Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவள் புத்தியோடு நடந்துகொண்டாள்

அவள் புத்தியோடு நடந்துகொண்டாள்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

அவள் புத்தியோடு நடந்துகொண்டாள்

அபிகாயிலைச் சந்திக்க வந்த இளைஞனின் கண்களில் பீதி படர்ந்திருந்தது. அவன் பதறிப்போயிருந்தான்; ஏனெனில், ஒரு பெரிய ஆபத்து நெருங்கிக்கொண்டிருந்தது. ஆம், அந்தச் சமயத்தில் சுமார் 400 படைவீரர்கள் திரண்டு வந்துகொண்டிருந்தார்கள். அபிகாயிலின் கணவனான நாபாலுடைய வீட்டிலுள்ள ஆண்மக்கள் அனைவரையும் அழித்துவிட வேண்டுமென்ற வெறியோடு வந்துகொண்டிருந்தார்கள். ஏன்?

எல்லாவற்றிற்கும் காரணம் நாபால்தான். ஆணவம் பிடித்த அவன் எப்போதும்போல் மனிதாபிமானமும் மரியாதையும் இல்லாமல் நடந்திருந்தான். என்றாலும், இம்முறை அவன் கேவலப்படுத்தக் கூடாத ஒருவரைக் கேவலப்படுத்தியிருந்தான்; ஆம், சிறந்த பயிற்சிபெற்ற, நம்பிக்கைக்குரிய படைவீரர்களின் அருமை தலைவரையே கேவலப்படுத்தியிருந்தான். ஆகவேதான், முதலில் குறிப்பிட்டபடி, நாபாலிடம் வேலைபார்த்த இளைஞன் ஒருவன் அபிகாயிலிடம் வந்தான்; அவன் ஒரு மேய்ப்பனாக இருந்திருக்கலாம். நாபாலின் வீட்டிலிருந்த ஆண்மக்களைப் பாதுகாப்பதற்கு அபிகாயில் ஏதாவது செய்வாள் என்ற நம்பிக்கையோடு அவன் வந்தான். என்றாலும், ஒரு படையே திரண்டு வரும்போது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?

முதலாவது, இந்தத் திறமைசாலியான பெண்ணைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். அபிகாயில் யார்? இந்த நெருக்கடியான நிலை உருவானது எப்படி? விசுவாசத்திற்கு அவள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘மகா புத்திசாலியும் ரூபவதியும்’

அபிகாயிலும் நாபாலும் பொருத்தமற்ற ஜோடி. நாபாலுக்கு அபிகாயிலைவிட சிறந்த மனைவி வாய்த்திருக்க முடியாது. அபிகாயிலுக்கோ நாபாலைவிட மோசமான கணவன் வாய்த்திருக்க முடியாது. என்றாலும், நாபாலிடம் எக்கச்சக்கமான பணம் இருந்தது. அதனால், அவன் தன்னைப் பெரிய ஆளாக நினைத்தான்; ஆனால், மற்றவர்கள் அவனை எப்படிக் கருதினார்கள்? பைபிள் ரொம்பவே மட்டமாக விவரிக்கிற ஒரே ஆள் அவனாகத்தான் இருப்பான். அவனுடைய பெயரின் அர்த்தம், “மூடன்.” அது, அவன் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயரா, அல்லது அவனுடைய நடத்தையால் கிடைத்த பட்டப் பெயரா? எப்படியாயினும் அந்தப் பெயர் அவனுக்கு ஏகப் பொருத்தமே. அவன் “முரடனும் துராகிருதனுமாயிருந்தான்” அதாவது, தீயவனாய் இருந்தான். குடித்து வெறித்து அடாவடித்தனம் செய்த அவனைக் கண்டு எல்லாரும் பயந்தார்கள், அவனை வெறுக்கவும் செய்தார்கள்.1 சாமுவேல் 25:2, 3, 17, 21, 25.

