Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதானம் எனும் நம்பிக்கை சுடர் மங்கி வருகிறதா?

சமாதானம் எனும் நம்பிக்கை சுடர் மங்கி வருகிறதா?

சமாதானம் எனும் நம்பிக்கை சுடர் மங்கி வருகிறதா?

“சூறாவளியின் மத்தியில், அதாவது ஈடிணையற்ற பேரழிவின் மத்தியில் . . . வாழ்ந்து வருகிறோம் என்ற உணர்வுதான் இன்று நமக்குள் சில்லிடுகிறது.”​—“லா ரேப்பூப்ளிக்கா” செய்தித்தாள், ரோம், இத்தாலி.

நியூ யார்க் நகரத்திலும் வாஷிங்டன், டி.ஸி.-யிலும் கடந்த வருடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பற்றி என்றுமில்லாத அளவுக்கு அநேகர் சிந்திக்கிறார்கள். இரட்டை கோபுரங்கள் அக்கினி ஜூவாலையில் தகர்ந்து விழுந்த காட்சிகளும்​—உயிருக்காக தத்தளித்தவர்களின் காட்சிகளும்—​சின்னத்திரைகளில் அலைகளாய் மீண்டும் மீண்டும் வந்துபோயின. உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு இந்தக் காட்சிகள் கடுந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோடு, வரலாறு காணாத மாற்றத்தை இந்த உலகம் கண்டிருக்கிறது என்ற உணர்வையும் ஊட்டியிருக்கின்றன. உண்மையிலேயே உலகம் அவ்வாறு மாற்றத்தைக் கண்டிருக்கிறதா?

செப்டம்பர் 11, 2001-⁠க்குப் பின்பு போர் வெடித்தது. சீக்கிரத்திலேயே, விரோதிகளாக இருந்த தேசங்கள் பயங்கரவாதத்தைக் குழிதோண்டி புதைப்பதற்கு கூட்டு முயற்சிகள் எடுப்பதில் கைகோர்த்துக் கொண்டன. மொத்தத்தில், சாவும் சேதமும் எண்ணிக்கையில் இமயத்தை எட்டின. ஆனால், பாதுகாப்புணர்வை இழந்திருப்பதே​—யாருமே, எங்குமே உண்மையில் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு அதிகரித்திருப்பதே​—பெரும்பாலான உலக மக்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது.

உலக தலைவர்கள் பயங்கர பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதழாசிரியர்களும் செய்தியாளர்களும் பயங்கரவாதம் காட்டுத்தீ போல பரவி வருவதை தடுக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கின்றனர்; ஏனென்றால் இவ்வாறு பரவும் தீக்கு எண்ணெய் வார்ப்பதாக தோன்றுவது வறுமையும் வெறியுமே. இத்தொல்லைகளுக்கோ யாரிடமும் தீர்வு இருப்பதாக தெரியவில்லை. இந்த உலகில் அநீதி அவ்வளவு அதிகமாக தலைவிரித்தாடுவதால், பயங்கர அழிவை ஏற்படுத்துவதற்கு சாதகமான எல்லாவித அம்சங்களும் நிலவுவதாக சொல்லலாம். சமுதாயத்தின் இந்த குறைகள் என்றாவது நிவிர்த்தி செய்யப்படுமா என்று பல தரப்பினரும் யோசிக்கின்றனர். பெருந்துயரத்தையும் சாவையும் அழிவையும் கொண்டுவரும் போர் என்றாவது முடிவுக்கு வருமா?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண கோடானு கோடி மக்கள் மதத்தின்மீது தங்கள் கவனத்தைத் திருப்புகின்றனர். ஆனால் மற்றவர்களோ மிகவும் சந்தேகவாதிகளாய் இருக்கின்றனர். நீங்கள் எப்படி? இந்தக் கேள்விகளுக்கு மதத் தலைவர்களால் பதிலளிக்க முடியும் என நினைக்கிறீர்களா? ஜெபங்களின் மூலம் அவர்களால் உண்மையிலேயே சமாதானத்தைக் கொண்டுவர முடியுமா? (g02 10/22)