவிட்டனரே! எனவே வேதவசனங்களை மேலும் ஆராய்ந்தார். இறந்த ‘பொல்லாதவர்களில்,’ (1கடவுளுடைய அன்பு வேண்டாமென ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளியவர்கள், (2கடவுளை அறிந்துகொள்ளாமல் இறந்தவர்கள் என இரண்டு வகுப்பார் உள்ளனர் என்ற முடிவுக்கு வந்தார்.

இரண்டாவது வகுப்பாராக குறிப்பிடப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினுடைய மீட்பின் கிரய பலியிலிருந்து பயனடைவதற்கு, உயிர்த்தெழுதல் மூலம் வாய்ப்பளிக்கப்படுவர் என்ற முடிவுக்கு வந்தார் ஸ்டார்ஸ். அந்தப் பலியில் விசுவாசம் வைப்பவர்கள் பூமியில் என்றென்றுமாக வாழ்வர். விசுவாசியாதவர்கள் அழிக்கப்படுவர். உயிர்த்தெழுப்பப்படும் அனைவருக்கும் அருமையான எதிர்கால நம்பிக்கையை கடவுள் அளிப்பார் என ஸ்டார்ஸ் நம்பினார். முடிவில், ஆதாமின் பாவத்தால் இறப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்; ஆதாம் மட்டுமே தன் பாவத்தின் நிமித்தம் இறந்திருப்பான்! இந்த விஷயத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது வாழ்வோர் எப்படி அறிவர்? அவர்களும் அதை அறிந்துகொள்ள வேண்டுமானால் உலகளாவிய பிரசங்க வேலை நடைபெற வேண்டும் என்பதை ஸ்டார்ஸ் ஒருவழியாக புரிந்துகொண்டார். இத்தகைய வேலை எவ்வாறு செய்யப்படும் என்பதை அவரால் துளியும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றாலும் அது எப்படியும் நடக்கும் என நம்பினார். ஆகவே இவ்வாறு எழுதினார்: “பெரும்பாலானோர், ஒரு காரியம் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளாதபோது அது நடக்கவே நடக்காது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக கடவுளாலும் அதை செய்ய முடியாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்.”

நியூ யார்க்கிலுள்ள புரூக்லினிலிருந்த தன் வீட்டில் 1879, டிசம்பர் மாதம் ஜார்ஜ் ஸ்டார்ஸ் உயிர்நீத்தார். அவருடைய வீட்டிலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி இருந்த இடமே அவர் வெகு ஆவலோடு எதிர்பார்த்திருந்த உலகளாவிய பிரசங்க ஊழியத்தின் முக்கிய மையமாக திகழவிருந்தது.

தேவைப்பட்டது மேலுமான ஒளி

இன்று நாம் சத்தியத்தைப் புரிந்துகொண்ட அளவுக்கு ஹென்ரி க்ரூ, ஜார்ஜ் ஸ்டார்ஸ் போன்றவர்கள் தெளிவாக புரிந்துகொண்டார்களா? புரிந்துகொள்ளவில்லை. எனினும் அதற்காக அதிக பிரயாசப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தது 1847-⁠ல் ஸ்டார்ஸ் சொன்னதிலிருந்து தெரிய வருகிறது: “நாம் இப்போதுதான் சர்ச்சின் இருண்ட சகாப்தங்களிலிருந்து வெளியேறி இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது; சத்தியம் என்பதாக நினைத்துக்கொண்டு ‘பாபிலோனிய உடைகள்’ சிலவற்றை நாம் இன்னும் அணிந்திருந்தால் அதில் ஆச்சரியமேதுமில்லை.” உதாரணமாக, இயேசுவின் “மீட்கும்பொருளை” க்ரூ வெகுவாக போற்றினார்; ஆனால் அதுவே, இழந்துபோன ஆதாமின் பரிபூரண மனித உயிருக்கு ஈடாக இயேசு கொடுத்த, ‘சரிசமமான மீட்கும்பொருள்’ என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. (1 தீமோத்தேயு 2:6, NW) இயேசு திரும்பிவந்து, யாவரறிய பூமியில் ஆட்சி செய்வார் என்றும் ஹென்ரி க்ரூ தவறாக நம்பி வந்தார். எனினும், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதில் அவர் உண்மையிலேயே ஆர்வம் காட்டினார்; இப்படிப்பட்ட ஆர்வத்தை, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு வெகு சிலரே வெளிக்காட்டி வந்தனர்.

