ஏசாயா 5:1-30

5  இப்போது என் அன்புக்குரியவரைப் பற்றிப் பாடுவேன்.என் பாசத்துக்குரியவரையும் அவருடைய திராட்சைத் தோட்டத்தையும்+ பற்றிப் பாடுவேன். செழிப்பான மலைச் சரிவிலே அவருக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.   அவர் மண்ணைக் கொத்திவிட்டு, கற்களை எடுத்துப்போட்டார். தரமான சிவப்புத் திராட்சைக் கொடியை நட்டார்.தோட்டத்தின் நடுவில் காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.தோட்டத்தில் திராட்சரச ஆலையை அமைத்தார்.+ நல்ல திராட்சைப் பழங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.ஆனால், அது மட்ட ரகமான பழங்களையே தந்தது.+   அதனால் அவர், “எருசலேமிலும் யூதாவிலும் குடியிருக்கிறவர்களே,தயவுசெய்து எனக்கும் என் திராட்சைத் தோட்டத்துக்கும் உள்ள வழக்கைக் கேளுங்கள்.+   என் திராட்சைத் தோட்டத்துக்கு நான் என்ன குறை வைத்தேன்?எல்லாமே செய்தேனே!+ ஆனாலும், நான் எதிர்பார்த்த நல்ல பழங்களை அது ஏன் தரவில்லை?ஏன் மட்ட ரகமான பழங்களையே தந்தது?   இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும்.   அதைப் பாழ்நிலமாக்குவேன்.+அங்கே யாரும் கிளைகளை வெட்ட மாட்டார்கள், களைகளை எடுக்க மாட்டார்கள். முட்செடிகளும் காட்டுச் செடிகளும்தான் வளர்ந்து நிற்கும்.+அங்கே மழை பொழியக் கூடாது என்று மேகங்களுக்கு நான் கட்டளை கொடுப்பேன்.+   பரலோகப் படைகளின் யெகோவா நானே. இஸ்ரவேல் ஜனங்கள்தான் என் திராட்சைத் தோட்டம்.+யூதா மக்கள்தான் நான் ஆசையோடு நட்ட திராட்சைக் கொடி. அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.+ஆனால், அநியாயம்தான் செய்தார்கள்.நீதியாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால், அநீதிக்கு ஆளானவர்களின் கதறல் சத்தம்தான் கேட்டது”+ என்று சொல்கிறார்.   வீடுகளோடு வீடுகளைச் சேர்த்து,+வயல்களோடு வயல்களைச் சேர்த்து,+மற்றவர்களுக்கு இடம் இல்லாதபடி எல்லா நிலங்களையும் வளைத்துப்போட்டு,அங்கே குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!   பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சத்தியம் செய்ததைக் கேட்டேன்:அழகான, ஆடம்பரமான வீடுகள் நிறைய இருந்தாலும்,அவற்றுக்குக் கோரமான முடிவு வரும்.ஒருவரும் குடியிருக்க முடியாதபடி அவை அழிந்துபோகும்.+ 10  பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு ஜாடி* திராட்சமதுதான் கிடைக்கும்.ஒரு ஹோமர் அளவு* விதைகளை விதைத்தால் ஒரு எப்பா அளவு* விளைச்சல்தான் கிடைக்கும்.+ 11  போதை தலைக்கேறும்வரை குடிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!அவர்கள் விடியற்காலை தொடங்கி இருட்டும்வரை குடித்துக் குடித்து பொழுதைப் போக்குகிறார்கள்.+ 12  யாழையும், நரம்பிசைக் கருவியையும்,கஞ்சிராவையும், புல்லாங்குழலையும் வாசித்து,திராட்சமது குடித்து விருந்து கொண்டாடுகிறார்கள்.ஆனால், யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்ப்பதில்லை. அவருடைய கைகள் செய்கிறவற்றைக் கவனிப்பதில்லை. 13  என் ஜனங்களுக்கு அறிவு இல்லாததால்,+அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.அவர்களில் மதிப்புக்குரியவர்கள் பசியில் வாடுவார்கள்.+பொதுமக்கள் தாகத்தில் தவிப்பார்கள். 14  அதனால், கல்லறை தன் எல்லையை விரிவாக்கியிருக்கிறது.வாயைப் பயங்கரமாகப் பிளந்திருக்கிறது.+எருசலேமில் இருக்கிற தலைவர்களும், ஆர்ப்பாட்டம் செய்கிற கும்பல்களும்,கும்மாளம் போடுகிற ஆட்களும் அதற்குள்தான் போய்ச் சேருவார்கள். 15  மனிதன் தலைகுனிவான்.அவன் தாழ்த்தப்படுவான்.பெருமை பிடித்தவன் வெட்கப்பட்டுப்போவான். 16  பரலோகப் படைகளின் யெகோவா நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் உயர்ந்தவராக இருப்பார்.உண்மைக் கடவுளும் பரிசுத்தருமான+ அவர் தன்னுடைய நீதியால் தன் பரிசுத்தத்தை வெளிக்காட்டுவார்.+ 17  பாழாய்க் கிடக்கும் தேசத்தில் ஆட்டுக்குட்டிகள் கண்டபடி மேய்ந்து திரியும்.கொழுத்த மிருகங்கள் ஒருசமயம் மேய்ந்த நிலங்களின் விளைச்சலை வேறு தேசத்து ஜனங்கள்தான் சாப்பிடுவார்கள். 