Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எனக்கு ஏற்ற நண்பர்கள் கிடைப்பார்களா?

எனக்கு ஏற்ற நண்பர்கள் கிடைப்பார்களா?

இளைஞர் கேட்கின்றனர்

எனக்கு ஏற்ற நண்பர்கள் கிடைப்பார்களா?

“எனக்கு 21 வயசு. என் வயசுப் பிள்ளைங்க இங்க யாருமே இல்லை; அதனால், ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்ககூடவோ கல்யாணமான பெரியவங்ககூடவோதான் நான் பழக வேண்டியிருக்கு. பிள்ளைங்க எப்பவும், ஸ்கூல், பரிட்சைன்னு இதப் பத்தியே பேசிகிட்டிருப்பாங்க. பெரியவங்களோ குடும்பம் குட்டினு இத நெனச்சு கவலைப்படுவாங்க. இது ரெண்டுமே எனக்குச் சம்பந்தமில்லாத விஷயம். என் வயசுக்கேத்த மாதிரி யாராவது இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.”—கார்மென். *

சிறியவரோ, பெரியவரோ, எல்லாருமே தங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நீங்களும் அப்படித்தானே எதிர்பார்க்கிறீர்கள். அதனால்தான், மற்றவர்கள் உங்களை ஒதுக்கித்தள்ளும்போது, நிராகரிக்கும்போது, மனதுக்குள்ளே புழுங்குகிறீர்கள்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் “என்னை யாருமே ஒரு பொருட்டாக நினைக்காததுபோல தோனும்” என 15 வயது மைக்கேலா சொல்கிறாள்.

ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், பழகுவதற்கு உங்களுக்கு ஏராளமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். (1 பேதுரு 2:17) இருந்தாலும், சில சமயங்களில் ‘என்னால் யாருடனும் ஒட்ட முடியவில்லையே’ என நீங்கள் நினைக்கலாம். 20 வயது ஹெலனா அப்படித்தான் சொல்கிறாள்: “சபைக் கூட்டங்கள் முடிந்து வீட்டுக்கு வரும்போது, கார் பின்சீட்டுல உக்கார்ந்து அழுதுக்கிட்டே வருவேன். மற்றவர்களோடு பழக நான் ரொம்பவே முயற்சி எடுத்தேன்; ஆனால், என்னால முடியவே இல்லை.”

நீங்களும் இப்படித்தான் உணருகிறீர்களா? அப்படியென்றால், முதலில் இந்த இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டும்: (1) எந்த மாதிரியான ஆட்களுடன் பழக உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது? (2) அவர்களோடு இருக்கும்போது நீங்கள் பொதுவாக எப்படி நடந்துகொள்கிறீர்கள்?

எப்படிப்பட்ட ஆட்களுடன் பழகுவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதற்குப் பக்கத்தில் ✔ செய்யுங்கள்.

1. வயது

❑ சிறியவர்கள் ❑ சக வயதினர் ❑ பெரியவர்கள்

2. திறமை

❑ விளையாட்டுத்திறன் உள்ளவர்கள் ❑ கலைத் திறன் உள்ளவர்கள் ❑ அறிவுத் திறன் உள்ளவர்கள்

3. இயல்பு

❑ தன்னம்பிக்கை உடையவர்கள் ❑ பிரபலமானவர்கள் ❑ எப்போதும் ஒரு நட்புவட்டத்திலேயே இருப்பவர்கள்

மேலே குறிப்பிடப்பட்ட நபர்களோடு இருக்கும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்பதை ✔ செய்யுங்கள்

❑ அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் எனக்கும் பிடிக்கும், அவர்களைப் போலவே எனக்கும் திறமை இருக்கிறது என்று காட்டிக்கொள்வேன்.

❑ அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு, எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி பேசுவேன்.

❑ அமைதியாக இருப்பேன், அங்கிருந்து நழுவுவதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என பார்ப்பேன்.

மேலே நாம் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு இப்போது உங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? சரி, அப்படியென்றால், உங்களுடைய பங்கில் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்கலாம். முதலில், மற்றவர்களுடன் பழகுவதில் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய தடைக்கற்களைப் பற்றிச் சிந்திப்போம்.

