Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்

சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்

சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்

மிகைல் டாஸ்விச் சொன்னது

மூலையில் இருந்த ஒரு துப்பாக்கியை காட்டி, “ஜெர்மனியில் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளை சுட்டுத்தள்ளுகிறோம். அந்த துப்பாக்கியை பார்த்தாயா?” என கெஸ்டபோ அதிகாரி என்னிடம் கேட்டார். “அதன் முனையில் இருக்கிற கத்தியால் உன்னைக் குத்திக் கொல்ல முடியும். அதைப் பற்றி நான் கவலையே படமாட்டேன், தெரியுமா?”

இந்த வார்த்தைகளால் என்னை மிரட்டியபோது எனக்கு வயது 15. 1942-⁠ல் எங்களுடைய நாடு, நாஸி ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது நடந்த சம்பவம் இது.

போலந்து நாட்டின் பாகமாய் இருந்த ஸ்டனிஸ்லாவ் (இப்போது இவானோ-ஃப்ராங்கிவ்ஸ்க் என அழைக்கப்படுகிறது) அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் நவம்பர் 1926-⁠ல் பிறந்தேன். இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது செப்டம்பர் 1939 முதல் மே 1945 வரை நாங்கள் வசித்த பகுதி, முதலில் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின்கீழும், பின் சிறிது காலத்திற்கு ஜெர்மனியின் ஆதிக்கத்தின்கீழும், கடைசியில் மறுபடியும் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தின்கீழும் இருந்தது. போருக்குப் பிறகு, அது உக்ரெய்ன் சோவியத் சோஷியலிஸ்ட் குடியரசின் பாகமாகியது. 1991-⁠ல், சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, அது உக்ரெய்னின் பாகமாகியது.

என் அப்பா போலந்தைச் சேர்ந்தவர். அம்மா பெலாரூஸைச் சேர்ந்தவர். இருவருமே கிரேக்க கத்தோலிக்க சர்ச் அங்கத்தினர்கள். 1939-⁠ல், அருகிலுள்ள ஹாரிஹ்லியாடி என்ற கிராமத்திலிருந்து இரு பெண்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சர்வலோக யுத்தம் அருகில் என்ற புக்லெட்டைக் கொடுத்தனர். அவர்கள் இருவருமே யெகோவாவின் சாட்சிகள். அப்போது அந்த கிராமத்தில் 30 சாட்சிகள் இருந்தனர். அவர்கள் கொடுத்த புக்லெட் உலக நிகழ்ச்சிகளை வெகு அழகாக படம் பிடித்துக்காட்டியது. மேலும், அந்த சிற்றேட்டில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. “தேசங்கள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டுக்கொண்டு யுத்தத்தில் கலந்துகொள்வதற்கு காரணம் என்ன?” இந்தக் கேள்விக்கான பைபிள் அடிப்படையிலான பதிலை நான் மிக ஆர்வத்தோடு படித்தேன்.

உக்ரெய்னில் எங்களை அநேக பிரச்சினைகள் சூழ்ந்திருந்தன. அவற்றில் ஒன்றுதான் போர். அதுமட்டுமல்ல, கடுமையான பஞ்சம் அப்போது நிலவியது. சோவியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலினின் கொள்கைகளால் அநேகர் ரஷ்யாவுக்கு கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர். அதனால் மக்கள் பட்ட அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. அது பைபிளை இன்னும் ஊக்கமாக ஆராயும்படி என்னைத் தூண்டியது. எனவே, பைபிளை எனக்குக் கற்றுத்தரும்படி ஹாரிஹ்லியாடியில் இருந்த ஒரு சாட்சியிடம் கேட்டேன்.

