பைபிள் தரும் பதில்

மனிதர்கள் எல்லாருக்குமே பெயர் இருக்கிறது. அப்படியானால், கடவுளுக்கும் ஒரு பெயர் இருக்கும்தானே? மனிதர்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருப்பதும், அதை அவர்கள் பயன்படுத்துவதும் ரொம்பவே அவசியமாக இருக்கிறது. அப்படியானால், கடவுளோடு இருக்கும் நம்முடைய நட்பு விஷயத்திலும் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்?

நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்” என்று பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிறார். (ஏசாயா 42:8) “சர்வவல்லமையுள்ள கடவுள்,” ‘உன்னதப் பேரரசர்,’ ‘படைப்பாளர்’ போன்ற நிறைய பட்டப்பெயர்கள் கடவுளுக்கு இருந்தாலும், தன்னுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிடும் பாக்கியத்தைத் தன் வணக்கத்தாருக்கு அவர் கொடுத்திருக்கிறார்.—ஆதியாகமம் 17:1; அப்போஸ்தலர் 4:24; 1 பேதுரு 4:19.

பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை யாத்திராகமம் 6:3-ல் பதிவு செய்துள்ளன. அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன். ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப் பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

ஆங்கிலத்தில் கடவுளுடைய பெயர் ஜெஹோவா என்று பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிஞர்கள் பலர் “யாவே” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்த விரும்பினாலும், ஜெஹோவா என்ற பெயர்தான் மிகப் பிரபலமாக அறியப்பட்டிருக்கிறது. பைபிளுடைய முதல் பாகம் ஆங்கிலத்தில் அல்ல, எபிரெயுவில் எழுதப்பட்டது; இது வலமிருந்து இடமாக வாசிக்கப்படுகிற மொழி. இந்த மொழியில் கடவுளுடைய பெயர், יהוה என்ற நான்கு மெய்யெழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கிறது. ய்ஹ்வ்ஹ் என்று ஒலிபெயர்க்கப்படுகிற இந்த நான்கு எபிரெய எழுத்துக்கள் டெட்ரக்ராமட்டன் என்று அழைக்கப்படுகின்றன.