Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப மகிழ்ச்சிக்கு

பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க . . .

பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க . . .

ஜார்ஜ்: a “ஒவ்வொரு நாளும் சாயங்காலம் இதே கதைதான். என்னுடைய நான்கு வயது மகன் மைக்கேல், பொம்மைகளை வீடு முழுக்க பரப்பிவிடுவான். அவற்றையெல்லாம் ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டுமென்று நான் சொல்வேன். ஆனால் அவன் வெறிபிடித்த மாதிரி கத்துவான். சில சமயங்களில் எனக்கும் கோபம் வந்துவிடும். அவனைக் கோபமாக அதட்டுவேன். இதனால், அவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வான்; எனக்கும் மனசு கஷ்டமாக இருக்கும். தூங்கப்போகும் நேரத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று நான் நினைப்பேன். அதனால், ‘இந்தப் பிரச்சினையே வேண்டாம்’ என்று அவற்றை நானே எடுத்து வைத்துவிடுவேன்.”

எமிலி: “ஒருசமயம் என்னுடைய 13 வயது மகள் ஜெனிக்கு ஸ்கூல் டீச்சர் கொடுத்த வீட்டுப்பாடத்தைப் புரிந்துகொள்ள முடியாமல்போனது. அன்றைக்கு ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து ஒரு மணிநேரமாக அழுதுகொண்டே இருந்தாள். அவளுக்குப் புரியாததை டீச்சரிடமே போய்க் கேட்கும்படி சொன்னேன். ஆனால், அந்த டீச்சர் சரியான கோபக்காரர் என்பதால் அவரிடம் பேசுவதற்குத் தனக்குப் பயமாய் இருப்பதாக அவள் சொன்னாள். எனக்கு உடனே ஸ்கூலுக்குப் போய், அந்த டீச்சரைப் பார்த்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும் போல் இருந்தது. என் மகளை அழ வைக்க யாருக்குமே உரிமையில்லை என்று தோன்றியது.”

ஜார்ஜ், எமிலி ஆகியோரின் வீட்டில் நடந்ததைப் போலவே உங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறதா? நிறையப் பெற்றோர்கள் இவர்களைப் போலத்தான் இருக்கிறார்கள்; தங்கள் பிள்ளைகள் ஒரு பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவதையோ சோகமாயிருப்பதையோ பார்க்க அவர்கள் விரும்புவதில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க நினைப்பது சகஜம்தான். மேலே சொல்லப்பட்டுள்ள சூழ்நிலைகள், பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வது சம்பந்தப்பட்ட பாடத்தை தங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க அந்தப் பெற்றோருக்கு வாய்ப்பளித்தன. ஆனால், 4 வயது பிள்ளைக்கும் 13 வயது பிள்ளைக்கும் ஒரே விதமான பாடங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது என்பது உண்மைதான்.

உங்கள் பிள்ளையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் எப்போதும் அவர்கள் கூடவே இருக்க முடியாது. காலப்போக்கில், பிள்ளைகள் தங்கள் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிய நேரிடும்; அப்போது அவர்கள் பொறுப்பை அவர்களே ‘சுமக்க’ வேண்டியிருக்கும். (கலாத்தியர் 6:5; ஆதியாகமம் 2:24) பிள்ளைகளை சுயநலமில்லாதவர்களாய், அக்கறையுள்ளவர்களாய், பொறுப்புள்ளவர்களாய் வளர்ப்பதில் பெற்றோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும்; அப்போதுதான் அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும். என்றாலும், அப்படி வளர்ப்பது அவ்வளவு சுலபமல்ல!

