Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 10

சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்

சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்

சாலொமோன் ராஜாவுக்கு யெகோவா ஞானத்தை அருளுகிறார்; அவருடைய ஆட்சியில் இஸ்ரவேலர் ஈடில்லா சமாதானத்தையும் செழிப்பையும் அனுபவிக்கிறார்கள்

ஒரு தேசத்தின் மன்னரும் மக்களும் யெகோவா தேவனை உன்னத அரசராக ஏற்றுக்கொண்டு அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? சாலொமோன் ராஜாவின் 40 வருட ஆட்சியில் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது.

தாவீது இறப்பதற்கு முன்பு சாலொமோனை தனக்கு அடுத்த அரசனாக நியமித்தார். சாலொமோனுடைய கனவில், அவருக்கு என்ன வேண்டுமெனக் கடவுள் கேட்டார். மக்களை ஞானத்தோடும் நீதியோடும் அரசாள அறிவும் ஞானமும் தரும்படி சாலொமோன் வேண்டினார். யெகோவா மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஞானத்தையும் புத்தியையும் அருளினார். அதோடு, தமக்கு எப்போதும் கீழ்ப்படிந்திருந்தால் செல்வம்... புகழ்... தீர்க்காயுசு... கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

ஞானமான தீர்ப்புகள் வழங்குவதில் சாலொமோன் பெயர்பெற்றவராக ஆனார். ஒருமுறை இரண்டு பெண்கள் ஓர் ஆண் குழந்தையைக் கொண்டுவந்து, “பிள்ளை என்னுடையது” என்று சொல்லி சண்டை போட்டார்கள். ஆகவே, அந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாகக் கொடுக்கும்படி சாலொமோன் கட்டளையிட்டார். ஒரு பெண் அதற்குச் சம்மதித்தாள்; ஆனால், உண்மையான தாய் அந்தக் குழந்தையை அவளிடமே கொடுத்துவிடும்படி மன்றாடினாள். தாய்ப்பாசம் கொண்ட பெண்ணே குழந்தையின் உண்மையான தாய் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டு அவளிடமே குழந்தையைக் கொடுக்கச் சொன்னார். இந்தத் தீர்ப்பைப் பற்றி இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டபோது சாலொமோனுக்குத் தெய்வ ஞானம் இருப்பதை உணர்ந்துகொண்டார்கள்.

சாலொமோனின் மாபெரும் சாதனைகளில் ஒன்று யெகோவா தேவனுக்காக அவர் கோயில் கட்டியதாகும். எருசலேமிலிருந்த அந்தப் பிரம்மாண்டமான கோயில், முக்கிய வழிபாட்டுத் தலமாக ஆனது. கோயில் திறப்பு விழாவில் சாலொமோன் பிரார்த்தனை செய்தபோது, ‘இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்தக் கோயில் எம்மாத்திரம்?’ என்று கூறினார்.—1 இராஜாக்கள் 8:27.

சாலொமோனின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது; அரேபியாவிலுள்ள சேபா நாட்டு ராணியின் காதுக்கும் எட்டியது. ஆகவே, சாலொமோனின் அருமை பெருமையையும் செல்வச் செழிப்பையும் பார்க்கவும் அவருடைய ஞானத்தைச் சோதித்தறியவும் அவள் பயணப்பட்டு வந்தாள். சாலொமோனின் ஞானத்தையும் இஸ்ரவேலின் செழிப்பையும் கண்ட ராணி மெய்சிலிர்த்துப்போனாள். மகா ஞானம் படைத்த அரசனை அரியணையில் அமர்த்தியதற்காக யெகோவாவைப் போற்றிப் புகழ்ந்தாள். உண்மையில், யெகோவாவின் அருள் இருந்ததால்தான் சாலொமோனின் ஆட்சி இஸ்ரவேல் சரித்திரத்திலேயே மிகவும் செல்வச் செழிப்பான ஆட்சியாக, அமைதி தவழும் ஆட்சியாக விளங்கியது.

வருத்தகரமாக, யெகோவாவின் ஞானத்தின்படி சாலொமோன் கடைசிவரை நடக்கவில்லை. கடவுள் இட்ட கட்டளையை மீறி நூற்றுக்கணக்கான பெண்களை மணந்துகொண்டார்; அதுவும் பொய்த் தெய்வங்களை வழிபட்ட அநேக பெண்களை மணந்துகொண்டார். அந்தப் பெண்கள் சாலொமோனை கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவிடமிருந்து பிரித்து, சிலை வழிபாட்டுக்கு இழுத்து சென்றுவிட்டனர். ராஜ்யத்தின் ஒரு பகுதி அவரிடமிருந்து அபகரிக்கப்படும், மற்றொரு பகுதி அவருடைய தகப்பன் தாவீதின் நிமித்தம் அவர் குடும்பத்தோடு இருக்கும் என்று சாலொமோனிடம் கடவுள் கூறினார். சாலொமோன் கீழ்ப்படியத் தவறியபோதிலும் தாவீதோடு செய்த ராஜ்ய ஒப்பந்தத்தை யெகோவா நிறைவேற்றினார்.

—ஆதாரம்: 1 இராஜாக்கள் 1–11 அதிகாரங்கள்; 2 நாளாகமம் 1–9 அதிகாரங்கள்; உபாகமம் 17:17.