இரத்தம்—உயிருக்கு அத்தியாவசியம்

இரத்தம்—உயிருக்கு அத்தியாவசியம்

இரத்தம்​—⁠உயிருக்கு அத்தியாவசியம்

இரத்தம் எப்படி உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்? இது உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் இரத்தத்திற்கும் உங்கள் உயிருக்கும் தொடர்பு இருக்கிறது. இரத்தம் உங்களுடைய உடலெங்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது, வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் உடலை சீராக்க உதவுகிறது, நோயை எதிர்த்துப் போரிடவும் துணை புரிகிறது.

1628-⁠ல், வில்லியம் ஹார்வே என்பவர் இரத்த ஓட்ட மண்டலத்தைக் கண்டுபிடித்தார்; ஆனால், அதற்கும் வெகு காலத்திற்கு முன்னரே உயிருக்கும் இரத்தத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பிரபல மதங்களின் முக்கிய நெறிமுறைகள் உயிரளிக்கும் ஒருவரைச் சுற்றியே அமைந்திருக்கின்றன; அவர் உயிரையும் இரத்தத்தையும் பற்றிய தமது கருத்துகளை தெரியப்படுத்தியிருக்கிறார். வக்கீலாக இருந்த ஒரு யூத கிறிஸ்தவர் உயிரளிப்பவரைப் பற்றி இவ்வாறு கூறினார்: ‘அவரே எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறவர், . . . அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.’ a

உயிரளிக்கும் அப்படிப்பட்ட ஒருவர் தருகிற கட்டளைகளெல்லாம் தங்களுடைய நிரந்தர நன்மைக்கே என்பதை அவரை விசுவாசிப்பவர்கள் மனதார நம்புகிறார்கள். ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்க வேண்டிய வழியிலே நம்மை நடத்துகிறவர்’ என அவரைப் பற்றி எபிரெய தீர்க்கதரிசி ஒருவர் உறுதியளித்தார்.

இந்த உறுதி, பைபிளில் ஏசாயா 48:17-⁠ல் கொடுக்கப்பட்டுள்ளது. பைபிள் நம் அனைவருக்குமே பயனளிக்கிற நெறிமுறைகளைக் கொண்ட ஒரு புத்தகமாக மதிக்கப்படுகிறது. மனிதர்கள் இரத்தத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி இது என்ன சொல்கிறது? இரத்தத்தின் மூலம் உயிரை எப்படிக் காப்பாற்றலாம் என இது சொல்கிறதா? பார்க்கப்போனால், இரத்தம் என்பது உயிரியல் சார்ந்த சிக்கலான ஒரு திரவத்தைக் காட்டிலும் மேலானது என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. இரத்தத்தைப் பற்றி 400 தடவைக்கும் அதிகமாக இது குறிப்பிடுகிறது. இவற்றில் சில, உயிரைக் காப்பாற்றுவது பற்றியவையாகும்.

பைபிளின் ஆரம்பப் பதிவு ஒன்றில் படைப்பாளர் இவ்வாறு அறிவித்தார்: “நடமாடுகிற ஜீவ ஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; . . . மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்.” அதோடு, “உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்” என்றும் சொன்னார், அதன் பிறகு கொலை செய்வதை அவர் கண்டித்தார். (ஆதியாகமம் 9:3-6) யூதர்களாலும் முஸ்லீம்களாலும் கிறிஸ்தவர்களாலும் உயர்வாக மதிக்கப்படும் நோவா என்ற ஒரு மூதாதையிடம் அவர் அதைத் தெரிவித்தார். இவ்விதமாக, படைப்பாளருடைய கண்ணோட்டத்தில், இரத்தம் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என மனிதகுலம் அனைத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இது வெறுமனே உணவுக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு சட்டமல்ல. இதில் தார்மீக நெறிமுறை உட்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மனித இரத்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, எனவே அதைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பிற்பாடு இது சம்பந்தமாக படைப்பாளர் மேலும் பல விவரங்களைக் கொடுத்தார்; உயிரின் ஜீவநாடியான இரத்தத்தை தார்மீக நெறிமுறைகளோடு அவர் தொடர்புபடுத்துவதை இவற்றிலிருந்து நாம் சுலபமாக புரிந்துகொள்ளலாம்.

