Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சின்னஞ்சிறுசுகளுக்கு ஸ்பா சிகிச்சை

ஜெர்மனியிலும் பிற பகுதிகளிலும், இளம் குழந்தைகளுக்கு ஸ்பா எனப்படும் நீரூற்று சிகிச்சைகளை அளிக்கும் ஆரோக்கிய மையங்கள் எக்கச்சக்கமாக பெருகி வருவதாக ஒரு செய்தித்தாள் (ஃப்ராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜிமைனா சான்டாக்ஸ்ட்ஸைட்டுங்) அறிக்கை செய்கிறது. நான்கு வயதே ஆன குழந்தைகளை பொதுவாக பொத்திப் பொத்தி வளர்ப்பதோடுகூட அவர்களது மேனியில் வெதுவெதுப்பான எண்ணெய் தேய்த்து மசாஜுகள் செய்யப்படுகின்றன, பிற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இவை எல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னேற்றுவிப்பதைவிட பணம் சம்பாதிப்பதற்காகத்தான் என நிபுணர்கள் சிலர் நினைக்கிறார்கள். லாபம் சம்பாதிப்பதற்காக “பிள்ளைகள் பிஞ்சிலேயே பெரியவர்களின் உலகிற்குள் தள்ளப்படுகிறார்கள்” என சொல்கிறார் பேட்டர் விப்பமான்; இவர் ஹேம்பர்க் ஆஃபிஸ் ஆஃப் ட்ரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார். “[இது] தங்களிடம் மட்டுமே கவனத்தை ஒருமுகப்படுத்தும் மேல் மட்டத்தவரின் மனோபாவம் கொண்ட, மிதமீறிய தனித்துவ விரும்பிகளாக இந்தக் குழந்தைகளை மாற்றிவிடும் என்பதே” கவலை தரும் விஷயம் என மையின்ஸ் பல்கலைக்கழகத்தில் குழந்தை நலத் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் கிறிஸ்டாஃப் காம்ப்மேன் சொல்கிறார். பொதுவாக பிள்ளைகளுக்கு வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஸ்பா சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக “குழந்தைகள் மரங்களில் ஏற வேண்டும், தெம்பாக ஓடியாடி விளையாட வேண்டும். இது உண்மையிலேயே தோற்ற நிலை (posture) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது, வேளா வேளைக்கு பசியை தூண்டுகிறது, நிம்மதியான உறக்கத்தை அளிக்கிறது” என அந்த அறிக்கை சொல்கிறது. (g04 8/8)

புதிய நிலாக்களின் கண்டுபிடிப்புகள்

தொழில்நுட்ப முன்னேற்றத்தால், நம் சூரிய மண்டலத்தில் இருப்பதாக முன்பு அறியப்பட்டதைவிடவும் இரண்டு மடங்கு அதிக நிலாக்கள் இருப்பது ஆறே வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இதை அறிக்கை செய்திருப்பது மெக்சிகோவிலுள்ள நேஷனல் அட்டானமஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பத்திரிகையான கோமோ வேஸ். 2003-⁠ன் முடிவில் 136 நிலாக்கள் ஏழு கிரகங்களை சுற்றி வருவதாக தெரிந்தது; புதன், வெள்ளி ஆகிய கிரகங்களை எந்த நிலாக்களும் சுற்றி வருவதாக தெரியவில்லை; ஆனால் இன்னும் அநேக நிலாக்களை வானியலாளர்கள் கண்டுபிடிப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. வியாழன் கிரகத்திற்கு அதிக நிலாக்கள் (61) உள்ளன; அதற்கு அடுத்து வருபவை: சனி (31), யுரேனஸ் (27), நெப்டியூன் (13), செவ்வாய் (2). புளூட்டோ, பூமி ஆகிய கிரகங்களுக்கு ஒவ்வொரு நிலா வீதம் உள்ளன. (g04 8/8)

களைப்பு மாரடைப்பின் அறிகுறியாகலாம்

ஓர் ஆய்வின்படி “அசாதாரண களைப்பும் தூக்கமின்மையும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்” என அறிக்கை செய்கிறது த மியாமி ஹெரால்ட் செய்தித்தாளின் பன்னாட்டு பதிப்பு. அந்த ஆய்வில் 30 சதவீத பெண்கள் மட்டுமே நெஞ்சு வலியை ஆரம்ப அறிகுறியாக அறிக்கை செய்தபோதிலும் 71 சதவீதத்தினர் மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அசாதாரண களைப்பை அனுபவித்திருந்தார்கள். “இந்தக் களைப்பு விவரிக்க இயலாதது, அசாதாரணமானது, படுக்கை விரிப்பை சரிசெய்வதற்குள் இடையே சிறிது ஓய்வெடுக்க வேண்டியளவுக்கு கடுமையாய் சிலருக்கு இருந்திருக்கிறது. . . . மாரடைப்பு, பெண்களை கொல்லும் நம்பர் 1 கொலையாளி” என்கிறார் ஜீன் மாக்ஸ்வினி. இவர் யுனிவர்சிட்டி ஆஃப் அர்கான்சாஸ் ஃபார் மெடிக்கல் சையின்சஸ் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். “ஆரம்ப கட்டத்திலேயே மாரடைப்பின் அறிகுறிகளைக் கண்டுணர பெண்களை ஊக்குவித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அதை தவிர்க்கலாம் அல்லது அது வருவதைத் தாமதப்படுத்தலாம்” என அவர் குறிப்பிடுகிறார். (g04 8/8)

காலதாமதத்தைத் தவிர்ப்பது

ஈக்வடாரில் தேசிய அளவில் காலதாமதத்தைத் தவிர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இகானமிஸ்ட் பத்திரிகையின்படி, காலதாமதத்தால் ஏற்படும் அசெளகரியங்கள் போக, வருடத்திற்கு 74.2 கோடி டாலர் பண நஷ்டமும், அதாவது மொத்த தேசிய வருவாயில் 4.3 சதவீத இழப்பும் ஈக்வடாருக்கு ஏற்படுகிறது. “பாதிக்கும் அதிகமான பொது நிகழ்ச்சிகள் எல்லாமே காலதாமதமாக ஆரம்பிக்கப்படுகின்றன” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இத்திட்டத்தால் ஓரளவு பலனும் கிடைத்திருக்கிறது. “தாமதமாக வருபவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வது தடை செய்யப்படுகிறது, நிகழ்ச்சிகளுக்கு காலதாமதமாக வரும் அரசாங்க அதிகாரிகளின் பட்டியலை உள்ளூர் செய்தித்தாள் ஒன்று தினந்தோறும் பிரசுரிக்கிறது” என்கிறது தி இகானமிஸ்ட். (g04 8/22)