Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பொறுமைக்கு எல்லையுண்டா?

கடவுளுடைய பொறுமைக்கு எல்லையுண்டா?

பைபிளின் கருத்து

கடவுளுடைய பொறுமைக்கு எல்லையுண்டா?

“தமது சினத்தைக் காட்டவும் தமது வல்லமையை விளங்கச் செய்யவும் கடவுள் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்களைப் பொறுத்த வரையில் அவர் மிக்க பொறுமை காட்டினா[ர்].” ​—⁠உரோமையர் [ரோமர்] 9:22, பொ.மொ.

சரித்திரம் முழுவதிலும் கடவுள் பெருமளவில் தீமையையும் ஒட்டுமொத்தமான துன்மார்க்கத்தையும் பொறுமையாக சகித்து வந்திருக்கிறார். 3,000-⁠க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு யோபு இவ்வாறு புலம்பினார்: “துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.” (யோபு 21:7-9) கெட்டவர்களிடம் கடவுள் பொறுமை காட்டுவதாக தோன்றுவதால் எரேமியா தீர்க்கதரிசி போன்று நீதியை நேசிக்கும் மற்றவர்களும் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.​—⁠எரேமியா 12:1, 2.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் துன்மார்க்கத்தை அனுமதித்திருப்பதைப் பார்த்து குழம்பியிருக்கிறீர்களா? எல்லா துன்மார்க்கரையும் கடவுள் உடனடியாக, இப்போதே அழித்துவிட வேண்டும் என சிலசமயங்களில் எண்ணியிருக்கிறீர்களா? கடவுளுடைய பொறுமையின் எல்லைகளையும் அதற்கான காரணங்களையும் குறித்து பைபிள் என்ன சொல்கிறதென கவனியுங்கள்.

கடவுள் ஏன் பொறுமையாக இருக்கிறார்?

முதலாவதாக நாம் கேட்க வேண்டியது: நீதியின் உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றும் கடவுள் தீமையைப் பொறுத்துக்கொள்வதற்கு காரணம்தான் என்ன? (உபாகமம் 32:4; ஆபகூக் 1:13) இது அவர் பொல்லாங்கை கண்டும் காணாமல் இருப்பதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: சுத்தம் சம்பந்தப்பட்ட அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல், தன் நோயாளிகளுக்கு அதிக வேதனை தரும் விதத்தில் சிகிச்சை அளிக்கும் அறுவை மருத்துவர் ஒருவர் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு மருத்துவமனையில் வேலை செய்திருந்தால் அவரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருப்பார்கள் அல்லவா? ஆனால் சில சூழ்நிலைகளில் மட்டுக்குமீறிய பொறுமையோடிருப்பதும் தேவைப்படலாம். உதாரணமாக, ஒருவேளை போர்க்களம் போன்ற இடத்தில் பெரும் நெருக்கடி நிலையில் போதுமான வசதிகளின்றி, பயங்கர சூழ்நிலைமைகளில் பொதுவாக தரம் குறைந்தவையாக கருதப்படும் மருத்துவ சாதனங்களையும் அறுவைக்குரிய கருவிகளையும் பயன்படுத்தி அறுவை மருத்துவர் சிகிச்சை அளிக்கையில் அதைப் பொறுத்துக்கொள்வது அவசியம் அல்லவா?

அதேவிதமாக, தம்மால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநேக காரியங்களை இன்று கடவுள் பொறுமையுடன் சகித்துக்கொள்கிறார். அவர் துன்மார்க்கத்தை வெறுத்தாலும் தற்காலிகமாக அதை தொடர அனுமதிக்கிறார். அவர் அவ்வாறு அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. ஒரு விஷயம் என்னவென்றால், ஏதேன் தோட்டத்தில் சாத்தானின் கலகத்தால் விளைந்த முக்கியமான விவாதங்களை நித்தியத்திற்குமாக தீர்த்து வைப்பதற்கு இது காலத்தை அனுமதிக்கிறது. அந்த விவாதங்கள், கடவுளுடைய ஆட்சியின் நியாயத்தன்மையையும் அரசாளுவதற்கு அவருக்குள்ள உரிமையையும் மையமாக கொண்டிருந்தன. மேலும் தவறை அவர் பொறுமையுடன் சகித்திருப்பது தீமை செய்கிறவர்கள் திருந்தி வருவதற்கு காலத்தையும் வாய்ப்பையும் அளிக்கிறது.

இரக்கமும் பொறுமையுமுள்ள கடவுள்

கடவுளுக்கு எதிராக சாத்தான் கலகம் செய்தான்; அவனுடன் நம்முடைய முதல் பெற்றோர் ஆதாமும் ஏவாளும் சேர்ந்துகொண்டனர். நியாயப்படி அந்த நிமிடமே அந்த இடத்திலேயே அவர்களை கடவுள் அழித்திருக்கலாம். மாறாக, அவர் இரக்கத்தையும் பொறுமையையும் காட்டினார்; பிள்ளைகளைப் பெற்றெடுக்க அவர்களை அன்புடன் அனுமதித்தார். ஆனால், இந்தப் பிள்ளைகளும் இவர்கள் வழி தோன்றிய முழு மனிதகுலமும் பாவத்தன்மையுடன் பிறந்தனர்.​—⁠ரோமர் 5:12; ரோமர் 8:20-22.

