Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளை நேசிக்க கிறிஸ்டிக்கு கற்றுக்கொடுத்தோம்

கடவுளை நேசிக்க கிறிஸ்டிக்கு கற்றுக்கொடுத்தோம்

கடவுளை நேசிக்க கிறிஸ்டிக்கு கற்றுக்கொடுத்தோம்

எங்கள் மகள் கிறிஸ்டி 1977-⁠ல் பிறந்தாள். சில நாட்களிலேயே டாக்டர் எங்கள் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார்; கிறிஸ்டிக்கு கொஞ்சமும் காது கேட்காது, அதோடு லேசாக மூளைவாதமும் (cerebral palsy) இருக்கிறது என்றார். எங்கள் வாழ்க்கை எந்தளவு பாதிக்கப்படும் என்பதை அப்போது நாங்கள் உணரவே இல்லை.

சில மாதங்களுக்குப் பிறகு என் கணவர் கேரியும் நானும் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்னில் நடைபெற்ற விசேஷ வகுப்புகளுக்கு போக ஆரம்பித்தோம்; எங்கள் மகளை பயிற்றுவிப்பது எப்படி என்பதை அங்கு கற்றுக்கொண்டோம். மெல்பர்னில் உள்ள நேஷனல் அகோஸ்டிக் லேபரட்டரிக்கும் சென்றோம். அப்போது கிறிஸ்டிக்கு பத்து மாதம்தான்; அங்கு, அந்தப் பிஞ்சுக் குழந்தையின் காதுகளில் சின்னஞ்சிறிய மெஷின்கள் பொருத்தப்பட்டன. அவளுக்கு அது பிடிக்கவே இல்லை; அவளது குட்டிக் காதுகளில் அவற்றை வைத்தும் வைக்காததற்கு முன்பே ஒயர்களை பிடித்து பிடுங்கிப் போட்டு விடுவாள்! பாட்டரிகள் விழுந்து விடாதிருக்க ஸ்ட்ராப்புகளை வேறு அவள் கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது; அதுவும் அந்த பாட்டரிகள் ரொம்ப கனமாக இருந்தன.

மூளைவாதத்தின் காரணமாக, நடக்க கற்றுக்கொள்வது கிறிஸ்டிக்கு கஷ்டமாக இருந்தது. ஆகவே வாராவாரம் ஒரு தெரப்பிஸ்டிடம் அவள் பயிற்சி பெற வேண்டியிருந்தது. மூன்று வயதிற்குள் கிறிஸ்டி அடிக்கடி கீழே விழந்தாலும் தானாகவே நடக்க ஆரம்பித்தாள். ஐந்து வயது வரை தெரப்பிஸ்டிடம் பயிற்சி பெற்றாள். இதற்கிடையே, அருகேயிருந்த பெனல்லா டவுனுக்கு நாங்கள் குடிமாறிச் சென்றோம். அங்கே கேரி தன் பிஸினஸை நடத்தினார்.

கிறிஸ்டியின் படிப்பு

காது கேளாதோருக்கான ஆசிரியர் ஒருவர், கிறிஸ்டிக்கு விசேஷ விதத்தில் கல்வி புகட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றி எங்களுக்கு விளக்கினார். அதற்காக நாங்கள் மறுபடியும் வேறொரு இடத்திற்கு​—⁠காது கேளாதோருக்கான பள்ளி இருந்த பென்டிகோ நகருக்கு⁠—⁠குடிமாறிச் செல்ல வேண்டியிருந்தது. நான் மறுபடியும் கர்ப்பமானதால் கொஞ்ச காலத்திற்கு அதைத் தள்ளிப்போட்டோம். கிறிஸ்டி நான்கு வயது பிள்ளையாகவும் என் மகன் ஸ்காட் 5 மாதக் குழந்தையாகவும் இருந்தபோதுதான் குடிமாறிச் சென்றோம். பென்டிகோவிலிருந்த ஒரு ஆஸ்பத்திரியில் கிறிஸ்டிக்கு பேச்சுப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது; வாரம் ஒரு முறை நடந்த அது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொடரவிருந்தது. கேரியும் நானும்கூட சைகை மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

