Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணத்திற்கு முன் உடலுறவை நான் எப்படி தவிர்ப்பது?

திருமணத்திற்கு முன் உடலுறவை நான் எப்படி தவிர்ப்பது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

திருமணத்திற்கு முன் உடலுறவை நான் எப்படி தவிர்ப்பது?

“எனக்கு 19 வயதிருக்கும், அப்போது பள்ளியிலிருந்த ஒரு பையனுடன் செக்ஸில் ஈடுபட்டேன். அதற்கு பிறகு அவமானத்தால் எந்தளவுக்கு கூனிக்குறுகினேன் என்பதை என்னால் சொல்லவே முடியாது. எதற்கும் லாயக்கற்றவள் என்ற உணர்வு என்னை வாட்டி வதைத்தது.”​⁠லேசி. a

“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என பைபிள் கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 6:18) பைபிளின் இந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் விதத்தில் இன்று சில இளைஞர்கள் திருமணம் ஆகும்வரை செக்ஸில் ஈடுபடாதிருப்பதாக தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட லேசி என்ற பெண்ணைப் போல சிலர் தங்கள் ஆசைகளுக்கு அடிபணிந்து விடுகிறார்கள், அதனால் கடைசியில் வேதனையும் மனசாட்சியின் உறுத்தலும்தான் அவர்களுக்கு மிஞ்சுகிறது.

செக்ஸ் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்பது உண்மைதான். வளரிளமை பருவத்தின்போது ஹார்மோனின் அளவில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியாததால், “பாலியல் தூண்டுதல்கள் அதிகரிக்கின்றன” என வளரிளம் பருவத்தின் வளர்ச்சி என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “சில சமயங்களில் எந்தக் காரணமுமே இல்லாமல் திடீரென செக்ஸைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறேன்” என பால் ஒப்புக்கொள்கிறான்.

இருந்தாலும், “[வளரிளமை பருவ] நடத்தைக்கு ஹார்மோன்களின் மீது பழியை போட்டுவிடுவது வெகு சுலபம்” என குழந்தைகள் நல பேராசிரியர் ஹௌவர்ட் கூலின் குறிப்பிடுகிறார். சமூக காரணிகளும்கூட இதற்குப் பங்களிப்பதாக அவர் விளக்குகிறார். சமூக காரணிகளில், முக்கியமாக சகாக்களின் தூண்டுதல் கட்டாயம் இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என்பது உண்மை.

எ டிரைப் அப்பார்ட் என்ற புத்தகத்தின் எழுத்தாளர் பெட்ரிஷ்யா ஹர்ஷ் இவ்வாறு சொல்கிறார்: “இளைஞர்கள் தங்களுக்கென தனி சமுதாயத்தை அமைத்திருக்கிறார்கள். . . . அது அவர்களது சகாக்கள் அடங்கிய ஒரு சமுதாயம் மட்டுமே அல்ல; [பெரியவர்களிலிருந்து] விலகிய, அதற்கே உரிய தராதரங்களையும், ஒழுக்க நெறிகளையும், நியதிகளையும் உடைய சமுதாயம் அது.” இருப்பினும், இன்றுள்ள அநேக இளைஞர்களது ‘ஒழுக்க நெறிகளும்,’ ‘நியதிகளும்’ செக்ஸ் தூண்டுதல்களுக்கு இணங்கிப் போக இடங்கொடுக்கின்றனவே தவிர அவர்களைக் கட்டுப்படுத்துவது கிடையாது. இதனால் அநேகர் திருமணத்திற்கு முன் உடலுறவை ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கும் அழுத்தத்திற்கு ஆளாவதைப் போல் உணரலாம்.

எப்படியிருந்தாலும், வேசித்தனத்தை ‘மாம்சத்தின் கிரியைகளில் b ஒன்றாக கடவுள் கண்டனம் செய்வதை கிறிஸ்தவ இளைஞர்கள் அறிந்திருக்கிறார்கள், எனவே எல்லா விதமான வேசித்தனத்திற்கும் விலகியிருக்க ஞானமாய் தீர்மானித்திருக்கிறார்கள். (கலாத்தியர் 5:19) இருப்பினும், பெரும் அழுத்தங்களை சந்திக்கும்போதுகூட நீங்கள் எப்படி கற்பைக் காத்துக்கொள்ள முடியும்?

