Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செல்லப்பிராணிகள் சமநிலையான நோக்கு

செல்லப்பிராணிகள் சமநிலையான நோக்கு

செல்லப்பிராணிகள் சமநிலையான நோக்கு

முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பூமியையும் அதிலுள்ள மிருகங்களையும் பராமரிக்கும் பொறுப்பு மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டது. கடவுள் ‘சகலத்தையும் ஆடு மாடுகளெல்லாவற்றையும், காட்டு மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்’ என பைபிள் கூறுகிறது.​—சங்கீதம் 8:6-8; 115:16.

அப்படியானால், மிருகங்களை பராமரிக்கும் பொறுப்பை மனிதர் எப்படி நிறைவேற்றுகின்றனர் என்பது மிகவும் முக்கியமானது. ‘நல்லார் தம் கால்நடைகளை பரிவுடன் பாதுகாப்பர்’ என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:10, பொது மொழிபெயர்ப்பு) உண்மையில், இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டங்களில் மிருகங்களுக்கு கருணை காட்டுவதைப் பற்றி அழுத்தந்திருத்தமாக பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. (உபாகமம் 22:4, 10; 25:4) மனிதர் இவ்வாறு தங்களுடைய பொறுப்பை கவனித்து வந்தபோது கால்நடைகளை பெரும்பாலும் தங்களுடைய செல்லப்பிராணிகளாக வைத்துக்கொண்டார்கள், ஏன் காட்டு மிருகங்களைக்கூட நன்கு பழக்கப்படுத்தி அவற்றையும் செல்லப்பிராணிகளாக வளர்த்தார்கள்.​—ஆதியாகமம் 1:24.

என்றாலும் மனிதருக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமிருப்பதைப் பற்றி பைபிள் வலியுறுத்துவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மிருகங்களல்ல, மனிதரே ‘தேவனுடைய சாயலிலும் ரூபத்திலும்’ படைக்கப்பட்டவர்கள். (ஆதியாகமம் 1:26) மிருகங்கள் குறைவான ஆயுட்காலத்துடனேயே படைக்கப்பட்டன, ஆனால் மனிதரோ பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் படைக்கப்பட்டனர். (ஆதியாகமம் 3:22, 23; சங்கீதம் 37:29) “நித்திய ஜீவனை” பெறுவதற்கு நாம் கடவுளை விசுவாசித்து அவரைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்; இதையெல்லாம் மிருகங்களால் செய்ய முடியாது. (யோவான் 3:36; 17:3) அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதலுக்கு தகுதியற்றோரை, ‘பிடிபட்டு அழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களுக்கு’ பைபிள் ஒப்பிடுகிறது.​—2 பேதுரு 2:9-12.

மனிதனின் நன்மைக்காக படைக்கப்பட்டன

மனிதருக்காகவே மிருகங்களை கடவுள் படைத்தார். அவர்கள் செய்யும் வேலைக்கு அவை உதவலாம், போகுமிடமெல்லாம் அழைத்துச் செல்வதற்கும், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கும் அவை பயன்படலாம். கடவுளுடைய அன்பையும் ஞானத்தையும்கூட அவை பறைசாற்றுகின்றன. ஆகவே, மிருகங்களின் அழகிய தோற்றத்தை உற்று கவனித்து, அவற்றிற்கு இருக்கும் இயல்பான ஞானத்தை ஆராய்வதன் வாயிலாக படைப்பாளரைப் பற்றி அதிகமாக கற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லை. (சங்கீதம் 104:24; நீதிமொழிகள் 30:24-28; ரோமர் 1:20) அத்தகைய ஞானத்தைப் பெற்ற உயிரினங்களுக்கு அநேக எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணமாக பூச்சிகளின் உலகை கவனிக்கலாம். தேனீக்கள் ஒன்றுக்கொன்று செய்திகளை தெரிவிக்கும் விதமும் உணவு கிடைக்கும் இடத்தை நோக்கி செல்லும் விதமும் உண்மையில் வியக்க வைக்கின்றன; சிக்கலான அமைப்புடைய கூட்டை அவை கட்டும் விதத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