மனிதனை அவனுடைய வருந்தத்தக்க நிலையிலிருந்து காப்பாற்றுவது கடவுளுடைய நோக்கமானது. (ஆதியாகமம் 3:15) அதற்கிடையில், ஆதாமிலிருந்து சுதந்தரித்துக்கொண்ட அபூரணம் நம்மை பாதிக்கும் விதத்தை அவர் அறிந்திருப்பதால் ஒப்பற்ற அளவில் பொறுமையையும் இரக்கத்தையும் காட்டுகிறார். (சங்கீதம் 51:5; சங்கீதம் 103:13) அவர் ‘அன்புள்ள தயவு மிகுந்தவராகவும்’ “பெரியளவில் மன்னிக்கிறதற்கு” தயாராகவும் மனமுள்ளவராகவும் இருக்கிறார்.​—சங்கீதம் 86:5, 15; ஏசாயா 55:6, 7; NW.

கடவுளுடைய பொறுமைக்கு எல்லை

எனினும், நித்தியத்திற்கும் பொல்லாங்கை அனுமதிப்பது கடவுளுடைய பங்கில் அன்பற்ற, நியாயமற்ற செயலாக இருக்கும். வேண்டுமென்றே குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு கடும் துன்பத்தைத் தந்துகொண்டே இருக்கும் ஒரு பிள்ளையின் தீமையை எந்த அன்புள்ள தகப்பனும் எப்போதும் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார். எனவே, பாவத்தை கடவுள் சகித்துக்கொள்வதில் காட்டும் பொறுமை, பிற பண்புகளாகிய அன்பு, ஞானம், நீதி போன்றவற்றுடன் எப்போதும் சமநிலையில் இருக்கும். (யாத்திராகமம் 34:6, 7) எந்த நோக்கத்திற்காக அவர் நீடிய பொறுமையுடன் இருக்கிறாரோ அந்த நோக்கம் நிறைவேறியவுடன் அவர் பொல்லாங்கைப் பொறுத்துக்கொள்வதும் முடிவுறும்.​—⁠ரோமர் 9:22, 23.

அப்போஸ்தலன் பவுல் இதைத் தெளிவாக சுட்டிக்காட்டினார். “சென்ற காலங்களில் அவர் [கடவுள்] சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்”ததைப் பற்றி அவர் ஒருசமயம் சொன்னார். (அப்போஸ்தலர் 14:16) மற்றொரு சந்தர்ப்பத்தில், ஜனங்கள் தம்முடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படியாமல் இருந்த “அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்” என்பதைப் பற்றி பவுல் சொன்னார். “இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் [கடவுள்] கட்டளையிடுகிறார்” என்று பவுல் தொடர்ந்து சொன்னார். ஏன்? ஏனென்றால் “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே . . . பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.”​—⁠அப்போஸ்தலர் 17:30, 31.

கடவுளுடைய பொறுமையால் இன்று பலனடையுங்கள்

அப்படியானால், கடவுளுடைய சட்டங்களைப் புறக்கணித்துவிட்டு பின்னர் தன் செயல்களின் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆசைப்பட்டு அந்த சமயத்தில் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என யாரும் நினைக்கக்கூடாது. (யோசுவா 24:19) அப்படித்தான் பூர்வ இஸ்ரவேலிலிருந்த அநேகர் நினைத்தனர். அவர்கள் திருந்தவே இல்லை. கடவுள் பொறுமையாய் சகித்திருந்ததற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு நடக்கவில்லை. ஆனால் அவர்களுடைய தீமையை கடவுள் நித்தியத்திற்கும் பொறுத்துக் கொள்ளவில்லை.​—⁠ஏசாயா 1:16-20.

கடவுளுடைய இறுதி நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கு ஒருவர் ‘மனந்திரும்ப’ வேண்டும். அது, ஒருவர் தன்னுடைய அபூரண, பாவ நிலைக்கு கடவுளிடம் இதயப்பூர்வ வருத்தத்தைத் தெரிவித்து, உண்மையிலேயே தீமையை விட்டு வெளிவருவதைக் குறிக்கிறது. (அப்போஸ்தலர் 3:19-21) பின்னர், கிறிஸ்துவின் மீட்கும்பலியின் அடிப்படையில், யெகோவா தேவன் மன்னிப்பை அருளுவார். (அப்போஸ்தலர் 2:38; எபேசியர் 1:5, 7) தம்முடைய குறித்த காலத்தில் கடவுள், ஆதாமிய பாவத்தின் மோசமான விளைவுகள் அனைத்தையும் நீக்கிவிடுவார். ‘புதிய வானமும் புதிய பூமியும்’ இருக்கும்; அதில் ‘அழிவுக்கு உரியவையாக இருப்பவற்றை’ அவர் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டார். (வெளிப்படுத்துதல் 21:1-5; ரோமர் 9:22, ஃபிலிப்ஸ்) கடவுளுடைய அளவுகடந்த, அதேசமயம் எல்லைக்குட்பட்ட பொறுமையால் எப்பேர்ப்பட்ட அருமையான பலன்!(g01 10/8)

[பக்கம் 17-ன் படம்]

ஆதாம் ஏவாள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க கடவுள் அனுமதித்தார்