Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிருகங்கள் என்றென்றும் ஆனந்தமே!

மிருகங்கள் என்றென்றும் ஆனந்தமே!

மிருகங்கள் என்றென்றும் ஆனந்தமே!

மிருகங்களில்தான் எத்தனை எத்தனை விதங்கள், ஒவ்வொன்றும் ஒரு தினுசு! அவற்றின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிவது, அவற்றை படைத்தவரிடம் நெருங்கிவர ஒரு வழியாக அமையலாம். மரியாவின் உதாரணம் இதையே காட்டுகிறது.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, போர்ச்சுகலில் உள்ள லிஸ்பனில் மரியா குடியிருந்த சமயத்தில் அவள் பிரியமாக வளர்த்த நாய் எங்கோ வழிதவறி போய்விட்டது. அதனால் இந்த விஷயத்தை வானொலியில் அறிவிப்பு செய்தாள். யெகோவாவின் சாட்சி ஒருவருக்கு அந்த அறிவிப்பில் கேட்ட அதே அடையாளத்தை உடைய நாயை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. உடனே அவர் மரியாவுக்கு தகவல் சொன்னார். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாயைக் கண்டுபிடித்தார்கள்; மிருகங்கள் மீது மரியாவுக்கு அந்தளவு பிரியம் இருந்ததால், கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற புதிய உலக வாழ்க்கை அவளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என அந்த சாட்சி கூறினார். புதிய உலகில் மனிதர் எல்லா மிருகங்களோடும் சமாதானமாக வாழ்வார்கள் என்பதை அந்த சாட்சி விளக்கினார்.

யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு வரும்படி கொடுத்த அழைப்பை மரியா ஏற்றுக்கொண்டாள். அங்கே அவள் கேட்ட, பார்த்த விஷயங்கள் அவளுடைய ஆர்வத்தை மிகவும் தூண்டியதால் தனக்கு பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்டாள். யெகோவா தேவனையும் நீதியுள்ள புதிய உலகில் நித்தியகால வாழ்க்கையை அவர் கொடுப்பார் என்ற வாக்குறுதியையும் பற்றி கற்றுக்கொண்டபோது அவள் மிகவும் நெகிழ்ந்து போனாள். (சங்கீதம் 37:29; யோவான் 17:3) பிற்பாடு பிப்ரவரி 16, 2002-⁠ல், யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றாள்.

கடவுளுடைய ஆதி நோக்கம்

பூங்காவனம் போன்ற பரதீஸில் என்றென்றும் வாழ்ந்து, அங்குள்ள மிருகங்கள் எல்லாவற்றையும் கவனித்து பராமரிப்பதைப் பற்றிய கடவுளுடைய ஆதி நோக்கம் சீக்கிரத்தில் நிறைவேறும் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட அநேகர் மரியாவைப் போலவே பூரித்துப் போயிருக்கிறார்கள். (ஆதியாகமம் 1:28) கடவுள் ‘இப்பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்’ என பைபிள் சொல்கிறது. மிருகங்களோடு மனிதர் இந்த பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டியிருந்ததையே இது காட்டுகிறது.​—ஏசாயா 45:18.

பரதீஸ் பூமியைப் பற்றிய தமது ஆதி நோக்கத்தை கடவுள் நிறைவேற்றுவார் என்பதையும் பைபிள் வலியுறுத்திக் காட்டுகிறது. ‘அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்’ என அவர் அறிவிக்கிறார். யெகோவா மீண்டும் சொல்வதாவது: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”​—ஏசாயா 46:11; 55:11.

பூங்காவனம் போன்ற பூமியில் மனிதர் என்றென்றும் வாழ்வதே கடவுளுடைய ஆதி நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சீக்கிரத்தில் அந்த நோக்கம் நிறைவேறும் என்று நாம் முழுமையாக நம்பலாம். அப்படியானால், கடவுளுடைய புதிய உலக வாழ்க்கை சம்பந்தமாக பைபிள் தரும் விவரங்களை இப்போது கலந்தாராய்வோம். வீட்டு மிருகங்களும் சரி, காட்டு மிருகங்களும் சரி ஒன்றுக்கொன்றும், மனிதரோடும் சமாதானமாக இருக்கும் என்பதை நாம் பார்ப்போம்.​—ஏசாயா 65:17, 21-25; 2 பேதுரு 3:13.

கடவுளுடைய புதிய உலகில் செல்லப்பிராணிகள்

யெகோவாவுடைய புதிய உலகில் சிங்கத்தின் பிடரிமயிரை மக்கள் தொட்டுப் பார்க்க முடியும், புலியின் வரித்தோலை வருடிக் கொடுக்க முடியும், ஏன், ஏதாவது மிருகம் வந்து கடித்துக் குதறிவிடுமோ என்ற பயமின்றி காடுகளில் கண்ணயரவும் முடியும். கடவுள் கொடுத்துள்ள இந்த வாக்குறுதியை கவனியுங்கள்: “துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் [மனிதர்கள்] சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரை பண்ணுவார்கள்.”​—எசேக்கியேல் 34:25; ஓசியா 2:18.

சொல்லப்போனால், அப்போது காட்டு மிருகங்கள் சிறு பிள்ளைகளுக்கும்கூட கட்டுப்பட்டு இருக்கும். “ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்” என பைபிள் சொல்கிறது.

அதுமட்டுமல்ல, அந்த வசனம் தொடர்ந்து சொல்கிறது: “பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங் குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால்மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”​—ஏசாயா 11:6-9.

நெரிசல்மிக்க பெரிய பெரிய நகரங்களில் தங்களுக்கும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் போதிய வசதியின்றி வாழவேண்டிய பிரச்சினை யெகோவா தரும் புதிய உலகில் இராது. இன்றும்கூட அநேகர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் இன்பம் காண்கிறார்கள் என்பதும், அளவோடு பாசம்காட்டி பராமரித்து வருகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால், நீதியான புதிய உலகில் செல்லப்பிராணிகளோடு நாம் என்றென்றும் வாழும் அற்புத எதிர்பார்ப்பை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அவற்றை அன்பாக காத்து பராமரிப்பது உண்மையில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த மகத்தான படைப்பாளருக்கு கனத்தை சேர்க்கும்.

வளர்ப்புப் பிராணிகள்மீது கொள்ளை பிரியம் கொண்ட மரியா கடவுளுடைய அற்புதமான நோக்கங்களைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்துகொண்டாள். அதுபோல நீங்களும் அறிந்துகொள்ள வேண்டுமானால் இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போரை அல்லது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்; இக்காரியங்களைப் பற்றி உங்களுக்கு கற்றுத்தர அவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். (g04 2/22)

[பக்கம் 10-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் மிருகங்களோடு என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்