இந்த விஷயத்தில் பெற்றோர்களுக்குச் சிறந்த முன்னுதாரணம் இயேசு; தம் சீடர்களை அவர் நடத்திய விதமும், அவர்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்திய முறைகளும் பெற்றோர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகும். இயேசுவுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லைதான். என்றாலும், தாம் செய்துவந்த வேலையைத் தம் மரணத்திற்குப் பிறகும்கூட சீடர்கள் தொடர வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவித்தார்; அதில் வெற்றியும் கண்டார். (மத்தேயு 28:19, 20) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டுமென்ற குறிக்கோளில் வெற்றி காண விரும்புகிறார்கள். எனவே, மூன்று அம்சங்களில் பெற்றோருக்கு இயேசு வைத்த முன்மாதிரியை இப்போது நாம் சிந்திக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு “மாதிரியை” வையுங்கள்

இறப்பதற்குச் சில மணிநேரத்திற்கு முன்பு இயேசு தம் சீடர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (யோவான் 13:15) அதேபோல், பெற்றோரும் பொறுப்புள்ளவர்களாக நடப்பது எப்படி என்பதைப் பிள்ளைகளுக்குச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு நடந்து காட்டவும் வேண்டும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு இருக்கிற குடும்பப் பொறுப்புகளைப் பற்றி எப்போதும் நல்ல விதத்தில் பேசுகிறேனா? மற்றவர்களுக்காக உழைப்பதில் கிடைக்கிற மன நிறைவைப் பற்றிப் பேசுகிறேனா? அல்லது, சொகுசாக வாழ்கிறவர்களோடு அடிக்கடி என்னை ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்புகிறேனா?’

நாம் யாருமே பரிபூரணர் இல்லைதான். சில நேரங்களில் தலைக்குமேல் வேலை இருப்பது போலவும் உணர்கிறோம். ஆனால், பெற்றோராகிய நீங்கள் வைக்கிற முன்மாதிரிக்கு ரொம்பவே சக்தியிருக்கிறது; பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் உங்களிடமிருந்து பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்.

இப்படிச் செய்துபாருங்கள்: முடிந்தால், உங்கள் பிள்ளையை உங்களுடன் அழைத்துச் சென்று, குடும்பத்தைக் காப்பாற்ற நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் எனக் காட்டுங்கள். ஒருவருக்கு உதவி செய்யப்போகும்போது, உங்கள் பிள்ளையையும் கூடவே அழைத்துச் செல்லுங்கள். பிறகு, அந்த வேலையில் கிடைத்த சந்தோஷத்தைப் பற்றிப் பேசுங்கள்.—அப்போஸ்தலர் 20:35.

எதார்த்தமான எதிர்பார்ப்புகளை வையுங்கள்

தாம் எதிர்பார்க்கிற அளவுக்குச் சீடர்கள் தகுதிபெற கொஞ்சக் காலம் எடுக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஒருமுறை அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.” (யோவான் 16:12) எந்தக் காரியத்தையும் சொல்லிக்கொடுக்காமல் அவர்களாகவே செய்யும்படி இயேசு விட்டுவிடவில்லை. நிறைய நேரமெடுத்து அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார். சீடர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள் எனத் தெரிந்த பிறகே அவர்களைச் சொந்தமாகச் செய்யச் சொன்னார்.

அதேபோல், பிள்ளைகள் பெரிய பெரிய பொறுப்புகளைச் சுமப்பதற்குத் தயாராகும் முன்பே பெற்றோர் அவற்றை அவர்கள்மேல் திணிப்பது நியாயமல்ல. பிள்ளைகள் வளர வளர, அவர்களால் என்னென்ன வேலை செய்ய முடியும், என்னென்ன பொறுப்புகளை ஏற்க முடியும் என்பதைப் பெற்றோர் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, அறையைச் சுத்தம் செய்வது, நேரம் தவறாமல் இருப்பது, பணத்தை ஞானமாகச் செலவிடுவது போன்ற விஷயங்களில் எப்படிப் பொறுப்புடன் நடந்துகொள்ளலாம் என்பதைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுப்பாடங்களைச் செய்வது பிள்ளைகளுடைய முக்கியப் பொறுப்பு என்பதை அவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கும்போதே பெற்றோர் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

பெற்றோர்கள் வெறுமனே பிள்ளைகளுக்குப் பொறுப்புகளைக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜார்ஜ், பொம்மைகளை எடுத்து வைப்பது மைக்கேலுக்குப் பெரிய வேலையாகத் தெரிந்ததுதான் அவன் கோபத்திற்கான ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொண்டார். “பொம்மைகளை எடுத்துவைக்கும்படி அதட்டுவதற்குப் பதிலாக, அதை எப்படி ஒழுங்காகச் செய்வதெனச் சொல்லிக்கொடுத்தேன்” என்று சொல்கிறார்.