பூர்வ இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணச் சட்டத்தைக் கொடுத்தபோது அவர் மீண்டும் இரத்தத்தைப் பற்றி குறிப்பிட்டார். இந்தச் சட்டத்தில் பொதிந்துள்ள ஞானத்தையும் நெறிமுறைகளையும் இன்று பலர் உயர்வாக மதிக்கிறபோதிலும், வெகு சிலரே இரத்தம் சம்பந்தமாக இதில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான சட்டங்களை அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டு போகப் பண்ணுவேன். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என்று கடவுள் சொன்னார். (லேவியராகமம் 17:10, 11) இறந்துபோன மிருகத்தை வேட்டைக்காரன் என்ன செய்ய வேண்டுமென கடவுள் பிற்பாடு விளக்கினார்; “அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப் பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன். . . . எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம், சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டு போவான்” என்றார்.​—லேவியராகமம் 17:13, 14.

யூதருடைய நியாயப்பிரமாணச் சட்டம் ஆரோக்கியத்தை முன்னேற்றுவித்தது என்பதை விஞ்ஞானிகள் இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, முகாமிற்கு வெளியே மலம் கழித்து அதை மண்ணினால் மூட வேண்டும் என்றும், எளிதில் வியாதியை உண்டாக்கும் மாமிசத்தைச் சாப்பிடக் கூடாது என்றும் அந்தச் சட்டம் வரையறுத்தது. (லேவியராகமம் 11:4-8, 13; 17:15; உபாகமம் 23:12, 13) இரத்தத்தைப் பற்றிய சட்டத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அம்சங்கள் இருந்தபோதிலும், அதில் இன்னும் அதிக விஷயங்கள் உட்பட்டிருந்தன. இரத்தத்திற்கு அடையாள அர்த்தம் இருந்தது. படைப்பாளரால் கொடுக்கப்பட்ட உயிரை அது பிரதிநிதித்துவம் செய்தது. இரத்தத்தை விசேஷித்த ஒன்றாக பாவிப்பதன் மூலம் உயிருக்காக அவர் மீது சார்ந்திருந்ததை மக்கள் காட்டினார்கள். ஆம், அவர்கள் இரத்தத்தை உட்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமே, அது ஆரோக்கியமற்றது என்பதல்ல, ஆனால் அது கடவுளுக்கு விசேஷ முக்கியத்துவமுடையது என்பதே.

உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இரத்தத்தைப் புசிப்பது சம்பந்தமாக படைப்பாளர் விதித்த தடையைப் பற்றி நியாயப்பிரமாணச் சட்டம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது. உதாரணத்திற்கு, “இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; . . . அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப் போல் தரையிலே ஊற்றிவிட வேண்டும். நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது” என்று கூறியது.​—உபாகமம் 12:23-25; 15:23; லேவியராகமம் 7:26, 27; எசேக்கியேல் 33:25. b

ஓர் அவசரநிலை என்றால் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளலாம் எனச் சிலர் இன்று தவறாக வாதிடுகிறார்கள், ஆனால் அப்படிப்பட்ட அவசரநிலை ஏற்பட்டால்கூட கடவுளுடைய சட்டத்தைப் புறக்கணித்துவிடக் கூடாது. ஒருமுறை போர்க் காலத்தில் நெருக்கடி நிலை வந்தபோது, இஸ்ரவேலப் படைவீரரில் சிலர் மிருகங்களைக் கொன்று ‘இரத்தத்தோடு புசித்தார்கள்.’ ஓர் அவசரநிலை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக தங்களுடைய உயிரைக் காப்பதற்கு மாமிசத்தை இரத்தத்தோடு புசிக்க அவர்களுக்கு அனுமதி இருந்ததா? இல்லை. அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் செய்தது மாபெரும் தவறு என்பதை அவர்களுடைய தளபதி சுட்டிக்காட்டினார். (1 சாமுவேல் 14:31-35) ஆகவே, உயிர் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தபோதிலும், அவசரநிலை ஏற்பட்டால் தம்முடைய தராதரங்களை மீறலாம் என நம் உயிரின் ஊற்றுமூலர் ஒருபோதும் சொல்லவில்லை.

இரத்தமும் உண்மை கிறிஸ்தவர்களும்

இரத்தம் கொடுத்து மனித உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில், கிறிஸ்தவ மதத்தின் கருத்து என்ன?

