Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“வாழ்க்கையே வெறுத்து போச்சு” என்று நினைக்கிறீர்களா?

“வாழ்க்கையே வெறுத்து போச்சு” என்று நினைக்கிறீர்களா?

“வாழ்க்கையே வெறுத்து போச்சு” என்று நினைக்கிறீர்களா?

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இன்று அநேகர் இந்தப் பயங்கரமான முடிவை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணத்தை பைபிள் சொல்கிறது; நாம் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்கிறோம் என்று அது சொல்கிறது. எங்கு திரும்பினாலும் பிரச்சினை, பிரச்சினை, பிரச்சினை. இதனால் மக்கள் திக்குமுக்காடிப் போகிறார்கள்! (2 தீமோத்தேயு 3:1; பிரசங்கி 7:7) அதற்கு ஒரே தீர்வு தற்கொலை என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற எண்ணம் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

பிரச்சினைகளின் பிடியில் பலர்

உண்மைதான், உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிப்பது உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் ஒன்று, பிரச்சினையில் அல்லாடுபவர் நீங்கள் மட்டுமல்ல. எல்லாருமே ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன” என்று பைபிளும் சொல்கிறது. (ரோமர் 8:22) இப்போதைக்கு உங்களுடைய பிரச்சினை தீரவே தீராது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உங்களுடைய பிரச்சினைகள் தீரலாம். சரி, இப்போது உங்கள் மனச்சோர்வுக்கு எது மருந்தாக இருக்கும் என்று பார்க்கலாம்.

அனுபவமுள்ள, நம்பகமான நண்பரிடம் மனம்விட்டு பேசுங்கள். “உண்மையான நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; கஷ்ட காலத்தில் உடன்பிறந்தவன்போல் உதவுவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW) பழங்காலத்தில் வாழ்ந்த யோபு என்ற ஒரு நல்ல மனிதனை கஷ்டங்கள் வாட்டியெடுத்தபோது அவர் மற்றவர்களிடம் மனம்விட்டு பேசினார். “என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கிறது. என் மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன்; மன வெறுப்பில் நான் பேசி விடுவேன்” என்றார். (யோபு 10:1, NW) நம் மனதிலுள்ளதை மற்றவர்களிடம் கொட்டும்போது மனபாரம் கொஞ்சம் குறையும். மனதில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகளைப் புதுக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும். a

மனதிலுள்ளதைக் கடவுளிடம் கொட்டிவிடுங்கள். கடவுளிடம் வேண்டுவதெல்லாம் வெறும் மன திருப்திக்குத்தான் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. யெகோவா தேவன் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று சங்கீதம் 65:2 சொல்கிறது (பைபிளில் கடவுளின் பெயர் யெகோவா). அதோடு, ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்’ என்று 1 பேதுரு 5:7 சொல்கிறது. கடவுளை முழுமையாக நம்பியிருக்கும்படி பைபிள் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இதோ சில உதாரணங்கள்:

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”நீதிமொழிகள் 3:5, 6.

“[யெகோவா] தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”சங்கீதம் 145:19.

“கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நாம் அவர்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.”1 யோவான் 5:14.

“துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.”நீதிமொழிகள் 15:29.

உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் கொட்டிவிட்டீர்கள் என்றால், அவர் உங்களுக்கு உதவுவார். அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.”—சங்கீதம் 62:8.

தீராத மனச்சோர்வு ஏற்பட்டால்?

மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் மனச்சோர்வில் தவிப்பவர்கள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. b அதுபோன்ற சமயங்களில் மருத்துவரைப் போய் பார்ப்பது ஞானமாக இருக்கும். மருத்துவர் சில மருந்து மாத்திரைகளை எழுதி கொடுக்கலாம் அல்லது உணவு பழக்கங்களை மாற்ற சொல்லலாம். சிலருக்கு சில உடற்பயிற்சிகளைச் செய்யும்படி சொல்லலாம். இது மனச்சோர்வுக்கு நிச்சயம் அருமருந்தாக இருக்கும். இந்தத் துறையில் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவரைச் சந்திப்பது அநேகருக்கு நல்ல பலன்களை அளித்துள்ளது. c

உங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கும் நிறைய விஷயங்கள் பைபிளில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, வெளிப்படுத்துதல் 21:4–ல் யெகோவா தேவனைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.” இது கடவுள் கொடுத்த வாக்கு. இதைக் கற்பனை செய்து பார்த்தால் நம் மனதுக்கு ஆறுதலாக, இதமாக இருக்கும்.

யெகோவாவின் சாட்சிகள் இந்த நம்பிக்கையான செய்தியை உலகம் முழுவதும் அறிவித்து வருகிறார்கள். இதைக் கேட்போர் பிரச்சினைகள் மத்தியிலும் உண்மையான நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்குச் செல்லுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள். எங்களுடைய www.watchtower.org என்ற வெப்சைட்டையும் பாருங்கள். (g12-E 01)

[அடிக்குறிப்புகள்]

a சிலர் ஆலோசனைக்காக தற்கொலை தடுப்பு மையத்திற்குச் செல்கிறார்கள் அல்லது மனநல மையத்திற்குச் செல்கிறார்கள்.

b மனச்சோர்வைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அக்டோபர் 2009 விழித்தெழு!-வில் பக்கங்கள் 3-9-ஐ பாருங்கள்.

c எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விழித்தெழு! பரிந்துரைப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலையை அலசிப் பார்த்து தங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

[பக்கம் 14-ன் பெட்டி]

பைபிள் தரும் ஆறுதல்

● “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

● “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.”—சங்கீதம் 34:4.

● “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 34:18.

● “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”—சங்கீதம் 147:3.

[பக்கம் 15, 16-ன் பெட்டி]

தற்கொலை எண்ணம் வந்தால்...

நம்பிக்கையான நண்பரிடம் மனம்விட்டு பேசுங்கள்

கடவுளிடம் உங்கள் மனக்குமுறல்களைக் கொட்டுங்கள்

மருத்துவ ஆலோசகரைச் சந்தியுங்கள்

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

குடும்பத்தாரும் நண்பர்களும்

மனச்சோர்வில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்ய நினைக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடிப்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்தாரும் நண்பர்களும்தான். உடனே நடவடிக்கை எடுத்தால் அவருடைய உயிரை உங்களால் காப்பாற்ற முடியும். அவர் பேசும்போது அனுதாபத்தோடு கேளுங்கள். அவர் அனுபவிக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுங்கள், அவர் படும் வேதனையை உணருங்கள். “சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) தேவையான உதவியை நாடும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்; அந்த உதவி கிடைக்கிறதா அதைப் பெற்றுக்கொண்டாரா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.