மிருகங்கள் மனிதருக்கு உணவாகவும் பயன்படுகின்றன. முதன்முதலில் காய்கறிகளையே மனிதருக்கு உணவாக கடவுள் கொடுத்திருந்தார். ஆனால், 1,600-⁠க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்குப் பின்னர் கடவுள் இவ்வாறு சொன்னார்: ‘நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல், அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.’ (ஆதியாகமம் 1:29; 9:3) ஆகவே, ஆரம்பத்தில் இறைச்சியை மனிதருக்கு உணவாக கடவுள் அளிக்காவிட்டாலும் பிற்பாடு மனிதனின் நன்மைக்காக அதை சாப்பிட உரிமை அளித்தார் என்பது தெளிவாகிறது.

இன்று செல்லப்பிராணிகளால் வரும் பிரச்சினைகள்

சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பது அரிதாகவே இருந்திருப்பதாக தெரிகிறது; உலகின் பெரும்பாலான இடங்களில் இன்றும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்து செழிப்பான வாழ்க்கை வாழ்வதால், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் சில பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.

இந்த உலகில் 50 கோடி செல்லப்பிராணிகள் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. திடுக்கிட வைக்கும் விஷயம் என்னவெனில், இவற்றில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஐக்கிய மாகாணங்களில் காணப்படுகிறது. சுமார் 5.9 கோடி நாய்களும் 7.5 கோடி பூனைகளும் அங்கு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், லண்டனிலும் சரி பாரிஸிலும் சரி, நியு யார்க் நகரோடு ஒப்பிட அதிகமான செல்லப்பிராணிகள் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படுகின்றன.

பாரிஸில் சில ஆண்டுகளுக்கு முன்னர், நடை பாதைகளில் கிடக்கும் நாய்களின் கழிவுகளை அகற்றுவதற்கு கானினேட் என அழைக்கப்பட்ட சிறிய மோட்டார் ஸ்கூட்டர்களில் சுமார் 70 ஸ்கூட்டர்கள் குத்தகைக்கு அமர்த்தப்பட்டன. பாரிஸில் சுமார் 2,50,000 நாய்களால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 டன்கள் கழிவுகள் சேர்ந்துவிடுவதாக கணக்கிடப்பட்டது. அவற்றில் பாதிக்கும் குறைவானதையே இந்த கானினேட்டுகளால் அப்புறப்படுத்த முடிந்தது. நாயின் கழிவை மிதித்து வழுக்கி விழுவதால் ஓர் ஆண்டில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைவதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக, அது சத்தம்போட்டு குலைப்பதும்கூட பிரச்சினையாக இருக்கிறது. மற்ற ஆட்களிடம் எந்தவிதத்திலும் பொறுத்துப் போகாத சிலர் தங்களுடைய நாய்கள் என்ன செய்தாலும் பொறுத்துப் போவார்கள். “சதா குலைத்துக் கொண்டேயிருக்கும் நாய்களை வைத்திருப்போர் அவற்றின் சத்தத்தை அசட்டை செய்ய பழகிவிட்டது போல் தோன்றுகிறது” என த பெட் கேர் ஃபோரம் என்ற வெப்சைட் குறிப்பிடுகிறது. உதாரணமாக, சிலர் தங்களுடைய நாய் குலைப்பதை கட்டுப்படுத்த எதுவுமே செய்வதில்லை, ஏன் முக்கியமான ஒரு விஷயத்தை தொடர்ந்து பேச முடியாதளவுக்கு அதன் சத்தம் பயங்கரமாக இருந்தாலும்கூட எதுவும் செய்வதில்லை.