நாங்கள் இருந்த கிராமத்தின் பெயர் ஒடாஜிவ். எங்கள் கிராமத்திலிருந்து ஹாரிஹ்லியாடிக்கு செல்ல வேண்டுமென்றால் நெஸ்டர் ஆற்றைக் கடக்க வேண்டும். வாரத்தில் பல தடவை, என்னுடைய பைபிள் படிப்புக்காக ஒரு சிறிய படகில் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு சென்றிருக்கிறேன். ஆகஸ்ட் 1941-⁠ல், நானும் என் அக்கா அன்னாவும் இன்னும் இரண்டு பேரும் அந்த ஆற்றில்தான் முழுக்காட்டுதல் எடுத்தோம்.

கெஸ்டபோவின் கேள்விக்கணைகள்

1941 முதல் நாங்கள் இருந்த பகுதி ஜெர்மானிய ஆதிக்கத்தின்கீழ் வந்தது. அதன் பிறகு, எங்கள் வேலையை நிறுத்தச் சொல்லி பயமுறுத்தல்கள் தொடர்ந்தன. ஆனால், இந்த அச்சுறுத்தல்கள் எவையும் எங்கள் கிறிஸ்தவ வேலையை நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த வருடம், பயனியர் சேவையை ஆரம்பித்தேன். சைக்கிளிலேயே பல இடங்களுக்கு சென்று பிரசங்கித்தேன். அப்போதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன சம்பவம் நடந்தது. அதை விவரமாக சொல்கிறேன்.

ஒரு நாள், ஊழியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, சாட்சிகளில் இருவரை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு சென்றேன். தாயும் மகளும் சத்தியத்தில் இருப்பவர்கள். ஆனால், மகளின் கணவனோ நம் விசுவாசத்தை எதிர்ப்பவர். பைபிள் பிரசுரங்களை அவள் எங்கிருந்து பெறுகிறாள் என்பதை தெரிந்துகொள்வதில் அவர் மும்முரமாய் இருந்தார். அன்று என் பையில் சில பைபிள் புத்தகங்களோடு, மற்றவர்களுடைய ஊழிய அறிக்கையும் இருந்தது. நான் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவர் என்னைப் பார்த்துவிட்டார்.

“நில்!” என்று சத்தமாய் கத்தினார். நான் என் பையை கையில் பிடித்துக்கொண்டு, ஓட்டம் பிடித்தேன்.

“நில்! திருடன்! திருடன்!” என சத்தமாக கூச்சல் போட, அவ்வளவுதான், பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து, நான் எதையோ திருடிக்கொண்டு ஓடுகிறேன் என நினைத்து என்னை பிடித்தனர். அந்த ஆள் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அங்கு கெஸ்டபோ அதிகாரி ஒருவர் இருந்தார்.

என்னுடைய பையை பார்த்துவிட்டு, “ரதர்ஃபோர்ட்! ரதர்ஃபோர்ட்!” என ஜெர்மன் பாஷையில் கத்த ஆரம்பித்துவிட்டார். அவரை அப்படி கத்தச் செய்தது என்ன என்பதை யாரும் சொல்லாமலே நான் புரிந்துகொண்டேன். அப்போது, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் தலைவராக இருந்த ஜோஸப் எஃப். ரதர்ஃபோர்டின் பெயர் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களின் அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. அதுவே அவர் அப்படி கத்த காரணம். என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்த அந்த ஆள், நான் அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் என சொல்லி என்மீது அபாண்டமாய் பழி சுமத்தினார். ஆனால், அவர் சொன்னது சுத்தப்பொய் என்பது கெஸ்டபோ அதிகாரிக்கும் போலீஸுக்கும் தெரியும். ஏனென்றால், அவருடைய மனைவிக்கு என் அம்மாவின் வயது இருக்கும். எனவே, அவர்கள் கேள்விமேல் கேள்விபோட்டு என்னைத் துளைக்க ஆரம்பித்துவிட்டனர்.

நான் யார், எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்பதையும் மிக முக்கியமாக, எங்கிருந்து அந்தப் புத்தகங்களை வாங்கினேன் என்பதையும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால், நான் அதை அவர்களுக்கு சொல்லவில்லை. காட்டுத்தனமாக அவர்களுடைய வாயும் கையும் என்னைத் தாக்கின! ஆனால் நான் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு, ஒரு சின்ன அறையில் தள்ளி பூட்டினார்கள். அடுத்த மூன்று நாட்களாக தொடர்ந்து என்னைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். கடைசியாக கெஸ்டபோ அதிகாரியின் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்குதான், அந்த அதிகாரி என்னை குத்திக் கொன்று விடுவதாக மிரட்டினார். அவர் சொன்னதுபோல் செய்துவிடுவாரோ என்ற நடுக்கம் எனக்கு இருக்கத்தான் செய்தது. சில நிமிடங்கள் ஒன்றும் பிடிபடாமல் தலைகுனிந்து மெளனமாக இருந்தேன். அந்த சில விநாடிகள் ஏனோ எனக்கு ஒரு யுகமாக தோன்றியது. பிறகு அந்த அதிகாரி சொன்னார்: “நீ போகலாம்.”

அந்த சமயத்தில் பிரசங்கிப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. கூட்டங்கள் நடத்துவது அதற்குமேல் சிரமமாக இருந்தது. இருந்தபோதிலும், 1943, ஏப்ரல் 19-⁠ம் தேதி, இயேசுவின் மரண ஆசரிப்பை ஹாரிஹ்லியாடியில் உள்ள ஒரு வீட்டின் இரு அறைகளை பயன்படுத்தி நடத்தினோம். (லூக்கா 22:19) எங்களுடைய கூட்டங்களை ஆரம்பிக்கிற சமயம், திடீரென ஒரு கூக்குரல் கேட்டது. நாங்கள் இருந்த வீட்டை நோக்கி போலீஸ் வந்துகொண்டிருந்தது. எங்களில் சிலர் தோட்டத்தில் ஒளிந்துகொண்டோம். ஆனால், என் அக்கா அன்னாவும் இன்னும் மூன்று பெண்களும் வீட்டின் கீழ்தளத்தில் சென்று ஒளிந்து கொண்டனர். போலீஸ் அங்கு சென்று தேடும்போது, அவர்களை கண்டுபிடித்து, விலங்குகளைப்போல தரதரவென இழுத்து சென்று, ஒவ்வொருவராக விசாரித்தனர். பல மணிநேரம் கடும் சித்திரவதை செய்தனர். அவர்களில் ஒரு பெண் மிகவும் மோசமாக அடிக்கப்பட்டார்.

உலக நிகழ்ச்சிகளில் மாற்றம்

1944 கோடைகாலத்தில், ஜெர்மானியர்கள் பின்வாங்கவே, மறுபடியும் ரஷ்யர்கள் எங்கள் பகுதியை ஆக்கிரமித்தனர். யெகோவாவின் ஊழியர்களாக, நாஸி ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோது எந்த பைபிள் நியமங்களுக்கு கீழ்ப்பட்டு வாழ்ந்தோமோ, அதே நியமங்களைத்தான் இப்போதும் பின்பற்றினோம். ராணுவத்திலோ அல்லது அரசியலிலோ எந்த பாகத்தையும் ஏற்க மறுத்துவிட்டோம். இப்படிப்பட்ட பைபிள் நியமங்களிடமாக நாங்கள் காட்டிய உத்தமத்தன்மை சீக்கிரத்தில் சோதிக்கப்பட்டது.​—ஏசாயா 2:4; மத்தேயு 26:52; யோவான் 17:⁠14.