அவர் என்ன சொல்லிக் கொடுத்தார்? ஜார்ஜ் இப்படிச் சொல்கிறார்: “முதலில், ஒவ்வொரு இரவும் பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கென்று ஒரு நேரத்தைக் குறித்துவிட்டேன். பின்பு, ஒரு பக்கம் அவன் அடுக்க மற்றொரு பக்கம் நானும் சேர்ந்து அடுக்கினேன். ‘யார் முதலில் அடுக்குகிறாரெனப் பார்ப்போம்’ என்று சொல்லி அதையே ஒரு விளையாட்டாக மாற்றிவிட்டேன். சீக்கிரத்தில் இதுவே எங்களுடைய வாடிக்கையானது. இந்த வேலையை மைக்கேல் சீக்கிரமாகச் செய்து முடித்தால், தூங்குவதற்கு முன்பு கூடுதலாக ஒரு கதையை வாசித்து காட்டுவதாகச் சொன்னேன். சொன்ன நேரத்திற்குள் அதைச் செய்து முடிக்காவிட்டால், ‘கொஞ்ச நேரம் மட்டுமே கதை சொல்வேன்’ என்று சொன்னேன்.”

இப்படிச் செய்துபாருங்கள்: குடும்பம் சுமூகமாக இயங்குவதற்கு, ஒவ்வொரு பிள்ளைக்கும் என்னென்ன பொறுப்புகளைக் கொடுக்கலாம் என யோசித்துப் பாருங்கள். ‘பிள்ளைகளுக்காக நான் செய்து கொடுக்கிற வேலைகளை அவர்களாகவே செய்துகொள்ள முடியுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். முடியாது என்றால், அவர்களாகவே செய்துகொள்ளப் பழகும்வரை நீங்களும் கூடமாட உதவுங்கள். பிள்ளைகள் தங்களுடைய பொறுப்புகளைச் சரியாகச் செய்தால் பரிசு கொடுப்பீர்கள் என்றும், சரியாகச் செய்யாவிட்டால் தண்டனை கொடுப்பீர்கள் என்றும் தெளிவாகச் சொல்லுங்கள். பின்பு, சொன்னபடி செய்யுங்கள்.

திட்டவட்டமான ஆலோசனை கொடுங்கள்:

ஒரு வேலையைச் செய்வதுதான் அதைக் கற்றுக்கொள்வற்குச் சிறந்த வழி என்பது நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்; அதை இயேசுவும் அறிந்திருந்தார். உதாரணமாக, சீடர்கள் தகுதி பெற்றுவிட்டார்களென இயேசு நினைத்தபோது, “தாம் போகவிருந்த ஒவ்வொரு நகரத்திற்கும் இடத்திற்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக” அனுப்பினார். (லூக்கா 10:1) இருந்தாலும், அவர்களைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் விட்டுவிடவில்லை. திட்டவட்டமான ஆலோசனைகளைக் கொடுத்தனுப்பினார். (லூக்கா 10:2-12) சீடர்கள் திரும்பி வந்து தங்கள் வேலையை வெற்றிகரமாகச் செய்ததைப் பற்றிச் சொன்னபோது அவர்களைப் பாராட்டி ஊக்கமளித்தார். (லூக்கா 10:17-24) அவர்களுடைய திறமைமீது தமக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உங்கள் பிள்ளை ஒரு கஷ்டமான பொறுப்பைச் செய்துமுடிக்க வேண்டியிருக்கும்போது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? உங்கள் பிள்ளையைப் பயமுறுத்துகிற பிரச்சினையிலிருந்து நீங்கள் அவனை(ளை) காப்பாற்றிவிடுகிறீர்களா? ஏமாற்றமோ தோல்வியோ அடைந்துவிடாமல் அவனை(ளை) பாதுகாக்கிறீர்களா? அந்தப் பொறுப்பிலிருந்து உங்கள் பிள்ளையை “விடுவித்துவிட” வேண்டும் என்றோ, அதை நீங்களே செய்துமுடித்துவிட வேண்டும் என்றோ நினைக்கிறீர்களா?