கிறிஸ்டிக்கு எப்படி ஆவிக்குரிய கல்வி புகட்டுவது என்பதுதான் எங்களுக்கு பெரிய கவலையாக இருந்தது. கேரியும் நானும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்ததால் ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்’ கிறிஸ்டியை வளர்க்க தீர்மானமாக இருந்தோம். (எபேசியர் 6:4) ஆனால் அதை எப்படி செய்வது? கிறிஸ்டியின் ஸ்கூல் பிரின்ஸிப்பல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்டிக்கு கடவுளைப் பற்றி சொல்லித் தருவதுதான் எல்லாவற்றையும்விட படுகஷ்டம். கடவுளை பார்க்க முடியாது, அப்படியிருக்கும்போது அவரைப் பற்றி எப்படி அவளிடம் விவரிக்கப் போகிறீர்கள்?” உண்மையிலேயே எங்களுக்கு பெரிய சவால்தான்! எங்கள் பங்கில் நிறைய நேரம், ஆராய்ச்சி, பொறுமை எல்லாம் தேவைப்படும் என்பதை சீக்கிரத்தில் புரிந்துகொண்டோம்.

முதலில் உருவப்படங்களையும் வரைபடங்களையும் பயன்படுத்தி முடிந்தளவு எளிய வார்த்தைகளில் பேசினோம். கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் பிரசங்க ஊழியத்திற்கும் அவளை அழைத்துச் சென்றோம். என்ன நடக்கிறதென அப்போது அவளுக்கு புரியாவிட்டாலும் கூட்டிக்கொண்டு போனோம். கிறிஸ்டி சைகை மொழியை நன்கு கற்றுக்கொண்ட பிறகு அவளுக்கு புது வாழ்வு பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்! இருந்தாலும் பைபிளிலுள்ள அநேக வார்த்தைகளும் சொற்றொடர்களும் கருத்துக்களும் விளக்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தன. அவளுக்கு மிகவும் பிடித்த புத்தகம், என்னுடைய பைபிள் கதை புத்தகம்; * இது பிள்ளைகளுக்காகவே தயாரிக்கப்பட்டது. இதிலுள்ள வண்ணப் படங்களும், நாங்களாகவே வரைந்த இன்னும் சில படங்களும் மிகவும் கைகொடுத்தன. காலப்போக்கில் கிறிஸ்டியின் இருதயத்தில் கடவுள் மீதான அன்பு வளர ஆரம்பித்தது.

காதுகேளாத பிள்ளைகளை வளர்த்துவந்த மற்ற சாட்சிகளோடு தொடர்புகொள்ள கிறிஸ்டியின் ஸ்கூல் பிரின்ஸிப்பல் அன்போடு எங்களுக்கு உதவினார். காதுகேளாதோர் எப்படி காதுகேட்போருக்கு சாட்சிகொடுக்க முடியுமென அவர்கள் விளக்கினார்கள்; அச்சிடப்பட்ட பைபிள் செய்தி அடங்கிய கார்டுகளை கொடுப்பது ஒரு வழி என்றார்கள். அதுதான் கிறிஸ்டியின் வாழ்க்கையில் ஒரு மைல்கல். ஏனெனில் பைபிள் சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள தயாரானபோது அது அவளுக்கு வெகு எளிதாக இருந்தது! அவள் 14-வது வயதில் நற்செய்தியை அறிவிக்கும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆனாள். 17 வயதில், அதாவது 1994-⁠ல் முழுக்காட்டப்பட்டாள்.

