Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தைப் பருவத்திலேயே கடவுளை நேசிக்க கற்பிக்கப்பட்டேன்

குழந்தைப் பருவத்திலேயே கடவுளை நேசிக்க கற்பிக்கப்பட்டேன்

குழந்தைப் பருவத்திலேயே கடவுளை நேசிக்க கற்பிக்கப்பட்டேன்

அநடால்யய் மெல்நிக் சொன்னபடி

நிறைய பேர் என்னைப் பாசமாக தாத்தா என்று கூப்பிடுவார்கள். அப்படி கூப்பிடும்போதெல்லாம் என்னுடைய தாத்தாவின் ஞாபகம் எனக்கு வந்துவிடும், அந்த வார்த்தை என் நெஞ்சையே உருக்கிவிடும். தாத்தா மீது நான் உயிரையே வைத்திருந்தேன். அவருக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் தாத்தாவைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்; அவரும் பாட்டியும் தங்கள் சொந்த குடும்பத்தாரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஆனால் மற்ற அநேகருடைய வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை எப்படி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக்கூட உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

க்லினா என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். இது மால்டோவாவிற்கு a வடக்கே இருக்கிறது. 1920-⁠களில் ருமேனியாவின் எல்லையைக் கடந்து எங்கள் அழகிய மலைப் பிரதேசத்துக்குப் பயண ஊழியர்கள் வந்தார்கள்; இவர்கள் அந்தக் காலத்தில் பில்க்ரிம்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள். என் அம்மாவுடைய பெற்றோர் பைபிளிலுள்ள நற்செய்தியைக் கேட்டவுடன் அதை ஏற்றுக்கொண்டார்கள். 1927-⁠ல் அவர்கள் பைபிள் மாணாக்கர்களாக ஆனார்கள். முன்னர் யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். 1939-⁠ல் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குள்ளேயே எங்களுடைய சின்ன கிராமத்திலும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை ஒன்று உருவாகியிருந்தது.

நான் 1936-⁠ல் பிறந்தேன். அப்போது என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லோருமே யெகோவாவின் சாட்சிகள், அப்பாவைத் தவிர. அவர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்குத்தான் போய்க்கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அவர் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார்; பின்னர் நம் சிருஷ்டிகரான யெகோவா தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். எங்கள் குடும்பம் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு தாத்தா முக்கிய பங்கு வகித்தார். பைபிள் மீது அவருக்கு அலாதி பிரியம். நூற்றுக்கணக்கான பைபிள் வசனங்கள் அவருக்கு அத்துப்படி. எதைப் பற்றி பேசினாலும் கடைசியில் அதை பைபிள் பக்கமே திருப்பிவிடும் திறமை அவருக்கு இருந்தது.

வழக்கமாக நான் தாத்தாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு அவர் சொல்லும் பைபிள் கதைகளையெல்லாம் கேட்பேன். கடவுளை நேசிக்க அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்! எட்டு வயதாயிருந்தபோது முதன்முறையாக தாத்தாவுடன் வெளி ஊழியத்திற்குப் போனேன். அப்போது யெகோவா யார், அவரிடம் நெருங்கிச் செல்வது எப்படி என்றெல்லாம் கிராமத்து மக்களுக்கு பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினோம்.

கம்யூனிஸ்டுகளின் கொடுமைகள்

1947-⁠ல் கம்யூனிஸ கொள்கைக்கும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கும் அடிபணிந்த அதிகாரிகள், மால்டோவாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். கேஜிபி என பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பின் ஏஜென்டுகளும் உள்ளூர் போலீசாரும் எங்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்தார்கள். பிரசங்க வேலையை முன்நின்று நடத்துபவர் யார்? பிரசுரங்கள் எங்கிருந்து வருகின்றன? சபை கூட்டங்கள் எங்கு நடத்தப்படுகின்றன என்றெல்லாம் விசாரித்தார்கள். அதுமட்டுமல்ல, “கம்யூனிஸ வளர்ச்சிக்கு யெகோவாவின் சாட்சிகள் முட்டுக்கட்டையாக இருப்பதால்” அவர்களது ஊழியத்திற்கே முடிவு கட்டப்போவதாக சொன்னார்கள்.