சில நாட்களுக்குள், சோவியத் ராணுவம் எல்லா இளைஞர்களையும் ராணுவத்தில் சேர்க்க ஆரம்பித்தது. ரஷ்யர்கள் ராணுவத்தில் ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், உக்ரெய்னிய கட்சியும் இளைஞர்களை வேட்டையாடியது. அவர்கள் கையில் சிக்கியவர்கள் அனைவரையும் காடுகளுக்கு கொண்டு சென்று, சண்டைக்கான பயிற்சி கொடுத்தனர். இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. சாட்சிகளாகிய நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்ப்பட்டோம். ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் ரஷ்யர்கள், உக்ரெய்னிய கட்சியினர் ஆகிய இந்த இரண்டு பிரிவினர்க்கிடையே நாங்கள் எங்கள் நடுநிலையை நிரூபிக்க வேண்டியதாக இருந்தது.

எங்கள் கிராமத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே கடும் சண்டை தொடர்ந்தது. இந்த சண்டையில், உக்ரெய்னிய கட்சியினரில் இருவர் கொல்லப்பட்டு எங்கள் வீட்டிற்கு வெளியே வீதியில் கிடந்தனர். இறந்தவர்களை எங்களுக்குத் தெரியுமா என்பதை விசாரிக்க சோவியத் அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்த அதிகாரிகள் என்னைக் கொண்டு சென்று, போலிஷ் வீரர்களின் அணியில் சேர்க்க தீர்மானித்தனர். ஏனென்றால், நான் போலந்தைச் சேர்ந்தவனாதலால், நான் அதில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.

நானும் இன்னும் நான்கு சாட்சிகளும் ராணுவத்தில் சேர மறுத்தோம். எனவே, அங்கிருந்து கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ட்னிப்ராபெட்ராவ்ஸ்க் என்ற இடத்திற்கு ரயிலில் அனுப்பப்பட்டோம். பைபிள் சார்ந்த நம்பிக்கைகள் காரணமாக ராணுவத்தில் சேரமுடியாது என்பதை அங்கேயும் விளக்கினோம். பின்னர், நாங்கள் காவலில் வைக்கப்பட்டோம். இதற்கிடையே, எங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நாங்கள் நீதிமன்றம் சென்றபிறகுதான் தெரிந்தது எங்கள் வழக்கை ஆராய்பவர் ஒரு யூதர் என்பது. எனவே, எங்களுடைய நம்பிக்கைகளை நாங்கள் விளக்கினபோது, அவர் மிகவும் கவனமாய் கேட்டார். இஸ்ரவேலர்கள் ஒடுக்கப்பட்டதும் எகிப்திலிருந்து மோசேயால் விடுவிக்கப்பட்டதும் உட்பட அவருக்கு ஆர்வத்தைத் தூண்டும் சில விஷயங்களை நாங்கள் சொன்னோம்.

எங்கள் வழக்கிற்கு தீர்ப்பு கிடைக்கும் வரை, நாங்களும் இன்னும் சுமார் 25 பேரும் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டோம். அவர்கள், நாங்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டோம் என்பதை தெரிந்து “நீங்கள் எங்கள் சகோதரர்கள்!” என்று வியந்தார்கள். ஆனால், அவர்கள் சாட்சிகள் அல்ல என்பதையும் பாப்டிஸ்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் வெகு சீக்கிரத்தில் தெரிந்துகொண்டோம். அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தனர்; ஆனால், துப்பாக்கியை ஏந்த மறுத்தபோது கைது செய்யப்பட்டனர்.

மே 1945-⁠ல், ட்னிப்ராபெட்ராவ்ஸ்கில் காவலில் இருக்கும்போது ஒரு நாள், துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தமும் போர்வீரர்களின் குடியிருப்பிலிருந்தும் வெளியே வீதியிலிருந்தும் வரும் கூப்பாடும் நடுநிசியில் எங்களை எழுப்பி விட்டது. அது கலவரமா, யுத்தமா, அல்லது கொண்டாட்டமா என்னவென்றே எங்களுக்கு புரியவில்லை. அடுத்த நாள் காலை உணவின்போதுதான், எங்களுக்கு காரணம் தெரிய வந்தது. போர் முடிந்தது என்பதே அந்த செய்தி! சிறிது காலத்தில், வழக்கின் தீர்ப்பு கிடைத்தது. காவல் முகாம்களில் பத்து வருடம்! பாப்டிஸ்டுகளுக்கும் எங்களுக்கும் கிடைத்த தண்டனை அது.

ரஷ்ய காவல் முகாமில்

நாங்கள் ஐந்து பேரும் ரஷ்யாவில் உள்ள ஒரு காவல் முகாமிற்கு அனுப்பப்பட்டோம். இரண்டு வார ரயில் பிரயாணத்திற்கு பிறகு, கடைசியாக மாஸ்கோவுக்கு கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுகோபெஸ்வாட்னோஜே என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். ரயில் இருப்புப் பாதை நெடுக இருந்த 32 சிறை முகாம்களை நிர்வகிக்கும் மையமே சுகோபெஸ்வாட்னோஜே. ஒவ்வொரு முகாமிலும் ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். ஆறுமாதம் அங்கு இருந்தபின், முகாம் எண் 18-⁠க்கு அனுப்பப்பட்டேன். அங்கிருந்தவர்களில் பலர், கொலைக் குற்றவாளிகள் அல்லது அரசியல் கைதிகள்.

நாங்கள் அங்கு செய்ய வேண்டிய வேலை மரங்களை வெட்டுவதே. அது மிகவும் கடினமானது. சில சமயம், இடுப்பு வரை பனி இருக்கும். அதில் நடந்துபோய்தான் மரத்தை வெட்ட வேண்டும். அதற்காக எங்களுக்கு கொடுக்கப்பட்ட கருவி ரம்பம். மரத்தை வெட்டி, அந்த பனியில் இழுத்துவர வேண்டும். வாரத்தில் ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை காலை உணவிற்குப் பிறகு, முகாமில் இருந்த மற்ற நான்கு சாட்சிகளோடு பைபிள் சம்பந்தமாக ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இவைதான் எங்களுடைய கூட்டங்கள். ஞாபகார்த்த தினத்தையும் ஆசரித்தோம். ஒரு வருடம், குளியலறையில் அதை ஆசரித்தோம். இயேசுவின் இரத்தத்தை அடையாளப்படுத்தும் திராட்சரசம் இல்லாததால், ப்ளாக்பெர்ரி சாறை பயன்படுத்தினோம்.

தனிமையின் கொடுமை எங்களை மிகவும் வாட்டி வதைத்தது. என் இருதயத்தில் இருந்த கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டினேன். இதேமாதிரி எண்ணங்களால் அவதிப்பட்ட எலியா தீர்க்கதரிசியை யெகோவா எப்படி பலப்படுத்தினாரோ, அதுபோல் என்னையும் பலப்படுத்தினார். (1 இராஜாக்கள் 19:14, 18) நாங்கள் தன்னந்தனியாய் இல்லை என்பதை கடவுள் உணரச் செய்தார். அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும், யெகோவா என் வாழ்க்கையின் பலமான, உறுதியான தூணாக, ஆதாரமாக இருந்தார்.

சுகோபெஸ்வாட்னோஜே அருகிலிருந்த மற்ற முகாம்களில் சாட்சிகள் சிலர் இருந்தனர். அங்கிருந்த முகாம்கள் எல்லாவற்றிற்கும் செல்லும் வாய்ப்பு ஒரு சாட்சிக்கு இருந்ததால், அவ்வப்போது மற்ற சாட்சிகளோடு நாங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள முடிந்தது. இப்படி முகாம்களுக்கு பத்திரிகைகளை கொண்டு வரவும், முகாம்களிலிருந்து பத்திரிகைகளை வெளியே எடுத்து செல்லவும் அவரால் முடிந்தது. எங்களிடம் என்ன பிரசுரங்கள் இருந்ததோ அதை எல்லாரும் படிக்க இது வாய்ப்பு அளித்தது. அது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருந்தது!