அபிகாயில் முற்றிலும் வித்தியாசப்பட்டவளாய் இருந்தாள். அவளுடைய பெயரின் அர்த்தம், “என் தகப்பன் தம்மை மகிழ்ச்சியுள்ளவராக ஆக்கியிருக்கிறார்.” அழகுள்ள ஒரு பெண்ணைப் பெற்றிருப்பதை நினைத்து அநேக அப்பாக்கள் பெருமைப்படுவார்கள்; ஆனால், ஞானமுள்ள அப்பாக்களோ பிள்ளையின் நல்ல குணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். பார்வைக்கு அழகுள்ளவர்கள் பொதுவாக, புத்தி, ஞானம், தைரியம், விசுவாசம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வதில்லை. ஆனால், அபிகாயில் அதற்கு நேர்மாறாக இருந்தாள். அவள் “மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்” என பைபிள் சொல்கிறது.1 சாமுவேல் 25:3.

அந்தளவு புத்திசாலியான இளம் பெண் அப்படியொரு உதவாக்கரையை ஏன் மணந்தாள் என இன்று சிலர் யோசிக்கலாம். பண்டைய காலத்தில் நடந்த அநேக திருமணங்கள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பதை நினைவில் வையுங்கள். ஒருவேளை பெற்றோர் ஏற்பாடு செய்யவில்லை என்றாலும் அவர்களுடைய சம்மதம் மிகவும் அவசியமாய் இருந்தது. அபிகாயிலின் பெற்றோர், நாபாலுக்கு செல்வமும் செல்வாக்கும் இருந்ததைப் பார்த்து அத்திருமணத்தை நடத்தி வைத்தார்களா? ஏழ்மையின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக அப்படிச் செய்தார்களா? எதுவாயினும், நாபாலிடம் பணம் இருந்ததே தவிர, கணவனுக்குரிய குணம் இருக்கவில்லை.

ஞானமுள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் திருமணத்தை மதிப்புவாய்ந்த ஒன்றாய் கருதுவதற்குப் பக்குவமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்யும்படியோ பொறுப்புகளைச் சுமக்க இயலாத இளம் வயதிலேயே காதலிக்கும்படியோ வற்புறுத்துவதில்லை. (1 கொரிந்தியர் 7:36) என்றாலும், அபிகாயில் இப்படியெல்லாம் யோசிக்க முடியாதளவுக்கு காலம் கடந்துவிட்டது. எதுவாயிருந்தாலும், அவள் நாபாலைத் திருமணம் செய்துவிட்டதால், அந்தக் கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிக்கத் தீர்மானித்திருந்தாள்.

“அவர்கள்பேரில் அவர் சீறினார்”

அபிகாயிலுக்கு நாபால் இன்னொரு பெரிய பிரச்சினையையும் ஏற்படுத்தினான். அவன் கேவலமாகப் பேசிய நபர் வேறு யாருமல்ல, தாவீதுதான். அவர் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்தார்; சவுலுக்குப் பின் ராஜாவாக ஆட்சி புரிவதற்கு தாவீதைக் கடவுள் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொல்லி அவரை சாமுவேல் அபிஷேகம் செய்திருந்தார். (1 சாமுவேல் 16:1, 2, 11-13) தாவீது, பொறாமையும் கொலைவெறியும் பிடித்த சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடி, தனக்கு விசுவாசமாயிருந்த 600 படைவீரர்களுடன் வனாந்தரத்தில் வசித்து வந்தார்.

நாபாலோ மாகோனில் வசித்து வந்தான்; ஆனால், அருகிலுள்ள கர்மேல் a பகுதியில் தொழில் செய்து வந்தான்; அங்கு அவனுக்கு சொந்த நிலமும் இருந்திருக்கலாம். இந்த இடங்களிலிருந்து ஆடுகளை மேய்ப்பதற்கு ஏற்ற உயரமான புல்வெளி பகுதிகளுக்கு எளிதில் வர முடிந்தது; அங்கே நாபாலுக்குச் சொந்தமான 3,000 ஆடுகளும் மேய்ந்தன. இருந்தாலும், சுற்றியிருந்த இடங்கள் தரிசாகக் கிடந்தன. தெற்கே மிகப் பெரிய பாரான் வனாந்தரம் அமைந்திருந்தது. கிழக்கே, உப்புக்கடலுக்குச் செல்லும் வழியானது ஆழமான பள்ளத்தாக்குகளும் குகைகளும் நிறைந்த ஆள்அரவமற்ற பகுதியாக இருந்தது. இப்பகுதிகளில்தான் தாவீதும் அவருடைய ஆட்களும் உயிர்பிழைக்கப் போராடினார்கள், சாப்பாட்டிற்காகத் திண்டாடினார்கள், இன்னும் பல கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். செல்வந்தனான நாபாலின் ஆடுகளை மேய்த்த இளம் வேலையாட்களை அவர்கள் அங்கே அடிக்கடி சந்தித்தார்கள்.

கடினமாய் உழைத்த தாவீதின் படைவீரர்கள் அந்த மேய்ப்பர்களை எப்படிக் கவனித்துக்கொண்டார்கள்? அவர்கள் நினைத்திருந்தால், அவ்வப்போது நாபாலின் ஆடுகளை அபகரித்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் நாபாலின் ஆடுகளுக்கும் வேலைக்காரர்களுக்கும் சுற்றுச்சுவர் போலிருந்து காத்தார்கள். (1 சாமுவேல் 25:15, 16) அந்த ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் நிறைய ஆபத்துகள் வந்தன. அந்தக் காலத்தில் வேட்டையாடும் விலங்குகள் ஏராளமாக இருந்தன. அதோடு, அப்பகுதிகள் இஸ்ரவேலின் தெற்கு எல்லையோரத்தின் அருகே அமைந்திருந்ததால், பிற நாட்டு கொள்ளையரின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. b

வனாந்தரத்தில் தன்னுடன் வசித்த அத்தனை பேருக்கும் உணவளிப்பது தாவீதுக்கு பெரும் பாடாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, ஒருநாள் நாபாலிடம் உதவி கேட்பதற்காக அவர் தன்னுடைய ஆட்களில் பத்து பேரை அனுப்பினார். ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும் அந்தத் திருவிழாக் காலத்தில், தாராளமாகக் கொடுப்பதும் விருந்தளிப்பதும் வழக்கமாக இருந்தது; ஆகவே, அந்தச் சமயத்தை தாவீது தேர்ந்தெடுத்தது ஞானமான செயல். அதோடு, நாபாலுக்குச் செய்தி அனுப்ப, தாவீது மதிப்புமரியாதை உள்ள வார்த்தைகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார்; ‘உம்முடைய குமாரன் தாவீது’ என்றும்கூட தன்னைக் குறிப்பிட்டார்; ஒருவேளை நாபால் வயதில் மூத்தவன் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், நாபால் எப்படிப் பதிலளித்தான்?1 சாமுவேல் 25:5-8.

அவன் கொதித்தெழுந்தான்! இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இளைஞன் அபிகாயிலிடம் சொன்னபடி, “அவர்கள்பேரில் [நாபால்] சீறினார்.” கஞ்சனான நாபால், தன்னுடைய அப்பத்தையும் தண்ணீரையும் இறைச்சியையும் கண்டவர்களுக்கெல்லாம் கொடுக்க முடியாதென கத்தினான். தாவீதை மட்டந்தட்டி ஏளனம் செய்து, எஜமானை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரரின் ரகத்தில் அவரைச் சேர்த்தான். நாபாலின் மனப்பான்மை, தாவீதை வெறுத்த சவுலின் மனப்பான்மைக்கு ஒப்பாக இருந்திருக்கலாம். நாபாலுக்கும் சவுலுக்கும் யெகோவாவின் கண்ணோட்டம் இருக்கவில்லை. யெகோவா தாவீதை நேசித்தார்; அவரை ஓர் அடங்காத வேலைக்காரனாக அல்ல, ஆனால் இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாகப் பார்த்தார்.1 சாமுவேல் 25:10, 11, 14.

தாவீதின் ஆட்கள் திரும்பிச் சென்று விஷயத்தைச் சொன்னதும் அவர் ஆத்திரமடைந்தார். “நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார். பின்பு, அவரும் பட்டயத்தை எடுத்துக்கொண்டு 400 படைவீரர்களுடன் தாக்குவதற்குப் புறப்பட்டார். நாபாலின் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் சமாதி கட்டுவதாகச் சபதம் செய்தார். (1 சாமுவேல் 25:12, 13, 21, 22) தாவீதின் கோபம் நியாயமானதே; ஆனால், அதை அவர் வெளிக்காட்டிய விதம் தவறாக இருந்தது. “கோபப்படுகிற மனிதனால் கடவுளுடைய நீதியை நடப்பிக்க முடியாது” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:20) என்றாலும், அபிகாயிலால் தன் வீட்டாரை எப்படிக் காப்பாற்ற முடியும்?

“நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக”

ஒரு கருத்தில், இந்தக் கொடிய தவறைச் சரிசெய்வதற்காக அபிகாயில் செய்த முதல் காரியத்தை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவளுடைய கணவன் நாபாலைப் போல் அல்லாமல், அவள் காதுகொடுத்துக் கேட்பதற்கு மனமுள்ளவளாய் இருந்தாள். அந்த இளம் வேலைக்காரன் நாபாலைக் குறித்து இவ்வாறு சொன்னான்: “இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார்.” c (1 சாமுவேல் 25:17) நாபால் தன்னைப் பெரிய ஆளாக நினைத்ததுதான் மற்றவர்கள் பேசியதைக் காதுகொடுத்துக் கேளாமல் போனதற்குக் காரணம். இப்படித் தலைக்கனம் பிடித்தவர்களை இன்றும்கூட சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. ஆனால், அபிகாயில் காதுகொடுத்துக் கேட்பாள் என்பதை அந்த இளைஞன் அறிந்திருந்தான்; அதனால்தான் அந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்ல அவளிடம் சென்றான்.

அபிகாயில் யோசித்து உடனடியாகச் செயல்பட்டாள். அவள் “தீவிரமாய்” செயல்பட்டாள் என நாம் வாசிக்கிறோம். இந்தப் பதிவில், அபிகாயில் சம்பந்தமாக “தீவிரமாய்” என்ற வார்த்தை நான்கு முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். அவள் தாவீதுக்காகவும் அவருடைய ஆட்களுக்காகவும் ஏராளமான பதார்த்தங்களைத் தயார் செய்தாள். அப்பம், திராட்சரசம், சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சி, வறுத்த பயறு, உலர்ந்த திராட்சப்பழ அடைகள், அத்திப்பழ அடைகள் ஆகியவை அவற்றில் அடங்கும். ஆகவே, வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்; வீட்டு வேலைகளையெல்லாம் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டாள். இவ்வாறு, நீதிமொழிகள் புத்தகத்தில் பிற்பாடு விவரிக்கப்பட்ட திறமைசாலியான பெண்ணைப் போலவே அவள் இருந்தாள். (நீதிமொழிகள் 31:10-31) அந்தப் பதார்த்தங்களை எல்லாம் தன் வேலைக்காரர் சிலரிடம் முதலில் கொடுத்தனுப்பிவிட்டு, பின்னால் அவள் தனியாகச் சென்றாள். ஆனால், “தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை” என நாம் வாசிக்கிறோம்.1 சாமுவேல் 25:18, 19.

இது, அபிகாயில் தன் கணவனுடைய தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படியவில்லை என காட்டுகிறதா? இல்லவே இல்லை. நாபால், ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருந்த ஊழியருக்கு ஒரு பொல்லாத காரியத்தைச் செய்திருந்தான்; அதனால், நாபாலின் வீட்டிலுள்ள அநேக அப்பாவி ஆட்களின் உயிர் பறிபோயிருந்திருக்கலாம். அபிகாயில் நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால், கணவன் செய்த குற்றத்திற்கு அவளும் உடந்தையாகிவிட்டிருப்பாள். எப்படியானாலும், அவள் தன் கணவனுக்கும் மேலாக கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டியிருந்தது.