இதற்கிடையே, நிறைய படிப்பு படித்திருந்த அப்பாவும் பைபிள் சத்தியத்தை ரொம்பவே நேசிக்க ஆரம்பித்து விட்டிருந்தார். அதிகாரிகள் விசாரணை செய்யும்போது அவரும் தாத்தாவும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளைக் காட்டிக் கொடுக்காமல் சமயோசிதமாக பதில் சொல்ல தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் இருவருமே தைரியசாலிகள், அன்பானவர்கள், மற்ற சகோதர சகோதரிகளின் நலனில் அக்கறையுள்ளவர்கள். அம்மாவும் அப்படித்தான்; பதட்டப்படாமல் எப்போதும் அமைதியாகவே இருப்பார்.

1948-⁠ல் அப்பா கைது செய்யப்பட்டார். காரணம் எதுவும் சொல்லாமல் அவரை இழுத்துச் சென்றார்கள். ஏழு வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது; மேலும் இரண்டு வருடங்களுக்கு நாடுகடத்தப்பட்டார். கடைசியாக, ரஷ்யாவின் வடகிழக்குக் கோடியிலுள்ள மகாடன் என்ற பகுதிக்கு அனுப்பப்பட்டார். அந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தது. ஒன்பது வருடங்களுக்கு நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கவே இல்லை. அப்பா இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் தாத்தா எனக்குப் பக்கபலமாக இருந்தார்.

நாடுகடத்தப்படுதல்

1949-வது வருடம், ஜூன் மாதம், 6-⁠ம் தேதி இரவில் இரண்டு இராணுவ வீரர்களும், ஓர் அதிகாரியும் எங்கள் வீட்டைச் சுற்றி வளைத்தார்கள். இரண்டே மணிநேரத்திற்குள் வீட்டைவிட்டு வெளியேறி அவர்களுடைய வண்டியில் ஏற வேண்டும் என்று சொன்னார்கள். எங்களை நாடுகடத்தப் போவதாகவும் இனி எங்களால் திரும்பி வர முடியாது என்பதாகவும் சொன்னார்களே தவிர, வேறெந்த விளக்கமும் தரவில்லை. அதனால் அம்மா, தாத்தா, பாட்டி, கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஆகியோருடன் நானும் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டேன். அப்போது எனக்கு 13 வயதுதான். சில வார பயணத்திற்குப் பிறகு டெய்கா என்னும் அடர்ந்த ஊசியிலை புதர்க்காடுகளின் மத்தியிலுள்ள சதுப்பு நிலப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். என்னுடைய அழகிய ஊருடன் ஒப்பிடும்போது இது எவ்வளவு வித்தியாசமாக இருந்தது! சில சமயம் அழுகை அழுகையாக வந்தது. ஆனால் யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதில் நம்பிக்கையாக இருந்தோம்.

நாங்கள் வந்து சேர்ந்த கிராமத்தில் பத்து வீடுகள் இருந்தன; மரத்தால் கட்டப்பட்ட வீடுகள் அவை. எங்களுடன் வந்த மற்ற சகோதர சகோதரிகள் டெய்காவிலுள்ள வேறே கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்குள்ள உள்ளூர் மக்களைப் பயமுறுத்துவதற்கும், அதேசமயம் எங்கள் மீது அவர்களுக்குத் தப்பெண்ணம் வருவதற்கும் அதிகாரிகள் அவர்களிடம் என்ன சொல்லி வைத்தார்கள் தெரியுமா? யெகோவாவின் சாட்சிகள் நரமாமிசம் தின்பவர்கள் என்று! ஆனால் நாங்கள் பயங்கரமானவர்கள் அல்ல, அதிகாரிகள் சொன்னதெல்லாம் பொய் என்பதைக் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