18  வண்டியை ஒரு மிருகம் இழுத்துச் செல்வதுபோல் பாவத்தைத் தங்களோடு இழுத்துச் செல்கிறவர்களுக்கு ஐயோ கேடு!பித்தலாட்டம் என்ற கயிற்றினால் பாவம் என்ற வண்டியைக் கட்டி அவர்கள் இழுத்துக்கொண்டு போகிறார்கள். 19  அவர்கள் கிண்டலாக, “கடவுள் செய்ய நினைப்பதைச் சீக்கிரமாகச் செய்து காட்டட்டும்.அதை எங்கள் கண் முன்னால் செய்து காட்டட்டும். இஸ்ரவேலர்களின் பரிசுத்தமான கடவுள் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி* காட்டட்டும்.அவர் என்னதான் செய்கிறார் என்று நாங்களும் தெரிந்துகொள்கிறோம்!” என்று சொல்கிறார்கள்.+ 20  நல்லதைக் கெட்டது என்றும் கெட்டதை நல்லது என்றும்,ராத்திரியைப் பகல் என்றும் பகலை ராத்திரி என்றும்,கசப்பை இனிப்பு என்றும் இனிப்பைக் கசப்பு என்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ கேடு!+ 21  தங்களை ஞானிகள் என்று சொல்கிறவர்களுக்கும்,விவேகிகள் என்று நினைக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!+ 22  திராட்சமதுவைக் குடிப்பதில் வல்லவர்களுக்கும்,மதுபானங்களைக் கலந்து குடிப்பதில் கில்லாடிகளுக்கும் ஐயோ கேடு!+ 23  லஞ்சம் வாங்கிக்கொண்டு கெட்டவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறவனுக்கும்,+நீதிமானுக்கு நியாயம் வழங்காதவனுக்கும் ஐயோ கேடு!+ 24  வைக்கோல் நெருப்பில் எரிந்துபோவதைப் போலவும்,காய்ந்த புல் தீயில் பொசுங்கிவிடுவதைப் போலவும்,அவர்களுடைய வேர்கள் அடியோடு அழிந்துபோகும்.அவர்களுடைய மொட்டுகள் கருகி உதிர்ந்துபோகும்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சட்டத்தை* அவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள்.இஸ்ரவேலர்களுடைய பரிசுத்தமான கடவுளின் பேச்சை மதிக்காமல் போனார்கள்.+ 25  அதனால்தான், யெகோவாவின் கோபம் அவருடைய ஜனங்கள்மேல் பற்றியெரிகிறது.அவர் தன்னுடைய கையை ஓங்குவார், அவர்களைத் தண்டிப்பார்.+ அப்போது மலைகள் அதிரும்.அவர்களுடைய பிணங்கள் குப்பைபோல் தெருக்களில் குவிந்து கிடக்கும்.+ அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது. 26  தூர தேசத்தாரை+ அழைப்பதற்காக அவர் ஒரு கொடியை உயர்த்தியிருக்கிறார்.*பூமியின் எல்லையிலிருந்து அவர்களைப் புறப்பட வைத்திருக்கிறார்.*+இதோ! அவர்கள் வேக வேகமாக வந்துகொண்டிருக்கிறார்கள்.+ 27  அவர்களில் யாருமே சோர்வாக இல்லை, தடுமாறி விழவும் இல்லை. யாருமே தூங்கிக்கொண்டு இல்லை, தூக்கக் கலக்கத்திலும் இல்லை. அவர்களுடைய இடுப்புவார் அவிழ்ந்துபோவதும் இல்லை,செருப்புவார் அறுந்துபோவதும் இல்லை. 28  அவர்களுடைய அம்புகளெல்லாம் கூர்மையாக மின்னுகின்றன.அம்புகளை எறிவதற்கு அவர்களுடைய வில்லுகளெல்லாம் தயாராக இருக்கின்றன. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கல்* போல உறுதியாக இருக்கின்றன.ரதங்களின் சக்கரங்கள் புயல்காற்றைப் போலச் சுழல்கின்றன.+ 29  அவர்கள் சிங்கத்தைப் போலக் கர்ஜிக்கிறார்கள்.இளம் சிங்கங்களைப் போல உறுமுகிறார்கள்.+ உறுமிக்கொண்டே இரையைக் கவ்விப் பிடித்து இழுத்துச் செல்வார்கள்.அவர்களிடமிருந்து அதை யாராலும் காப்பாற்ற முடியாது. 30  அந்த நாளில் அவர்கள் பயங்கரமாகச் சத்தமிடுவார்கள்.கடலின் இரைச்சலைப் போல அந்தச் சத்தம் கேட்கும்.+ தேசத்தைப் பார்த்தால், அது சோகத்தில் இருண்டு கிடக்கும்.சூரியனைக்கூட மேகங்கள் மறைத்து இருட்டாக்கிவிடும்.+

அடிக்குறிப்புகள்

மூலமொழியில், “பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு ஹோமர் அளவு என்பது 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு எப்பா அளவு என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தீர்மானத்தை நடத்தி.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “கொடிக் கம்பத்தை நாட்டியிருக்கிறார்.”
நே.மொ., “புறப்பட வைப்பதற்காக விசில் அடித்திருக்கிறார்.”
நே.மொ., “சிக்கிமுக்கிக் கல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா