Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 13

நல்ல அரசர்களும் கெட்ட அரசர்களும்

நல்ல அரசர்களும் கெட்ட அரசர்களும்

இஸ்ரவேல் தேசம் பிளவுபடுகிறது. இஸ்ரவேலர்மீது அநேக அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் பாபிலோனியரால் அழிக்கப்படுகிறது

சாலொமோன் உண்மை வழிபாட்டை புறக்கணித்த பிறகு, யெகோவா அறிவித்திருந்தபடியே இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது. அடுத்து ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் ரெகொபெயாம் கொடுங்கோலனாக இருந்தான். அதனால், இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரில் பத்து கோத்திரத்தார் கலகம்செய்து இஸ்ரவேல் என்ற வடக்கு ராஜ்யத்தை ஏற்படுத்தினர். மற்ற இரண்டு கோத்திரத்தார் எருசலேமிலிருந்த தாவீதின் ஆட்சியை ஆதரித்து, யூதா என்ற தெற்கு ராஜ்யத்தை ஏற்படுத்தினர்.

இரண்டு ராஜ்யங்களிலும் சண்டை சச்சரவுகளும் குழப்பங்களுமே நிறைந்திருந்தன; இவற்றுக்கு முக்கிய காரணம் விசுவாசமற்ற, கீழ்ப்படியாத அரசர்களே. யூதா ராஜ்யத்தைவிட இஸ்ரவேல் ராஜ்யத்தின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருந்தது; ஏனென்றால், ஆரம்பத்திலிருந்தே அதன் ராஜாக்கள் பொய் வழிபாட்டை மக்கள் மத்தியில் முன்னேற்றுவித்தார்கள். எலியா, எலிசா போன்ற தீர்க்கதரிசிகள் மாபெரும் அற்புதங்கள் நிகழ்த்தியபோதிலும்—இறந்தோரை மீண்டும் உயிர்ப்பித்தபோதிலும்—இஸ்ரவேல் திரும்பத் திரும்ப தவறான பாதையிலேயே சென்றது; கடைசியில் வடக்கு ராஜ்யத்தை அசீரியர்கள் அழித்துப்போட கடவுள் அனுமதித்தார்.

இஸ்ரவேல் அழிக்கப்பட்ட பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் சற்றே அதிகம் யூதா தாக்குப்பிடித்தது; கடைசியில், அதுவும் தெய்வ தண்டனையைச் சந்தித்தது. யூதா ராஜாக்களில் சிலர் மட்டுமே கடவுளுடைய தீர்க்கதரிசிகளின் எச்சரிப்பிற்குச் செவிகொடுத்து, மக்களை யெகோவாவிடம் திருப்ப முயன்றார்கள். உதாரணமாக, யோசியா ராஜா யூதாவிலிருந்து பொய் வழிபாட்டை நீக்கி யெகோவாவின் கோயிலைப் புதுப்பித்தார். மோசே மூலம் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டபோது யோசியா மிகவும் சந்தோஷப்பட்டு சீர்திருத்தப் பணியில் மும்முரமாக இறங்கினார்.

ஆனால் வருத்தகரமாக, யோசியாவிற்குப் பின்வந்த ராஜாக்கள் அவருடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றவில்லை. ஆகவே, பாபிலோனியர் எருசலேமையும் அதன் கோயிலையும் அழித்து, யூதா ராஜ்யத்தை வீழ்த்த யெகோவா அனுமதித்தார். உயிர் தப்பியவர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள் 70 ஆண்டுகள் அந்நிய நாட்டில் இருப்பார்கள் என்று கடவுள் முன்னறிவித்திருந்தார். கடவுள் சொன்னபடி, அவர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்பும்வரை தேசம் பாழாய்க் கிடந்தது.

வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகரின், அதாவது முன்னறிவிக்கப்பட்ட மேசியாவின், ஆட்சி ஸ்தாபிக்கப்படும்வரை தாவீதின் வம்சத்தில் எந்த அரசரும் ஆட்சி செய்ய மாட்டார்கள். ஏனென்றால், ஆட்சி செய்யும் தகுதி மனிதனுக்கு இல்லை என்பதை அதுவரை தாவீதின் சிம்மாசனத்தில் அமர்ந்த அரசர்களில் பெரும்பாலோர் நிரூபித்துவிட்டார்கள். ஆனால், மேசியா மட்டுமே அதற்குத் தகுதியுள்ளவர். எனவேதான், தாவீதின் வம்சத்தில் வந்த கடைசி அரசரிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: ‘கிரீடத்தை எடுத்துப்போடு; . . . உரிமைக்காரர் வருமட்டும் அது [கிரீடத்திற்குப் படமாக இருக்கும் ராஜ்யம்] யாருக்கும் கொடுக்கப்படாது; அவருக்கே அதைக் கொடுப்பேன்.’—எசேக்கியேல் 21:26, 27, NW.

—ஆதாரம்: 1 இராஜாக்கள்; 2 இராஜாக்கள்; 2 நாளாகமம் 10–36 அதிகாரங்கள்; எரேமியா 25:8-11.