மறுபட்சத்தில், வளர்ப்பவர் இருக்கும் சமயத்தில் ஒரு நாய் அமைதியாக எந்தத் தொல்லையும் கொடுக்காமல் இருக்கலாம்; ஆனால் அவர் இல்லாதபோது அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பெருத்த தொல்லையாக இருக்கலாம். இப்படி பிறருக்கு தொல்லையாக இருந்தாலும் அவற்றை வளர்ப்பவர்கள் அவற்றை நேசிப்பது வாஸ்தவம்தான். ஆனால், பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஷிஃப்ட் வேலை முடிந்து வருபவராக இருந்தால் அல்லது பக்கத்து வீட்டிலுள்ள ஒரு தாய் தன் குழந்தையை எப்படியாவது தூங்க வைக்க வேண்டுமென கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்களால் நாயின் சத்தத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, சலிப்பு தட்டிய வளர்ப்புப் பிராணிகள் எரிச்சலடைந்து காட்டுத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பிக்கலாம்.

முக்கியமாக நகரங்களில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகமதிகமாக பெருகி வருவதும் பிரச்சினையாக உள்ளது. ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் 1.7 கோடி நாய்க்குட்டிகளும் 3 கோடி பூனைக்குட்டிகளும் பிறப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் லட்சக்கணக்கானவை விலங்கு காப்பகங்களில் தள்ளப்படுகின்றன; ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே இப்படி தள்ளப்படுபவற்றில் ஒவ்வொரு வருடமும் 40 முதல் 60 லட்சம் மிருகங்கள் கருணைக் கொலை செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

இத்தனை அநேக மிருகங்களை ஏன் காப்பகங்களில் கொண்டு போய் விடுகிறார்கள்? ஏனென்றால் செல்லப்பிராணிகள் மீதுள்ள ஆசையெல்லாம் கொஞ்ச காலத்தில் மறைந்துவிடுகிறது. செல்லம்போல இருக்கும் நாய்க்குட்டியோ பூனைக்குட்டியோ வளர்ந்துவிடுகையில் அதற்கு கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. ஆனால், அதனோடு விளையாடுவதற்கோ அதை பயிற்றுவிப்பதற்கோ வீட்டில் யாருக்குமே நேரம் கிடைக்காமல் போகலாம் அல்லது அந்தளவுக்கு பொறுமை இல்லாமல் போகலாம். எழுத்தாளரும் மிருகங்கள் நிபுணருமான டாக்டர் ஜோனிகா நியூபி இவ்வாறு சொல்கிறார்: “பொதுவாக எல்லாருடைய கருத்துக்கும் முற்றிலும் வித்தியாசமாக, உலகமெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகள் எல்லாமே காட்டுவதென்னவென்றால், விலங்கு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்ட நாய்களில் அரைவாசி அனாதையாக விடப்பட்டவை அல்ல; ஆனால் அது குலைக்கும் சத்தத்தைத் தாங்க முடியாமல், அல்லது அதன் மூர்க்கத்தனத்தை பொறுக்க முடியாமல், அல்லது அதன் கொட்டத்தை அடக்க முடியாமல், தொல்லை ஒழிந்தால் போதுமென அதை வளர்த்தவர்களால் அங்கே கொண்டுவந்து விடப்பட்டவை.”

வளர்ப்புப் பிராணிகள் அதிகமாக பெருகுவதைப் பற்றிய ஒரு தகவல் மையம் இந்த நிலைமையை இவ்வாறு தொகுத்தளிக்கிறது: “உயிரினங்கள் தூக்கியெறியும் பொருட்களாக ஆகிவிட்டன; பார்ப்பதற்கு அழகாக இருக்கும்போது அவற்றைத் தடவி கொஞ்சுகிறார்கள், ஆனால் பிடிக்காமல் போகும்போதோ கழித்துக்கட்டுகிறார்கள். விலங்கினங்களை இப்படி அற்பமாகக் கருதுவது எங்கும் சகஜமாகி வருகிறது, அது நம் பாரம்பரியத்தையும் அழித்து வருகிறது.”

ஆலோசிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள், முக்கியமாக நகரவாசிகள் சில காரியங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. துடிப்பான வளர்ப்பு பிராணிகள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட “தேசிய மக்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் சுற்றாய்வு” இவ்வாறு குறிப்பிட்டது: “‘வாக்கிங்,’ உடற்பயிற்சி ஆகிய இரண்டும் நாயின் உடலுக்கும் சரி மனதுக்கும் சரி அத்தியாவசியம். போதுமான உடற்பயிற்சியை பெறாத நாய்கள், சமாளிக்க முடியாதளவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கலாம்.” ஆனால், அவற்றை வளர்ப்பவர்கள் பலரும் பகல் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செய்து களைத்து விடுவதால் வீட்டிற்கு வந்தவுடன் நாயை ‘வாக்கிங்’ கொண்டு சென்று ரிலாக்ஸ் செய்ய வைப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

ஆகவே, செல்லப்பிராணியை வளர்க்க விரும்புகிறவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: என்னுடைய செல்லப்பிராணிக்கு என்னால் சரியான கவனிப்பைக் கொடுக்க முடியுமா? என்னுடைய வேலையின் காரணமாக ஒரு நாளில் பெரும்பாலான சமயம் என்னுடைய செல்லப்பிராணியை கவனிக்க முடியாமல் போய்விடுமா? அதை ‘வாக்கிங்’ கொண்டு போவதற்கோ அதனோடு விளையாடுவதற்கோ எனக்கு நேரம் இருக்குமா? என்னுடைய நாய்க்கு பயிற்சி தேவைப்படுமானால், அந்தப் பயிற்சியைக் கொடுக்க அல்லது பயிற்சி கொடுக்கும் கிளப்புக்கு அழைத்துச் செல்ல நான் தயாரா? செல்லப்பிராணியை வளர்ப்பதால் அதிமுக்கியமான காரியங்களுக்கு நேரமில்லாமல் போய்விடுமா?

ஆலோசிக்க வேண்டிய மற்றொரு அம்சம், ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது அதிக செலவு பிடித்த சமாச்சாரம். ஐக்கிய மாகாணங்களில் ஒரு நாயை வளர்ப்பதற்கு சராசரியாக ஓர் ஆண்டில் சுமார் 10,000 ரூபாயும் ஒரு பூனையை வளர்ப்பதற்கு சுமார் 5,000 ரூபாயும் செலவாகிறது என ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. சொல்லப்போனால், உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு ஆகும் செலவு இதில் சேர்க்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சில சமுதாயங்களில் செல்லப்பிராணிகளுக்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

சமநிலையான நோக்கு​—⁠ஒரு சவால்

படைப்பாளரின் கைவண்ணமான மிருகங்களோடு நாம் பிரியமுடன் பழகும்போதும் அன்பான அக்கறை காட்டும்போதும் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். அப்படியானால் மிருகங்களை கொடுமைப்படுத்துவது சரியல்ல என்பதை ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? ஆனால் எருது, நாய், கோழி ஆகியவற்றை மனிதர் பொழுதுபோக்குக்காக ஈவிரக்கமற்ற போட்டிகளில் ஈடுபடுத்தி துஷ்பிரயோகம் செய்து, செத்துப்போக அனுமதிப்பது சகஜமாகிவிட்டது. ஆகவே, கடவுளுடைய நோக்கத்திற்கு இணங்க மிருகங்களை மனிதர் கருணையோடு நடத்துவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