சீக்கிரத்திலேயே, தாவீதையும் அவருடைய ஆட்களையும் அபிகாயில் சந்தித்தாள். இந்தச் சமயத்திலும்கூட, அவள் தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி தாவீதைப் பணிந்துகொண்டாள். (1 சாமுவேல் 25:20, 23) பிறகு, தன் மனதிலுள்ளதை எல்லாம் கொட்டி, தன் கணவன் சார்பாகவும் தன் வீட்டார் சார்பாகவும் இரக்கம் காட்டும்படி வேண்டினாள். அவள் பேசிய வார்த்தைகள் ஏன் மனதைத் தொடுபவையாக இருந்தன?

அவள் அந்தப் பிரச்சினைக்கான பழியை தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதோடு தன்னை மன்னிக்கும்படியும் தாவீதிடம் கேட்டாள். தன்னுடைய கணவன் அவருடைய பெயருக்கு ஏற்றாற்போல ஒரு மூடன்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாள்; அப்படிப்பட்ட ஒரு ஆளைத் தண்டித்தால் தாவீதுக்குத்தான் அவமானம் என்பதை அவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம். தாவீது யெகோவாவின் பிரதிநிதியாக இருந்ததைத் தான் நம்புவதாக அவள் குறிப்பிட்டாள்; அவர் ‘யெகோவாவுடைய யுத்தங்களை நடத்துகிறவர்’ என்பதை ஒப்புக்கொண்டாள். யெகோவா, ‘[நிச்சயமாகவே] இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நியமிப்பார்’ என்று அவள் சொன்னாள்; அதன் மூலம், தாவீதையும் அவருடைய அரசதிகாரத்தையும் குறித்த யெகோவாவின் வாக்குறுதியை தான் அறிந்திருந்ததைத் தெரிவித்தாள். அதுமட்டுமல்ல, இரத்தப்பழிக்கு ஆளாக்குகிற அல்லது பிற்பாடு மனசாட்சியின் உறுத்துதலால் ‘துக்கப்பட’ வைக்கிற ஒரு காரியத்தைச் செய்யாதிருக்கும்படியும் தாவீதிடம் வருந்திக் கேட்டுக்கொண்டாள். (1 சாமுவேல் 25:24-31) ஆம், மனதைத் தொடும் அன்பான வார்த்தைகளையே அவள் பேசினாள்.

அதைக் கேட்ட தாவீது எப்படி உணர்ந்தார்? அபிகாயில் கொடுத்த பொருள்களையும் சொன்ன ஆலோசனையையும் அவர் ஏற்றுக்கொண்டார். அதோடு, “உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கு . . . நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக” என்று சொன்னார். தன்னைச் சந்திக்கத் தைரியமாகவும் தீவிரமாகவும் வந்ததற்காக தாவீது அவளைப் பாராட்டினார்; இரத்தப்பழி சுமராதபடி தன்னைத் தடுத்தது அவள்தான் என்பதையும் ஒப்புக்கொண்டார். “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ” என்று அவளிடம் கூறியதோடு ‘இதோ, நான் உன் சொல்லைக் கேட்டேன்’ என பணிவோடு சொன்னார்—1 சாமுவேல் 25:32-35

‘இதோ அவருடைய அடியாள்’

