யோவான் 16:1-33

16  “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருப்பதற்காக இவற்றை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.  அவர்கள் உங்களை ஜெபக்கூடத்தைவிட்டு நீக்கிவிடுவார்கள்.+ சொல்லப்போனால், உங்களைக் கொலை செய்கிறவர்கள்+ கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும்.  தகப்பனைப் பற்றியோ என்னைப் பற்றியோ தெரிந்துகொள்ளாததால் அவர்கள் இப்படியெல்லாம் செய்வார்கள்.+  ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+ இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்.  ஆனால், இப்போது என்னை அனுப்பியவரிடம் போகப் போகிறேன்.+ அப்படியிருந்தும், ‘எங்கே போகிறீர்கள்?’ என்று நீங்கள் யாருமே என்னிடம் கேட்கவில்லை.  நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.+  இருந்தாலும், உண்மையைச் சொல்கிறேன், உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் போகிறேன். நான் போகவில்லை என்றால் அந்தச் சகாயர்*+ உங்களிடம் வர மாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.  அவர் வரும்போது, பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு நம்பகமான அத்தாட்சி கொடுப்பார்.  அவர்கள் என்மேல் விசுவாசம் வைக்காததால்+ முதலில் பாவத்தைப்+ பற்றியும், 10  நான் தகப்பனிடம் போகப்போகிறேன் என்பதாலும் இனி நீங்கள் என்னைப் பார்க்க முடியாது என்பதாலும் நீதியைப் பற்றியும், 11  இந்த உலகத்தை ஆளுகிறவன் நியாயந்தீர்க்கப்பட்டிருப்பதால்+ நியாயத்தீர்ப்பைப் பற்றியும் அவர் நம்பகமான அத்தாட்சி கொடுப்பார். 12  இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. 13  இருந்தாலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தியாகிய+ அவர்* வரும்போது, சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வார். ஏனென்றால், அவர் சொந்தமாகப் பேசாமல் தான் கேட்கிறவற்றையே பேசுவார், வரப்போகும் காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார்.+ 14  அவர் என்னை மகிமைப்படுத்துவார்.+ ஏனென்றால், என்னிடம் கேட்ட விஷயங்களை உங்களுக்கு அறிவிப்பார்.+ 15  தகப்பனிடம் இருக்கிற எல்லாமே என்னுடையது.+ அதனால்தான், அவர்* என்னிடம் கேட்ட விஷயங்களை உங்களுக்கு அறிவிப்பார் என்று சொன்னேன். 16  இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள்,+ அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்” என்று சொன்னார். 17  அப்போது அவருடைய சீஷர்களில் சிலர், “‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்.’ ‘ஏனென்றால், நான் தகப்பனிடம் போகப்போகிறேன்’ என்றெல்லாம் சொல்கிறாரே, இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். 18  அதோடு, “‘கொஞ்சக் காலம்’ என்று சொல்கிறாரே, இதற்கு என்ன அர்த்தம்? என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை” என்றும் சொல்லிக்கொண்டார்கள். 19  அவர்கள் தன்னிடம் கேள்வி கேட்க நினைக்கிறார்கள் என்பதை இயேசு புரிந்துகொண்டு அவர்களிடம், “‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? 20  உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும். நீங்கள் வேதனைப்படுவீர்கள், ஆனால் உங்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும்.+ 21  குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண், தனக்குப் பிரசவ நேரம் வந்துவிட்டதற்காக வேதனைப்படுகிறாள். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்ட சந்தோஷத்தில் அந்த வேதனையை மறந்துவிடுகிறாள். 22  நீங்களும்கூட இப்போது வேதனைப்படுகிறீர்கள். ஆனால், நான் மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். அப்போது, உங்கள் இதயம் சந்தோஷத்தால் நிரம்பும்.+ உங்கள் சந்தோஷத்தை யாராலும் பறிக்க முடியாது. 23  அந்த நாளில் நீங்கள் என்னிடம் எந்தக் கேள்வியையும் கேட்க மாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும்,+ அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்.+ 24  இதுவரை நீங்கள் எதையுமே என்னுடைய பெயரில் கேட்கவில்லை. கேளுங்கள், அப்போது பெற்றுக்கொள்வீர்கள், நிறைவான சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். 25  ஒப்புமைகளைப் பயன்படுத்தி இவற்றை உங்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால், நான் ஒப்புமைகளைப் பயன்படுத்திப் பேசாத காலம் வரும். அப்போது, தகப்பனைப் பற்றி வெளிப்படையாகவே உங்களுக்குச் சொல்வேன். 26  அந்த நாளில் என்னுடைய பெயரில் நீங்கள் தகப்பனிடம் வேண்டிக்கொள்வீர்கள். அதற்காக, ஒவ்வொரு முறையும் நான் உங்களுக்காகத் தகப்பனிடம் வேண்டிக்கொள்ள அவசியம் இல்லை. 27  தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து,+ கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்.+ 28  தகப்பனின் பிரதிநிதியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். இப்போது இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடமே போகப்போகிறேன்”+ என்று சொன்னார். 29  அதற்கு அவருடைய சீஷர்கள், “இப்போதுதான் நீங்கள் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள், ஒப்புமைகளைப் பயன்படுத்திப் பேசவில்லை. 30  உங்களுக்கு எல்லாமே தெரியும், யாரும் உங்களைக் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது. அதனால், நீங்கள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்” என்று சொன்னார்கள். 31  அதற்கு இயேசு, “இப்போது நீங்கள் நம்புகிறீர்களா? 32  ஆனால் நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்.+ ஆனாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்.+ 33  என் மூலம் உங்களுக்குச் சமாதானம் கிடைப்பதற்காக இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன்.+ இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆறுதல்படுத்துகிறவர்.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.
13-ஆம் மற்றும் 14-ஆம் வசனங்களில் உள்ள “அவர்” என்ற வார்த்தை 7-ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘சகாயரை’ குறிக்கிறது. கடவுளுடைய சக்தியை ஆளுருவில் குறிப்பிடுவதற்காக “சகாயர்” என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தினார். இது ஒரு நபர் கிடையாது.
அதாவது, “அந்தச் சகாயர்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா