Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் நன்னெறியே மிகச் சிறந்ததா?

பைபிளின் நன்னெறியே மிகச் சிறந்ததா?

பைபிளின் நன்னெறியே மிகச் சிறந்ததா?

“சமுதாயத்திற்கு பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் கொடுக்கும் அடிப்படை நெறிகள் அடங்கிய விதிமுறைகள் தேவை.” இவ்வாறுதான் அனுபவமிக்க ஜெர்மன் எழுத்தாளரும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளருமான ஒருவர் குறிப்பிட்டார். நிச்சயமாகவே அதில் அர்த்தமிருக்கிறது. மனித சமுதாயம் ஸ்திரமாக இருப்பதற்கும் செழித்தோங்குவதற்கும், சரி எது தவறு எது, நல்லது எது கெட்டது எது என்பதை அடையாளம் காட்டுகிற, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்கள் அடங்கிய உறுதியான ஆதாரம் மக்களுக்கு வேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால், சமுதாயத்திற்கும் அதன் அங்கத்தினருக்கும் எந்த தராதரங்கள் மிகச் சிறந்தவை?

பைபிளில் உள்ள தராதரங்களே ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்னெறி முறைகள் என்றால், அவை நிலையான, மகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை வாழ ஒருவருக்கு உதவ வேண்டும். இவை அந்த நன்னெறிகளை கடைப்பிடித்து மகிழ்ச்சியாகவும் ஸ்திரமாகவும் வாழ்கிற சமுதாயத்தை உருவாக்கும். அப்படித்தானே? திருமண துணைக்கு விசுவாசமாக இருப்பது, அன்றாட வாழ்வில் நேர்மையாக நடந்துகொள்வது என்ற இந்த முக்கியமான இரண்டு விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் இப்பொழுது ஆராய்வோமாக.

உங்கள் துணையுடன் ஒன்றித்திருங்கள்

நம்முடைய படைப்பாளர் முதலில் ஆதாமை படைத்து பின்பு அவனுக்கு துணையாக ஏவாளை படைத்தார். அவர்களுடைய பந்தமே சரித்திரத்தில் முதன்முதலில் நிகழ்ந்த திருமண பந்தம், அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய உறவு. கடவுள் சொன்னார்: “கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.” சுமார் 4,000 வருடங்களுக்குப்பின், திருமணத்தைப் பற்றிய இந்தத் தராதரத்தை இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு மீண்டும் எடுத்துரைத்தார். வேறொரு துணையோடு பாலுறவு கொள்வதையும் கண்டனம் செய்தார்.​—ஆதியாகமம் 1:27, 28; 2:24, பொது மொழிபெயர்ப்பு; மத்தேயு 5:27-30; 19:5.

பைபிள் சொல்கிறபடி, அன்பும் பரஸ்பர மரியாதையுமே மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு முக்கியமான இரண்டு திறவுகோல்கள். குடும்பத் தலைவராகிய கணவன், மனைவிக்கு மிகச் சிறந்தது எதுவோ அதையே நாடுவதன் மூலம் சுயநலமற்ற அன்பை காண்பிக்க வேண்டும். அவளுடன் ‘விவேகத்தோடு’ வாழ வேண்டும், அவளிடம் ‘கசந்துகொள்ளக்’ கூடாது. மனைவி தன் கணவனை ‘ஆழ்ந்த மரியாதையோடு’ நடத்த வேண்டும். தம்பதிகள் இந்த நியமங்களைப் பின்பற்றினால், பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் அல்லது சமாளிக்கலாம். கணவன் தன் மனைவியோடும் மனைவி தன் கணவனோடும் ஒன்றித்திருக்க விரும்ப வேண்டும்.​—1 பேதுரு 3:1-7; கொலோசெயர் 3:18, 19; எபேசியர் 5:22-33.

ஒருவர் தன்னுடைய துணைக்கு துரோகம் செய்யாமல் விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற பைபிள் தராதரம் மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு வழிவகுக்குமா? சரி, ஜெர்மனியில் நடத்தப்பட்ட சுற்றாய்வின் முடிவை சற்று சிந்தித்துப் பாருங்கள். மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்கள் என்னென்ன என்று மக்களிடம் கேட்கப்பட்டது. சொல்லப்பட்ட அநேக அம்சங்களில் முதலிடம் வகிப்பது: ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல். தன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ தனக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதை அறியும்போது மணமானவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?

பிரச்சினைகள் எழும்பினால்?

ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் அதிக கருத்து வேறுபாடுகள் இருந்தால் என்ன செய்வது? அவர்களுடைய அன்பு தணிந்துபோனால் என்ன செய்வது? இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் திருமண பந்தத்தை துண்டித்துக்கொள்வது சிறந்ததாக இருக்காதா? அல்லது ஒருவருக்கொருவர் விசுவாசமாக ஒட்டியிருக்க வேண்டும் என்ற பைபிள் தராதரம் இப்பொழுது சரிப்பட்டு வருமா?