அவர்கள் அங்கிருந்து விடைபெற்று சென்றபோதிலும், அந்தச் சந்திப்பைப் பற்றிய நினைவலைகள் அவளது மனதில் மோதிக்கொண்டிருந்தன; எதார்த்தமாகவும் பண்பாகவும் நடந்துகொண்ட தாவீதுக்கும் தான் வாழ்க்கைப்பட்ட முரடனுக்கும் உள்ள வித்தியாசத்தை அவள் கவனித்தாள். ஆனால், அந்தச் சிந்தனையிலேயே அவள் மூழ்கிவிடவில்லை. அதன் பிறகு, ‘அபிகாயில் நாபாலிடத்தில் வந்தாள்’ என நாம் வாசிக்கிறோம். ஆம், ஒரு மனைவியாக தன்னுடைய பங்கை மிகச் சிறந்த விதத்தில் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தோடு தன் கணவரிடம் வந்தாள். தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தான் உணவு பதார்த்தங்களைக் கொடுத்ததைப் பற்றி அவள் நாபாலிடம் சொல்ல வேண்டியிருந்தது. அதை அவன் தெரிந்துகொள்வதற்கு உரிமையும் இருந்தது. ஒரு பெரிய ஆபத்தைத் தான் தடுத்ததைப் பற்றியும் அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது; ஏனெனில், அதைப் பற்றி வேறொருவர் மூலமாக அவன் கேள்விப்பட்டால் அது அவனுக்கு இன்னும் பெரிய அவமானம். என்றாலும் அவளால் அதை உடனடியாகச் சொல்ல முடியாத நிலை. காரணம், வீட்டில் ராஜ விருந்து நடந்துகொண்டிருந்தது, அவன் மிகவும் குடித்து வெறித்திருந்தான்.1 சாமுவேல் 25:36.

ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்திலும் அவள் தைரியத்தோடும் புத்தியோடும் நடந்துகொண்டாள்; மறுநாள் அவனுக்கு போதை தெளியும்வரை காத்திருந்தாள். அவள் சொல்வதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு அவன் தெளிவாக இருந்தபோதிலும், அவன் கோபத்தைக் கொப்பளிக்கும் ஆபத்து இருந்தது. அப்படியிருந்தும், அவனிடம் சென்று நடந்ததையெல்லாம் சொன்னாள். அவன் கோபத்தில் வெடிக்கலாம், ஒருவேளை தன்னைத் தாக்கலாம் என்றுகூட அவள் நிச்சயம் எதிர்பார்த்திருப்பாள். ஆனால், அவன் உட்கார்ந்திருந்த இடத்திலேயே அசைவின்றி இருந்தான்.—1 சாமுவேல் 25:37.

அவனுக்கு என்ன ஆனது? “அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.” ஒருவேளை, அவனுக்கு ஏதாவது பக்கவாதம் வந்திருக்கலாம். பத்து நாட்களுக்குப் பிறகு அவன் இறந்தான். நோய் தாக்கியதால்தான் அவன் இறந்தான் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், “கர்த்தர் நாபாலை வாதித்ததினால் . . . அவன் செத்தான்” என்று நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 25:38) அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்ததால், மணவாழ்வில் அத்தனைக் காலமாகப் பட்ட கஷ்டத்திலிருந்து அபிகாயில் விடுபட்டாள். இன்று, இதேபோல் யெகோவா தலையிட்டு அற்புதமாகத் தண்டனை வழங்காவிட்டாலும், வீட்டில் நடக்கிற கொடுங்கோன்மையோ கொடுமையோ எவ்விதத்திலும் யெகோவாவின் கண்ணைத் தப்புவதில்லை என்பதற்கு இது ஒரு பொருத்தமான நினைப்பூட்டுதல். எப்போதுமே அவர் தாம் குறித்த சமயத்தில் நீதியைச் சரிக்கட்டுவார்.

