2 சாமுவேல் 14:1-33

14  அப்சலோமைப் பார்க்க ராஜா ஏங்குகிறார்+ என்பதை செருயாவின்+ மகனான யோவாப் புரிந்துகொண்டார்.  அதனால் தெக்கோவாவுக்கு+ ஆள் அனுப்பி புத்திசாலி பெண் ஒருத்தியை வரவழைத்தார்; அவளிடம், “செத்துப்போன ஒருத்தருக்காகத் துக்கம் அனுசரிக்கிற மாதிரி நடி. துக்க உடையைப் போட்டுக்கொள். உடம்பில் எண்ணெய் பூசிக்கொள்ளாதே.+ யாரையோ பறிகொடுத்துவிட்டு ரொம்ப நாளாக அழுது புலம்புவதுபோல் காட்டிக்கொள்.  பின்பு, ராஜாவிடம் போய் நான் சொல்லிக்கொடுக்கிற மாதிரி பேசு” என்று சொன்னார். ராஜாவிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதை யோவாப் அவளுக்குச் சொல்லிக்கொடுத்தார்.  தெக்கோவா ஊரைச் சேர்ந்த அந்தப் பெண் ராஜாவின் முன்னால் போய் சாஷ்டாங்கமாய் விழுந்தாள்; பின்பு அவரிடம், “ராஜாவே, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று கெஞ்சினாள்.  அதற்கு ராஜா, “என்ன விஷயம்?” என்று கேட்டார். அப்போது அவள், “நான் ஒரு விதவை, என் கணவர் இறந்துவிட்டார்.  எனக்கு இரண்டு மகன்கள்; வயலில் இருந்தபோது இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அவர்களை விலக்கிவிட யாரும் இல்லாததால் ஒருவன் இன்னொருவனை வெட்டிக் கொன்றுவிட்டான்.  இப்போது குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் இந்த அடிமைப் பெண்ணுக்கு எதிராக வந்து, ‘சகோதரனைக் கொன்ற அந்தக் கொலைகாரனை எங்கள் கையில் ஒப்படைத்துவிடு. சகோதரனைக் கொன்றதற்காக அவனைப் பழிவாங்காமல் விட மாட்டோம்;+ உனக்கு வாரிசே இல்லாமல் போனாலும் பரவாயில்லை!’ என்று சொல்கிறார்கள். என்னிடம் இருக்கிற கடைசி தணலையும் அவர்கள் அணைத்துவிட்டால், இந்தப் பூமியில் என் கணவருடைய பெயர் சொல்ல வாரிசே இல்லாமல் போய்விடும்” என்று சொன்னாள்.  அதற்கு ராஜா அவளிடம், “நீ வீட்டுக்குப் போ, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்.  தெக்கோவா ஊரைச் சேர்ந்த அந்தப் பெண், “ராஜாவே, என் எஜமானே, என் மகன் செய்த பாவத்துக்கு நானும் என் தகப்பன் குடும்பமும் பழியை ஏற்றுக்கொள்கிறோம். ராஜாவுக்கோ அவருடைய அரசுக்கோ எந்தக் களங்கமும் வராது” என்று சொன்னாள். 10  அதற்கு ராஜா அவளிடம், “இதைப் பற்றி உன்னிடம் எவனாவது வாய் திறந்தால், அவனை என்னிடம் கூட்டிக்கொண்டு வா; இனிமேல் அவன் உனக்கு எந்தத் தொந்தரவும் தராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னார். 11  அதற்கு அவள், “ராஜாவே, தயவுசெய்து உங்கள் கடவுளாகிய யெகோவாவை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பழிவாங்கத் திரிகிறவன்+ எனக்கிருக்கும் ஒரே மகனையும் கொன்று என் கஷ்டத்தைக் கூட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னாள். அதற்கு அவர், “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,*+ அவனுடைய தலையிலிருந்து ஒரு முடிகூட கீழே விழாது” என்று சொன்னார். 