தடைக்கல் 1: தனிமை

சவால். ரசனையிலும், திறமையிலும் உங்களிலிருந்து வித்தியாசப்படுகிற ஆட்களோடு இருக்கும்போது ‘என்னால் இவர்களோடு ஒட்டவே முடியாது’ என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும், நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். “நானாக வலியப் போய் மற்றவர்களிடம் பேசமாட்டேன்; ஏதாவது தப்பா பேசிடுவேனோன்னு பயமாயிருக்கும்” என்று 18 வயது அனிட்டா சொல்கிறாள்.

பைபிள் சொல்லும் பதில். “தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறவர்கள் சுயநலமாய் வாழ விரும்புகிறார்கள்; நடைமுறை ஞானத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 18:1, NW) நத்தைப்போல ஓட்டுக்குள் சுருங்கிவிட்டால், ஆம், தனிமைப்படுத்திக்கொண்டால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் அப்படித் தனிமைப்படுத்திக்கொள்வதால் நீங்கள் மற்றவர்களோடு சகஜமாக பழக முடியாமல் கஷ்டப்படுவீர்கள்; இதனால் மற்றவர்களிலிருந்து ஒதுங்கியிருப்பீர்கள்; இப்படி ஒதுங்கியிருப்பதால் திரும்பவும் தனிமையாய் உணருவீர்கள். ஆக, நீங்கள் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவார்கள். அதாவது, ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பீர்கள்; நீங்களாக முயற்சி செய்தால் ஒழிய அதைவிட்டு வெளியே வரமாட்டீர்கள்.

“உங்க மனசில என்ன இருக்குதுன்னு யாராலையும் தெரிஞ்சிக்க முடியாது. நீங்க வாயைத் திறந்து சொன்னாதான் உங்க மனசுல என்ன இருக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியும். நீங்க ‘உமுன்னு’ இருந்தா உங்களுக்கு நண்பர்களே கிடைக்கமாட்டாங்க. அதனால் நீங்க ஏதாவது முயற்சி எடுக்கனும். மத்தவங்கதான் உங்கக்கிட்ட வந்து பேசனும்னு எதிர்பார்க்கிறது நியாயமில்ல. இரண்டு கை தட்டினாதான் ஓசை வரும், நட்பும் அப்படித்தான்.”—19 வயது மெலிண்டா.

தடைக்கல் 2: நண்பர்கள் வேண்டும் என்ற தவிப்பு

சவால். நண்பர்களே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக யாரையாவது நண்பராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் சிலர் கெட்ட பிள்ளைகளோடு பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். “எங்க ஸ்கூலில் ஒரு க்ரூப் ரொம்ப பிரபலமா இருந்தது; அவங்க என்னை ஃபிரெண்டா சேர்த்துக்க மாட்டாங்களானு நான் ஏங்கினேன்; அவங்க என்னை ஃபிரெண்டா ஏத்துக்கறதுக்காக தப்புதண்டா செய்யக்கூட நான் தயாரா இருந்தேன்” என்று 15 வயது ரெனா சொல்கிறாள்.

பைபிள் சொல்லும் பதில். “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” இந்த வசனத்தை, ஈஸி டு ரீட் வர்ஷன் இப்படிச் சொல்கிறது: “நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.” (நீதிமொழிகள் 13:20) ஆனால், ‘மூடன்’ அல்லது “முட்டாள்” என்று பைபிள் சொல்லும்போது, புத்தியில்லாத நபர்களைக் குறிப்பிடுவதாக நினைக்காதீர்கள். சொல்லப்போனால், அவர்கள் புத்திசாலிகளாக, படிப்பில் சூரப்புலிகளாக இருக்கலாம். ஆனால், பைபிள் நெறிகளை அவர்கள் சுத்தமாக மதிக்காததால், கடவுளுடைய பார்வையில் முட்டாள்களாக இருக்கிறார்கள். அவர்களைப் போலவே இருப்பதற்காக நீங்கள் பச்சோந்தி மாதிரி நிறம் மாறினீர்கள் என்றால், நீங்கள்தான் துன்பப்படுவீர்கள்.—1 கொரிந்தியர் 15:33.

“எல்லாருமே நல்ல ஃபிரெண்டா இருப்பாங்கனு சொல்ல முடியாது. அவங்களுக்கு ஏத்தமாதிரி மாறனும்னு எதிர்பார்க்கிறவங்களோட நீங்க பழகனும்னு அவசியம் இல்ல. உங்களை உண்மையிலேயே நேசிக்கிற, கஷ்டத்துல உங்க கூடவே இருக்கிறவங்களோட நீங்க பழகனும்.”—21 வயது பவுலா.

நீங்கள் முதலில் முயற்சி எடுங்கள்

‘எங்க ஃபிரண்ட்ஸ் குரூப்பில் நீயும் வந்து சேர்ந்துக்கோ’ என்று மற்றவர்கள் வந்து உங்களை கூப்பிட வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். “எப்பவுமே மத்தவங்கதான் வலியவந்து நம்மகிட்ட பழகனும்னு எதிர்பார்க்கக்கூடாது. முதல்ல நம்மதான் அவங்ககிட்ட போய் பேசிப் பழகனும்” என்கிறாள் 21 வயது ஜீன். இப்படிச் செய்ய, இதோ இரண்டு டிப்ஸ்:

உங்களைவிட பெரியவர்களையோ, சிறியவர்களையோ ஃபிரெண்டாக வைத்துக்கொள்ளுங்கள். பைபிளில் சொல்லப்பட்ட யோனத்தானுக்கும் தாவீதுக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் இருந்தாலும், அவர்கள் இரண்டு பேரும் ‘உயிர்’ நண்பர்களாக இருந்தார்கள். * (1 சாமுவேல் 18:1) இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்ளலாம்? உங்களைவிட பெரியவர்களோடும் நீங்கள் நட்பு கொள்ளலாம். உங்கள் வயது வட்டாரத்திற்குள்ளேயே நண்பர்களைத் தேடிவிட்டு, அப்படிக் கிடைக்காதபோது, ‘எனக்கு நண்பர்களே இல்லை’ என்று புலம்புவது சரியாக இருக்குமா? அப்படிச் செய்வது, கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிற கதையாகத்தானே இருக்கும்! உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஏற்ற நிறைய நல்ல நண்பர்கள் உங்களைச் சுற்றியே இருக்கிறார்கள். எனவே, உங்கள் வயதுப் பிள்ளைகளில் மட்டுமே நண்பர்களைத் தேடாமல், உங்களைவிட பெரியவர்களையோ, சிறியவர்களையோ நண்பராக்கிக்கொள்ளுங்கள்.

“சபையில் என்னவிட பெரியவங்களா இருக்கிறவங்ககிட்ட எப்பவுமே எங்கம்மா என்ன பழகச் சொல்வாங்க. அப்படிப் பழகிப் பார்த்தா, எனக்கும் அவங்களுக்கும் நிறைய விஷயத்தில ஒத்துப்போவதை நானே தெரிஞ்சுப்பேன்னு அவங்க சொல்வாங்க. அவங்க சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. இப்ப எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க.”—20 வயது ஹெலனா.

மற்றவர்களுடன் நன்றாகப் பேசுங்கள். இதற்கும் முயற்சி தேவை, அதுவும் நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால், முயற்சி செய்தால் உங்களால் முடியும். இதற்கு நீங்கள் (1) காதுகொடுத்துக் கேட்க வேண்டும் (2) கேள்விகள் கேட்க வேண்டும் (3) அக்கறை காட்ட வேண்டும்.

“நானே வளவளனு பேசிக்கிட்டிருக்காம, மத்தவங்க பேசறத கேட்கறதுக்கும் முயற்சி செய்யறேன். அதுமட்டுமில்ல, எப்பவும் என்னப்பத்தியே பேசாம இருக்கவும், மத்தவங்கள மட்டம்தட்டிப் பேசாம இருக்கவும் முயற்சி செய்யறேன்.”—18 வயது சரினா.