நாங்கள் இந்தக் கிராமத்திற்கு வந்த முதல் இரண்டு மாதங்கள் ஒரு பழைய குடிசையில் வசித்தோம். ஆனால் நாங்கள் வேறொரு நல்ல வீட்டைக் கட்ட வேண்டியிருந்தது, காரணம் கடுமையான குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எளிய ஒரு வீட்டைக் கட்ட தாத்தா பாட்டி எங்களுக்கு உதவினார்கள். நிலத்திற்கு மேலே ஒரு பாதியும் கீழே மறுபாதியுமாக அந்த வீட்டைக் கட்டினோம். மூன்று வருடங்களுக்கு மேல் அந்த வீட்டில் வசித்தோம். அனுமதியில்லாமல் அந்தக் கிராமத்தை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாதபடி எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடைசிவரை அனுமதி அளிக்கப்படவே இல்லை.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, ஸ்கூலுக்குப் போக எனக்கு அனுமதி கிடைத்தது. என்னுடைய மதக் கருத்துகள், அங்குள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய மதக் கருத்துகளிலிருந்து வேறுபட்டதால் அவர்கள் அடிக்கடி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பார்கள். ஸ்கூல் முடிந்து வீடு திரும்பியதும் என் மத நம்பிக்கைகளை எப்படி அவர்களிடம் விளக்கினேன் என்பதை தாத்தாவிடம் சொல்வேன். அதைக் கேட்கும்போதெல்லாம் தாத்தா அப்படியே பூரித்துப் போய்விடுவார்.

இன்னும் கொஞ்சம் சுதந்திரம்

1953-⁠ல் சர்வாதிகாரியான ஸ்டாலின் இறந்த பிறகு எங்கள் வாழ்க்கையில் ஓரளவுக்குத் தென்றல் வீசத் தொடங்கியது. அந்தக் கிராமத்தை விட்டுப்போக அனுமதி கிடைத்தது. இதனால் உடன் விசுவாசிகளுடன் கூட்டுறவுகொள்ள முடிந்தது. அதுமட்டுமல்ல, நாடுகடத்தப்பட்டு வேறு கிராமங்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் எங்களால் போக முடிந்தது. மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்காதபடி சிறுசிறு தொகுதியாக நாங்கள் கூடினோம்; ஆனால் அப்படிக் கூடிவர 30 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. சில சமயம் முழங்காலளவு வெண்பனியில், மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் நடக்க வேண்டியிருந்தது. கூட்டம் முடிந்து அடுத்த நாள் வீடு திரும்ப மறுபடியும் அந்த நீண்ட பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது. வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய்களையும் வெல்லக் கட்டிகளையும் போகும் வழியில் சாப்பிட்டோம். ஆனால் அந்தக் காலத்து தாவீதைப் போல எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தோம்!​—சங்கீதம் 122:1.

யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, 1955-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பக்கத்துக் கிராமத்தில் நடந்த ஒரு சபை கூட்டத்தில் லிடியா என்ற ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளுக்குக் கருகருவென முடி. ரொம்ப அடக்கமாக இருந்தாள். எங்களைப் போலவே அவளும் அவளுடைய குடும்பத்தினரும் மால்டோவாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள். அவளுக்கு இனிமையான குரல். அப்போது எங்கள் பாட்டு புத்தகத்தில் 337 பாடல்கள் இருந்தன; கிட்டத்தட்ட அவை அனைத்தையும் அவள் பார்க்காமலேயே பாடினாள். அதில் அப்படியே லயித்துப் போய் என் மனதைப் பறிகொடுத்தேன். ஏனென்றால் அந்தப் பாடல்களும் அந்த இசையும் எனக்கு உயிர். 1956-⁠ல் நாங்கள் இருவரும் மணம் செய்துகொள்ளத் தீர்மானித்தோம்.