ஆனால் இதைச் சிந்தித்து பாருங்கள்: ஒவ்வொரு முறையும் உங்கள் பிள்ளைகளை நீங்கள் இப்படி “காப்பாற்றி” விட்டால், அது எதைக் காட்டும்? அவர்கள் மீதும் அவர்களுடைய திறமையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டுமா? அல்லது, எல்லாவற்றிற்கும் உங்களையே நம்பியிருக்கிற கைக்குழந்தையாக நீங்கள் அவர்களை நினைக்கிறீர்கள் என்பதைக் காட்டுமா?

உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எமிலி தன் மகளின் பிரச்சினைக்கு எப்படித் தீர்வுகண்டார்? அவர் அதில் தலையிடுவதற்குப் பதிலாக, ஜெனியே டீச்சரிடம் அதைப் பற்றிப் பேசி சரிசெய்ய வேண்டுமெனத் தீர்மானித்தார். டீச்சரிடம் ஜெனி கேட்பதற்காக, இருவரும் சேர்ந்து கேள்விப் பட்டியலைத் தயாரித்தார்கள். பிறகு, டீச்சரிடம் எப்போது பேசுவது என்பதைத் தீர்மானித்தார்கள். எப்படிப் பேசுவது என ஒத்திகை பார்த்தார்கள். பின்பு நடந்ததைப் பற்றி எமிலி இவ்வாறு சொல்கிறார்: “ஜெனி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டீச்சரிடம் போய்ப் பேசினாள். அவளே முன்வந்து கேட்டதற்காக டீச்சர் அவளைப் பாராட்டினார். ஜெனி தன்னை நினைத்து பெருமிதம்கொண்டாள். எனக்கும்கூட அவளைப் பார்க்க பெருமையாக இருந்தது.

இப்படிச் செய்துபாருங்கள்: தற்போது உங்கள் பிள்ளை சந்திக்கும் பிரச்சினையை எழுதுங்கள். அதற்குப் பக்கத்தில், அந்தப் பிரச்சினையை நீங்களே தீர்த்துவைக்காமல் உங்கள் பிள்ளையே தீர்த்துக்கொள்வதற்கு எப்படி உதவலாம் என்பதையும் எழுதுங்கள். அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உங்கள் பிள்ளை எடுக்க வேண்டிய படிகளை அவனு(ளு)டன் சேர்ந்து ஒத்திகை பாருங்கள். அவனு(ளு)டைய திறமையில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம் நீங்கள் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறீர்களா? அப்படியென்றால், வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களுக்கு இருக்கிற திறமைக்கு நீங்களே முட்டுக்கட்டையாக இருப்பீர்கள். அதற்குப் பதிலாக, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள உதவினால் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துவீர்கள். இது உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுக்கிற ஒரு மிகச்சிறந்த பரிசு. (w10-E 05/01)

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். . .

  • என் பிள்ளைகளிடம் அளவுக்குமீறி எதிர்பார்க்கிறேனா?

  • என் பிள்ளைகள் வெற்றிகரமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டுமெனச் சொல்கிறேனா, அதைச் செய்து காட்டுகிறேனா?

  • என் பிள்ளையைக் கடைசியாக எப்போது உற்சாகப்படுத்தினேன் அல்லது பாராட்டினேன்?