வழிகாட்டுதலுக்கும் நம்பிக்கைக்கும் ஒரே ஊற்றுமூலம்
வழிகாட்டுதலுக்கும் நம்பிக்கைக்கும் ஒரே ஊற்றுமூலம்
கடவுளாகிய யெகோவா மகா ஞானம் படைத்தவர், சர்வசக்தி உள்ளவர். அவர் அன்பே உருவானவர். (1 யோவான் 4:8) அவர் கொடுக்கிற அறிவுரைகள் நம்முடைய நன்மைக்கே; அதற்காக, அவர் காசு பணம் வாங்குவதில்லை. நாம் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றை கொடுக்கிறார்; ஆனால், மந்திரவாதிகளும், குறிசொல்பவர்களும் தருகிற அறிவுரைகள் பேய்களிடமிருந்து, அதாவது பொல்லாத தூதர்களிடமிருந்து, வருகின்றன. பேய்கள் தருகிற அறிவுரைக்கும் கடவுள் தருகிற அறிவுரைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்! கடவுள் சொல்கிறார்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.”—ஏசாயா 55:1, 2.
பைபிள் நம்முடைய அன்பான படைப்பாளருடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். அது நமக்கு எதிர்கால நம்பிக்கை அளிக்கிறது, ஆன்மீக பாதுகாப்பைத் தருகிறது, வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் காட்டுகிறது, சிறந்த வாழ்க்கை நெறிகளையும் கொடுக்கிறது. ஆகவே, பின்வரும் கேள்விகளையும் அதற்குப் பைபிள் தருகிற பதில்களையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்! (g11-E 02)
[பக்கம் 15-ன் பெட்டி]
● எனக்கு மன நிம்மதி எப்படிக் கிடைக்கும்? பைபிள் இதற்குப் பதில் தருகிறது: ‘இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.’—ஏசாயா 48:17, 18.
● தீமை தொடர்கதையாய் இருக்குமா? “நேர்மையுள்ளோர் பூமியில் வாழ்வார்கள். உண்மையுள்ளோர் அதில் நிலையாய் இருப்பார்கள். பாவிகளோ பூமியினின்று அழிக்கப்படுவார்கள். அநீதி செய்வோரும் அதினின்று அகற்றப்படுவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஆம், பொல்லாத மனிதர்களும் பொல்லாத தூதர்களும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள்; அதாவது, முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:10, 14.
● வியாதிகளும் வேதனைகளும் என்றாவது ஒழியுமா? “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை [இன்றைய பிரச்சினைகள்] ஒழிந்துவிடும்.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
பேய்களிடம் பொய்யும் புரட்டுமே நிறைந்துள்ளன; ஆனால், யெகோவாவோ ஒருபோதும் பொய்சொல்ல மாட்டார். அவரால் ‘பொய் சொல்லவே முடியாது.’ (தீத்து 1:3) அவர் தந்த புத்தகமாகிய பைபிள் மக்களைப் பேய்களிடமிருந்து விடுவிக்கிறது, மக்களுக்கு உயிரளிக்கிறது என்பதை அடுத்த கட்டுரை காட்டும்.—யோவான் 8:32; 17:3.