அப்பாவை மகாடனுக்கு நாடுகடத்தியிருப்பது தெரியவந்தபோது அவருக்குக் கடிதம் எழுதினேன். அவருடைய சம்மதம் கிடைக்கும்வரை எங்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டோம். சீக்கிரத்திலேயே அப்பா விடுதலையாகி, நாங்கள் நாடுகடத்தப்பட்டிருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார். சிறை முகாம்களில் இருந்த மோசமான நிலைமைகளைப் பற்றியும், அவரும் மற்ற சக கிறிஸ்தவர்களும் கடவுளுடைய உதவியால் எப்படி அதையெல்லாம் தாக்குப்பிடித்தார்கள் என்பதைப் பற்றியும் சொன்னார். அதுபோன்ற அனுபவங்கள் எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தின.

அப்பா வீடு திரும்பி கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருந்தது. அதற்குள் அம்மாவுக்கு பயங்கரமான ஒரு விபத்து ஏற்பட்டது. பெயின்டிலும் வார்னிஷிலும் சேர்க்கப்படுகிற ஒரு விதமான எண்ணெய்யை அம்மா தயாரித்துக் கொண்டிருந்தார். கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் அந்தப் பெரிய சட்டியோடு தவறி அம்மா மீது கவிழ்ந்துவிட்டது. ஆஸ்பத்திரியில் அம்மா உயிரிழந்தார். அவருடைய இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பின்னர், துக்கம் கொஞ்சம் தணிந்ததும் பக்கத்து கிராமத்திலிருந்த டாட்யானா என்ற ஒரு யெகோவாவின் சாட்சியை அப்பா மணம் செய்துகொண்டார்.

ஊழியத்தை விஸ்தரித்தல்

கிஸாக் என்கிற கிராமத்தில் நானும் லிடியாவும் வசித்து வந்தோம். அதன் பிறகு 1958-⁠ல் அங்கிருந்து லிபையே என்ற கிராமத்திற்குக் குடி மாறினோம். இது கிஸாக் கிராமத்தைவிட ரொம்ப பெரியது. கிஸாக் கிராமத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தள்ளியிருந்தது. மற்ற நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக சென்று பிரசங்கிக்கிறார்கள் என்பதை நாங்கள் வாசித்திருந்தோம். எனவே, இந்தப் புதிய இடத்தில் அதே போல பிரசங்கிக்க முயற்சி செய்தோம். ஆனால் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் தடை செய்யப்பட்டிருந்தன. என்றாலும் அவற்றை மற்ற இடங்களிலிருந்து இரகசியமாக பெற்றுக்கொண்டோம். அதுவரை மால்டோவியன் மொழியில் எங்களுக்குப் பத்திரிகைகள் கிடைத்து வந்தன. ஆனால் இனி எங்களுக்கு ரஷ்ய மொழி பத்திரிகைகள் மட்டுமே கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டது. எனவே, ரஷ்ய மொழியைக் பெரும்பாடு பட்டுக் கற்றுக்கொண்டோம். அப்படிக் கற்றுக்கொண்டபோது வாசித்த கட்டுரைகளின் தலைப்பு மட்டுமல்ல, அவற்றில் சொல்லப்பட்டிருந்த சில குறிப்புகள்கூட இன்றும் என் நினைவில் இருக்கின்றன.

குடும்பத்தைப் பராமரிப்பதற்காக லிடியா ஒரு தானியக் களஞ்சியத்தில் வேலை செய்தாள். நான் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கி வைக்கும் வேலையைச் செய்தேன். கஷ்டப்பட்டு வேலை செய்தும் குறைவான வருமானமே எங்களுக்குக் கிடைத்தது. யெகோவாவின் சாட்சிகள் மனசாட்சிக்கு பயந்து வேலை செய்பவர்கள் என்று மதிக்கப்பட்டார்களே தவிர அவர்களுக்கு எந்தவித கூடுதல் உதவி தொகையோ ஊக்க ஊதியமோ கொடுக்கப்படவில்லை. “கம்யூனிஸ சமுதாயத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இடமில்லை” என்று அதிகாரிகள் வெளிப்படையாக சொன்னார்கள். என்றாலும், “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களைக் குறித்துச் சொன்ன வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையில் உண்மையாக இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டோம்.​—யோவான் 17:16.

புதிய சவால்கள்

1959-⁠ல் எங்கள் மகள் வாலென்டீனா பிறந்தாள். அதன் பிறகு புதுவிதமான துன்புறுத்தல் தொடங்கியது. “1959-64-⁠க்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமர் நியிகியிடா க்ரூஷாவ் ஒரு புதிய மத எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார்” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. மதத்தை ஒழித்துக் கட்டுவதே, அதிலும் யெகோவாவின் சாட்சிகளை ஒழித்துக் கட்டுவதே சோவியத் அரசாங்கத்தின் குறிக்கோள் என்று தேசிய பாதுகாப்பு துறை அங்கத்தினர்கள் சொன்னார்கள்.

வாலென்டீனாவிற்குக் கிட்டத்தட்ட ஒரு வயது இருக்கும்போது என்னை இராணுவ சேவைக்கு அழைத்தார்கள். நடுநிலைமை வகித்ததால் அவர்களுடைய அழைப்பை மறுத்தேன். அதனால் ஐந்து வருட சிறை தண்டனை பெற்றேன். ஒருமுறை லிடியா என்னைச் சந்திக்க வந்தபோது ஒரு கேஜிபி அதிகாரி அவளைப் பார்த்து: “இன்னும் இரண்டே வருடத்திற்குள் சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது” என்று சொன்னார். பிறகு, “நீ உன் மதத்தைவிட்டு விலகாவிட்டால் உனக்கும் சிறைதான் கதி” என்று எச்சரித்தார். “யெகோவாவின் சாட்சிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள்” என்று அந்த அதிகாரி நினைத்துக்கொண்டார் போலும். இப்படியெல்லாம் பயமுறுத்தினால் இந்தப் பெண்களை அடக்கிவிடலாம் என்று அவர் தப்புக்கணக்கு போட்டார்.

கொஞ்ச நாட்களுக்குள் யெகோவாவின் சாட்சிகளில் ஆண்கள் அனைவரும் சிறைகளிலும், கட்டாய உழைப்பு முகாம்களிலும் போடப்பட்டனர். ஆனால் தைரியசாலிகளான கிறிஸ்தவப் பெண்கள் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய உயிரையே பணயம் வைத்து சிறைகளிலும் கட்டாய உழைப்பு முகாம்களிலும் இருந்த சகோதரர்களுக்கு பைபிள் பிரசுரங்களை இரகசியமாக கொடுத்து வந்தார்கள். இப்படிப்பட்ட சோதனைகளோடுகூட வேறு சோதனைகளையும் லிடியா சகித்தாள்; நான் இல்லாத சமயத்தில் மற்ற ஆண்கள் அவளிடம் அடிக்கடி தகாத முறையில் நடக்க முயன்றார்கள். அதோடு, நான் சிறையிலிருந்து வெளிவரவே முடியாது என்றும் அவளிடம் சொல்லி வைத்தார்கள். ஆனால் எனக்கு விடுதலை கிடைத்தது!

விடுதலைக்குப் பின் கஸக்ஸ்தானுக்குப் பயணம்

1963-⁠ல் என்னுடைய வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டது. மூன்று வருட சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானேன். ஆனால் எங்களுக்கு குடியிருப்பு பெர்மிட் கிடைக்காததால் யாரும் எனக்கு வேலை தரவில்லை. “குடியிருப்பு பெர்மிட் இல்லாதவர்களுக்கு வேலை கிடையாது” என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. உதவும்படி யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தோம். பிறகு பிட்ரபாவல் என்ற இடத்திற்குக் குடிமாறிச் செல்ல முடிவு செய்தோம். அது வட கஸக்ஸ்தானில் உள்ளது. அங்கிருந்த அதிகாரிகளுக்கு நாங்கள் வரும் செய்தி கிடைத்தது. அதனால் குடியிருக்கவோ வேலை செய்யவோ எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த நகரத்தில் ஏறக்குறைய 50 சாட்சிகள் இப்படிக் கஷ்டப்பட்டோம்.

யெகோவாவின் சாட்சிகளாக இருந்த இன்னொரு தம்பதியருடன் சேர்ந்து தெற்கே தொலைவிலுள்ள ஷ்சூசின்ஸ்க் என்ற சிறிய பட்டணத்திற்குச் சென்றோம். எங்களைத் தவிர, அங்கு வேறு யெகோவாவின் சாட்சிகளே இல்லை; அதிகாரிகளுக்கும் எங்களுடைய பிரசங்க வேலையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு வாரத்திற்கு நானும் இவானும் வேலை தேடி அலைந்தோம். எங்கள் இரண்டு பேருடைய மனைவிகளும் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்தார்கள். இரவில் நாங்கள் அங்குதான் தூங்கினோம். ஒருவழியாக கண்ணாடித் தொழிற்சாலையில் எங்களுக்கு வேலை கிடைத்தது. இரு குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்தோம். அதில் இரண்டு படுக்கைகளை விரிப்பதற்கும் இன்னும் சில பொருட்களை வைப்பதற்குமே இடமிருந்தது. என்றாலும், திருப்தியாக வாழ்ந்தோம்.

இவானும் நானும் பொறுப்பாக வேலை செய்ததைப் பார்த்து எங்கள் முதலாளிகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இராணுவத்தில் பணிபுரிய மீண்டும் அழைக்கப்பட்டேன். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி காரணமாக இராணுவப் பயிற்சியை நாங்கள் இருவரும் பெற மாட்டோம் என்பதை அந்தத் தொழிற்சாலை மானேஜர் அறிந்துகொண்டார். அவரே இராணுவ தலைமை அதிகாரியை அணுகி, நானும் இவானும் திறமையான வேலையாட்கள் என்றும் நாங்கள் இல்லாவிட்டால் தொழிற்சாலையே ஓடாது என்றும் சொன்னார்; அவர் அப்படி சொன்னது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் நாங்கள் தொடர்ந்து அங்கேயே வேலை பார்க்க முடிந்தது.

பிள்ளைகளை வளர்த்ததும் மற்றவர்களுக்கு உதவியதும்

1966-⁠ல் எங்களுடைய இரண்டாவது மகள் லீல்யா பிறந்தாள். ஒரு வருடம் கழித்து, பயிலியே வாடி என்ற பட்டணத்திற்குக் குடி மாறினோம். அது தெற்கு கஸக்ஸ்தானில், உஸ்பெகிஸ்தானின் எல்லை அருகே இருக்கிறது. அங்கு யெகோவாவின் சாட்சிகள் ஒரு சிறு தொகுதியாக இருந்தார்கள். கொஞ்ச நாட்களில் ஒரு சபை உருவானது. அந்தச் சபையில் நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். 1969-⁠ல் எங்கள் மகன் ஆல்யெக் பிறந்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கடைசி மகள் நாடாஷா பிறந்தாள். பிள்ளைகள் யெகோவா தரும் சொத்து என்பதை லிடியாவும் நானும் எப்போதும் மனதில் வைத்திருந்தோம். (சங்கீதம் 127:4) பிள்ளைகள் யெகோவாவை நேசிப்பவர்களாக வளருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் கலந்து பேசுவோம்.

யெகோவாவின் சாட்சிகளாக இருந்த நிறைய ஆண்கள் 1970-கள் வரையாகக்கூட கடின உழைப்பு முகாம்களில் வேலை செய்து வந்தார்கள். அநேக சபைகளில் கண்காணிகளாக இருந்து, முன்நின்று வழிநடத்த முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் தேவைப்பட்டார்கள். எனவே, நான் பயணக் கண்காணியாக சேவை செய்தேன். அச்சமயங்களில் பிள்ளைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு லிடியாவின் மீது விழுந்தது. சில சமயங்களில் அவளே அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து பிள்ளைகளை கவனித்துக் கொண்டாள். நான் கஸக்ஸ்தானிலுள்ள சபைகளைச் சந்தித்து வந்தேன். அதோடு, சோவியத் குடியரசின் அண்டை நாடுகளான, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள சபைகளையும் சந்தித்து வந்தேன். அதே சமயம் குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேலையும் செய்து வந்தேன். லிடியாவும் பிள்ளைகளும் மனப்பூர்வமாய் என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்தார்கள்.

சில சமயங்களில் வாரக்கணக்காக வீட்டிலிருக்க மாட்டேன். ஆனாலும் அப்பாவாக என் பங்கில் பிள்ளைகளுக்குப் பாசத்தை ஊட்டி வளர்த்தேன். அவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும் உதவினேன். எங்கள் பிள்ளைகளை வழிநடத்தும்படி லிடியாவும் நானும் யெகோவா தேவனிடம் உருக்கமாக ஜெபம் செய்வோம். அதோடு, மனிதனுக்குப் பயப்படக் கூடாது என்றும், கடவுளிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். என் அன்பு மனைவி தன்னலமற்ற விதத்தில் எனக்கு உதவியதால்தான் பயணக் கண்காணியாக என்னுடைய பொறுப்புகளை என்னால் நிறைவேற்ற முடிந்தது. முன்னர் குறிப்பிட்ட அந்த அதிகாரி நினைத்தது போல லிடியாவும் மற்ற சகோதரிகளும் “பயந்தாங்கொள்ளிகள்” கிடையாது. அவர்கள் பலசாலிகள், ஆன்மீக விஷயங்களில் சூரப்புலிகள்!​—பிலிப்பியர் 4:13.

எல்லாப் பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களான பிறகு, 1988-⁠ல் பயணக் கண்காணியாக முழுநேரமும் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். எனக்கு நியமிக்கப்பட்ட வட்டாரத்தில் மத்திய ஆசியாவிலுள்ள அநேக நாடுகள் இருந்தன. 1991-வது வருடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு முன்னாள் சோவியத் யூனியன் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தது. அதன் பிறகு தகுதியும் முதிர்ச்சியும் வாய்ந்த சகோதரர்கள் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த ஆசிய குடியரசுகளில் சேவை செய்தார்கள். இன்று இந்த நாடுகளில் 14 பயணக் கண்காணிகள் சேவை செய்து வருகிறார்கள். கடந்த வருடம் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்புக்கு 50,000-⁠க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்!

எதிர்பாராத அழைப்பு

1998-⁠ன் தொடக்கத்தில் ரஷ்ய கிளை அலுவலகத்திலிருந்து திடீரென எனக்கு ஒரு ஃபோன் வந்தது. “நீங்களும் லிடியாவும் முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?” என்று என்னிடம் கேட்டார்கள். சொல்லப்போனால், அந்தச் சிலாக்கியத்தை எங்கள் பிள்ளைகள் பெற வேண்டும் என்றே நாங்கள் நினைத்திருந்தோம். எங்கள் மகன் ஆல்யெக் ரஷ்ய கிளை அலுவலகத்தில் ஏற்கெனவே ஐந்து வருடங்களாக சேவை செய்து வந்திருந்தான்.

அந்த அழைப்பை பற்றி லிடியாவிடம் சொன்னபோது, “அதுசரி, நம்ம வீடு, தோட்டம், சாமான் எல்லாத்தையும் என்ன செய்யறது?” என்று கேட்டாள். நாங்கள் இதைக் குறித்து ஜெப சிந்தையுடன் கலந்து பேசினோம், பிறகு முழுநேர சேவையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தோம். கடைசியில், இஸ்சிக் என்ற இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமையகத்தில் சேவை செய்ய எங்களுக்கு அழைப்பு கிடைத்தது. இது கஸக்ஸ்தானில், அல்மா-ஆடா என்னும் பெரிய நகரத்திற்கு அருகே இருக்கிறது. இங்கு பைபிள் பிரசுரங்கள் அந்தப் பிராந்தியமெங்கும் பேசப்படுகிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இன்று எங்களுடைய குடும்பம்

எங்கள் பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்லிக் கொடுக்க உதவி செய்ததற்காக கடவுளுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! எங்களுடைய பெரிய மகள் வாலென்டீனா கல்யாணமாகி, 1993-⁠ல் கணவனுடன் ஜெர்மனியிலுள்ள இங்கெல்ஹைம் என்ற இடத்திற்கு குடிமாறி சென்றாள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் மூவரும் இப்போது முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகள்.

இரண்டாவது மகள் லீல்யாவிற்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அவளுடைய கணவர் பயிலியே வாடி சபையில் மூப்பராக இருக்கிறார், தங்களுடைய இரண்டு பிள்ளைகளுக்குக் கடவுளை நேசிக்க அவர்கள் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். மகன் ஆல்யெக் மாஸ்கோவைச் சேர்ந்த நாடாஷா என்ற கிறிஸ்தவ பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இப்போது அவர்கள் இருவரும் செ. பீட்டர்ஸ்பர்க் அருகிலுள்ள ரஷ்ய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். 1995-⁠ல் எங்களுடைய கடைசி மகள் நாடாஷாவிற்குத் திருமணம் ஆனது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் ஜெர்மனியில் ரஷ்ய சபை ஒன்றில் சேவை செய்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் குடும்பமாக அவ்வப்போது ஒன்று கூடிவருவோம். அப்படிக் கூடிவரும்போது எங்களுடைய பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளிடம், ‘எங்கள் “மம்மாவும்,” “பப்பாவும்” யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து சிறு வயதிலிருந்தே அவரை நேசிப்பதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்’ என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட உரையாடல் பேரப் பிள்ளைகளின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதை என்னால் பார்க்க முடிகிறது. நான் சின்ன வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே என்னுடைய கடைசி பேரனும் இருக்கிறான். சில சமயம் அவன் என் மடியில் உட்கார்ந்து பைபிள் கதைகளைச் சொல்லச் சொல்வான். சிறுவனாக இருந்தபோது இதே மாதிரிதான் நான் என் தாத்தாவின் மடியில் ஏறி உட்காருவேன். அவர் எனக்கு மகத்தான சிருஷ்டிகரை நேசிப்பதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் கற்றுக்கொடுத்தார். அந்த இனிய நினைவுகள் வரும்போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுகின்றன. (g04 10/22)

[அடிக்குறிப்பு]

a மால்டேவியா அல்லது சோவியத் ரிப்பப்ளிக் மால்டேவியா என்ற பெயர்களுக்குப் பதிலாக இக்கட்டுரை முழுவதிலும் மால்டோவா என்ற பெயர் பயன்படுத்தப்படும். ஏனென்றால் இதுவே அதன் தற்போதைய பெயர்.

[பக்கம் 11-ன் படம்]

நானும் என் பெற்றோரும், அப்பா சிறைக்குச் செல்வதற்கு முன், மால்டோவாவில் வீட்டிற்கு வெளியே எடுத்த படம்

[பக்கம் 12-ன் படம்]

1959-⁠ல் நானும் லிடியாவும், நாடுகடத்தப்பட்டிருந்தபோது

[பக்கம் 13-ன் படம்]

நான் சிறையிலிருந்தபோது லிடியாவும் மகள் வாலென்டீனாவும்

[பக்கம் 15-ன் படம்]

எங்கள் பிள்ளைகளுடனும் பேரப் பிள்ளைகளுடனும், எல்லோருமே யெகோவாவின் சேவையில்!

[பக்கம் 15-ன் படம்]

இன்று நானும் லிடியாவும்