நல்ல நண்பர்களை நாடுங்கள்

மோசமான பாதையில் நடப்பதற்கு சமூக அழுத்தங்கள் உங்களுக்குத் தூண்டுதல் அளித்தாலும், சரியான பாதையில் நடப்பதற்கு நல்ல நண்பர்கள் உங்களுக்குத் தூண்டுதல் அளிக்கலாம் என்பது அக்கறைக்குரிய விஷயம். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஓர் அறிக்கைப்படி, “பெற்றோருடனும் அன்பான அக்கறை காட்டும் மற்ற பெரியவர்களுடனும் சகவயதினருடனும் அர்த்தமுள்ள உறவை வைத்திருக்கிற, வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் வரம்புகளையும் பெற்றிருக்கிற வளரிளமை பருவத்தினர் . . . வலியப் போய் செக்ஸில் ஈடுபடுவது வெகு குறைவு.”

உங்கள் பெற்றோருடன் அர்த்தமுள்ள உறவை வைத்திருப்பது நிச்சயம் பலனளிக்கும். “செக்ஸில் ஈடுபடும்படியான அழுத்தங்களை எதிர்ப்பட்ட சமயங்களில் அவற்றை எதிர்க்க உண்மையில் என் பெற்றோர் உதவினார்கள்” என சொல்கிறான் ஜோசெஃப். தெய்வ பக்திமிக்க பெற்றோர் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஸ்திரத்தன்மையையும் வரம்புகளையும் உங்களுக்கு அளிக்க முடியும் என்பது உண்மைதான். (எபேசியர் 6:2, 3) கற்பைக் காத்துக்கொள்ள முயலுகையில் அவர்கள் உங்களுக்கு பக்கபலமாய் இருப்பார்கள்.

செக்ஸைப் பற்றி அவர்களிடம் பேசுவது ஆரம்பத்தில் தர்மசங்கடமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உங்கள் உணர்ச்சிகளை அச்சுப்பிசகாமல் அப்படியே அவர்கள் புரிந்துகொள்ள முடிவதைப் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாகிவிடலாம். எப்படியிருந்தாலும் ஒருகாலத்தில் அவர்களும் உங்கள் வயதைக் கடந்து வந்தவர்கள்தானே. எனவே இளைஞர்களுக்கு சன்யா தரும் அறிவுரை இதுதான்: “உங்கள் பெற்றோரை அணுகுங்கள், செக்ஸைப் பற்றி அவர்களிடம் பேச வெட்கப்படாதீர்கள், தயங்காதீர்கள்.”

உங்கள் பெற்றோர் பைபிள் தராதரங்களைக் கடைப்பிடிக்காதவர்களாக இருந்தால் என்ன செய்வது? அப்போதும் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்; அதேசமயம், உங்கள் குடும்பத்தாராக இல்லாத வேறு யாரிடமாவது உதவியை நாடுவது அவசியமாகலாம். முன்னர் குறிப்பிட்ட பால் இவ்வாறு சொல்கிறான்: “இந்த விஷயத்தில் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ தம்பதியரிமிருந்து எனக்கு பெரும் உதவி கிடைத்தது.” சத்தியத்தில் இல்லாத தாயை உடைய கென்ஜி என்ற இளம் பெண்ணும் அதேபோல் சொல்கிறாள்: “அறிவுரை தேவைப்படும் சமயங்களில் ஆன்மீக ரீதியில் உற்சாகத்தை அளிக்கிற முதிர்ச்சி வாய்ந்தவர்களிடம் போகிறேன்.” ஆனாலும் அவள் தரும் எச்சரிப்பு: “ஒழுக்க தராதரங்களில் உறுதியோடு இல்லாத ஆட்களைத் தவிர்க்கிறேன், அப்படிப்பட்டவர்கள் என் மதத்தினர் என்று சொல்லிக்கொண்டாலும்கூட தவிர்க்கிறேன்.”

சில சமயங்களில் கிறிஸ்தவ சபையில் நீங்கள் யாருடன் சகவாசம் வைத்திருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியமாகலாம். தொகுதி பெரிதாய் இருந்தால் பெரும்பாலும் மதிப்புக்குறைவாய் நடக்கிற சிலர் அதில் இருக்கத்தான் செய்வார்கள் என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (2 தீமோத்தேயு 2:20) உங்கள் சபையிலுள்ள சில இளைஞர்கள் உண்மையில் ‘வஞ்சகராய்’ அதாவது இரட்டை வேஷம் போடுகிறவர்களாய் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 26:4) அத்தகையவர்களுடன் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளாதீர்கள், ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பதற்கு நீங்கள் பாடுபடுகையில் அதற்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்.