அவ்வாறே ஜார்ஜ் ஸ்டார்ஸும் சில முக்கிய குறிப்புகளை சரிவர புரிந்துகொள்ளவில்லை. பொய் போதனைகளை பாதிரிகள் கற்பித்து வந்ததை அவரால் கண்டுகொள்ள முடிந்தது. அதே சமயத்தில் அவரே சில விஷயங்களை முற்றிலும் தவறாக புரிந்துகொண்டார். உதாரணமாக, சாத்தானைப் பற்றிய ஆர்த்தடாக்ஸ் பாதிரிகளின் கருத்தைக் கேட்டு நிலைகுலைந்தார்; பிசாசு உண்மையில் ஓர் ஆள் என்ற அவர்களுடைய கருத்தை ஸ்டார்ஸ் மறுத்தார். திரித்துவத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; எனினும், பரிசுத்த ஆவி ஓர் ஆளா இல்லையா என்ற பலத்த சந்தேகம் அவருடைய மரணத்திற்குச் சற்று முன்பு வரை அவருக்கு இருந்தது. கிறிஸ்துவின் வருகை தொடக்கத்தில் வெளிப்படையானதல்ல என ஜார்ஜ் ஸ்டார்ஸ் புரிந்துகொண்டபோதிலும், முடிவில் வெளிப்படையான ஒன்று என அவர் நினைத்தார். எப்படியிருந்தாலும், இந்த இருவருமே நேர்மை மனம் படைத்தோராயும், உண்மையுள்ளோராயும் இருந்தனர்; மற்றவர்களைவிட இவர்களே சத்திய பாதைக்கு வெகு அருகில் வந்ததாக சொல்லலாம்.

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையில் இயேசு விவரித்த “வயல்,” அப்போது அறுவடைக்குப் போதுமானளவு தயாராக இல்லை. (மத்தேயு 13:38, பொது மொழிபெயர்ப்பு) க்ரூ, ஸ்டார்ஸ், இன்னும் அநேகர் அறுவடைக்கு தயாராகும் விதத்தில் ‘வயலில்’ வேலை செய்து வந்தனர்.

1879-⁠ல் இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்க தொடங்கின சார்ல்ஸ் டேஸ் ரஸல், தம்முடைய ஆரம்ப காலத்தைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “தம்முடைய வார்த்தையைப் படித்து புரிந்துகொள்ள கர்த்தர் எங்களுக்குப் பல விதங்களில் உதவினார். அப்படி எங்களுக்கு உதவியவர்களில், எங்கள் நேசத்திற்கும் பாசத்திற்குமுரிய, முதிர்ந்த சகோதரரான ஜார்ஜ் ஸ்டார்ஸ் முதன்மையானவர். இவர் ஆற்றிய சொற்பொழிவுகளும், வினியோகித்த வெளியீடுகளும் எங்களுக்கு பெரிதும் உதவின. ஆனால், மனிதர் எவ்வளவு நல்லவர்களாக, ஞானிகளாக இருந்தாலும், நாங்கள் மனிதரைப் பின்பற்றுவோராக இராமல், ‘அன்புள்ள பிள்ளைகளாகக் கடவுளைப் பின்பற்றுவோராக’ இருக்கவே எப்போதும் விரும்புகிறோம்.” ஆம், க்ரூ, ஸ்டார்ஸ் போன்றவர்களின் முயற்சிகளிலிருந்து நல்மனமிக்க பைபிள் மாணாக்கர்கள் பயனடைந்தனர். எனினும் சத்தியத்தின் உண்மையான பிறப்பிடமான கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை இன்னமும் கவனமாக ஆராய்வது முக்கியமானதாய் இருந்தது.​—யோவான் 17:⁠17.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

ஹென்ரி க்ரூவின் நம்பிக்கைகள்

யெகோவாவின் பெயர் அவமதிக்கப்பட்டிருக்கிறது, அதைப் பரிசுத்தப்​படுத்துவது அவசியம்.