மனித அபூரணத்தின் காரணமாக எல்லா தம்பதியினருக்கும் பிரச்சினைகள் இருக்கும் என்பதை பைபிள் எழுத்தாளர்கள் ஒத்துக்கொள்கின்றனர். (1 கொரிந்தியர் 7:28) இருந்தாலும், பைபிளின் நன்னெறிகளை கடைப்பிடிக்கும் தம்பதியினர் ஒருவரையொருவர் மன்னிக்கவும் தங்களுடைய பிரச்சினைகளை சரிசெய்யவும் ஒன்றாக முயற்சி செய்கின்றனர். விபசாரம் அல்லது அடித்து கொடுமைப்படுத்துதல் போன்ற சூழ்நிலைமைகளில் ஒரு கிறிஸ்தவர் பிரிந்துபோவதையோ விவாகரத்து செய்வதையோ யோசித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கலாம் என்பது உண்மைதான். (மத்தேயு 5:32; 19:9) ஆனால் சரியான காரணமின்றி அல்லது வேறொருவரை மணமுடிக்கும் ஆசையில் அவசரப்பட்டு திருமண உறவை முறித்துக்கொள்வது சுயநலமாக இருக்கும். அது நிச்சயமாகவே ஒருவருடைய வாழ்க்கைக்கு ஸ்திரத்தன்மையையோ மகிழ்ச்சியையோ தராது. இப்பொழுது நாம் ஒரு அனுபவத்தைப் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் கலகலப்பாக இருந்த தன்னுடைய திருமண வாழ்க்கை இப்பொழுது கலகலத்து போய்விட்டது என்பதை பீட்டர் உணர்ந்தார். a ஆகவே, தன்னுடைய மனைவியை விட்டுவிட்டு மோனிகா என்ற பெண்ணுடன் சென்றுவிட்டார், இவரும் தன்னுடைய கணவனை கைவிட்டுவிட்டவர். வாழ்க்கை எப்படி இருந்தது? சில மாதங்கள் கழித்து மோனிகாவுடன் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்கையில், “நான் நினைச்ச மாதிரி அவ்வளவு ஈஸியாக இல்லை” என அவர் ஒப்புக்கொண்டார். ஏன்? முன்னாள் துணைக்கு இருந்த அதே குறைபாடுகள் புதிய துணையிடமும் இருந்தன. அதோடு, அவருடைய அவசர புத்தியும் சுயநலமாய் எடுத்த தீர்மானமும் பெரும் பணப் பிரச்சினையில் அவரை சிக்க வைத்தன. மேலும், தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றத்தால் மோனிகாவின் பிள்ளைகளும் உணர்ச்சி ரீதியில் அப்படியே இடிந்துபோய் விட்டனர்.

இந்த அனுபவம் காட்டுகிறபடி, ஒருவருடைய மண வாழ்க்கை எனும் கப்பல் புயலில் சிக்கும்போது அதைவிட்டு வெளியேறுவது சரியான பரிகாரம் அல்ல. மாறாக, புயல் வீசுகையில் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள நன்னெறிகளின்படி வாழ்வது பெரும்பாலும் மண வாழ்க்கையை மூழ்கவிடாமல் அமைதியான தண்ணீரிடம் வழிநடத்திச் செல்லும். இதுவே தாமஸ் மற்றும் டோரிஸ் தம்பதியினரின் வாழ்க்கையில் நடந்தது.

தாமஸுக்கும் டோரிஸுக்கும் திருமணமாகி 30-⁠க்கும் அதிகமான ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சமயத்தில் தாமஸ் மிதமிஞ்சி குடிக்க ஆரம்பித்தார். அதனால் டோரிஸ் மனச்சோர்வினால் அப்படியே அமிழ்ந்துவிட்டார், இருவரும் விவாகரத்து செய்துகொள்வதைப் பற்றி பேசினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், டோரிஸ் தன்னுடைய மனதிலுள்ளதை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் கொட்டினார். திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்வதை டோரிஸுக்கு அந்த சாட்சி எடுத்துக் காண்பித்தார். அதோடு, அவசரப்பட்டு பிரிந்துபோவதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என்றும், பரிகாரத்தை காண்பதற்கு முதலில் கணவனுடன் சேர்ந்து பேசிப் பாருங்கள் என்றும் உற்சாகப்படுத்தினார். அதைத்தான் டோரிஸ் செய்தார். சில மாதங்களிலேயே, விவாகரத்து செய்யும் யோசனையையும் கைவிட்டுவிட்டார்கள். தாமஸும் டோரிஸும் தங்களுடைய பிரச்சினைகளை ஒன்றுசேர்ந்து தீர்க்க முயன்றார்கள். பைபிளின் அறிவுரையை பின்பற்றியது அவர்களுடைய திருமண வாழ்க்கையை பலப்படுத்தியது, பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நேரத்தையும் அளித்தது.