அபிகாயில் மகிழ்ச்சியற்ற மணவாழ்விலிருந்து விடுபட்டதோடு, மற்றொரு ஆசீர்வாதத்தையும் பெறவிருந்தாள். நாபால் இறந்த செய்தியை அறிந்த தாவீது, அவளைத் திருமணம் செய்ய விரும்புவதைக் குறித்து பேச தன் ஆட்களை அனுப்பினார். “இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள்” என்று அவள் அவர்களுக்குப் பதிலளித்தாள். ஆகவே, தாவீதின் மனைவியாவதைக் குறித்து அவள் பெருமைப்படவே இல்லை; சொல்லப்போனால், அவருடைய ஊழியக்காரருக்குப் பணிவிடை செய்யவும் முன்வந்தாள்! இந்தச் சந்தர்ப்பத்திலும்கூட அவள் தீவிரமாகச் செயல்பட்டதாக நாம் வாசிக்கிறோம்; ஆம், தாவீதிடம் புறப்பட்டுச் செல்வதற்கு அவள் தீவிரமாகச் செயல்பட்டாள்.1 சாமுவேல் 25:39-42.

கடைசியில் எல்லாம் நல்லபடியாக முடிகிற ஒரு கதையைப் போன்று அவளுடைய வாழ்க்கை அமையவில்லை. தாவீதைக் கரம்பிடித்த பிறகும்கூட அபிகாயிலின் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தன. தாவீது ஏற்கெனவே அகினோவாம் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். பலதாரமணத்தால் அன்றிருந்த தேவபக்தியுள்ள பெண்களுக்கு வித்தியாசப்பட்ட பிரச்சினைகள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, தாவீது இன்னும் அரியணை ஏறியிருக்கவில்லை; ராஜாவாவதற்குமுன் அவர் நிறைய இடைஞ்சல்களையும் இன்னல்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால், காலமெல்லாம் தாவீதுடன் இருந்து அவரை ஆதரித்து, அவருக்கு ஒரு மகனையும் பெற்றெடுத்த அபிகாயில், கண்ணும்கருத்துமாய் கவனித்துக்கொள்ளும் கணவர் தனக்குக் கிடைத்திருந்ததை உணர்ந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் அவளைக் கடத்தல்காரர்களிடமிருந்து அவர் மீட்கவும் செய்தாரே! (1 சாமுவேல் 30:1-19) இவ்வாறு, புத்திசாலித்தனமும், தைரியமும், விசுவாசமும் உள்ள பெண்களை நேசிப்பதிலும் உயர்வாய் மதிப்பதிலும் தாவீது யெகோவா தேவனைப் பின்பற்றினார். (w09 07/01)

[அடிக்குறிப்புகள்]

a இது வடக்கே தொலைவில் உள்ள புகழ்பெற்ற கர்மேல் மலை அல்ல; ஆனால், தெற்கேயுள்ள வனாந்தரத்தின் விளிம்பில் அமைந்திருந்த நகரம் ஆகும்.

b அங்குள்ள நிலச் சொந்தக்காரர்களையும் அவர்களுடைய மந்தைகளையும் பாதுகாப்பதைக் கடவுளாகிய யெகோவாவுக்குச் செய்யும் சேவையாக தாவீது நினைத்திருக்கலாம். அந்தக் காலத்தில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் சந்ததியார் அந்தத் தேசத்தில் வசிப்பது யெகோவாவின் நோக்கமாய் இருந்தது. ஆகவே, பிற நாட்டு எதிரிகளிடமிருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் அத்தேசத்தைக் காப்பாற்றுவது பரிசுத்த சேவையின் பாகமாய் இருந்தது.

c ‘பேலியாளின் மகன்’ என்று அந்த இளைஞன் குறிப்பிட்ட வார்த்தையின் அர்த்தம், எதற்கும் உதவாதவன். பிற பைபிள் மொழிபெயர்ப்புகள், நாபால் “யாருடைய பேச்சையும் கேட்காதவன்” என்ற விளக்கத்தை இந்த வாக்கியத்தில் சேர்த்திருக்கின்றன; அதன் முடிவில், “அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றும் குறிப்பிடுகின்றன.

[பக்கம் 15-ன் படம்]

அபிகாயில் தன் கணவனைப் போலின்றி நன்கு காதுகொடுத்து கேட்டாள்

[பக்கம் 16-ன் படம்]

அபிகாயில் தாவீதிடம் தாழ்மையோடும் தைரியத்தோடும் புத்தியோடும் பேசினாள்