தீங்கு விளைவிக்கும் பிரச்சாரத்தை அறவே ஒதுக்குங்கள்

புத்தகங்கள், பத்திரிகைகள், மியூசிக் வீடியோக்கள், வீடியோ கேம்ஸ், திரைப்படங்கள், இன்டர்நெட் ஆகியவற்றில் செக்ஸ் காட்சிகளும் அது பற்றிய மறைமுக குறிப்புகளும் உங்களையே மூழ்கடிக்கும் அளவுக்கு எக்கச்சக்கமாக வந்து குவிகின்றன; அவற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியம். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதை கவர்ச்சிகரமானதாகவும், இன்பத்தை அள்ளித்தருவதாகவும் அதில் ஆபத்து ஏதுமில்லை என்பதாகவும் மீடியா சித்தரிக்கிறது. விளைவு? முன்னர் குறிப்பிடப்பட்ட கென்ஜி இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “செக்ஸை சாதாரணமானதாக சித்தரித்த ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்தேன், அதில் ஓரினப்புணர்ச்சியும் இழையோடியது. அப்போது யெகோவா இவற்றை எவ்வளவு மோசமானதாக கருதுகிறார் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போய்விட்டது.”

உண்மையை சொன்னால், திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதன் கசப்பான உண்மைகளை பிரபல பொழுதுபோக்குகள் பெரும்பாலும் திறமையாக திரை போட்டு மறைத்துவிடுகின்றன; அந்தக் கசப்பான உண்மைகள்: வேண்டாத கருத்தரிப்புகள், இளவயது திருமணங்கள், பாலியல் நோய்கள். எனவே, ‘தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லும்’ ஆட்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.​—⁠ஏசாயா 5:20.

நீதிமொழிகள் 14:15-லுள்ளபடி, “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்ற வார்த்தைகளை நினைவில் வையுங்கள். செக்ஸ் ஆசைகளைத் தூண்டிவிடும் ஏதாவது கண்ணில் தட்டுப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! அதை புத்தகத்தில் பார்த்தால் மூடிவிடுங்கள், இன்டர்நெட்டில் பார்த்தால் கம்ப்யூட்டரை ஆஃப் செய்யுங்கள், டிவியில் பார்த்தால் சேனலை மாற்றுங்கள்! பிறகு உங்கள் மனதை வேறு காரியங்களில், அதாவது பயனுள்ள காரியங்களில் ஈடுபடுத்துங்கள். (பிலிப்பியர் 4:8) இவ்வாறு செய்யும்போது தவறான ஆசைகள் உங்கள் மனதில் வேர்விட்டு வளருவதற்கு முன்பாக அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.​—⁠யாக்கோபு 1:14, 15.

இணங்கிப் போகும் சூழ்நிலைமைகளைக் குறித்து ஜாக்கிரதை

நீங்கள் யாருடனாவது டேட்டிங் போகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கவனமாக இருப்பது முக்கியம். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (எரேமியா 17:9) காதலை வெளிப்படுத்தும் செயல்களை அனுமதிக்கையில் அவை எளிதில் தவறான பாலியல் நடத்தைக்கு வழிநடத்துகிறது. துணைக்கு ஒருவரை உடன் வைத்துக்கொள்வது, அநேகர் மத்தியில் இருப்பது போன்ற நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள். எல்லை மீறும் சூழ்நிலைமைகளில் தனிமையைத் தவிருங்கள்.

எனினும், ஒருவேளை உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கலாம்; ஏதாவது செய்கைகளின் மூலம் உங்கள் பாசத்தை வெளிப்படுத்த விரும்பலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட, WHO-வின் அறிக்கை ஒன்று பின்வருமாறு எச்சரிக்கை விடுக்கிறது: “திருமணம் சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் சமயத்தில், பெரும்பாலான பெண்கள் உடலுறவில் ஈடுபடும் தவற்றை செய்துவிடுகிறார்கள், பாரம்பரிய சமுதாயத்திலும்கூட இது சம்பவிப்பதாக தோன்றுகிறது. c எனவே காதலை வெளிக்காட்டும் செயல்களுக்கு வரம்புகள் வையுங்கள், இப்படியாக தேவையில்லாத மனவேதனையில் உழலாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

இளைஞர்களில் முக்கியமாக இளம் பெண்கள் செக்ஸில் ஈடுபடுவதற்கு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளித்தாலும் அதுதான் உண்மை. ஓர் ஆராய்ச்சியின்படி “தங்களை அறியாமலேயே 15 வயதுக்கு முன்பாக ஐ.மா.-விலுள்ள 60 சதவீத வளரிளமை பருவ சிறுமிகள் செக்ஸில் ஈடுபட்டிருந்தார்கள்.” இத்தகைய காரியங்களை நடப்பிக்கும் கயவர்கள் தங்களுக்கு பலியாகும் ஆட்களிடம் பெரும்பாலும் தங்கள் பலத்தைப் பயன்படுத்துகிறார்கள். (பிரசங்கி 4:1) உதாரணமாக, தாவீதின் குமாரனாகிய அம்னோன் தன் ஒன்றுவிட்ட சகோதரியாகிய தாமாரிடம் “மோகங்கொண்டான்,” சூழ்ச்சியின் மூலம் உடலுறவுக்கு அவளை இணங்க வைத்தான் என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது.​—⁠2 சாமுவேல் 13:1, 10-16.

