Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பட்டினி கிடப்போரின் பட்டியல்

“எல்லா நாடுகளிலும் இருக்கும் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதத்தினர் சரியாக உணவருந்தாமல் வாடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் பணக்கார நாடுகளிலும் இருக்கிறார்கள், ஏழை நாடுகளிலும் இருக்கிறார்கள், இவர்கள் ஏதாவது ஒரு வகை உணவு பிரச்சினையால் வாடுகிறார்கள்” என்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது என்று ஸ்டேட் ஆப் வோர்ல்ட் 2000 அறிவிக்கிறது. உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 120 கோடி ஜனங்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது போதாது என்பது போல இன்னும் பல கோடி ஜனங்கள் “மறைமுகமான பட்டினியால்” வாடுகின்றனர்; இவர்களைப் பார்த்தால் நன்றாக உணவருந்தியவர்களைப் போல் காணப்படுகின்றனர், ஆனால் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களின் குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். “அநேகர் பட்டினி கிடப்பதற்கு காரணம் உணவுக் குறைபாடுதான் என்ற தவறான கருத்து இன்றும் பிரபலமாக இருக்கிறது. அநேகர் பட்டினி கிடப்பதற்கான உண்மையான காரணம், எடுக்கப்படும் குருட்டுத்தனமான முடிவுகள்தான் . . . ஜனங்கள் நல்ல முறையில் வாழ முடிகிறதா, பெண்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஜனங்களுக்கு அரசியல்வாதிகள் கணக்கு கொடுக்க வேண்டி இருக்கிறதா போன்றவையே உணவு பிரச்சினைக்கு முக்கிய காரணங்கள். ஒரு நாட்டில் எவ்வளவு விவசாய உற்பத்தி இருக்கும் என்பதைவிட இப்படிப்பட்ட விஷயங்கள்தான் ஜனங்கள் பட்டினி கிடப்பார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன,” என்பதாக வோர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிடியூட் அறிவிக்கிறது. இந்த நிறுவனம்தான் ஸ்டேட் ஆப் வோர்ல்ட் என்ற வருடாந்திர அறிக்கையை வெளியிடுகிறது.

சுமைதாங்கிகள்

அமெரிக்க எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் சங்கம் ஒரு ஆய்வை நடத்தியது; பிள்ளைகளுக்கு வரும் முதுகு வலி, தோள் வலி போன்றவற்றிற்கும் அவர்கள் முதுகில் சுமக்கும் பாடபுத்தகங்களின் பாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதாக அந்த ஆய்வின் முடிவு காட்டுகிறது. பிள்ளைகளுடைய புத்தகப் பையில் என்னவெல்லாம் திணிக்கப்படுகின்றன? பாடபுத்தகங்கள், உணவுப்பொட்டலம், தண்ணீர் பாட்டில், இசைக் கருவிகள், மாற்று உடைகள். அம்மாடி! சில இளசுகள் கிட்டத்தட்ட 18 கிலோ பாரத்தை சுமக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பொதியை தினம்தினம் சுமந்தால் ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகளின் முதுகெலும்பு வளைந்துவிடுவதோடு மற்ற அநேக பிரச்சினைகளும் வரலாம் என்பதாக குழந்தை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிள்ளைகள் சுமக்கும் பைகளின் எடை அவர்களது எடையில் 20 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும், அதற்கு மேல் இருக்கக்கூடாது என்று சில நிபுணர்கள் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்கின்றனர். இந்த எடையைவிட அதிகமாக இருந்தால் “அந்தப் பைகள் சக்கரம் இணைக்கப்பட்டு தரையில் இழுத்து செல்லப்பட வேண்டும் அல்லது இடுப்பில் சுமப்பதற்கு ஏற்றாற்போல் பெல்ட் அமைக்க வேண்டும் அல்லது முதுகில் சுமப்பதற்கு வசதியாக பாதுகாப்பு உறை அமைக்க வேண்டும்” என்பதாக மெக்ஸிகோ நகரத்தின் எக்சல்ஷியர் செய்தித்தாள் அறிவிக்கிறது.

செல்லப்பிராணிகளில் முதலிடம்

உலகில் இருக்கும் 50 கோடி செல்லப்பிராணிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அமெரிக்க மாகாணங்களில்தான் இருக்கின்றன. “இங்குள்ள வீடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் பின்வரும் செல்லப்பிராணிகளில் குறைந்தது ஒன்றையாவது வளர்க்கின்றனர்; 7 கோடி பூனைகள், 5.6 கோடி நாய்கள், 4 கோடி பறவைகள், 10 கோடி மீன்கள், 1.3 கோடி வெள்ளெலிகள் மற்றும் சிறு பாலூட்டிகள், 80 லட்சம் பல்லியினங்கள் இவற்றில் அடங்கும்” என்பதாக நேஷனல் ஜியாகிராபிக் பத்திரிகை அறிவிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பிரிட்டன் நிற்கிறது, இங்கே பூனைகளும் நாய்களும்தான் அதிகம். ஆனால் பிரான்ஸில் நிலைமையே வேறு. “இங்கு 2.1 கோடி மீன்கள் தான் வீட்டுச் செல்லப்பிராணிகளில் முதலிடத்தில் இருக்கின்றன; இந்த எண்ணிக்கை இங்கிருக்கும் வீட்டு நாய்களையும் பூனைகளையும் விட அதிகம்” என்று அந்தப் பத்திரிகை அறிவிக்கிறது.

ஜப்பான் உச்ச நீதி மன்றத்தின் சாதகமான தீர்ப்பு

ஜப்பான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனிப்போமா? “அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெண்ணுக்கு இருக்கும் உரிமையை மதிக்கவில்லை; ஆப்ரேஷன் செய்து கொண்ட அந்த பெண்ணிற்கு ரத்தம் ஏற்றிக்கொள்ளலாமா கூடாதா என்பதை முடிவு செய்யும் உரிமை இருக்கிறது. அவள் சாகவேண்டிய நிலை ஏற்படுவதாக இருந்தாலும் ரத்தம் ஏற்றுவதில்லை என்பதாக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வாக்கு கொடுத்து, கொடுத்த வாக்கை மீறியதால் அவளுடைய உரிமையை மீறியிருக்கின்றனர்” என்பதாக டெய்லி யோமுரி செய்தித்தாள் அறிவித்தது. “தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என தீர்மானிக்க நோயாளிக்கு உரிமை உண்டு என மனித உரிமையின் அடிப்படையில் ஜப்பானின் உச்ச நீதிமன்றம் முதன்முறையாக தீர்ப்பு வழங்கியது.” 1992-⁠ல் மிசே டகேடா என்ற யெகோவாவின் சாட்சிக்கு ஈரலில் புற்றுநோய் வந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; சிகிச்சையின்போது மயக்கநிலையில் இருந்த மிசேவுக்கு ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் இவ்வாறு செய்தது தவறு என்பதாக உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர். அறுவை சிகிச்சையின்போது தேவை ஏற்படுமென்றால் ரத்தம் ஏற்றுவோம் என்பதாக மருத்துவர்கள் நோயாளிக்கு அறிவித்திருக்க வேண்டும், அவ்வாறு செய்யாததால் அறுவை சிகிச்சை செய்துகொள்வதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை நோயாளிக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். பிப்ரவரி 29, 2000-⁠ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு இவ்வாறு இருந்தது: “மத நம்பிக்கையின் அடிப்படையில் ரத்தம் ஏற்றிக்கொள்ள ஒரு நோயாளி மறுத்தால் அந்த நோயாளியின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.” மிசே 1997-⁠ல் இறந்த பிறகும் அவருடைய உறவினர்கள் இந்த வழக்கில் தொடர்ந்து போராடினர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.​—⁠கூடுதலான தகவலுக்கு காவற்கோபுரம் டிசம்பர் 15, 1998, 26-29 பக்கங்களைப் பார்க்கவும்.

பாதிரியார்களுக்கு பஞ்சம்!