திரித்துவம், ஆத்துமா அழியாமை, நரக அக்கினி ஆகியவை பொய் கோட்பாடுகள்.

கிறிஸ்தவ சபை இவ்வுலகத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டும்.

தேசங்களுக்கு இடையிலான போர்களில் கிறிஸ்தவர்கள் பங்குகொள்ளக்கூடாது.

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் ஓய்வுநாள் சட்டத்தை கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டாம்.

ஃப்ரீமேஸன்கள் என அழைக்கப்படும் இரகசிய சங்க உறுப்பினர் போன்று கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடாது.

குருமார், பாமர மக்கள் என்ற பிரிவினை கிறிஸ்தவர்களுக்குள் இருக்கக்கூடாது.

மத பட்டப்பெயர்கள் அந்திக்கிறிஸ்துவினிடமிருந்து வருகின்றன.

எல்லா சபைகளிலும் மூப்பர் குழு ஒன்று இருக்க வேண்டும்.

பழிதூற்றப்படாதபடிக்கு மூப்பர்கள் தங்கள் நடத்தைகளில் பரிசுத்தமாய் இருக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் எல்லாரும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும்.

பூமியில் பரதீஸில் என்றென்றும் ஜனங்கள் வாழ்வர்.

கிறிஸ்தவ பாட்டு, யெகோவாவுக்கும் கிறிஸ்துவுக்கும் செலுத்தும் துதிகளாக இருக்க வேண்டும்.

[படத்திற்கான நன்றி]

புகைப்படம்: Collection of The New-York Historical Society/69288

[பக்கம் 28-ன் பெட்டி/படம்]

ஜார்ஜ் ஸ்டார்ஸின் நம்பிக்கைகள்

மனிதவர்க்கத்தின் மீட்கும் கிரயமாக இயேசு தம்முடைய உயிரைக் கொடுத்தார்.

நற்செய்தியைப் பிரசங்கிப்பது இன்னும் நடைபெறவில்லை (1871-⁠ல்).

அதனால், அந்தச் சமயத்தில் (1871-⁠ல்) முடிவு சமீபமாய் இருக்க வாய்ப்பில்லை. பிரசங்கித்தல் நடைபெறும் எதிர்கால சகாப்தம் ஒன்று இருக்க வேண்டும்.

பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்கப் போகிற ஜனங்கள் இருப்பார்கள்.

கடவுளை அறியாமல் இறந்துபோனவர்கள் உயிர்த்தெழுவர். கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியில் விசுவாசம் வைப்பவர்கள் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். அதில் விசுவாசம் வைக்காதவர்கள் அழிக்கப்படுவார்கள்.

ஆத்துமா அழியாமையும் நரக அக்கினியும் கடவுளை அவமதிக்கும் பொய் கோட்பாடுகள்.

கர்த்தரின் இராப்போஜனம், நிசான் 14-⁠ம் தேதி ஆசரிக்கப்படும் வருடாந்தர ஆசரிப்பு.

[படத்திற்கான நன்றி]

புகைப்படம்: SIX SERMONS, by George Storrs (1855)

[பக்கம் 29-ன் படங்கள்]

“ஜயன்ஸ் உவாட்ச் டவர்” பத்திரிகையின் பதிப்பாசிரியர் சி. டி. ரஸல், 1909-⁠ல், அமெரிக்காவைச் சேர்ந்த நியூ யார்க்கிலுள்ள புரூக்லினுக்கு குடியேறினார்