Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

6. உலகளவில் நடக்கும் பிரசங்க வேலை

6. உலகளவில் நடக்கும் பிரசங்க வேலை

6. உலகளவில் நடக்கும் பிரசங்க வேலை

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் . . . பிரசங்கிக்கப்படும்.”—மத்தேயு 24:14.

● வையட்டியா என்ற பெண் தொலைதூர பசிபிக் தீவில் இருக்கிற துவாமோட்டு என்ற பகுதியில் வாழ்கிறார். இந்தியாவின் பரப்பளவில் கால்வாசி அளவு மட்டுமே இருக்கிற அந்தப் பகுதியில், கிட்டத்தட்ட 80 சின்ன சின்ன தீவுகள் இருக்கின்றன. அங்கே வெறும் 16,000 பேர்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் வையட்டியாவையும் அந்தப் பகுதியில் வாழ்கிறவர்களையும் யெகோவாவின் சாட்சிகள் சந்தித்திருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், எல்லா மக்களுக்கும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆசை.

உண்மைத் தகவல்கள் எதைக் காட்டுகின்றன? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி பூமியின் மூலைமுடுக்கெல்லாம் எட்டியிருக்கிறது. 2010-ல் மட்டுமே 236 நாடுகளில் இந்தச் செய்தியைச் சொல்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் 160 கோடி மணிநேரம் செலவு செய்திருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் ஒரு நாளுக்கு சராசரியாக 30 நிமிடங்கள் ஊழியம் செய்திருக்கிறார்கள். கடந்த பத்து வருஷங்களில், 2,000 கோடிக்கும் அதிகமான பைபிள் சம்பந்தப்பட்ட பிரசுரங்களை அச்சடித்து வினியோகித்திருக்கிறார்கள்.

பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை என்ன? பிரசங்க வேலை ஆயிரக்கணக்கான வருஷங்களாக நடந்துகொண்டுதான் வருகிறது.

இந்த ஆட்சேபணை நியாயமானதா? பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றி நிறைய பேர் பிரசங்கித்திருப்பது உண்மைதான். ஆனால், அவர்களில் பலர் கொஞ்சக் காலத்துக்கு மட்டும்தான், அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும்தான் பிரசங்கித்திருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தச் செய்தி எட்டுகிறது. மனித சரித்திரத்தில், சில சக்திபடைத்த, ஈவிரக்கமில்லாத அமைப்புகள் யெகோவாவின் சாட்சிகளைக் கடுமையாக எதிர்த்தாலும் அவர்கள் விடாமல் பிரசங்க வேலையைச் செய்திருக்கிறார்கள். (மாற்கு 13:13) அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகள் பணத்துக்காகப் பிரசங்க வேலையைச் செய்வதில்லை. தங்களுடைய நேரத்தையும் இதற்காக தாராளமாகச் செலவு செய்கிறார்கள், பிரசுரங்களையும் விலையில்லாமல் கொடுக்கிறார்கள். இந்த வேலை முழுக்க முழுக்க மனப்பூர்வமாகக் கொடுக்கப்படுகிற நன்கொடைகளால்தான் நடக்கிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி” உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுகிறதா? இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், நல்ல எதிர்காலம் வரப்போகிறது என்பதைக் காட்டுகிறதா?

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

“யெகோவா அனுமதிக்கிற வரைக்கும் அவருடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியைத் தொடர்ந்து ஆர்வத்தோடு பிரசங்கிப்போம். மக்களைச் சந்திப்பதற்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம்.”—யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2010.