எல்லா விஷயத்திலும் நேர்மை

மணத் துணைக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஒழுக்க விஷயத்தில் மனவுறுதியும் சரியான நியமங்களின் மீது பிரியமும் தேவை. நேர்மையற்ற உலகில் தொடர்ந்து நேர்மையாக வாழ்வதற்கும் இதே குணங்கள்தான் தேவைப்படுகின்றன. நேர்மையைப் பற்றி பைபிள் நிறைய விஷயங்கள் சொல்கின்றன. யூதேயாவில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடந்துகொள்ளவே விரும்புகிறோம்.” (எபிரெயர் 13:18, NW) அது எதை அர்த்தப்படுத்துகிறது?

நேர்மையான நபர் உண்மையுள்ளவராகவும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாதவராகவும் இருக்கிறார். மற்றவர்களுடன் பழகுகையில் பாரபட்சமற்றவராக​—⁠அதாவது, ஒளிவுமறைவற்றவராக, மதிப்புக்குரியவராக, வஞ்சனையற்றவராக, தவறான பாதையில் வழிநடத்தாதவராக​—⁠இருக்கிறார். மேலும், நேர்மையான நபர் சகமனிதரை ஏமாற்றாமல் உத்தமமாக நடந்துகொள்கிறார். நேர்மையானவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். அது ஆரோக்கியமான மனநிலைக்கு வழிநடத்துகிறது, மனித உறவுகளை முன்னேற்றுவிக்கிறது, பலப்படுத்துகிறது.

நேர்மையானவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? சந்தோஷமாக இருக்கிறார்கள் என அடித்துச் சொல்லலாம். எப்படியென்றால், ஊழலும் ஏமாற்றுதலும் எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கிறபோதிலும், நேர்மையான ஆட்களை பொதுவாக மற்றவர்கள் மெச்சுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, நேர்மை என்பது ஒரு நற்பண்பு, அதை 70 சதவீதத்தினர் உயர்வாக கருதினார்கள். மேலும், நம்முடைய வயது எதுவாக இருந்தாலும்சரி, நண்பர்கள் மத்தியில் நேர்மை என்பது பிரதானமாக தேவைப்படும் குணமாகும்.

12 வயதிலிருந்தே திருடுவதற்கு கிறிஸ்டைனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல ‘பிக்பாக்கெட்’ அடிப்பதில் கில்லாடியானாள். “சிலசமயங்களில் வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்கூட கொண்டுவந்ததாக” அவள் சொல்கிறாள். ஆனால் அவள் பலதடவை கைது செய்யப்பட்டிருக்கிறாள், சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் பயத்திலேயே அவள் எப்போதும் வாழ்ந்தாள். நேர்மையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் அவளுக்கு எடுத்துக் காட்டியபோது, பைபிளின் நன்னெறிகள் அவளைக் கவர்ந்தன. ‘திருடுகிறவன் இனித் திருடாமல் இருக்கக்கடவன்’ என்ற புத்திமதிக்கு கீழ்ப்படிய கற்றுக்கொண்டாள்.​—எபேசியர் 4:⁠28.

கிறிஸ்டைன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக முழுக்காட்டப்படுவதற்குள் நன்கு மாறிவிட்டாள், இனிமேலும் திருடியாக இல்லை. எல்லா விஷயங்களிலும் நேர்மையாக நடந்துகொள்ளவே அவள் முயற்சி செய்துவந்தாள், ஏனெனில் நேர்மைக்கும் மற்ற கிறிஸ்தவ குணங்களுக்கும் சாட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். லாஸிட்ஸெர் ரன்டுசௌ என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “நேர்மை, அடக்கம், அயலார் மீது அன்பு போன்ற நன்னெறிகள் [யெகோவாவின்] சாட்சிகளுடைய மதத்தில் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றன.” தன்னுடைய வாழ்க்கையில் செய்த மாற்றத்தைப் பற்றி கிறிஸ்டைன் எப்படி உணருகிறாள்? “திருடுவதை நிறுத்தியதால் நான் இப்பொழுது அதிக சந்தோஷமாக இருக்கிறேன். சமுதாயத்தில் மதிக்கத்தக்க ஒரு அங்கத்தினளாக இருப்பதாக உணருகிறேன்.”