அமெரிக்க மாகாணங்களின் கிராமப் பகுதிகளில் தொடங்கிய ஒரு பஞ்சம் பெரிய நகரங்களுக்கும் பரவிவிட்டது. என்ன பற்றாகுறை? பாதிரியார்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பஞ்சம்தான் என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. இதற்கு உதாரணமாக 110 ஆண்டுகளைக் கண்ட ஒரு யூத ஜெபஆலயத்தை அது எடுத்துக்காட்டியது; கடந்த மூன்று ஆண்டுகளாக தூண்டில் போட்டு தேடியும் ஒரு ரபீயும் சிக்கவில்லை. “இந்த நிலை யூத ஜெபஆலயத்திற்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம், ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளிலும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளிலும் இதே நிலைதான்.” 1992-லிருந்து 1997-⁠க்குள் பாதிரியார்களுடைய எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துவிட்டது. மொத்தமாக எபிஸ்காப்பல் சர்ச்சில் 15,000 பாதிரியார்கள் இருக்கின்றனர், அவர்களில் 1964-⁠க்கு பிறகு பிறந்த பாதிரியார்களின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே. எபிஸ்காப்பல் சர்ச்சை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் இந்த சூழ்நிலையை ‘கவலைக்கிடம்’ என்று அழைக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு சீர்திருத்த யூத மதத்தில், சபைகளைவிட அதிக ரபீக்கள் இருந்தனர். இன்றோ அந்த நிலை தலைகீழ். சீர்திருத்த யூத மதத்தின் 22 சதவீத சபைகளில் முழு நேரமாக சேவை செய்யும் ரபீக்கள் இல்லை. ஏன் இந்த நிலை? “நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம்” அதிகமானதால் “வேறு இடங்களில் நல்ல வேலை கிடைப்பதுதான்” காரணம் என்று சில குருமார்கள் சொல்கின்றனர். ஊழியத்திற்கு “மதிப்பு குறைந்து வருவதே” முக்கிய காரணம் என்பதாக வேறு சிலர் சொல்கின்றனர். இதைக் குறித்து, ஹீப்ரூ யூனியன் காலேஜின் தலைவர் ரபீ ஷெல்டன் சிம்மர்மன் கொடுக்கும் எச்சரிக்கையை கவனிப்போமா? “பாதிரிமார்கள் போன்ற மத சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை நாம் எப்படியாவது அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் இன்று இருக்கும் மதம் அழிந்து போவதை தடுக்க முடியாது.”

பற்களை பாதுகாக்க

“உங்கள் பற்களை அழுத்தி அழுத்தி விளக்கினால் பிரச்சினைதான்” என்பதாக த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது. “இந்தப் பிரச்சினையை ‘பிரஷ்ஷால் பற்கள் தேய்ந்து போவது’ (toothbrush abrasion) என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். இதனால் பற்களில் கூச்சம் ஏற்படுவது, எகிறு தேய்வது, பற்களின் வேர் அருகே தேய்மானம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.” அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் ஜனங்களில் 10 முதல் 20 சதவீதத்தினர் அழுத்தி தேய்த்ததாலும் அதிகமாக தேய்த்ததாலும் பற்களையும் எகிறுகளையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது யார்? நேரம் தவறாமல் பல் தேய்ப்பவர்களும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பவர்களும்தான். “சுத்தமாக பல் தேய்ப்பதாக எண்ணி தங்கள் பற்களையே சேதப்படுத்திக்கொள்கிறார்கள்” என்பதாக மிலேன் சீகோல் என்ற பல் மருத்துவர் குறிப்பிடுகிறார். இந்த பிரச்சினை சிலரை எளிதில் பாதித்துவிடுகிறது; ஏனென்றால், இவர்களுக்கு பிறக்கும்போதே பல்லைச் சுற்றி இருக்க வேண்டிய எலும்பு குறைவாக அமைந்திருக்கிறது. பற்களை நேராக்குவதற்காக கம்பி மாட்டிக்கொண்டவர்களுக்கும் பற்களை நற நற என்று கடிப்பவர்களுக்கும் இதே ஆபத்து காத்திருக்கிறது. இந்த பாதிப்பை தடுப்பதற்கு நிபுணர்கள் கொடுக்கும் அறிவுரை? மிருதுவான பிரஷ் உபயோகிக்க வேண்டும். முதலில் பின்னால் இருக்கும் பற்களை துலக்க வேண்டும்; ஆரம்பத்தில் மிருதுவான பிரஷ்கூட விரைப்பாக இருக்கும், எனவே பேஸ்ட்கூட பல் தேய்வதற்கு காரணமாகி விடலாம். பிரஷை விரல்களால் லேசாகப் பிடிக்க வேண்டும், கையின் பலத்தை பிரஷில் காட்டக்கூடாது. பிரஷை எகிரோடு ஒப்பிடும்போது 45 டிகிரியில் இருக்க வேண்டும், துலக்கும்போது நீள்வட்டத்தில் அதை உபயோகிக்க வேண்டும். அரத்தை உபயோகிப்பதைப் போல முன்னும் பின்னும் இழுக்கக்கூடாது.

