Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

ரோமர் 10:13—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்’

ரோமர் 10:13—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்’

 “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”—ரோமர் 10:13, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”—ரோமர் 10:13, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

ரோமர் 10:13-ன் அர்த்தம்

 கடவுள் பாரபட்சம் பார்க்காதவர். மீட்புப் பெறுவதற்கும் முடிவில்லாமல் வாழ்வதற்குமான வாய்ப்பை தேசம், இனம், சமூக அந்தஸ்து என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமே அவர் கொடுக்கிறார். நாம் அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு, யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வது அவசியம். யெகோவா என்பதுதான் சர்வவல்லமையுள்ள கடவுளுடைய பெயர். aசங்கீதம் 83:18.

 பைபிளில், ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வது’ என்பது கடவுளுடைய பெயரைத் தெரிந்து வைத்திருப்பதையும் அதை வணக்கத்தில் பயன்படுத்துவதையும் மட்டுமே குறிப்பதில்லை. (சங்கீதம் 116:12-14) கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதையும் உதவிக்காக அவரை சார்ந்திருப்பதையும்கூட அது குறிக்கிறது.—சங்கீதம் 20:7; 99:6.

 இயேசு கிறிஸ்து கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்த ஜெபத்தின் முதல் வரிகளே, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்பதுதான். (மத்தேயு 6:9) முடிவில்லாமல் வாழ்வதற்கு நாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும் என்றெல்லாம்கூட இயேசு சொன்னார்.—யோவான் 17:3, 6, 26.

 ரோமர் 10:13-ல் (தமிழ் O.V. பைபிள்) ‘கர்த்தர்’ என்று சொல்லப்பட்டிருப்பது யெகோவாவைத்தான் குறிக்கிறது என்று நாம் எப்படிச் சொல்லலாம்? யோவேல் 2:32-ல் உள்ள வார்த்தைகள்தான் ரோமர் 10:13-ல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. முதன்முதலாக எழுதப்பட்ட எபிரெய மொழியில் யோவேல் 2:32-ல் ‘கர்த்தர்’ என்ற பட்டப்பெயருக்குப் பதிலாக யெகோவா என்ற பெயர்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. b

ரோமர் 10:13-ன் பின்னணி

 இயேசு கிறிஸ்துமேல் விசுவாசம் வைத்தால்தான் கடவுளைப் பிரியப்படுத்த முடியும் என்று ரோமர் 10-ஆவது அதிகாரம் காட்டுகிறது. (ரோமர் 10:9) இதற்கு ஆதாரமாக, பழைய ஏற்பாட்டில் இருக்கும் நிறைய வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மீட்பு பற்றிய நல்ல செய்தியையும் கடவுளைப் பற்றிய உண்மைகளையும் “அறிவிக்கும்போது” ஒருவர் தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டுகிறார். அதன் மூலம், மற்றவர்களும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும், முடிவில்லாமல் வாழும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.—ரோமர் 10:10, 14, 15, 17.

ரோமர் 10-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்.

a பழங்கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் சுமார் 7,000 தடவை வருகிறது. எபிரெய மொழியில், கடவுளுடைய பெயரைக் குறிப்பதற்கு நான்கு மெய்யெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பெயரை “யாவே” என்று உச்சரிப்பதுதான் சரி என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், அது பொதுவாக “ஜெஹோவா” என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுகிறது.

b பைபிள் எழுத்தாளர்கள், “பழைய ஏற்பாட்டு” வசனங்களை மேற்கோள் காட்டியபோது கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதை அப்படியே பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது. தி ஆன்க்கர் பைபிள் டிக்‍ஷ்னரி இப்படிச் சொல்கிறது: “புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் முதன்முதலில் எழுதப்பட்டபோது, அதில் எங்கெல்லாம் பழைய ஏற்பாட்டு வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டதோ அங்கெல்லாம் அல்லது அவற்றில் சில இடங்களில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த இடங்களில் கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு மெய்யெழுத்துக்கள், அதாவது யாவே என்ற பெயர், பயன்படுத்தப்பட்டது.” (தொகுப்பு 6, பக்கம் 392) கூடுதலான விவரங்களுக்கு, பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பின் ஆராய்ச்சி பதிப்பில் “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்” என்ற இணைப்பு A5-ஐப் பாருங்கள். எந்தெந்த பைபிள் மொழிபெயர்ப்புகள் ரோமர் 10:13-ல் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தி இருக்கின்றன என்ற பட்டியலை இணைப்பு C2-ல் பாருங்கள்.