Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆலோசனைகள்—காலத்தால் அழியாத ஞானம்

பைபிள் ஆலோசனைகள்—காலத்தால் அழியாத ஞானம்

இதைக் கற்பனை செய்துபாருங்கள்: பழங்காலத்து நினைவுச் சின்னங்கள் இருக்கிற ஓர் அருங்காட்சியகத்தை (museum) நீங்கள் சுற்றிப் பார்க்கிறீர்கள். அங்கிருக்கிற பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் பாழாய் கிடக்கின்றன. சீதோஷ்ணம் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன, அரிக்கப்பட்டிருக்கின்றன. சில நினைவுச் சின்னங்களின் பெரிய பெரிய பாகங்களைக் காணவில்லை. ஆனால், நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்ட ஒரு நினைவுச் சின்னம் மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. உடனே, “இது புதுசா?” என்று உங்கள் சுற்றுலா வழிகாட்டியிடம் (tour guide) கேட்கிறீர்கள். “இல்ல, இது ரொம்ப பழசு, இத நாங்க புதுப்பிக்கவே இல்ல” என்று அவர் சொல்கிறார். அதற்கு நீங்கள், “சீதோஷ்ணத்தால பாதிக்கப்படாம இருக்க இத பத்திரமா பாதுகாத்தீங்களா?” என்று கேட்கிறீர்கள். “இல்ல, இது மோசமான புயலயும் மழையயும் தாக்குப்பிடிச்சு இருக்கு. நிறைய பேர் இத சேதப்படுத்த முயற்சி செஞ்சிருக்காங்க” என்று அவர் சொல்கிறார். இப்போது உங்கள் மனதுக்குள் ஒரு கேள்வி வருகிறது: ‘அப்படீனா, இது எதனால கட்டப்பட்டிருக்கு?’

ஒரு விதத்தில், பைபிளும் இந்த அருமையான நினைவுச் சின்னத்தைப் போலத்தான் இருக்கிறது. பெரும்பாலான புத்தகங்களைவிட பைபிள் மிகவும் பழமையானது. பைபிளைத் தவிர மற்ற பழமையான புத்தகங்கள் இருந்தாலும், இவை அந்த நினைவுச் சின்னங்களைப் போல மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இந்தப் புத்தகங்களில், அறிவியலைப் பற்றி சிலர் சொன்ன விஷயங்கள், புதுப்புது தகவல்களோடும் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைகளோடும் ஒத்துப்போகவில்லை. அவற்றில் இருக்கிற மருத்துவ ஆலோசனைகளும் ஆபத்தானவையாகவே இருக்கின்றன. நிறைய பழங்காலத்து கையெழுத்துப் பிரதிகள் வெறும் துண்டுகளாகத்தான் (fragments) இருக்கின்றன. அந்தத் துண்டுகளின் சில பாகங்கள் தொலைந்துபோய்விட்டன அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.

இந்தப் பழமையான புத்தகங்களைவிட பைபிள் ரொம்பவே வித்தியாசமானது. பைபிள் 3,500 வருஷங்களுக்கு முன்பே எழுத ஆரம்பிக்கப்பட்டு விட்டிருந்தாலும், பைபிளில் எந்த முரண்பாடும் இல்லை. பல நூற்றாண்டுகளாக, பைபிள் பல தடவை எரிக்கப்பட்டிருக்கிறது... தடை செய்யப்பட்டிருக்கிறது... கேவலமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றையும் அது தாக்குப்பிடித்திருக்கிறது. இன்றுள்ள அறிவியலோடு பைபிள் ஒத்துப்போகிறது. அதோடு, எதிர்காலத்தைப் பற்றிய விஷயங்களையும் அது சொல்கிறது.—“பைபிள் துல்லியமானதா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்

‘பைபிள் ஆலோசனைகள் உண்மையிலேயே நடைமுறைக்கு ஒத்துவருமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள, இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘இன்னைக்கு மனுஷங்க என்னென்ன பிரச்சினைகள அனுபவிக்குறாங்க? என்னென்ன பிரச்சினைகள் ரொம்ப மோசமா இருக்கு?’ ஒருவேளை, போர், தூய்மைக்கேடு, குற்றச்செயல் அல்லது ஊழல் போன்ற பிரச்சினைகள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். இப்போது, பைபிளில் இருக்கும் சில அடிப்படை ஆலோசனைகளைக் கவனியுங்கள். பிறகு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மக்கள் இந்த பைபிள் ஆலோசனைகளின்படி வாழ்ந்தால், உலகம் எப்படி இருக்கும்?’

சமாதானமாக இருங்கள்

“சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.” (மத்தேயு 5:9) “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.”—ரோமர் 12:18.

இரக்கம் காட்டுங்கள், மன்னியுங்கள்

“இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்.” (மத்தேயு 5:7) “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா * உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.

ஒற்றுமையாக இருங்கள்

கடவுள் “ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி, அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.” (அப்போஸ்தலர் 17:26) “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.

பூமியைப் பராமரியுங்கள்

“கடவுளாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்தில் குடிவைத்து, அதைப் பண்படுத்தவும் பராமரிக்கவும் சொன்னார்.” (ஆதியாகமம் 2:15) கடவுள் “பூமியை நாசமாக்குகிறவர்களை” நாசமாக்கப்போகிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.