இயேசு கிறிஸ்து உத்தமராக விளங்கினார், அதனால்தான் அவர் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறார். இரத்தத்தைப் புசிப்பது தவறு என்று படைப்பாளர் சொன்னதையும், அந்தச் சட்டம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே, அந்தச் சட்டத்தை இயேசு ஆதரித்திருப்பார் என்றும், எப்பேர்ப்பட்ட நெருக்கடியிலும் அதை மீறியிருக்க மாட்டார் என்றும் நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. இயேசு “பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.” (1 பேதுரு 2:22) இவ்வாறு, தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு நல்ல ஒரு முன்மாதிரி வைத்தார், உயிருக்கும் இரத்தத்திற்கும் மதிப்புக் கொடுப்பதிலும் முன்மாதிரி வைத்தார். (உங்களுடைய உயிரைப் பாதிக்கும் இந்த முக்கியமான விஷயத்தில் எப்படி இயேசுவின் இரத்தம் உட்பட்டுள்ளது என்பதை நாம் பிற்பாடு சிந்திக்கலாம்.)

ஒருவர் கிறிஸ்தவராக மாறும்போது இஸ்ரவேலின் எல்லாச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டுமா என்ற கேள்வி இயேசு இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தது; அந்தச் சமயத்தில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அப்போஸ்தலர்களாலான கிறிஸ்தவ ஆளும் குழுவில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இரத்தம் சம்பந்தமாக நோவாவுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையை இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனான யாக்கோபு குறிப்பிட்டார். இந்தச் சட்டங்களைக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியிருந்ததா?​—அப்போஸ்தலர் 15:1-21.

அந்தக் குழுவினர் எடுத்த தீர்மானம் அனைத்து சபைகளுக்கும் அறிவிக்கப்பட்டது, அதாவது மோசேக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்தைக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், ‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும் [இரத்தம் வெளியேற்றப்படாத மாமிசத்திற்கும்], வேசித்தனத்திற்கும், விலகியிருக்க வேண்டும்’ என அறிவிக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 15:22-29) ஏதோவொரு சடங்காச்சார அல்லது உணவுப் பழக்கம் சம்பந்தப்பட்ட கட்டளையை அப்போஸ்தலர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த கட்டளையில் முக்கியமான நெறிமுறைகள் அடங்கியிருந்தன, அவற்றிற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்தார்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, ‘விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், . . . வேசித்தனத்திற்கும், விலகியிருக்க வேண்டும்’ என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.​—அப்போஸ்தலர் 21:⁠25.

கோடிக்கணக்கானோர் சர்ச்சுகளுக்குச் செல்கிறார்கள். விக்கிரகங்களை வழிபடக் கூடாது என்பதும் ஒழுக்கயீனத்தில் ஈடுபடக் கூடாது என்பதும் கிறிஸ்தவ நெறிமுறைகளில் உட்பட்டிருப்பதை இவர்களில் பெரும்பாலோர் ஒத்துக்கொள்வர். என்றாலும், இரத்தத்திற்கு விலகியிருப்பதையும் தவறான மற்ற காரியங்களையும் அப்போஸ்தலர்கள் ஒரே உயர்ந்த நெறிமுறைகளாக கருதினார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அந்தக் கட்டளையின் முடிவில், “இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக” என்று எழுதியிருந்தார்கள்.​—அப்போஸ்தலர் 15:⁠29.

அப்போஸ்தலர்கள் கொடுத்த கட்டளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று என வெகு காலமாக கருதப்பட்டது. யுஸிபியஸ் என்பவர் இரண்டாம் நூற்றாண்டின் முடிவுக்குச் சற்று முன் வாழ்ந்த ஓர் இளம் பெண்ணைப் பற்றி கூறினார்; சித்திரவதை செய்யப்பட்ட அவள், “பகுத்தறிவற்ற மிருகங்களின் இரத்தத்தைக்கூட [கிறிஸ்தவர்கள்] புசிக்கக் கூடாது” என்று இறப்பதற்கு முன் சொன்னதாக அவர் குறிப்பிட்டார். சாகும் உரிமையை அவள் தெரிவு செய்யவில்லை. அவள் வாழவே விரும்பினாள், ஆனால் தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்க அவள் விரும்பவில்லை. சொந்த ஆதாயத்தைவிட கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களை நீங்கள் உயர்வாக மதிப்பீர்கள் அல்லவா?

