Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை

குற்றச்செயல்கள் ஜாக்கிரதை!

குற்றச்செயல்கள் ஜாக்கிரதை!

“இருட்டிடுச்சுன்னா என் ஃபிரெண்ட்ஸ் நடந்தே வந்து என்னை வீட்ல விட்டுட்டுப் போவாங்க. ஒரு ராத்திரி ரொம்ப களைப்பா இருந்ததால, டாக்ஸில போனேன்.

“ஆனா அந்த டாக்ஸி டிரைவர் ஒரு பொட்டல் காட்டுக்கு வண்டிய திருப்பி அங்க என்னைக் கெடுக்கப் பார்த்தான். தொண்டைகிழிய கத்தினப்போ, பின்வாங்கினான். மறுபடியும் என்னை நெருங்கினப்போ, கத்திக் கூச்சல்போட்டு ஓடினேன்.

“‘கத்திக் கூச்சல்போடறதால பெரிசா என்ன ஆகப்போகுது?’னு முன்னே யோசிச்சிருக்கேன். ஆனா அது எந்தளவு உதவும்னு இப்ப நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன்!”—கரென். *

எத்தனையோ நாடுகளில் மக்கள் இன்று பயந்துபயந்துதான் வாழ்கிறார்கள். காரணம்? பெருகிவரும் குற்றச்செயல்கள்! இதை ஆமோதிக்கும் விதத்தில் ஒரு நீதிபதி இப்படிச் சொன்னார்: “ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் எல்லோருமே குற்றச்செயல்களினால் பாதிக்கப்படுவோம், வருத்தகரமான உண்மை இது!” சில நாடுகளில், குற்றச்செயல்கள் அதிகமாக நடக்காவிட்டாலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஏனென்றால் அஜாக்கிரதை ஆபத்தில் முடிவடையும்.

உங்கள் பகுதியில் குற்றச்செயல்கள் அதிகமாக நடந்தாலும் சரி, அதிகமாக நடக்காவிட்டாலும் சரி, நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக வாழ என்ன செய்யலாம்? நடைமுறையான ஒரு வழி, பின்வரும் பைபிள் அறிவுரையைப் பின்பற்றுவதாகும்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) காவல் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்கிறார்கள்.

குற்றச்செயல்களால் பாதிக்கப்படுகிறவர்கள் உடல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மட்டுமல்ல, மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால், பாதுகாப்பாக இருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது எவ்வளவு முக்கியம்! எனவே திருட்டு, பாலியல் வன்கொடுமை, இன்டர்நெட் மோசடி, அடையாளத் திருட்டு ஆகிய நான்கு விதமான குற்றச்செயல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன படிகளை எடுக்கலாமென இப்போது சிந்திப்போம்.

திருட்டு

என்றால் என்ன? பிறரைத் தாக்கி அல்லது மிரட்டி பணம், பொருளை அபகரிப்பது.

மக்களை எப்படிப் பாதிக்கிறது? பிரிட்டனில் அடுத்தடுத்து நடந்த திருட்டுகளுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஒருவர் இவ்வாறு கூறினார்: ‘பாதிக்கப்பட்டவர்கள் உடலளவில் எந்தத் தீங்கும் அனுபவிக்காவிட்டால்கூட மனதளவில் கடும் வேதனையை அனுபவிக்கிறார்கள். அவர்களில் அநேகர் நிம்மதி இல்லாமல் தவிப்பதாகவும் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஏறக்குறைய அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.’

நீங்கள் என்ன செய்யலாம்?

  • திருடர்கள் சந்தர்ப்பவாதிகள்; ஜாக்கிரதையாக இருங்கள்!

    உன்னிப்பாகக் கவனியுங்கள். திருடர்கள் சந்தர்ப்பவாதிகள். அஜாக்கிரதையாக இருப்பவர்களையே வேட்டையாட விரும்புவார்கள். ஆகவே, உங்களை யாராவது நோட்டமிடுகிறார்களா என்றும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் உன்னிப்பாகக் கவனியுங்கள். அளவுக்கு மீறி குடிப்பதன் மூலம் அல்லது போதை மருந்து எடுப்பதன் மூலம் உங்கள் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்காதீர்கள். அப்படிச் செய்யும் ஒரு நபரால் “தெளிவாகச் சிந்திக்க முடியாது, சூழ்நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொள்ள முடியாது” என்று ஒரு மருத்துவக் களஞ்சியம் சொல்கிறது.