பேராசை மற்றும் ஒழுக்கக்கேட்டை வெறுத்திடுங்கள்

“எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு ஏராளமான சொத்து இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது.” (லூக்கா 12:15) “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. இவை பரிசுத்தமான மக்களுக்கு ஏற்றவை அல்ல.”—எபேசியர் 5:3.

நேர்மையாக இருங்கள், கடினமாக உழையுங்கள்

“நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.” (எபிரெயர் 13:18) “திருடுகிறவன் இனி திருடாமல் இருக்க வேண்டும்; நேர்மையாக உழைக்க வேண்டும்.”—எபேசியர் 4:28.

கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள்

“மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:14) ‘கஷ்டப்படுகிற அநாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்.’—யாக்கோபு 1:27.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமல்ல, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது. பைபிளில் இருக்கிற இந்த ஆலோசனைகளை மக்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது, இல்லையா? அப்படியென்றால், பைபிள் ஆலோசனைகள் காலத்தால் அழியாதவை என்று சொல்வது சரிதானே! இந்த பைபிள் ஆலோசனைகள் இப்போதே உங்களுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகின்றன?

பைபிள் ஆலோசனைகளிலிருந்து நீங்கள் இப்போதே என்னென்ன நன்மைகளை அனுபவிக்கலாம்?

மனிதர்களிலேயே ஞானமுள்ள ஒருவர் இப்படிச் சொன்னார்: “ஒருவர் செய்கிற நீதியான செயல்களால் கிடைக்கிற பலன்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்.” (மத்தேயு 11:19, அடிக்குறிப்பு) ஞானமாகச் செயல்படுவதால் கிடைக்கிற பலனை வைத்துதான் ஞானம் எந்தளவு சிறந்தது என்று சொல்ல முடியும். அப்படியென்றால், நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘பைபிள்ல வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் இருந்தா, அது எனக்கு நல்ல பலன்கள தரணும், இல்லையா? இப்போ இருக்குற என்னோட பிரச்சினைகள தீர்க்க அது எனக்கு உதவணும், இல்லையா?’

இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். டெல்ஃபின் * என்ற பெண்ணின் வாழ்க்கை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் அவர் சந்தோஷமாக இருந்தார். ஆனால், எதிர்பாராமல் அடுத்தடுத்து பல பிரச்சினைகள் அவரை இடியாய் தாக்கின. டீனேஜ் வயதில் இருந்த அவருடைய மகள் இறந்துவிட்டாள், அவருடைய கல்யாண வாழ்க்கை முறிந்தது, திடீரென பொருளாதார கஷ்டமும் ஏற்பட்டது. “மகள், கணவன், வீடுனு நான் எல்லாத்தயும் இழந்துட்டேன். இப்போ, நிர்க்கதியா நிக்குறேன். நான் எதுக்காக உயிரோடு இருக்கேன்னு எனக்கே தெரியல” என்று அவர் சொல்கிறார்.

பைபிளின் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை டெல்ஃபின் இப்போது உணருகிறார்: “எங்களுடைய ஆயுள் 70 வருஷம், நிறைய தெம்பு இருந்தால் 80 வருஷம். ஆனால், அவை துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன. அவை வேகமாக ஓடிவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகிறோம்.”—சங்கீதம் 90:10.

அந்த வேதனையான காலத்தில், டெல்ஃபினுக்கு பைபிள் கைகொடுத்தது. அவருடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது. அவரைப் போல பிரச்சினைகளில் தவித்துக்கொண்டிருந்த நிறைய பேர், பைபிள் ஆலோசனைகளைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்ததால் எப்படி நன்மை அடைந்தார்கள் என்பதைப் பற்றி அடுத்து வரும் மூன்று கட்டுரைகளில் பார்க்கலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த அருமையான நினைவுச் சின்னத்தைப் போல பைபிள் இருப்பதாக அவர்கள் உணருகிறார்கள். பைபிள், மற்ற புத்தகங்களைப் போல பழையதாகி, ஒன்றுக்கும் உதவாமல் போகவில்லை! அதற்குக் காரணம் என்ன? அதில் மனிதர்களுடைய எண்ணங்கள் இல்லாமல், கடவுளுடைய எண்ணங்கள் இருப்பதுதான் அதற்குக் காரணமா?—1 தெசலோனிக்கேயர் 2:13.

நம்முடைய வாழ்நாள் குறுகியது என்றும், அதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன என்றும் உங்களுக்குத் தெரியும். பிரச்சினைகள் உங்களை வாட்டி வதைக்கும்போது, ஆறுதலுக்காக... உதவிக்காக... நம்பகமான ஆலோசனைகளுக்காக... யாரிடம் போவீர்கள்?

  1. பிரச்சினைகளைத் தவிர்க்கவும்...

  2. பிரச்சினைகளைச் சரிசெய்யவும்...

  3. மாற்ற முடியாத சூழ்நிலைகளைச் சகிக்கவும்...

பைபிள் உங்களுக்கு நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது.

அடுத்து வரும் கட்டுரைகள் இந்த மூன்று விஷயங்களைப் பற்றி விளக்கும்.

^ பாரா. 10 கடவுளுடைய பெயர் யெகோவா என்பதாக பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 83:18.

^ பாரா. 24 இந்தக் கட்டுரையிலும் அடுத்த மூன்று கட்டுரைகளிலும், சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.