Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவை ஏன் அழிகின்றன?

இவை ஏன் அழிகின்றன?

இவை ஏன் அழிகின்றன?

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கம்பீரமான வங்காளப் புலிகள், காட்டு நாய்கள், ஸாரஸ் நாரைகள், அக்காலத்து கடலாமைகள், ஆசிய யானைகள்​—⁠இந்தியாவில் அழிந்துவரும் மிருகங்களில் சிலவே இவை. நிலவாழ் பாலூட்டிகளிலேயே மிகப் பெரிய உருவமுள்ள யானைகளுக்கு என்ன ஆகி வருகிறது என்பதைப் பார்க்கலாம்.

யானையின் தந்தத்திற்கு ‘டிமான்ட்’ அதிகம். இதை எக்கச்சக்கமாக பயன்படுத்துகிற நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதனோடு சீனாவும் கைகோர்த்துக் கொள்கிறது. சீனாவைப் பொறுத்தவரை, தந்தத்தாலான ‘ச்சாப் ஸ்டிக்ஸ்’ இன்னும் பாப்புலர். தந்தத்திற்கு இந்தளவு மவுசு இருப்பதால் ஆசிய யானைகளின் பாடே திண்டாட்டமாகி விடுகிறது. எப்படி?

சில காலங்களுக்கு முன் த டைம்ஸ் ஆஃப் இண்டியா இவ்வாறு குறிப்பிட்டது: “ஆப்பிரிக்க யானைகளைப் போல எல்லா ஆசிய யானைகளுக்கும் தந்தம் இருப்பதில்லை. ஆண் யானைகளுக்கு, அதிலும் வெகு சில யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் இருக்கின்றன. அதனால் வேட்டைக்காரர்களின் குறியெல்லாம் தந்தங்கள் உள்ள யானைகள் மீதுதான். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100 யானைகள் கொல்லப்படுகின்றன. இதனால் ஆண்-பெண் யானைகளின் விகிதத்தில் வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கின்றன.” இப்படியே விட்டுவிட்டால் ஒருநாள் யானைகளே இல்லாமல் போய்விடும்.

கொம்புகளுக்காக

பிரமாண்டமான உருவம் படைத்த நிலவாழ் பாலூட்டிகளின் வரிசையில் யானைக்கு அடுத்து வருவது காண்டாமிருகம்தான். இவற்றின் கதி என்ன என்பதைப் பார்க்கலாம். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இப்போது இந்தியாவிலும் நேபாளத்திலும் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் பபித்ரோ வனவாழ் சரணாலயம் இருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய உருவமுடைய இந்த மிருகம் வெறும் 38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சிறிய இடத்தில் வாழ்வது கடினமே. காண்டாமிருகங்களுக்கு இந்த இடம் போதாததால் அக்கம்பக்கத்தில் உள்ள வயல்களில் அவை அடிக்கடி சுற்றித் திரிகின்றன. அங்கு அவை துப்பாக்கிக்கும் விஷ மருந்துக்கும் பலியாகின்றன.

காண்டாமிருகத்தைக் கொல்வதற்கு மனிதன் ஒரு சூழ்ச்சியைக் கையாளுகிறான். பபித்ரோ சரணாலயத்திற்கு மேல் ஹை வோல்டேஜ் கேபிள்கள் இரண்டு செல்கின்றன. கள்ள வேட்டைக்காரன் ஒரு மூங்கில் கொம்பைப் பயன்படுத்தி, ஒரு ஒயரை இந்தக் கேபிள்கள் மீது மாட்டி விடுகிறான், அந்த ஒயர் தரையைத் தொடுமளவு நீளமானது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒயர் பக்கம் வந்தபோது என்ன நடந்தது என்பதை வனவிலங்கு உயிரியலாளர் விவேக் மேனன் சொல்லக் கேட்போம்: “ஹை வோல்டேஜ் மின்சக்தி காண்டாமிருகத்தின் உடம்பில் பாய்ந்த மறுகணமே அது இரண்டு இழுப்பு இழுத்து, கீழே சாய்ந்துவிட்டது. . . . ஒரே செகன்ட்தான், அந்த மாம்ச மலை சுருண்டு விழுந்து உயிரைவிட்டது.”

மிஞ்சிப் போனால் ஒரு கிலோ தேறும் சிறிய கொம்புக்காக அவ்வளவு பெரிய மிருகம் கொல்லப்படுகிறது என்பதைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. மனிதனின் நகத்தை போலவே காண்டாமிருகத்தின் கொம்பும் அடர்த்தியான ஒருவித நார்களால் ஆனது. மார்க்கெட்டில் இதற்கு நல்ல கிராக்கி இருப்பதால் காண்டாமிருகங்கள் பேராபத்தில் இருக்கின்றன.