மறுபட்சத்தில், சிலரோ வாழ்க்கையின் முக்கிய காரியங்களைவிட வளர்ப்புப் பிராணிகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள். சொல்லப்போனால், இத்தகைய பிராணிகள் மீது அளவோடு பாசம் காட்டவில்லையென்றால் மனிதருடைய வாழ்க்கையைவிட செல்லப்பிராணிகளின் வாழ்க்கையே மிகவும் முக்கியம் போல் ஆகிவிடலாம். உதாரணமாக, ஒரு கால்நடை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அங்கு திரண்டு வந்திருந்த வளர்ப்புப் பிராணிகளின் எஜமான்களில் சிலர், “எங்க செல்லங்களுக்காக நாங்க உயிர்விட தயார் என ஓலமிட்டு தீயணைப்புப் படையினரின் தடுப்பெல்லையையும் மீறிச் செல்ல முயன்றதாக” சொல்லப்படுகிறது.

உயிருக்கு உயிராக நேசித்த ஒரு செல்லப்பிராணி செத்துப் போனால், அந்தக் கவலையை தாங்கிக்கொள்ளவே முடியாது என்பது உண்மைதான். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும்கூட ஓரளவு சமநிலையைக் காத்துக்கொள்ள வழி இருக்கிறது. முதலில் குறிப்பிட்டபடி, மிருகங்கள் கடவுளின் சாயலில் படைக்கப்படவுமில்லை, என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் படைக்கப்படவுமில்லை; மனிதரே அவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி சொல்கையில், “நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்” என பைபிள் குறிப்பிடுகிறது; ஆனால் மிருகங்களைப் பற்றி இதுபோன்ற எதையும் குறிப்பிடுவதில்லை.​—பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு.

ஆகவே, மிருகங்களைக் கொல்லுவது தவறு என்று பைபிள் சொல்வதில்லை; உண்மையில், இப்போது கோடிக்கணக்கானோர் அவற்றை உணவாக உட்கொள்கின்றனர். ஆனால், ஒரு செல்லப்பிராணியை கருணைக் கொலை செய்வது பற்றி​—⁠உதாரணமாக, சீக்குப்பிடித்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்போது கருணைக் கொலை செய்வது பற்றி​—⁠என்ன சொல்லலாம்? அப்படியொரு தீர்மானம் எடுப்பது எவ்வளவு கஷ்டமாக, வேதனையாக இருக்கும்! ஆனாலும், தொடர்ந்து சிகிச்சை கொடுப்பதால் இன்னும் பல நாட்களுக்கு அது வேதனைப்படத்தான் வேண்டியிருக்கும் என்று நினைத்து வலியின்றி சட்டென கொன்றுவிடுவதே நல்லது என செல்லப்பிராணியை வளர்ப்பவர் முடிவு செய்யலாம்; அதன் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழிப்பது குடும்பத்துக்கு பொருளாதார சுமையாகக்கூட இருக்கலாம்.

கடவுள் மனிதரை மிகவும் நேசிக்கிறார்; அப்படியானால், நம்முடைய பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் விடப்பட்ட மிருகங்களை நாமும் நேசிக்க வேண்டாமா? அப்படிப்பட்ட நேசத்தை காண்பிப்பவர்கள், நம் படைப்பாளருடைய ஆதி நோக்கத்திற்கு இசைவாக மிருகங்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழும் எதிர்பார்ப்பால் பெரும்பாலும் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த கட்டுரை செல்லப்பிராணிகளைப் பற்றிய இந்த அம்சத்தை விளக்கும். (g04 2/22)

[பக்கம் 7-ன் படம்]

காப்பகங்களில் ஒவ்வொரு வருடமும் ஏன் லட்சக்கணக்கான வளர்ப்புப் பிராணிகள் கொல்லப்படுகின்றன?

[படத்திற்கான நன்றி]

© Hulton-Deutsch Collection/CORBIS

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

முக்கியமாக நகர வாசிகள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகத்தை செல்லப்பிராணிக்காக செய்ய வேண்டியிருக்கலாம்

[பக்கம் 9-ன் படம்]

மிருகங்களுக்கு கருணை காட்டும்போது நம் படைப்பாளர் பெருமகிழ்ச்சி அடைகிறார்