மறுபடியும் உக்ரெய்னுக்கே

அரசாங்கம் பொது மன்னிப்பு அளித்ததால், என்னுடைய தண்டனை பத்து வருடங்களிலிருந்து ஐந்தாக குறைந்தது. எனவே, ஏப்ரல் 1950-⁠ல் ஹாரிஹ்லியாடியிலுள்ள என் சபைக்கு திரும்பினேன். உக்ரெய்னில் எங்கள் வேலை இன்னும் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால், பிரசங்க வேலையில் கலந்துகொள்வது மிகுந்த ஆபத்தாக இருந்தது. ஆனாலும், அதனால் கிடைத்த பலன்கள் அதைவிட அதிகமாக இருந்தது.

நான் ஊர் திரும்பியதும், கோஸாக் என்னும் ஒருவரிடம் சத்தியத்தைப் பற்றி பேசினேன். அவர் எங்கள் வீட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸாபோக்ருகி என்ற கிராமத்தில் இருந்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் எப்படி இருக்கிறார்கள் என கேட்டேன். அரசாங்க பண்ணையில் வேலைசெய்யும் தொழிலாளிகளின் பாடு பெரும்பாடு என்பது எனக்குத் தெரியும். எனவே, பேச்சை ஆரம்பிப்பதற்கு அதுதான் சிறந்த வழி என அந்த கேள்வியை கேட்டேன். நம் நாட்களில் பஞ்சங்கள், போர்கள் இருக்குமென பைபிள் முன்னறிவித்திருப்பதை விளக்கினேன். (மத்தேயு 24:3-14) இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள கோஸாக் ஆசைப்பட்டார். எனவே, அவரை மறுபடியும் சந்தித்தேன். வாராவாரம், ஸாபோக்ருகி கிராமத்திற்கு நடந்துபோய், கோஸாக் குடும்பத்திற்கு பைபிள் படிப்பு நடத்தினேன். போக, வர சுமார் 40 கிலோமீட்டர் தூரம் நடந்தேன். அதற்காக ஆன நேரமும், அதிலிருந்த ஆபத்தும் சொல்லி முடியாது. ஆனால், அவர்கள் ஆகஸ்ட் 1950-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றபோது, அதெல்லாம் மறந்தே போய்விட்டது.

கோஸாக் குடும்பத்தினர் முழுக்காட்டுதல் பெற்றதுமே, அவர்களும் இன்னும் ஆயிரக்கணக்கான மற்ற சாட்சிகளும் நாடு கடத்தப்பட்டனர். 1951, ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ராணுவ வீரர்கள் அவர்கள் எல்லாரையும் கைது செய்து, வழக்கோ அல்லது விசாரணையோ ஏதுமின்றி சைபீரியாவுக்கு நாடு கடத்தினர். கோஸாக் குடும்பத்தினரும் என் நண்பர்களில் இன்னும் அநேகரும் அந்த இடத்தையே தங்கள் சொந்த நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர். a

ஹாரிஹ்லியாடியில் இருந்த 15 சாட்சி குடும்பங்களில் நான்கே குடும்பங்கள்தான் நாடு கடத்தப்பட்டன. என்றாலும், மற்ற சபைகளில் அநேக சாட்சிகள் நாடு கடத்தப்பட்டனர். இது எப்படி நடந்தது? சாட்சிகளுடைய பெயர் பட்டியலை அதிகாரிகள் வைத்திருந்தார்கள். எனவே, சாட்சிகளை கூட்டம் கூட்டமாக கைது செய்தனர். ஆனால், அந்தப் பெயர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. ஏனென்றால், அது 1950-⁠ல் தயார் செய்யப்பட்டதாக இருக்கலாம். அப்போது நான் ரஷ்யாவில் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்குமுன், அதாவது மார்ச் 1951-⁠ல், யெகோவாவின் உத்தம ஊழியக்காரியாகிய ஃபென்யாவை மணந்தேன். ஃபென்யாவின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் நாடு கடத்தப்பட்டார்கள். எங்கள் திருமணத்திற்குப் பிறகு, அவளுடைய பெயர் மாற்றப்பட்டதால், அவளுடைய பெயர் அந்தப் பட்டியலில் இல்லை. அதனால், அவள் நாடு கடத்தப்படாமல் தப்பித்துக்கொண்டாள்.

