Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 2

என் தோற்றத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறேன்?

என் தோற்றத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறேன்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

கண்ணாடியில் நீங்கள் பார்க்கிற விஷயங்களைவிட வேறு சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: ஜூலியா கண்ணாடியைப் பார்த்துவிட்டு, பயங்கர குண்டாக இருப்பதாக நினைக்கிறாள். அவளுடைய பெற்றோரும் நண்பர்களும் அவளை “ஒல்லிக்குச்சி” என்று சொன்னாலும், “இன்னும் உடம்பை குறைக்கணும்” என்று அவள் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான், எப்படியாவது “2 கிலோ” குறைக்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அவள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்... கொஞ்ச நாட்களுக்கு பட்டினி கிடக்க வேண்டும்!

ஜூலியா நினைப்பது போல்தான் நீங்களும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நன்றாக யோசியுங்கள்!

சரியாகத் தெரியாத கண்ணாடியில் உங்கள் தோற்றம் ஒழுங்காகத் தெரியாதது போல, நீங்களும் உங்கள் தோற்றத்தைப் பற்றி தவறாக நினைக்கலாம்

உங்கள் தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால் சாராள், ராகேல், அபிகாயில் போன்ற பெண்களின் தோற்றத்தைப் பற்றியும் யோசேப்பு, தாவீது போன்ற ஆண்களின் தோற்றத்தைப் பற்றியும் பைபிள் வர்ணிக்கிறது. அபிஷாக் என்ற பெண் “வெகு அழகாயிருந்தாள்” என்று பைபிள் சொல்கிறது.—1 இராஜாக்கள் 1:4.

இளைஞர்கள் நிறைய பேர், அவர்களுடைய தோற்றத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யோசிப்பது, மோசமான பிரச்சினைகளில் போய் முடியலாம். இதைக் கொஞ்சம் கவனியுங்கள்:

  • அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி, தாங்கள் குண்டாக இருப்பதாக 58% பெண்கள் சொல்லிக்கொண்டாலும் 17% பெண்கள்தான் குண்டாக இருந்தார்கள்.

  • அமெரிக்காவில் செய்யப்பட்ட இன்னொரு ஆராய்ச்சியின்படி, எடை குறைவாக இருந்த 45% பெண்கள், தாங்கள் ரொம்ப குண்டாக இருப்பதாக நினைத்தார்கள்!

  • உடம்பைக் குறைப்பதற்காக, சில இளைஞர்கள் உயிருக்கே உலை வைக்கும் அனொரெக்ஸியாவால் (Anorexia) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது, சரியாகச் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் மோசமான உணவு பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனொரெக்ஸியா இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அல்லது வேறு ஏதாவது மோசமான உணவு பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தால், உதவி கேளுங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடமோ நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடமோ இதைப் பற்றி பேசுங்கள். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 17:17.

உங்களால் முன்னேற்றம் செய்ய முடியும்!

நாம் அழகாக இருக்கிறோமா இல்லையா என்பது நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. தாவீதின் மகன் அப்சலோமைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்:

“அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை. . . . அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.”—2 சாமுவேல் 14:25.

ஆனாலும், அவன் தலைக்கனம் பிடித்தவனாக, லட்சிய வெறி உள்ளவனாக, நம்பிக்கை துரோகியாக இருந்தான்! அதனால், பைபிள் அவனைப் பற்றி நல்லவிதமாக சொல்லவில்லை. அவனை வெட்கங்கெட்டவனாக, உண்மை இல்லாதவனாக, கொலை வெறி பிடித்தவனாக பைபிள் வர்ணிக்கிறது.

நம்முடைய நன்மைக்காக, பைபிள் இப்படி ஆலோசனை சொல்கிறது:

“புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:10.

“வெளிப்புற அலங்காரம் உங்களுக்கு அலங்காரமாக இருக்க வேண்டாம் . . .  மாறாக, இருதயத்தில் மறைந்திருக்கிற அமைதியும் சாந்தமுமான குணமே உங்களுக்கு அழியாத அலங்காரமாக இருக்க வேண்டும்.”—1 பேதுரு 3:3, 4.

அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தோற்றத்தைவிட குணம்தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியமான உடல் அல்லது அழகைவிட, நல்ல குணங்கள்தான் காலப்போக்கில் மற்றவர்களைக் கவரும். “அழகு மத்தவங்கள சுலபமா கவரலாம். ஆனா, உண்மையிலேயே நீங்க எப்படிப்பட்டவங்க, உங்ககிட்ட என்னென்ன நல்ல குணங்கள் இருக்குங்கிறததான் மத்தவங்க முக்கியமா ஞாபகம் வைப்பாங்க” என்று சொல்கிறாள் ஃபிளிஷியா.

உங்களுடைய தோற்றம் எப்படி இருக்கிறது?

உங்களுடைய தோற்றத்தைப் பார்த்து அடிக்கடி கவலைப்படுகிறீர்களா?

உங்கள் தோற்றத்தில் இருக்கும் குறையைச் சரிசெய்ய, ஏதாவது ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றோ உணவு சாப்பிடும் விஷயத்தில் பயங்கர கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றோ நினைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய தோற்றத்தில் ஏதாவது மாற்றம் செய்ய முடிந்தால், என்ன மாற்றம் செய்வீர்கள்? (அதை வட்டமிடுங்கள்.)

  • உயரம்

  • எடை

  • முடி

  • உடல் வடிவம்

  • முகம்

  • நிறம்

முதல் இரண்டு கேள்விகளுக்கு ஆம் என்று பதில் சொல்லியிருந்தால், மூன்றாவது கேள்வியில் இருக்கும் குறிப்புகளில் மூன்று அல்லது அதற்கும் அதிகமானவற்றை வட்டமிட்டிருந்தால், இதை யோசித்துப் பாருங்கள்: நீங்கள் உங்களைப் பற்றி தவறாக நினைக்கும் அளவுக்கு மற்றவர்கள் நினைக்காமல் இருக்கலாம். உங்கள் தோற்றத்தைப் பற்றி நீங்கள் அளவுக்கதிகமாகக் கவலைப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.—1 சாமுவேல் 16:7.