அனைவருக்கும் நன்மை

தங்களுடைய துணைவருக்கு துரோகம் செய்யாமல் விசுவாசமாக இருப்பவர்களும் நேர்மையாக நடப்பவர்களும் தாங்கள் சந்தோஷமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் நன்மை செய்கிறார்கள். ஏமாற்றாமல் நேர்மையாக நடந்துகொள்பவர்களையே முதலாளிகள் வேலைக்கு அமர்த்துகிறார்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களையே நாம் அனைவரும் விரும்புகிறோம், நேர்மையான வியாபாரியிடமே பொருட்களை வாங்க நாம் செல்ல விரும்புகிறோம். ஊழலை வெறுக்கும் அரசியல்வாதிகளையும் போலீஸ்காரரையும் நீதிபதிகளையும் நாம் மதிக்கிறோம் அல்லவா? கட்டாயம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது மட்டுமல்ல, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நேர்மையாக நடந்துகொள்ளும்போதே சமுதாயம் நன்மையடைகிறது.

மேலும், கணவனுக்கு அல்லது மனைவிக்கு விசுவாசமாக இருப்பவர்களே நிலையான குடும்பங்களுக்கு அஸ்திவாரமாக இருக்கிறார்கள். ஐரோப்பிய அரசியல்வாதி ஒருவர் சொன்னதை பெரும்பாலான மக்கள் ஒத்துக்கொள்வர். அவர் சொன்னார்: “இந்நாள் வரை நிலைத்திருக்கும் [பாரம்பரிய] குடும்பமே மனிதரின் பாதுகாப்பிற்கும் நோக்கமுள்ள வாழ்க்கைக்கும் மிக முக்கிய புகலிடமாக திகழ்கிறது.” அமைதலான குடும்பம் இருக்கும் இடமே பெரியவர்களும் பிள்ளைகளும் உணர்ச்சிப்பூர்வமாக பாதுகாப்புடன் இருப்பதற்கு மிகச் சிறந்த வாய்ப்பளிக்கிறது. ஆகவே, திருமணத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பவர்கள் ஸ்திரமான சமுதாயத்தைக் கட்டுவதற்கு உதவுகிறார்கள்.

கணவனால் கைவிடப்பட்டவர்களோ விவாகரத்து நீதிமன்றங்களோ குழந்தையை யார் பராமரிப்பது பற்றிய வழக்குகளோ இல்லாமலிருந்தால் எல்லாரும் எவ்வளவு பயனடைவார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். பிக்பாக்கெட்காரர்களோ திருடர்களோ பணத்தை கையாடல் செய்கிறவர்களோ ஊழல் அதிகாரிகளோ மோசடி செய்யும் விஞ்ஞானிகளோ இல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதை வெறும் கனவாக கருதுகிறீர்களா? பைபிளிலும் அது நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டுகிறவர்களுக்கு அது ஒரு கனவல்ல. யெகோவாவின் மேசியானிய அரசாங்கம் வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியிலுள்ள மனித சமுதாயத்தை ஆளுகை செய்யும் என கடவுளுடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது. அந்த அரசாங்கத்தின் குடிமக்கள் அனைவரும் பைபிள் நன்னெறிகளுக்கு இசைவாக வாழ கற்பிக்கப்படுவார்கள். அப்பொழுது “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”​—சங்கீதம் 37:⁠29.

பைபிளின் நன்னெறியே மிகச் சிறந்த நன்னெறி

பைபிளில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் மனித யோசனையைக் காட்டிலும் மிகவும் உன்னதமான தெய்வீக ஞானத்தின் அடிப்படையிலானவை என்பதை பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்த லட்சக்கணக்கானோர் மதித்துணருகிறார்கள். பைபிள் நம்பகமானது, நம்முடைய நவீன உலகிற்கு நடைமுறையானது என இவர்கள் கருதுகிறார்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரைக்கு செவிசாய்ப்பது தங்களுடைய மிகச் சிறந்த நன்மைக்கே என்பதையும் இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

ஆகவே, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்ற பைபிளின் அறிவுரையை அவர்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்கிறார்கள். (நீதிமொழிகள் 3:5, 6) இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் முன்னேற்றுவிக்கிறார்கள், தங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை செய்கிறார்கள். ‘பின்வரும் ஜீவனில்’ உறுதியான நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள்; அப்போது மனிதவர்க்கத்தினர் அனைவரும் பைபிளின் நன்னெறியையே பின்பற்றுவார்கள்.​—1 தீமோத்தேயு 4:⁠8.

[அடிக்குறிப்பு]

a இந்தக் கட்டுரையிலுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

திருமணம் எனும் கப்பல் புயலில் சிக்கும்போது பைபிள் தராதரங்களின்படி வாழ்வது திருமண வாழ்க்கையை மூழ்கவிடாமல் அமைதியான தண்ணீரிடம் வழிநடத்திச் செல்லும்

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

ஊழலும் மோசடியும் எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கிறபோதிலும், நேர்மையான ஆட்களை பொதுவாக மற்றவர்கள் மெச்சுகிறார்கள்