Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொல்லியல்—விசுவாசத்திற்கு அவசியமா?

தொல்லியல்—விசுவாசத்திற்கு அவசியமா?

பைபிளின் கருத்து

தொல்லியல்​—விசுவாசத்திற்கு அவசியமா?

ஆங்கிலேய மதகுருவான சாம்வல் மானிங் எருசலேமைப் பற்றி 1873-⁠ல் இவ்வாறு எழுதினார்: “யாத்திரிகர்கள் அந்தளவு சுண்டி இழுக்கப்படுவதால் பூமியின் எல்லா பாகங்களிலிருந்தும் அந்த இடத்திற்கு வந்து குவிகிறார்கள். இடிந்துபோகும் நிலையிலுள்ள மதிற்சுவர்கள், குப்பைக்கூளமான தெருக்கள், சிதையும் இடிபாடுகள் போன்றவற்றை லட்சக்கணக்கானோர் ஆழ்ந்த பயபக்திக்குரியவையாய் கருதுகிறார்கள்; பூமியில் வேறெந்த இடமும் இந்தளவுக்கு ஈர்ப்பதில்லை.”

ஏறக்குறைய ரோம பேரரசர் கான்ஸ்டன்டைன் காலம் முதற்கொண்டு இந்த பரிசுத்த தேசம் மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. a அந்த பரிசுத்த தேசத்தை நேரடியாகவும் பக்தியோடும் தரிசிக்க விரும்பியதால் யாத்திரிகர்கள் சுமார் 1,500 ஆண்டுகளாகவே அங்கு போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஆனால், 19-⁠ம் நூற்றாண்டு ஆரம்பமான பிறகே யாத்திரிகர்களுடன் அறிஞர்களும் சேர்ந்துகொண்டார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்; அதன் விளைவாக, பைபிள் சார்ந்த தொல்லியல்​—பூர்வ பரிசுத்த தேசத்திலிருந்த கலைப்பொருட்கள், மக்கள், இடங்கள், மொழிகள் ஆகியவற்றின் பேரிலான ஆய்வு—​ஆரம்பமானது.

தொல்லியலாளர்களின் கண்டுபிடிப்புகள், பைபிள் காலங்களின் பல விஷயங்களைக் குறித்த அறிவை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. அதோடு, தொல்பொருள் ஆராய்ச்சியின் பதிவு எப்போதுமே பைபிள் சரித்திரத்தோடு ஒத்திருந்திருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அந்த அறிவு அவசியமா? இதற்கு விடைகாண, தொல்பொருள் ஆராய்ச்சியின்போது தோண்டப்பட்ட அந்த இடத்திற்கு, அதாவது எருசலேம் நகரத்திற்கும் அதன் ஆலயத்திற்கும் கவனம் செலுத்துவோமாக.

‘ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்படும்’

பொ.ச. 33 இளவேனிற்காலத்தில் யூத நாட்காட்டியில் நிசான் 11 அன்று இயேசு கிறிஸ்து கடைசி முறையாக தம் சீஷர்கள் சிலருடன் எருசலேம் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தார். அவர்கள் ஒலிவ மலையை நோக்கி செல்கையில் சீஷரில் ஒருவர், “போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும்” என்று சொன்னார்.​—மாற்கு 13:1.

உண்மையுள்ள இந்த யூதர்கள் கடவுளையும் அவருடைய ஆலயத்தையும் அதிகமாக நேசித்தார்கள். மகத்தான கட்டடங்களைக் கொண்ட அந்த வளாகத்தைக் குறித்து அவர்கள் பெருமிதமடைந்தனர்; அது 15 நூற்றாண்டுகள் பழமை பெற்றது. “இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்” என இயேசு தம் சீஷனுக்கு பதிலளித்தது அதிர்ச்சியூட்டியது.​—மாற்கு 13:2.

வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவே அங்கு வந்திருக்க, கடவுள் தம்முடைய சொந்த ஆலயம் இடிக்கப்பட எப்படி அனுமதிப்பார்? அவர் சொன்னதன் கருத்தை இயேசுவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக புரிந்துகொண்டார்கள். அப்படியானால், இயேசுவின் வார்த்தைகளுக்கும் பைபிள் சார்ந்த தொல்லியலுக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு புதிய ‘நகரம்’

பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று, யூத தேசம் கடவுளுக்கு முன் தன் அங்கீகரிக்கப்பட்ட நிலையை இழந்தது. (மத்தேயு 21:43) இது அதிக மேம்பட்ட ஒன்றுக்கு​—மனிதகுலம் முழுவதற்கும் ஆசீர்வாதங்களை பொழிகிற ஒரு பரலோக அரசாங்கத்திற்கு வழிவகுத்தது. (மத்தேயு 10:7) இயேசுவின் தீர்க்கதரிசனத்திற்கு இசைய பொ.ச. 70-⁠ல் எருசலேமும் அதன் ஆலயமும் அழிந்தன. இந்த சம்பவத்தைக் குறித்த பைபிளின் பதிவை தொல்லியல் ஆதரிக்கிறது. ஆனாலும், கிறிஸ்தவர்களைக் குறித்ததில், அவர்களது விசுவாசம் பூர்வ ஆலயத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டனவா என்பதன் பேரில் சார்ந்ததல்ல. அவர்களுடைய விசுவாசம் மற்றொரு எருசலேமை அடிப்படையாகக் கொண்டது; அது வித்தியாசப்பட்ட ஒரு நகரம்.

எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தின் அழிவைக் குறித்த இயேசுவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டிருந்த அப்போஸ்தலனாகிய யோவான் தன் வாழ்நாட்காலத்திலேயே அதன் நிறைவேற்றத்தையும் கண்டார். பொ.ச. 96-⁠ம் ஆண்டில் அவருக்கு பின்வரும் இந்த தரிசனம் கொடுக்கப்பட்டது: “நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்.” சிங்காசனத்திலிருந்து உண்டான சத்தம் இவ்வாறு கூறியது: “[மனுஷர்களிடத்திலே] அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”​—வெளிப்படுத்துதல் 21:2-4.

இந்த ‘நகரம்’ உத்தம கிறிஸ்தவர்களால் ஆனது; அவர்கள் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ராஜாக்களாக சேவை செய்வார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்ததே பரலோக அரசாங்கம், அதாவது கடவுளுடைய ராஜ்யம். ஆயிரவருட ஆட்சியின் போது அது பூமியை ஆட்சி செய்து மனிதரை மீண்டும் பரிபூரணராக்கும். (மத்தேயு 6:10; 2 பேதுரு 3:13) அந்த வகுப்பின் பாகமாகவிருந்த முதல் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்கள், யூத ஒழுங்குமுறையில் தாங்கள் பெற்றிருந்த எதுவும் பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளுவதற்கு தங்களுக்கு கிடைத்த சிலாக்கியத்தோடு ஒப்பிட ஒன்றுமில்லாததென உணர்ந்துகொண்டனர்.

அப்போஸ்தலனாகிய பவுல் யூத மதத்தில் முன்பு தனக்கிருந்த உயர்ந்த பதவியைக் குறித்து எழுதியது, அவர்கள் அனைவரது மனநிலையையும் ஒத்திருந்தது; “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என அவர் எழுதினார்.​—பிலிப்பியர் 3:7, 8.

அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கும் ஆலய ஏற்பாட்டிற்கும் மிகுந்த மதிப்பு காட்டியதால், இந்த தெய்வீக ஏற்பாடுகள் அவமதிப்புக்குரியவை என அவருடைய வார்த்தைகள் நிச்சயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. b (அப்போஸ்தலர் 21:20-24) கிறிஸ்தவ ஏற்பாடு யூத ஒழுங்கை விட உயர்ந்ததாய் இருந்ததையே பவுல் சுட்டிக்காட்டினார்.

முதல் நூற்றாண்டிலிருந்த பவுலுக்கும் மற்ற யூத கிறிஸ்தவர்களுக்கும் யூத ஒழுங்குமுறையைப் பற்றிய ஆர்வமூட்டும் அநேக விவரங்களின் பேரில் தெளிவான அறிவு இருந்தது. கடந்த கால சம்பவங்களை அறிந்துகொள்வதற்கு தொல்லியல் வழிசெய்வதால் அந்த விவரங்களில் சிலவற்றை கிறிஸ்தவர்களால் இப்போது புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் இளைஞனாகிய தீமோத்தேயு எதில் தன் முக்கிய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டுமென பவுல் கூறினார் என்பதை கவனியுங்கள்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே [கிறிஸ்தவ சபை சம்பந்தப்பட்டவைகளையே] சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”​—1 தீமோத்தேயு 4:15.

பைபிள் சார்ந்த தொல்லியல், பைபிளின் பின்னணியைக் குறித்த நம் புரிந்துகொள்ளுதலை விரிவுபடுத்தியிருக்கிறது என்பது போற்றத்தக்க விஷயமே. என்றாலும், தங்களுடைய விசுவாசம் மனிதர் தோண்டியெடுத்து கண்டுபிடித்த அத்தாட்சியின் பேரில் அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை சார்ந்தது என கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.​—1 தெசலோனிக்கேயர் 2:13; 2 தீமோத்தேயு 3:16, 17. (g02 10/8)

[அடிக்குறிப்புகள்]

a கான்ஸ்டன்டைனும் அவரது தாய் ஹெலனாவும் எருசலேமின் புண்ணிய ஸ்தலங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வமுடையோராய் இருந்தனர். அதற்காக அவரது தாய் எருசலேமுக்கு விஜயம் செய்தார். தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் அவரைப் போலவே பலரும் அங்கு சென்றனர்.

b எருசலேமிலிருந்த முதல் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்கள் பின்வரும் காரணங்கள் நிமித்தம் ஒரு காலப்பகுதி வரையில் மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள பல்வேறு அம்சங்களை அனுசரித்து வந்ததாக தெரிகிறது. அது யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணம். (ரோமர் 7:12, 14) அது ஒரு பழக்கமாக யூத மக்களில் ஆழமாக பதிந்திருந்தது. (அப்போஸ்தலர் 21:20) அது அத்தேசத்தின் சட்டமாக இருந்தது, ஆகவே அதற்கு எதிரான எந்த செயலும் கிறிஸ்தவ செய்திக்கு அநாவசியமான எதிர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கும்.

[பக்கம் 10-ன் படங்கள்]

மேலே: 1920-⁠ல் எருசலேம்; பொ.ச. 43-⁠ம் ஆண்டில் யூதர்கள் பயன்படுத்திய ரோம நாணயம்; தந்தத்தாலான மாதுளை, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்த சாலொமோனின் ஆலயத்தை சேர்ந்ததாக இருக்கலாம்

[படங்களுக்கான நன்றி]

பக்கங்கள் 2, 10: நாணயம்: Photograph © Israel Museum, Jerusalem; courtesy of Israel Antiquities Authority; மாதுளை: Courtesy of Israel Museum, Jerusalem