ஸதோஷ் சால்வைகள் மீதுள்ள மோகத்தால்

திபெத்திய மறிமான், அதாவது சிரூ (chiru) என்ற மானிலிருந்து ஒருவகை கம்பளி மயிர் கிடைக்கிறது. அதை ஸதோஷ் கம்பளி என்கிறார்கள். இந்தக் கம்பளி மயிரால் தயாரிக்கப்பட்ட சால்வைகள், ஆள்காட்டி விரலில் போடும் மோதிரத்திற்குள்ளேயே நுழைந்துவிடும் அளவுக்கு நைசாக இருக்கின்றன. இந்த சால்வைகளின் விலை 7,20,000 ரூபாய் வரை உள்ளது. இப்படி உலகத்திலேயே விலையுயர்ந்த சால்வையாக இது இருக்கிறது. இதைக் கம்பளியாக போர்த்தியிருக்கும் மறிமான்களுக்கு என்ன ஆகி வருகிறது என்பதைப் பார்க்கலாம்.

“ஒரு ஸதோஷ் சால்வையின் விலை குறைந்தபட்சம் ஐந்து சிரூ மான்களின் உயிர்” என இண்டியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் திபெத் பீடபூமியிலுள்ள சுமார் 20,000 சிரூ மான்கள் சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவதாக சொல்லப்படுகிறது. அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிற போதிலும், இதுதான் நடந்து வருகிறது. 1979-⁠ல், ஸதோஷ் கம்பளி வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. என்றாலும் இன்றுவரை சிரூக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது.

எலும்புக்காகவும் தோலுக்காகவும்

இந்தியாவிலுள்ள புலிகளும் காட்டுப் பூனைகளும்கூட அழியும் ஆபத்தில் இருக்கின்றன. மற்ற இடங்களில், புலிகளில் சில சிற்றினங்களான கேஸ்பியன் புலி, ஜாவா புலி, பாலி நாட்டுப் புலி ஆகியவை ஏற்கெனவே அழிந்துவிட்டதாக தெரிகிறது. 20-⁠ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் காடுகளில் சுமார் 40,000 புலிகள் சுற்றித் திரிந்தன. வருடங்கள் போக போக அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. காரணம்? அவற்றின் வாழிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதே. அதுமட்டுமல்ல அவற்றின் தோலும் சில எலும்புகளும் வியாதிகளைக் குணப்படுத்த உதவும் என்று சீன மருத்துவத்தில் நம்பப்படுவதாலும் அவை கொல்லப்படுகின்றன.

புலிகள் வசிப்பதற்கு தகுந்த இடங்கள் இருப்பதில்லை. அதனால் என்ன நடக்கிறது என்பதை த சீக்ரெட் லைஃப் ஆஃப் டைகர்ஸ் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “புலிகளின் வாழிடமாகிய காடுகள் பெருகினால் மட்டுமே புலிகளின் எண்ணிக்கை பெருகும். காடுகள் போதுமானதாக இல்லாதபோது உணவுக்காகவும் இடத்திற்காகவும் அவை ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொன்று விடுகின்றன, இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.”

இந்தியாவிலுள்ள மற்ற காட்டுப் பூனைகள் எப்படி உயிர் பிழைத்து வருகின்றன? குஜராத்திலுள்ள ஜூனாகட் என்ற இடத்தில் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த ஒரு பார்வையாளர் காலி கூண்டு ஒன்றைப் பார்த்தார். அந்தக் கூண்டிற்கு வெளியே ஆசிய சிறுத்தையின் படம் வைக்கப்பட்டிருந்தது, அதோடு, “இந்தியாவில் இந்தச் சிறுத்தை இனம் 1950-⁠ல் அழிந்துவிட்டது” எனவும் குஜராத்தியில் எழுதப்பட்டிருந்தது.

எதிர்காலம் என்ன?

இந்தியாவில், அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கிறது. மனிதன் சுயநலத்துக்காக இந்தப் பூமியை அழித்து வருகிறான் என்பதற்கு சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் அதிசய விலங்குகளின் அழிவு. இவற்றின் எதிர்காலம் என்ன? ‘ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய [கடவுளுடைய] கோபம் மூண்டது . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கு, காலம் வந்தது’ என்ற தீர்க்கதரிசனம் சீக்கிரத்தில் நிறைவேறப் போகிறதென பரிசுத்த பைபிளில் உள்ள கடவுளுடைய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.​—வெளிப்படுத்துதல் 11:18.

பூமியையும் அதிலுள்ள அற்புத வனவிலங்குகளையும் அழித்திருக்கும் மனிதனைப் பூமியிலிருந்து அழித்தபின் நிலைமை எப்படி இருக்கும்? மிகவும் அருமையாக இருக்கும்! மனிதன் இனியொருபோதும் எந்த மிருகத்தையும் கொல்ல மாட்டான். ஆம், கடவுளுடைய ராஜ்யத்தில் பூமியில் இப்படிப்பட்ட நிலைமையே இருக்கும். அந்த ராஜ்யம் வருவதற்காக ஜெபம் செய்யத்தான் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார்.​—ஏசாயா 11:6-9; மத்தேயு 6:10. (g04 10/22)

[பக்கம் 26-ன் படங்கள்]

இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் சில

சாரஸ் நாரை

வங்காளப் புலி

ஆசிய யானை

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

திபெத்திய மறிமான்

[படங்களுக்கான நன்றி]

நாரை: Cortesía del Zoo de la Casa de Campo, Madrid; மறிமான்: © Xi Zhi Nong/naturepl.com