  • உடைமைகளைப் பாதுகாத்திடுங்கள். உங்கள் வாகனத்தை எங்காவது நிறுத்தினால் ‘லாக்’ செய்யுங்கள். வீட்டுக் கதவையும் ஜன்னல்களையும் சாத்தி வையுங்கள். முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். விலைமதிப்புள்ள பொருள்களைப் பிறர் கண்ணில் படும்படி வைக்காதீர்கள். “தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்” என்று சொல்கிறது நீதிமொழிகள் 11:2 (பொது மொழிபெயர்ப்பு). பொதுவாக, தங்கள் நகைகளையும் எலெக்ட்ரானிக் சாதனங்களையும் கடைபரப்புகிற ஆட்களையே திருடர்கள் (சில சமயம், திருட்டுப் பிள்ளைகள்) குறிவைக்கிறார்கள்.

  • உதவியை நாடுங்கள். “மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவிகொடுப்பர்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:15 பொ. மொ.) நீங்கள் ஏதோவொரு ஊருக்குப் போனால், அங்குள்ள அதிகாரிகள் மற்றும் நம்பகமான ஆட்களின் உதவியை நாடுங்கள். எந்தெந்த இடங்களைத் தவிர்ப்பது, உங்களையும் உங்கள் உடைமைகளையும் எப்படிப் பாதுகாப்பது போன்ற அறிவுரைகளை அவர்கள் வழங்கலாம்.

பாலியல் வன்கொடுமை

என்றால் என்ன? கற்பழிப்பது மட்டுமல்ல, கட்டாயப்படுத்தி, பலவந்தப்படுத்தி, அல்லது மிரட்டி பாலுறவு கொள்வதும் இதில் உட்படுகிறது.

மக்களை எப்படிப் பாதிக்கிறது? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் சொல்கிறாள்: “பாதிப்பு அந்தச் சமயத்தில் மட்டுமல்ல, காலாகாலத்திற்கும் நீடிக்கிறது, மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்துகிறது; வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தையே மாற்றிவிடுகிறது. பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களின் வாழ்க்கையையும் அடியோடு மாற்றிவிடுகிறது.” இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறவர்கள் அதற்குப் பொறுப்பாளி அல்ல, காமக்கொடூரர்களே பொறுப்பாளி.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • உங்கள் உணர்ச்சிக்கு “செவிகொடுங்கள்.” அமெரிக்காவிலுள்ள வட கரோலினா காவல்துறையினர் சொல்கின்றனர்: “ஓர் இடத்தில் அல்லது ஒரு நபருடன் இருக்கும்போது அசௌகரியமாக உணர்ந்தால் உடனே அங்கிருந்து போய்விடுங்கள். அங்கு இருக்க வேண்டாமென உள்மனம் எச்சரித்தால், உடனே அதற்குக் கீழ்ப்படியுங்கள், மற்றவர்கள் பேச்சைக் கேட்டு அங்கேயே இருக்காதீர்கள்.”

  • தன்னம்பிக்கையோடு இருங்கள். காமவெறியர்கள் அப்பாவிகளையும் ஏமாளிகளையுமே தேடி அலைகிறார்கள். எனவே, தன்னம்பிக்கையோடு நடந்துகொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள்.

  • சட்டெனச் செயல்படுங்கள். கத்திக் கூச்சல்போடுங்கள். (உபாகமம் 22:25-27) சட்டெனச் செயல்பட்டு அங்கிருந்து தப்பியோடுங்கள் அல்லது திருப்பித் தாக்குங்கள். முடிந்தால், பாதுகாப்பான இடத்திற்கு ஓடி, போலீஸுக்கு ஃபோன் செய்யுங்கள். *

இன்டர்நெட் மோசடி

என்றால் என்ன? இன்டர்நெட் மூலமாகக் குற்றச்செயலில் ஈடுபடுவது. வரி ஏய்ப்பு, கிரெடிட் கார்டு மோசடி, பணம் வசூலித்து பொருளை அனுப்பாதிருப்பது போன்றவை இதில் உட்படுகின்றன. ஆன்லைன் ஏலத்திலும் பண முதலீட்டிலும் செய்யப்படுகிற மோசடியும் இதில் உட்படுகிறது.

மக்களை எப்படிப் பாதிக்கிறது? பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். சான்ட்ரா என்ற பெண்ணுக்கு ஒரு ஈ-மெயில் வந்தது. அவளுடைய ஆன்லைன் வங்கி விவரங்களை ‘அப்டேட்’ செய்யும்படி அதில் சொல்லப்பட்டிருந்தது. தன் வங்கியிலிருந்துதான் வந்திருக்கிறதென நினைத்து அப்படியே செய்தாள். சில நிமிடத்திற்குள் அவளுடைய வங்கிக் கணக்கிலிருந்த 4,000 அமெரிக்க டாலர்கள் வேறொரு அயல்நாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டது! ஆம், அவள் ஏமாற்றப்பட்டாள்!

நீங்கள் என்ன செய்யலாம்?

  • உஷாராக இருங்கள்! நம்பகமானதுபோல் தெரிகிற வெப்சைட்களைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். ரகசியமாய் வைக்கப்பட வேண்டிய முக்கியத் தகவல்களை ஈ-மெயிலில் அனுப்பும்படி நம்பகமான எந்த நிறுவனத்தாரும் சொல்ல மாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்குமுன் அல்லது முதலீடு செய்வதற்குமுன் அந்த நிறுவனம் நம்பகமானதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் பண விவகாரங்களில் ஈடுபடும்போது ஜாக்கிரதையாக இருங்கள். காரணம், பிரச்சினை வந்தால் தீர்ப்பது கடினம்.

  • ஒரு நிறுவனத்தையும் அதன் கொள்கைகளையும் அலசி ஆராயுங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அந்த நிறுவனம் உண்மையிலேயே இருக்கிறதா? அதன் தொலைபேசி எண் சரியானதா? அந்த நிறுவனத்திடமிருந்து நான் ஏதோவொன்றை வாங்கினால், அதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்குமா? நான் ஆர்டர் செய்த பொருள் எப்போது என் கைக்குக் கிடைக்கும்? அது சரியில்லையென்றால் திருப்பி அனுப்பிவிட முடியுமா அல்லது அதற்கான பணம் திருப்பிக் கொடுக்கப்படுமா?’

  • நம்ப முடியாத விளம்பரமாக இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள். பேராசைக்காரர்களும் வெறுங்கையால் முழம் போட நினைப்பவர்களுமே இன்டர்நெட் ‘கொள்ளையர்களின்’ முக்கியக் குறியிலக்கு! “குறைந்த உழைப்பு நிறைய வருமானம்” என்பதும், “யாருக்கு வேண்டுமானாலும் கிரெடிட் கார்டு, கடன் தொகை” என்பதும், “குறைந்த முதலீடு அதிக லாபம்” என்பதும் அந்தக் கொள்ளையர்கள் வைக்கும் கண்ணிகளில் சில. அமெரிக்காவிலுள்ள அரசு நிறுவனம் ஒன்று (FTC) இப்படிச் சொல்கிறது: “ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்குமுன் அது நம்பகமானது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளுங்கள். அதிக லாபம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள் என்றால், அதில் அதிக ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே, ஊர்ஜிதம் செய்வதற்குமுன் அதில் முதலீடு செய்யாதீர்கள்—அந்த நிறுவனத்தார் தொல்லைக்குமேல் தொல்லை கொடுத்தாலும்!”

அடையாளத் திருட்டு

என்றால் என்ன? ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களைச் சட்டவிரோதமாகப் பெற்றுக்கொண்டு, மோசடி செய்ய அல்லது வேறொரு குற்றச்செயலில் ஈடுபட அவற்றைப் பயன்படுத்துவது.

மக்களை எப்படிப் பாதிக்கிறது? திருடர்கள் உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தி புதிய வங்கிக் கணக்கை ஆரம்பித்துவிடலாம், கிரெடிட் கார்டுகளையோ கடன் தொகையையோ பெற்றுவிடலாம். விளைவு? உங்கள் தலைக்குமேல் கடன் குவிந்துவிடும்! இந்தக் கடனிலிருந்து எப்படியோ மீண்டுவந்தால்கூட, உங்கள் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் உங்களால் மீள முடியாது. பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “மோசடிக்கு ஆளாவதைவிட பெயருக்குக் களங்கம் ஏற்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை, வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது.”

நீங்கள் என்ன செய்யலாம்?

  • முக்கியமான விவரங்களை வெளியிடாதீர்கள். பொது இடங்களிலுள்ள கம்ப்யூட்டர்களை உபயோகித்து இன்டர்நெட் வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலோ பொருள்களை வாங்க வேண்டியிருந்தாலோ உங்கள் பாஸ்வர்டுகளை அடிக்கடி மாற்றுங்கள். உங்களைப் பற்றிய முக்கிய விவரங்களை ஈ-மெயில் மூலம் யாராவது கேட்டால் சட்டென அனுப்பிவிடாதீர்கள்.

    அடையாளத் திருட்டில் ஈடுபடுபவர்கள் கம்ப்யூட்டர்களை மட்டுமே பயன்படுத்துவதில்லை. வங்கிக் கணக்கு அறிக்கைகள், செக் புக்குகள், கிரெடிட் கார்டுகள், சோஷியல் செக்யூரிட்டி கார்டுகள் போன்ற முக்கிய ஆவணங்களையும் பயன்படுத்துகிறார்கள்; அவற்றைக் கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால், அவற்றைப் பத்திரமாக வையுங்கள், முக்கிய ஆவணங்களைத் தூக்கிப்போடுவதற்குமுன் அவை எல்லாவற்றையும் சுக்குநூறாகக் கிழித்துப்போடுங்கள். ஓர் ஆவணம் காணாமல்போய்விட்டதாக அல்லது திருடப்பட்டுவிட்டதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக போலீஸிடம் புகார் செய்யுங்கள்.