ஜோசப் பிரீஸ்ட்லி என்ற விஞ்ஞானி பின்வரும் முடிவுக்கு வந்தார்: “இரத்தத்தைப் புசிக்கக் கூடாது என்ற தடை நோவாவுக்கு விதிக்கப்பட்டது, ஆகவே அவருடைய சந்ததியார் அனைவரும் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தெரிகிறது. . . . அப்போஸ்தலர்களுடைய [இந்தத்] தடையின் தன்மையையும், விஸ்தாரத்தையும் பற்றி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவர்களுடைய செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தத் தடையைக் குறித்து சிந்திப்போமாகில், இது மாற்ற முடியாததாக, நிரந்தரமானதாக இருப்பதற்காகவே இயற்றப்பட்டது என்ற முடிவுக்குத்தான் நாம் வர வேண்டும்; ஏனென்றால் கிறிஸ்தவர்கள் அநேக நூற்றாண்டுகளாக இரத்தத்தைப் புசிக்கவே இல்லை.”

இரத்தத்தை மருந்தாக பயன்படுத்துவதைப் பற்றியென்ன?

இரத்தத்தின் மீது பைபிள் விதித்திருக்கும் தடை மருத்துவ காரணங்களுக்காக இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கும் பொருந்துமா? உதாரணமாக, நோவா, மோசே, அல்லது அப்போஸ்தலர்கள் காலத்தில் இரத்தமேற்றுதல் கிடையாது, ஆகவே இதுபோன்ற காரணங்களுக்காக இரத்தத்தைப் பயன்படுத்துவதை பைபிள் தடை செய்கிறதா?

இரத்தத்தைப் பயன்படுத்தும் நவீன முறை அந்தக் காலத்தில் கிடையாது என்றாலும், மருத்துவத்தில் இரத்தத்தைப் பயன்படுத்துவது நவீனகால பழக்கமல்ல. சுமார் 2,000 ஆண்டுகளாக, எகிப்திலும் பல்வேறு இடங்களிலும், “குஷ்டரோகத்திற்கு [மனித] இரத்தம் மிகச் சிறந்த நிவாரணியாக கருதப்பட்டது.” அசீரிய தேசம் தொழில்நுட்பத்தில் முன்னணி வகித்தபோது, ஏஸார்-ஹேடன் என்ற அரசனுடைய மகனுக்கு இந்த மருத்துவ முறையைக் கையாண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதைப் பற்றி மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “[இளவரசர்] இப்போது நன்றாக இருக்கிறார்; ராஜாவாகிய என் பிரபுவே, சந்தோஷமாய் இருப்பீராக. 22-⁠ம் நாள் முதல் நான் (அவருக்கு) இரத்தத்தைக் குடிக்கக் கொடுக்கிறேன், (அதை) அவர் மூன்று தினங்களுக்குக் குடிப்பார். இன்னும் மூன்று தினங்களுக்கு உள்பிரயோகத்திற்காக அவருக்கு (இரத்தத்தைக்) கொடுப்பேன்.” இஸ்ரவேலருடன் ஏஸார்-ஹேடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால் அந்த இஸ்ரவேலருக்குக் கடவுளுடைய சட்டம் தெரிந்திருந்ததால், இரத்தத்தை ஒருபோதும் அவர்கள் மருந்தாக பயன்படுத்தவில்லை.

ரோமருடைய காலங்களில் இரத்தம் மருந்தாக பயன்படுத்தப்பட்டதா? காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த மனித இரத்தம் பயன்படுத்தப்பட்டதாக (அப்போஸ்தலர்களுடைய காலத்தில் வாழ்ந்த) இயற்கைவாதியான பிளைனியும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மருத்துவரான அரிட்டேயுஸும் அறிவிக்கிறார்கள். பிற்காலத்தில் டெர்டுலியன் இவ்வாறு எழுதினார்: “இரத்த வெறிபிடித்த ஆட்கள் காக்காய் வலிப்பு நோயைச் சுகப்படுத்துவதற்கு . . . வட்டரங்கு காட்சியில் கொடிய குற்றவாளிகளின் இரத்தத்தை பேராசையோடு எடுத்துச் சென்றார்கள்.” இது கிறிஸ்தவர்கள் செய்ததற்கு நேர்மாறாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “மிருகத்தின் இரத்தத்தைக்கூட அவர்கள் சாப்பிடுவதில்லை. . . . கிறிஸ்தவர்களை விசாரணை செய்யும்போது இரத்தம் தோய்ந்த இறைச்சியை அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். அது அவர்களுடைய சட்டத்துக்கு முரணானது என்பதை நன்கு தெரிந்து வேண்டுமென்றே அதைக் கொடுக்கிறீர்கள்.” பூர்வ கிறிஸ்தவர்கள் இரத்தத்தைப் புசிப்பதற்குப் பதிலாக இறப்பதற்குத் தயாராக இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