கற்பழிக்கப்படுவதை, செக்ஸில் ஈடுபட பலவந்தப்படுத்தப்படுவதை தவிர்க்க முடியாது என இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆபத்தை அறிந்து எச்சரிக்கையாக இருப்பதும், இணங்கிப் போகும் சூழ்நிலைமைகளுக்கு இடங்கொடுக்காதிருப்பதும் பயமுறுத்தப்படுகையில் உடனடியாக செயல்படுவதும் உங்களை காத்துக்கொள்ள பெருமளவு உதவலாம். d

உங்கள் இருதயத்தை ‘ஒருமுகப்படுத்துங்கள்’

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கற்பைக் காத்துக் கொள்ளும் போராட்டத்தில் உங்களுக்குக் கைகொடுக்குமென நம்புகிறோம். கடைசியில், நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். ‘இருதயத்திலிருந்து . . . வேசித்தனங்கள் . . . புறப்பட்டு வருவதாக’ இயேசு சொன்னார். (மத்தேயு 15:19) எனவே முக்கியமான இந்த விஷயத்தைப் பொறுத்ததில், நீங்கள் ‘அரை இருதயமுள்ளவராக’ (வெதுவெதுப்பானவராக) அல்லது ‘இரட்டை இருதயமுள்ளவராக’ (கபடதாரியாக) ஆகாதிருப்பது அவசியம்.​—⁠சங்கீதம் 12:2, NW; 119:113, NW.

எப்போதாவது உங்கள் தீர்மானத்திலிருந்து விலகிப் போவதைப் போல உணர்ந்தாலோ, இதன் சம்பந்தமாக உங்கள் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்தாலோ ‘நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்’ என தாவீதைப் போல ஜெபத்தில் மன்றாடுங்கள். (சங்கீதம் 86:11) அதன் பிறகு, பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் படிப்பதன் மூலமும் கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமும் நீங்கள் ஜெபித்ததற்கு இசைய நடவுங்கள். (யாக்கோபு 1:22) “‘விபசாரக்காரர் அல்லது அசுத்தமானோர் தேவனுடைய ராஜ்யத்தில் சுதந்தரமடைவதில்லை’ என்பதை எப்போதும் நினைவில் வைப்பது, செக்ஸில் ஈடுபடுவதற்கான சோதனைகளை மேற்கொள்ள எனக்குத் தூண்டுதல் அளிக்கிறது” என லிடியா சொல்கிறாள்.​—⁠எபேசியர் 5:5.

திருமணத்திற்கு முன் உடலுறவை தவிர்ப்பது சுலபமாக இல்லாதிருக்கலாம். ஆனால் யெகோவாவின் உதவியுடன் உங்கள் கற்பைக் காத்துக்கொள்ள முடியும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏராளமான துன்பமும் துயரமும் ஏற்படாமல் தடுக்க முடியும்.​—⁠நீதிமொழிகள் 5:8-12. (g04 8/22)

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b ஆகஸ்ட் 8, 2004 தேதியிட்ட எமது இதழில், “இளைஞர் கேட்கின்றனர் . . . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?” என்ற கட்டுரையைக் காண்க.

c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன் தரும் விடைகள் புத்தகத்தில் அதிகாரம் 29-ஐக் காண்க.

d இது சம்பந்தமான ஆலோசனைகள், ஆகஸ்ட் 22, 1995, ஜூலை 8, 2004 தேதியிட்ட எமது இதழ்களில் “இளைஞர் கேட்கின்றனர் . . . பாலின தொந்தரவு​—⁠நான் எவ்விதமாக என்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?,” “என் பாய் ஃப்ரெண்ட் என்னை மோசமாக நடத்துவதை எப்படி தடுக்கலாம்?” ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன.

[பக்கம் 17-ன் படம்]

உள்ளத்தின் உணர்ச்சிகளைப் உங்கள் பெற்றோரிடம் பரிமாறிக் கொள்வது கற்பை காத்துக்கொள்வதில் கைகொடுக்கும்

[பக்கம் 18-ன் படம்]

டேட்டிங் போகையில் அநேகர் மத்தியில் இருப்பது பாதுகாப்பை அளிக்கும்