  • உங்கள் வங்கிக் கணக்கை அடிக்கடி ‘செக்’ செய்யுங்கள். ‘அடையாளத் திருட்டைத் தடுப்பதற்கு சக்திவாய்ந்த ஆயுதம்—விழிப்புணர்வு! ஆரம்பத்திலேயே ஜாக்கிரதையாக இருந்தால் பிரச்சினைகளைப் பெருமளவு தவிர்த்துவிடலாம்’ என்று FTC சொல்கிறது. எனவே, உங்கள் வங்கிக் கணக்கை அடிக்கடி ‘செக்’ செய்யுங்கள்; வழக்கத்திற்கு மாறாக அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். அப்படி ஏற்பட்டிருந்தால், பொதுவாக உங்கள் வங்கியே அதை உங்களுக்குத் தெரியப்படுத்தும். * என்றாலும், உங்கள் பெயரிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும், கிரெடிட் கார்டு விவரங்களையும் கவனமாகச் சரிபார்ப்பது நல்லது.

என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், இன்றைய உலகில் எதற்குமே உத்தரவாதம் இல்லை. படு உஷாராக இருந்தவர்கள்கூட மோசடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பைபிளிலுள்ள ஞானமான அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்களோ எப்போதும் நன்மை அடைகிறார்கள். எனவே, ‘அதை விடாதீர்கள், அது உங்களைத் தற்காக்கும்; அதன்மேல் பிரியமாயிருங்கள், அது உங்களைக் காத்துக்கொள்ளும்.’ (நீதிமொழிகள் 4:6) மிக முக்கியமாக, குற்றச்செயல்களே இல்லாத ஓர் உலகம் வரப்போகிறதென்ற வாக்குறுதியை பைபிள் அளிக்கிறது.

குற்றச்செயல்கள் இல்லாத ஓர் உலகம் விரைவில்!

குற்றச்செயலுக்குக் கடவுள் முடிவுகட்டுவார் என நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்? பின்வரும் விஷயங்களைச் சிந்தியுங்கள்:

  • குற்றச்செயலுக்கு முடிவுகட்ட கடவுள் விரும்புகிறார். “யெகோவாவாகிய நான் நியாயத்தை விரும்புகிறேன்; திருட்டையும் அநீதியையும் வெறுக்கிறேன்.” —ஏசாயா 61:8. NW.

  • குற்றச்செயலுக்கு முடிவுகட்ட அவருக்குச் சக்தி இருக்கிறது. “அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்.”—யோபு 37:23.

  • கெட்டவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்.” “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:9, 29.

  • சமாதானமான புதிய உலகத்தை நல்லவர்களுக்குத் தருவதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.

இந்த வார்த்தைகள் உங்கள் நெஞ்சைத் தொடுகின்றனவா? ஆம் என்றால், மனிதகுலத்திற்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள தயவுசெய்து பைபிளை ஆராய்ந்து பாருங்கள். வேறெந்த புத்தகமும் ஞானமான, நடைமுறையான அறிவுரைகளை அளிப்பதில்லை. வேறெந்த புத்தகமும் குற்றச்செயல் இல்லாத உலகம் வரப்போகிறது என்ற நம்பிக்கையையும் அளிப்பதில்லை. * ◼ (g13-E 05)

குற்றச்செயல்களே இல்லாத புதிய உலகத்தைத் தரப்போவதாகக் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார்

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பெரும்பாலும், ஒரு நபரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது அவருக்குப் பரிச்சயமானவர்தான். கூடுதல் விஷயங்களுக்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் தொகுதி 1, பக்கம் 228-ல் “காமவெறியர்களிடமிருந்து என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?” என்ற கட்டுரையைப் பாருங்கள். இந்த ஆங்கில புத்தகத்தை www.jw.org வெப்சைட்டில் காண முடியும்.

^ சில நாடுகளில், கட்டணம் செலுத்தினால் நம்பகமான நிறுவனங்கள் வங்கிக் கணக்குகளைக் கண்காணித்து, ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அதைத் தெரியப்படுத்தும்.

^ முக்கியமான பைபிள் போதனைகளைப் பற்றிய கூடுதல் விவரங்கள் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் உள்ளன; இந்தப் புத்தகத்தை யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது www.jw.org வெப்சைட்டில் வாசியுங்கள்.