Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெறும் அழகுக்காகவா?

வெறும் அழகுக்காகவா?

வெறும் அழகுக்காகவா?

ஸ்பெயினிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

பறவைகள் தங்கள் இறகுகளை வெகு நேரம் கோதுவதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவை ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் இறகுகளை கோதிக்கொண்டே இருப்பதுபோல் தோன்றும். கிளிகள் ஆகட்டும் கூழைக்கடாக்கள் ஆகட்டும், சிட்டுக்குருவிகள் ஆகட்டும் ஃபிளமிங்கோக்கள் ஆகட்டும் அனைத்தும் இந்த தினசரி “சடங்கை” செய்கின்றன. ஏன்? வெறும் அழகுக்காகவா?

இல்லை, இன்னும் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. விமானத்திற்கு எவ்வாறு முழுமையான பராமரிப்பு தேவையோ அவ்வாறுதான் பறவைகளுக்கும் இறகுகளைக் கோதும் இந்த சடங்கு அவசியம். சொல்லப்போனால் இறகுகளை நன்கு கோதி பராமரித்தால்தான் பறவைகள் உயிருடன் இருக்கவே முடியும். இறகுகள் ரொம்பவே சீர்கெட்டு விடுவதால் இவ்வாறு கோதுவது அவற்றை சுத்தமாகவும் ஒட்டுண்ணிகளால் தாக்கப்படாதவாறும் வைத்துக்கொள்வதோடு அவற்றின் பறக்கும் ஆற்றலையும் கட்டிக்காக்கிறது.

பிரிந்து வந்திருக்கும் இறகுகளின் பார்புகளை (barbs) ஒன்றோடொன்று சேர்த்து “ஜிப் போடுவது” தினசரி ஒப்பனையின் ஒரு பாகமாகும். இறகுகளின் பார்புகள் சரியாக கொக்கியிடப்பட்டிருந்தால் பறவை வெகு லாவகமாக உயரே பறக்க முடியும். “இரண்டு வகையான இறகுகளுக்கு விசேஷ கவனம் தேவைப்படுகிறது; அவை பறப்பதற்கு உதவும் இறக்கைப் பகுதியிலுள்ள இறகுகளும் திசை திரும்ப உதவும் வால் பகுதியிலுள்ள இறகுகளும் ஆகும்” என பிரிட்டிஷ் பறவைகள் பற்றிய புத்தகம் (ஆங்கிலம்) விளக்குகிறது.

ஒட்டுண்ணிகளை சதா எதிர்க்க வேண்டிய தொல்லை பிடித்த வேலையும் பறவைகளுக்கு உண்டு. சின்னஞ்சிறிய ஒட்டுண்ணிகள் பறவைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு அவற்றின் இறகுகளை தின்றுவிடுகின்றன. அலகு சேதமடைந்திருந்தால் தன் இறகுகளை பறவையால் சரியாக கோதிக்கொள்ள முடியாது; அப்படிப்பட்ட பறவையின் இறகுகளில் அதிக ஒட்டுண்ணிகள் இருப்பதை இயற்கையியலாளர்கள் கவனித்திருக்கிறார்கள். ஒட்டுண்ணிகளை களைந்தெறிய சில பறவைகள் தங்கள் உடலில் எறும்புகளை வாரிப் போட்டுக்கொள்கின்றன. அந்த எறும்புகளின் ஃபார்மிக் அமிலம் திறம்பட்ட பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது.

இறுதியாக, இறகுகளுக்கு எண்ணெய் பூசப்படுவதும் அவசியம். நீர்ப் பறவைகளின் இறகுகளில் உள்ள எண்ணெய் நீர்ப்புகாதவாறு காக்கிறது. மற்றெல்லா பறவைகளுக்கும், எண்ணெய்ப் பசையுள்ள இறகுகள் சீதோஷண நிலைமைகளிலிருந்து நன்கு பாதுகாப்பளிக்கின்றன. இறகுகளுக்கு இந்த எண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது? வால் பகுதிக்கு சற்று மேலே அமைந்துள்ள ப்ரீன் சுரப்பி என்ற (preen gland) ஒருவித விசேஷ சுரப்பியிலிருந்தே கிடைக்கிறது. அது சுரக்கும் எண்ணெய்யையும் மெழுகையும் பறவை பொறுமையாக எடுத்து எடுத்து தன் இறகுகளில் பூசிக்கொள்கிறது. இதிலும், பறக்கும் இறகுகளுக்குத்தான் முன்னுரிமை தரப்படுகிறது.

ஆகவே பறவை வெறுமனே பொழுதைக் கழிப்பதற்காக தன் இறகுகளை கோதுவதாக நாம் நினைப்பது தவறு. அது பறவையை அழகுபடுத்துவது என்னவோ உண்மைதான். ஆனால் பறவையின் ஆரோக்கியத்திற்கும் கைகொடுக்கிறதே! சொல்லப்போனால் இறகுகளை கோதுவது பறவைகளுக்கு வாழ்வா சாவா எனும் முக்கிய சமாச்சாரம்! (g04 4/22)

[பக்கம் 14-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இறகுத் தண்டு

பார்பிசெல்கள்

பார்பியூல்கள்

பார்புகள்

[படம்]

பறவைகள் இறகுகளைக் கோதுவதன் மூலம் பிரிந்து வந்திருக்கும் அவற்றின் பார்புகளை ஒன்றோடொன்று சேர்த்து ‘ஜிப் போடுகின்றன’

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

Cortesía del Zoo de la Casa de Campo, Madrid

[பக்கம் 14-ன் படங்களுக்கான நன்றி]

பெலிகன்: Foto: Loro Parque, Puerto de la Cruz, Tenerife; கிளி: Cortesía del Zoo de la Casa de Campo, Madrid