சாய்ந்த கோபுரம் நிமிர்கிறது

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியால் அந்த கோபுரம் ஐந்து சென்டிமீட்டர் நிமிர்ந்து விட்டது; இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது என்பதாக த அசோசியேடட் பிரஸ் வெளியீடு ஒன்று அறிவித்தது. இவ்வாறு எடுக்கும் முயற்சியால் ஜூன் 2001-⁠க்குள் பொது மக்கள் விஜயம் செய்வதற்கு இந்த கோபுரம் தயாராகிவிடும் என்பதாக பொறியாளர்கள் நம்புகின்றனர். இந்தக் கோபுரம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, கடைசியாக சுற்றுலா பயணிகள் பத்து வருடங்களுக்கு முன் இதன் மீது ஏறி இறங்கினர். அந்த வருடத்தின்போது இந்த கோபுரம் மிகவும் சாய்ந்து விட்டது என்பதாகவும் இதன் மீது ஏறுவது ஆபத்து என்றும் முடிவு செய்தனர்; எனவே அதை நிமிர்த்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போது இதன் வேலைகள் முடியும் தறுவாயை எட்டிவிட்டன, வேலை முடியும்போது இந்தக் கோபுரம் குறைந்தது 50 சென்டிமீட்டர் நிமிர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் எதிர்காலத்தில் இந்த கோபுரத்தில் ஏற ஆரம்பிப்பதற்கு முன்பு இதை நிமிர்த்துவதற்காக தற்போது உபயோகிக்கப்படும் 800 டன் ஈயம், இதைச் சுற்றி போடப்பட்டிருக்கும் பத்து இரும்பு வளையங்கள் போன்றவை நீக்கப்பட்டு விடும்.

தாய்ப்பாலே சிறந்தது

“தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்க்கும் சக்தி ஏற்படுகிறது; அது மட்டுமா? இன்னும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குழந்தைக்கு வரும் வயிற்றுபோக்கு, காதில் வரும் நோய், அலர்ஜி, புற்று நோய் போன்றவற்றை தாய்ப்பால் தடுக்கிறது” என்பதாக பெற்றோர்கள் என்ற ஆங்கில பத்திரிகை அறிவிக்கிறது. குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்களில் இரத்த புற்றுநோய்தான் சகஜமாக வரும். புட்டி பால் அருந்தும் குழந்தைகளையும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளையும் ஒப்பிடும்போது தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இந்த புற்று நோய் வருவது குறைவு என்பதாக மின்னசோட்டா பல்கலைகழகத்தின் புற்று நோய் ஆய்வு மையம் கண்டுபிடித்திருக்கிறது. குறைந்தது ஒரு மாதத்திற்காவது தாய்பால் அருந்திய குழந்தைகள், 21 சதவீதம் குறைவாகவே புற்று நோயால் தாக்கப்படுவார்கள்; ஒருவேளை ஆறு மாதம் தாய்ப்பால் அருந்தினால்? புற்றுநோயால் தாக்கப்படும் வாய்ப்பு 30 சதவீதம் குறைவு.