12  அந்தப் பெண் அவரிடம், “ராஜாவே, என் எஜமானே, இந்த அடிமைப் பெண் உங்களிடம் ஒன்று சொல்லலாமா?” என்று கேட்டாள். அதற்கு அவர், “சொல்!” என்றார். 13  அந்தப் பெண், “ராஜாவே, கடவுளுடைய ஜனங்களுக்குக்+ கெடுதல் வருகிற மாதிரியான காரியத்தை ஏன் செய்கிறீர்கள்? இப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகளால் உங்களையே குற்றவாளியாக்கிக்கொண்டீர்களே. நீங்களே உங்கள் மகனைத் திருப்பிக் கூப்பிடாமல் ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே.+ 14  தரையில் சிந்திய தண்ணீரைத் திரும்பவும் அள்ள முடியாது. அதே மாதிரிதான் நம் உயிரும், போனால் போனதுதான். இருந்தாலும், நாம் யாரும் சாவதைக் கடவுள் விரும்புவதில்லை. தவறு செய்ததற்காக ஒதுக்கி வைக்கப்பட்டவனை அப்படியே விட்டுவிடாமல் அவனை மறுபடியும் சேர்த்துக்கொள்ளத்தான் கடவுள் வழிதேடுகிறார். 15  எஜமானே, மக்கள் என்னைப் பயமுறுத்தியதால்தான் உங்களிடம் இதைச் சொல்ல வந்தேன். ‘ராஜாவிடம் பேசிப் பார்க்கலாம், ஒருவேளை அவர் இந்த அடிமைப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்; 16  ராஜா நான் சொல்வதைக் கேட்டு, கடவுள் தந்த தேசத்தில் நானும் என்னுடைய ஒரே மகனும் பழிவாங்கத் திரிகிறவன் கையில் அழிந்துபோகாமல் காப்பாற்றுவார்’+ என்று நினைத்து வந்தேன். 17  அதோடு, ராஜாவிடம் போனால் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்து வந்தேன். எஜமானே, உண்மைக் கடவுளின் தூதரைப் போல் எது சரி எது தவறு என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்” என்று சொன்னாள். 18  அப்போது ராஜா அவளிடம், “நான் கேட்கிற கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்” என்றார். அதற்கு அவள், “கேளுங்கள் ராஜாவே” என்று சொன்னாள். 19  ராஜா அவளிடம், “யோவாப்தானே உன்னை அனுப்பிவைத்தான்?”+ என்று கேட்டார். அதற்கு அவள், “ஆமாம் ராஜாவே, நீங்கள் சொல்வது சரிதான்.* உங்கள் உயிர்மீது ஆணையாகச் சொல்கிறேன்.* உங்கள் ஊழியர் யோவாப்தான் இப்படியெல்லாம் பேசச்சொல்லி என்னிடம் சொன்னார். 20  இப்போது இருக்கிற நிலைமையைச் சரிசெய்யத்தான் உங்கள் ஊழியர் யோவாப் இப்படிச் செய்தார். ஆனால், என் எஜமான் உண்மைக் கடவுளின் தூதரைப் போல ஞானமுள்ளவர். எந்த மூலையில் எது நடந்தாலும் உங்களுக்குத் தெரியாமல் போகாது” என்று சொன்னாள். 21  பின்பு ராஜா யோவாபைக் கூப்பிட்டு, “சரி, நீ சொன்னபடியே செய்கிறேன்.+ நீ போய் அப்சலோமைக் கூட்டிக்கொண்டு வா”+ என்று சொன்னார். 22  அதைக் கேட்டதும் யோவாப் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து, ராஜாவைப் புகழ்ந்தார். அதோடு, “ராஜாவே, அடியேனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டீர்கள். எஜமானே, என்மீது உங்களுக்குப் பிரியம் இருக்கிறது என்பதை இன்றைக்குத் தெரிந்துகொண்டேன்” என்று சொன்னார். 23  பின்பு, யோவாப் கேசூருக்குப்+ போய் அப்சலோமை எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். 