“அன்றாட வாழ்க்கையில் இரத்தத்தை . . . மருந்துகளிலும் மாயமந்திரத்திலும் பயன்படுத்துகிற பழக்கம் மறைந்து போகவே இல்லை” என மாமிசமும் இரத்தமும் என்ற ஆங்கில நூல் அறிவிக்கிறது. “உதாரணமாக, 1483-⁠ல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பதினோராம் லூயி இறக்கும் தறுவாயில் இருந்தார். ‘அவருடைய உடல்நிலை ஒவ்வொரு நாளும் மோசமடைந்து கொண்டிருந்தது; மனித இரத்தத்தை உட்கொண்டால் தன்னுடைய வியாதி குணமாகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், சில குழந்தைகளுடைய இரத்தத்தை எடுத்து அவர் குடித்தார். இப்படிப்பட்ட விசித்திரமான மருந்துகளை உட்கொண்டபோதிலும், அவற்றால் எந்தப் பிரயோஜனமும் ஏற்படவில்லை.’”

இரத்தமேற்றுவதைப் பற்றியென்ன? 16-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது சம்பந்தமாக பரிசோதனைகள் ஆரம்பமாயின. கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் பேராசிரியர் தாமஸ் பர்த்தோலின் (1616-80) இவ்வாறு ஆட்சேபணை தெரிவித்தார்: ‘மனித இரத்தத்தை உடலுக்குள் செலுத்தி நோய்களிலிருந்து நிவாரணம் பெற முயலுகிறவர்கள் அதைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அது மகா பாவம். மனித மாமிசத்தைப் புசிப்பவர்களைக் கண்டனம் செய்கிறோம். ஆனால் மனித இரத்தத்தைப் புசிப்பவர்களை நாம் ஏன் அடியோடு வெறுப்பதில்லை? மற்றொருவருடைய நரம்பைத் துண்டித்து நேரடியாகவோ இரத்தமேற்றும் கருவிகள் மூலமாகவோ இரத்தத்தை உட்கொள்வதையும் கண்டனம் செய்ய வேண்டும். இத்தகைய சிகிச்சை செய்பவர்கள் கடவுளுடைய சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டும், ஏனென்றால் இரத்தம் புசிக்கக் கூடாதென அது தடை செய்திருக்கிறது.’

ஆகவே, இரத்தத்தைப் புசிக்கக் கூடாதென்ற பைபிள் சட்டம் அதை நரம்பு வழியாக ஏற்றிக்கொள்வதற்கும் பொருந்துகிறது என்பதை அந்தக் காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்கள் புரிந்துகொண்டார்கள். பர்த்தோலின் இவ்வாறு சொல்லி முடித்தார்: “எந்த முறையில் [இரத்தத்தை] உட்கொண்டாலும் அதன் நோக்கம் ஒன்றுதான்; அதாவது, நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு இரத்தத்தின் மூலம் ஊட்டமளிப்பதே அல்லது அவரைக் குணப்படுத்துவதே.”

மத அடிப்படையில் யெகோவாவின் சாட்சிகள் எடுக்கும் உறுதியான தீர்மானத்தைப் புரிந்துகொள்ள இந்தச் சுருக்கமான தகவல் உங்களுக்கு உதவும். உயிரை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள், நல்ல மருத்துவ கவனிப்பையும் நாடுகிறார்கள். ஆனால் கடவுளுடைய தராதரத்தை மீறாமலிருக்க உறுதிபூண்டிருக்கிறார்கள். அந்தத் தராதரம் மாறாதது: உயிரை படைப்பாளரிடமிருந்து வரும் ஒரு பரிசாக மதிக்கிறவர்கள் அதைக் காப்பாற்ற இரத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