இருந்தாலும் கிறிஸ்டிக்கு நல்ல கூட்டுறவு தேவைப்பட்டது; காதுகேட்கும் சாட்சிகளோடு நெருங்கிப் பழகுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. ஆகவே சபையில் காது கேளாதோருக்கு உதவ விரும்பியவர்களுக்காக கேரியும் நானும் சைகை மொழி வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம். எங்கள் வகுப்புகளில் படித்த சிலருக்கு, காதுகேளாதோருக்காக மொழிபெயர்க்கும் வேலை பிற்பாடு கிடைத்தது. அதைவிட முக்கியமாக, சைகை மொழியை கற்றுக்கொண்ட அநேகர் கிறிஸ்டியோடு பேசுவதை மிகவும் மகிழ்ந்து அனுபவித்தார்கள். அதுமுதல் அவளால் கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்தும் அசெம்பிளிகளிலிருந்தும் இன்னுமதிகமாக பயனடைய முடிந்தது. இந்நாள்வரை அவற்றில் நன்கு பங்குகொள்கிறாள். சகோதரர்கள் தன்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டியதற்கு அவள் அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.

ஒருநாள், ஒழுங்கான பயனியராக, அதாவது முழுநேர சுவிசேஷகராக சேவை செய்ய தனக்கு விருப்பம் இருப்பதாக கிறிஸ்டி எங்களிடம் தெரிவித்தாள். அவளுக்கு டிரைவர் லைசென்ஸ் கிடைக்க கேரி வழிசெய்தார். பிறகு மற்ற ஏற்பாடுகளையெல்லாம் செய்த பிறகு 1995-⁠ல் கிறிஸ்டி ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தாள். 2000-⁠ல், அவளுக்கு ஒரு தொடக்கப் பள்ளியில் பகுதிநேர வேலை கிடைத்தது. அது காதுகேளாத பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் வேலை.

இப்போது நாங்கள் நால்வருமே, அதாவது நானும் கேரியும், கிறிஸ்டியும், ஸ்காட்டும் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறோம். நம் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுக்க நேரம் செலவிடுவதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம்.

‘நம் இருதயத்தின் வேண்டுதல்கள்’

கிறிஸ்டியின் குறைபாடு எங்கள் எல்லாருக்குமே சவாலாக இருந்து வருகிறது. சிலசமயம் கிறிஸ்டி ஊழியம் செய்யும்போது அவளுக்காக மொழிபெயர்க்க ஒருவரும் இருப்பதில்லை; தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ளவும் யாரும் இருப்பதில்லை. “வேறு பாஷைக்காரர் மட்டுமே வாழும் ஒரு நாட்டில் நான் வசிப்பது போல் உணருகிறேன்” என அவள் சொல்கிறாள். இருந்தாலும் அவளுடைய நிலைமையை நன்கு சமாளிக்க நாங்கள் அனைவரும் கற்றிருக்கிறோம்.

சங்கீதம் 37:4-⁠ல் உள்ள பின்வரும் வார்த்தைகளில் நாங்கள் ஆறுதலைக் காண்கிறோம்: ‘யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.’ இசையையும் இயற்கை ஒலிகளையும் கேட்க வேண்டும் என்பதும், அன்பானவர்களிடம் சப்தமாக பேச வேண்டும் என்பதுமே கிறிஸ்டியின் உள்ளப்பூர்வமான ஆசை. கிறிஸ்டி என் குரலைக் கேட்கப் போகும் அந்த நாளுக்காக நான் ஏங்குகிறேன். பைபிள் வாக்குறுதியின்படி, எங்கள் இருதயத்தின் இந்த வேண்டுதல்களுக்கு சீக்கிரத்தில் பதில் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம்.​—⁠ஏசாயா 35:⁠5.​—⁠அளிக்கப்பட்டது. (g04 4/8)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 8 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 18-ன் படம்]

14 வயதில் கிறிஸ்டி, “என்னுடைய பைபிள் கதை புத்தக”த்துடன்

[பக்கம் 19-ன் படம்]

அச்சிடப்பட்ட கார்டை பயன்படுத்தி கிறிஸ்டி நற்செய்தியை அறிவிக்கிறாள்

[பக்கம் 19-ன் படம்]

இன்று ஸ்காட், கிறிஸ்டி, கேரி, ஹெதர் ஃபார்ப்ஸ்