விசுவாசத்தின் கடினமான சோதனைகள்

பலர் நாடு கடத்தப்படவே, அதிலிருந்து தப்பித்துக்கொண்ட மற்றவர்கள் பிரசங்க வேலையை மறுபடியும் ஒழுங்காக நிர்வகிக்க வேண்டியதாயிற்று. அருகிலுள்ள இவானோ-ஃப்ராங்கிவ்ஸ்க் பகுதியிலிருந்த சபைகளை கவனித்துக்கொள்ளும்படி என்னிடம் சொன்னார்கள். அங்கிருந்த 15 சபைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 30 சாட்சிகள் இருந்தனர். நான் சொந்தமாக தச்சுவேலை செய்து வந்ததால், அதற்கேற்ப நேரத்தை நான் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. எனவே, மாதத்தில் ஒரு தடவை ஒவ்வொரு சபையிலுள்ள சகோதரர்களையும் இரகசியமாக சந்தித்தேன்.

பெரும்பாலும் அங்கிருந்த ஒரு கல்லறையில்தான் இரவில் நாங்கள் சந்தித்தோம். ஏனென்றால், அங்குதான் ஜனநடமாட்டம் இருக்காது. பைபிள் பிரசுரங்களை எப்படி எல்லா சபைகளுக்கும் கிடைக்கச் செய்வது என்பதே முக்கியமாக அப்போது சிந்திக்கப்படும். அவ்வப்போது, காவற்கோபுர பத்திரிகையின் சமீப பிரதிகள் போலிஷ் மொழியிலோ அல்லது ருமானிய மொழியிலோ கிடைக்கும். பிறகு அதை உக்ரெய்னில் மொழிபெயர்ப்போம். என்றாலும், அதிகாரிகள் எங்களை கண்குத்திப் பாம்பாக கவனித்துக்கொண்டிருந்தார்கள். எங்களுடைய நகலெடுக்கும் மிஷின்களை கண்டுபிடித்து, அவற்றை அழிப்பதிலேயே கண்ணாய் இருந்தார்கள்.

நியூ யார்க்கிலுள்ள புரூக்ளின் உட்பட மற்ற நாடுகளில் இருந்த எங்கள் கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து நாங்கள் தனித்துவிடப்பட்டோம். முக்கியமாக, நம் கிறிஸ்தவ செயல்களை முன்நின்று நடத்தும் சகோதரர்களிடமிருந்து தனித்துவிடப்பட்டதே நாங்கள் எதிர்ப்பட்ட மிகப் பெரிய பிரச்சினை. அதனால், ஒற்றுமையின்மை, வதந்திகளை பரப்புதல், உட்பூசல் போன்றவற்றால் சபைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில சாட்சிகள் அமைப்பிலிருந்து போய், அதற்கு எதிராக சில தொகுதிகளை ஆரம்பித்தனர். புரூக்ளினில் நம் வேலைகளை நிர்வகிப்பவர்களைப் பற்றியும் பொய்யான, தவறான கதைகளை பரப்பிக்கொண்டிருந்தனர்.