என்றாலும், இரத்தம் உயிரைக் காப்பாற்றுகிறது என பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. அதிகமான இரத்த இழப்புக்கு ஆளானவர்கள் இரத்தம் ஏற்றிக்கொண்ட பிறகு உடல்நிலை வேகமாக முன்னேறியதைப் பற்றிய உதாரணங்களை டாக்டர்கள் சொல்லலாம். ஆகவே, ‘மருத்துவ ரீதியில் இது எந்தளவு ஞானமானது, அல்லது ஞானமற்றது?’ என நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். இரத்தத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது பலன்தருகிறது என்பதற்கு மருத்துவ ரீதியில் அத்தாட்சி அளிக்கப்படுகிறது. ஆகையால், இரத்தத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக நன்கு விஷயமறிந்து தீர்மானம் எடுப்பதற்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் உத்தரவாதம் உங்களுக்கு இருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a அப்போஸ்தலர் 17:25, 28-⁠ல் பவுல் கூறினார்.

b இதுபோன்ற தடைகள் பிற்பாடு குரானிலும் எழுதப்பட்டன.

[பக்கம் 4-ன் பெட்டி]

“இங்கு [அப்போஸ்தலர் 15-ல்] தெள்ளத் தெளிவாகவும் கிரமமாகவும் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மிகவும் இன்றியமையாதவை என குறிப்பிடப்பட்டிருக்கிறது; ஆகையால், அந்த நெறிமுறைகள் தற்காலிகமானவை என அப்போஸ்தலர்கள் நினைத்திருக்க முடியாது என்பதற்கு அதுவே பலமான அத்தாட்சியாக இருக்கிறது.”​—⁠பேராசிரியர் எட்வார்டு ரூஸ், ஸ்டிராஸ்பர்க் பல்கலைக்கழகம்.

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

அப்போஸ்தலருடைய அந்த ஆணையின் உட்பொருளை மார்ட்டின் லூத்தர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்: “இந்த ஆலோசனைக் குழுவின் முடிவுக்கு இசைவாக சர்ச் செயல்பட வேண்டுமென நாம் விரும்பினால், . . . இரத்தத்தில் சமைக்கப்பட்ட வாத்து, மான், கலைமான், அல்லது பன்றி இறைச்சியை இனி புசிக்கக் கூடாதென்று எல்லா இளவரசர்களுக்கும், பிரபுக்களுக்கும், நகரவாசிகளுக்கும், நாட்டுப்புறத்தாருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும், கட்டாயப்படுத்தவும் வேண்டும். . . . அதோடு, பட்டணத்தானும் சரி, பட்டிக்காட்டானும் சரி, முக்கியமாக இரத்தம் கலந்த ‘சாசேஜை’யும் இரத்த ‘சாசேஜை’யும் சாப்பிடக் கூடாது.”

[படத்திற்கான நன்றி]

Woodcut by Lucas Cranach

[பக்கம் 6-ன் பெட்டி]

“கடவுளும் மனிதர்களும் காரியங்களை மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். நமது பார்வையில் முக்கியமாகத் தோன்றும் காரியம் எல்லையில்லா ஞானத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவருடைய பார்வையில் பெரும்பாலும் ஒன்றுமில்லாததாக இருக்கிறது; நமக்கு அற்பமாகத் தோன்றும் காரியம் கடவுளுக்கு அதிமுக்கியமாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.”​—⁠“இரத்தம் புசிப்பது சரியா என்பதைப் பற்றி ஒரு விசாரணை,” (ஆங்கிலம்) அலெக்சாண்டர் பைரீ, 1787.

[பக்கம் 3-ன் படம்]

Medicine and the Artist by Carl Zigrosser/Dover Publications

[பக்கம் 4-ன் படம்]

இரத்தம் சம்பந்தமான கடவுளுடைய சட்டம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என சரித்திரப் புகழ்மிக்க ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் கிறிஸ்தவ ஆளும் குழு உறுதிப்படுத்தியது

[பக்கம் 7-ன் படம்]

என்ன விளைவுகள் ஏற்பட்டபோதிலும், இரத்தம் சம்பந்தமான கடவுளுடைய சட்டத்தை மீறுவதற்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மறுத்தார்கள்

[படத்திற்கான நன்றி]

Painting by Gérôme, 1883, courtesy of Walters Art Gallery, Baltimore