“எனக்குத் தெரியாத விஷயத்தப் பத்தி யாராவது பேசினா, நான் அதைப் பத்தி விளக்கமா சொல்லச் சொல்வேன். அப்பத்தான் அவரால் என்கிட்ட இன்னும் நிறையப் பேச முடியும்.”—21 வயது ஜாரட்.

ஒருவேளை நீங்கள் இயல்பாகவே மற்றவர்களோடு அதிகம் பேசாதவராக இருக்கலாம். அப்படி இருப்பதில் எந்தத் தப்பும் இல்லை. இப்போது திடீரென்று நீங்கள் கலகலப்பாகப் பேச வேண்டும் என்றில்லை. ஆனால், இந்த விஷயத்தில் முன்னேற விரும்பினால், இந்தக் கட்டுரையில் உள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கப் பாருங்கள். அப்படிச் செய்தால், லீயா சொன்ன மாதிரி நீங்களும் சொல்வீர்கள்: “இன்னும் இந்த கூச்ச சுபாவம் என்ன விட்டுப் போகல; மத்தவங்ககிட்ட நானாகவே போய் பேசுவதற்கு ரொம்ப முயற்சி செய்றேன். நமக்கு ஃபிரெண்ட்ஸ் வேணும்னா நாம்தான் முதலில் மத்தவங்ககிட்ட அன்பா பழகனும். அதனால் நான் இப்பெல்லாம் மத்தவங்ககிட்ட பேசிப்பழக ஆரம்பிச்சிட்டேன்.” (g11-E 04)

“இளைஞர் கேட்கின்றனர்” என்ற தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்பு]

^ இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ தாவீது பருவவயதில் இருந்தபோதுதான் யோனத்தானின் நண்பரானார்.

[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]

இவர்கள் சொல்வதைக் கேளுங்கள்

“கிறிஸ்தவ சபையில் இதுவர நான் பேசாத ஒருத்தர்கிட்டயாவது பேச முயற்சி செய்றேன். ஒருத்தர்கிட்ட ஃபிரெண்டாகறது ரொம்ப ஈஸி. அவங்கள பார்த்து வெறுமேன சிரிச்சு ‘ஹலோ’ சொன்னாலே போதும்.”

“மத்தவங்களுக்கு என்னை பிடிக்கல, அதனால அவங்ககிட்ட என்னால ஒட்ட முடியலைனு இவ்வளவு நாளா சொல்லிட்டிருந்தேன்; இப்படி சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, அதுக்காக முயற்சி எடுக்கறதுதான் ரொம்ப கஷ்டம். அப்படி முயற்சி செஞ்சா கைமேல பலன் கிடைக்கும், அதுமட்டுமில்ல, நம்மகிட்ட நல்ல மாற்றம் தெரியும்.”

“பெரியவங்க பேசும்போது நானும் கொஞ்சம் கொஞ்சமா அவங்க பேச்சில கலந்துக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் சங்கடமாதான் இருந்தது. ஆனா, அப்படிப் பழகுனதால, இந்தச் சின்ன வயசிலேயே எனக்கு நிறைய உயிர் நண்பர்கள் கிடைச்சிருங்காங்க.”

[படங்கள்]

லாரன்

ரையன்

கரிஸா

[பக்கம் 22-ன் பெட்டி]

உங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

நீங்கள் என் வயதில் இருந்தபோது உங்களுக்கு ஏற்ற நண்பர்கள் கிடைக்கவில்லை என்று நினைத்தீர்களா? எந்த மாதிரி ஆட்களோடு பழக உங்களுக்குக் கஷ்டமாக இருந்தது? அதற்கு என்ன செய்தீர்கள்?

....

[பக்கம் 22-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

தனிமைப்படுத்தினால் இந்த சுழற்சியில் மாட்டிக்கொள்வீர்கள்

நான் தனிமையில் 

வாடுகிறேன், இதனால்

நான் . . .

. . . நிராகரிக்கப் பட்டதுபோல் 

உணர்கிறேன்,

இதனால் நான் . . .

. . . ஒதுங்கியிருக்கிறேன்,

இதனால் நான் . . .