எனவே, விசுவாசத்தின் மிகப் பெரிய சோதனை, எதிர்ப்பவர்களிடமிருந்து வந்த துன்புறுத்தல் அல்ல. ஆனால், சபையில் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகளே என நாங்கள் உணர்ந்தோம். எங்களோடு வணக்கத்தில் சேர்ந்துகொள்வதை சிலர் நிறுத்திவிட்டனர். இருந்தாலும், அமைப்பை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதும், காரியங்களை சரிசெய்ய யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், எங்கள் பகுதியில் இருந்த சாட்சிகளில் பெரும்பான்மையர் இதைத்தான் செய்தார்கள். அமைப்பை விட்டுப் போனவர்களில் பலர், தங்களுடைய தவறை உணர்ந்து, மறுபடியும் எங்களோடு சேர்ந்து யெகோவாவை சேவிக்க வந்தார்கள். இது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா!

தனித்து விடப்பட்ட, இக்கட்டான அந்தக் காலப்பகுதியிலும் நாங்கள் ஊழியத்தில் வைராக்கியமாய் ஈடுபட்டோம். அதற்கான ஆசீர்வாதத்தையும் பெற்றோம்! இப்போது சபை புத்தக படிப்புக்கு ஒவ்வொரு தடவை போகும்போதும், யெகோவாவின் ஆசீர்வாதங்களை நான் யோசித்துப் பார்க்கிறேன். எங்கள் புத்தகப் படிப்பு தொகுதியில் இருக்கும் 20 அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும் சத்தியத்திற்கு வர, என் குடும்ப அங்கத்தினர்களே உதவியிருக்கிறார்கள்.

என் பெற்றோரும் அக்கா அன்னாவும் மரிக்கும் வரை யெகோவாவுக்கு விசுவாசத்தை காத்துக்கொண்டார்கள். இப்போது நானும் ஃபென்யாவும் யெகோவாவின் சேவையில் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம். காலச் சக்கரம் வெகு வேகமாக உருண்டோடி விட்டது. கடந்த 30 வருடங்களில், உக்ரெய்னில் இருந்த யெகோவாவின் சாட்சிகள், சுருக்கமான இந்தக் கட்டுரையில் விவரிக்க முடியாத அளவுக்கு அதிசயிக்க வைக்கும் நிகழ்ச்சிகளை அனுபவித்து இருக்கின்றனர். நான் யெகோவாவுக்கு சேவை செய்த கடந்த பல ஆண்டுகளை யோசித்து பார்க்கையில் மிகவும் திருப்தி அடைகிறேன். எனக்கு பலமான, உறுதியான தூணாகவும் ஆதாரமாகவும் யெகோவா இருப்பார் என நம்பிக்கையாய் இருக்கிறேன். ‘நான் யெகோவா, நான் மாறாதவர்’ என அவரே சொல்லியிருக்கிறாரே!​—மல்கியா 3:⁠6.

[அடிக்குறிப்பு]

a மார்ச் 1, 1999, காவற்கோபுரம் பிரதியில் பக்கங்கள் 24-9-⁠ல் வெளிவந்துள்ள “இரும்பு திரைக்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக” என்ற கட்டுரையையும், ஏப்ரல் 22, 1999 விழித்தெழு! பிரதியில் பக்கங்கள் 20-5-⁠ல் வெளிவந்துள்ள “சைபீரியாவிற்கு நாடுகடத்தப்படுதல்!” என்ற கட்டுரையையும் காண்க.

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

நான் யார், எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்பதையும் மிக முக்கியமாக, எங்கிருந்து அந்தப் புத்தகங்களை வாங்கினேன் என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், நான் அதை அவர்களுக்கு சொல்லவில்லை

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

தனிமையின் கொடுமை எங்களை மிகவும் வாட்டி வதைத்தது. நான் என் இருதயத்தில் இருந்த கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டினேன். அவர் என்னை பெலப்படுத்தினார்

[பக்கம் 20-ன் படம்]

1952-⁠ல் நானும் ஃபென்யாவும்

[பக்கம் 23-ன் படம்]

இன்று ஃபென்யாவுடன்