24  ஆனால் ராஜா அவரிடம், “அவன் என் முகத்தில் முழிக்க வேண்டாம், அவனுடைய வீட்டுக்கே போகட்டும்” என்று சொல்லிவிட்டார். அதனால் அப்சலோம் தன்னுடைய வீட்டுக்குப் போனான், அவன் ராஜாவைப் பார்க்கவில்லை. 25  இஸ்ரவேல் தேசத்தில், அப்சலோமைப் போல் பேரழகன் யாருமே இல்லை. எல்லாரும் அவனுடைய அழகைப் புகழ்ந்தார்கள். உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவனிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. 26  தன்னுடைய தலைமுடியின் பாரம் தாங்க முடியாமல் ஒவ்வொரு வருஷத்தின் முடிவிலும் அதை வெட்டிக்கொள்வான். அரண்மனை எடைக்கல்லின்படி,* அதன் எடை 200 சேக்கல்.* 27  அப்சலோமுக்கு மூன்று மகன்களும்+ ஒரு மகளும் இருந்தார்கள். அவனுடைய மகள் பெயர் தாமார். அவள் ரொம்ப அழகாக இருந்தாள். 28  அப்சலோம் எருசலேமுக்கு வந்து இரண்டு வருஷம் ஓடிவிட்டது, ஆனால் ராஜாவின் முகத்தை அவன் பார்க்கவில்லை.+ 29  அதனால், ராஜாவிடம் தூதுபோக யோவாபை வரச் சொல்லி அப்சலோம் ஆள் அனுப்பினான். ஆனால் அவர் வரவில்லை. இரண்டாவது தடவை கூப்பிட்டும் வரவில்லை. 30  கடைசியில் அப்சலோம் தன் வேலைக்காரர்களிடம், “யோவாபின் வயல் என்னுடைய வயலுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறது. அதில் அவர் பார்லி பயிரிட்டிருக்கிறார். நீங்கள் போய், அதைத் தீ வைத்துக் கொளுத்துங்கள்” என்று சொன்னான். அதனால், அப்சலோமின் வேலைக்காரர்கள் யோவாபின் வயலுக்குத் தீ வைத்தார்கள். 31  உடனே, யோவாப் எழுந்து அப்சலோம் வீட்டுக்கு வந்தார். அவனிடம், “ஏன் உன் வேலைக்காரர்கள் என் வயலுக்குத் தீ வைத்தார்கள்?” என்று கேட்டார். 32  அதற்கு அப்சலோம், “உங்களை வரச் சொல்லி ஆள் அனுப்பினேனே. எனக்காக ராஜாவிடம் நீங்கள் பேச வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் ராஜாவிடம் போய், ‘கேசூரிலிருந்து நான் எதற்காக வந்தேன்?+ நான் அங்கேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது ராஜாவைப் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும். என்மேல் தப்பு இருந்தால் அவர் என்னைக் கொல்லட்டும்’ என்று சொல்லி எனக்காகப் பேச வேண்டும்” என்று சொன்னான். 33  யோவாப் இந்த விவரத்தை ராஜாவிடம் போய் சொன்னார். உடனே அப்சலோமை ராஜா வரவழைத்தார். அவன் ராஜா முன்னால் போய் சாஷ்டாங்கமாய் விழுந்தான். ராஜா அவனுக்கு முத்தம் கொடுத்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நீங்கள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “உங்களுடைய வார்த்தைக்கு இடது பக்கமோ வலது பக்கமோ யாராலும் போக முடியாது.”
இது அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த எடைக்கல்லாக இருந்திருக்கலாம் அல்லது சாதாரண சேக்கலிலிருந்து வித்தியாசப்பட்ட “ராஜ” சேக்கலாக இருந்திருக்கலாம்.
சுமார் 2.3 கிலோ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா